டிரம்பின் வரிக்குவரி யுத்தம்: 1991 போல இந்தியாவில் இன்னொரு சீர்திருத்தத்திற்கு வழிவகுக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிரச்னைகள் அதிகரிக்கும்போதெல்லாம் இந்தியா பொருளாதார சீர்திருத்தங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. 1991ஆம் ஆண்டு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட போது நாடு தாராளமயமாக்கலை தழுவிக்கொண்டது இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
இப்போது அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்ப் பதிலடி வரிவிதிக்கும் யுத்தத்தை தொடங்கியதையடுத்து வர்த்தக உலகில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா ஒரு முக்கிய திருப்புமுனை தருணத்தில் இருப்பதாக பலர் நம்புகின்றனர்.
தனது பாதுகாப்புவாதத்தை கைவிட்டு, பொருளாதாரத்தை மேலும் திறக்க உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்திற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கக்கூடுமா? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்ததைப் போல் இந்தியா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமா அல்லது மேலும் பின்வாங்குமா?
இந்தியாவை "வரிகளின் அரசன்" என்றும் வர்த்தக தொடர்புகளை "பெரிதும் தவறாக பயன்படுத்தும் நாடு", என்றும் டிரம்ப் திரும்ப திரும்ப குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான சராசரி வரி மிக அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுதான் பிரச்னை. அமெரிக்காவின் சராசரி வரி 2.2%, சீனாவின் வரி 3%, ஜப்பானின் வரி 1.7%. உலக வர்த்தக நிறுவனத்தின் தரவுகளின்படி இந்தியாவின் சராசரி வரி 12%.
உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கு அதிக வரிகள் உற்பத்தி செலவை அதிகரித்து அவை சர்வதேச சந்தையில் போட்டிபோடும் திறனை பாதிக்கிறது. இதனால் இந்தியர்களும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வெளிநாட்டினரை விட அதிக தொகை கொடுக்கவேண்டியிருக்கிறது.
பெரும்பாலும் சேவைத்துறைகளால் ஏற்றுமதிகள் அதிகரித்து வந்தாலும், இந்தியா ஒரு பெரும் வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. ஆனால் சர்வதேச ஏற்றுமதி சந்தையில் இந்தியாவின் பங்கு வெறும் 1.5% மட்டுமே என்பதால் இந்த சவால் மேலும் முக்கியமானதாக மாறுகிறது.
டிரம்பின் வரி யுத்தம் இந்தியா விடுபட உதவுமா அல்லது பாதுகாப்புவாதத்தை அதிகரிக்குமா என்பது குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுப்பதாக அடிக்கடி விமர்சிக்கப்படும் நரேந்திர மோதி அரசு, ஏற்கனவே வேகமெடுக்க தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
கடந்த மாதம், பிரதமர் மோதி வாஷிங்டனில் டிரம்பை சந்திக்கும் முன், இந்தியா தன்னிச்சையாக போர்போன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சில அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை குறைத்தது.
ஏப்ரல் 2ஆம் தேதி பதிலடி வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஒரு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவிற்கு இரண்டு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். (பதிலடி வரிவிதிப்பால் இந்தியா ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலர் அளவை இழக்கக்கூடும் என சிட்டி ஆய்வு நிபுணர்கள் கணிக்கின்றனர். இது குறிப்பாக உலோகங்கள், ரசாயனங்கள், நகைகள் போன்ற துறைகளை பாதிக்கும் என்றும், மருந்துகள், மோட்டர் வாகனங்கள் மற்றும் உணவுப் பொருட்களும் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக கணிக்கப்படுகிறது.)
இந்திய ஏற்றுமதியாளர்கள்,"தங்களது பாதுகாப்புவாத மனநிலையிலிருந்து வெளியே வரவேண்டும் எனவும், பலம் மற்றும் தன்நம்பிக்கையுடன் உலகை தைரியமாக எதிர்கொள்ளவேண்டும்'' என கோயல் வலியுறுத்தியதாக அவரது அமைச்சரவை அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரிட்டன், நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொள்ளவும் இந்தியா முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை இந்தியாவில் ஸ்டார்லிங்க் மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகள் வழங்க டிரம்பின் கூட்டாளி ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கரம்கோர்த்துள்ளன.
மஸ்க் அண்மையில் இந்த இரு நிறுவனங்களுடன் மோதிய நிலையில், இந்த ஒப்பந்தம் பல ஆய்வாளர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்திய-அமெரிக்க அதிகாரிகள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்காக பேசிக்கொண்டிருக்கும் நிலையில் இது நடந்துள்ளது.
1990களின் பிற்பகுதியில் இருந்து 2000கள் வரை இந்தியாவின் வேகமான வளர்ச்சி, 2004-2009ஆம் ஆண்டு வரை 8.1% மற்றும் 2009-2014 வரை 7.46% வளர்ச்சி, பெரும்பாலும் படிபடியாக வரிகளை குறைத்து சர்வதேச சந்தைகளில் இணைந்ததால்தான் சாத்தியப்பட்டது. குறிப்பாக மருந்துகள், மென்பொருள், வாகனங்கள், ஜவுளி மற்றும் உடைகள் ஆகியவற்றால்தான் வளர்ச்சி சாத்தியப்பட்டது. அப்போது முதல் இந்தியாவின் கவனம் ஏற்றுமதி பக்கம் திரும்பியது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த பத்தாண்டுகளாக பின்பற்றப்பட்ட பாதுகாப்புவாத கொள்கைகள், மோதியின் மேக் இன் இந்தியா முன்னெடுப்பை பாதித்திருப்பதாக பல பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தொழிலாளர்களை அதிகம் சார்ந்த ஜவுளி போன்றவற்றைவிட மூலாதனம் மற்றும் தொழில்நுட்பம் சார்த்த துறைகளுக்கு மேக் இன் இந்தியா முக்கியத்துவம் அளித்தது அதன் விளைவாக உற்பத்தியையும், ஏற்றுமதியை பெருக்கவும் இந்தியா தடுமாறியுள்ளது.
நியுயார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்-ல் பொருளாதார பேராசிரியராக இருக்கும் வைரல் ஆச்சாரியாவின் கூற்றுப்படி, அதிக வட்டி விகிதங்கள் பல இந்திய தொழில்களில் பாதுகாப்புவாதத்தை வளர்த்திருப்பதுடன், திறனை மேம்படுத்துவதில் முதலீடு செய்வதை தடுத்திருக்கிறது.
இது ஏற்கனவே "சொகுசாக இருந்தவர்கள்" அதிக போட்டியை எதிர்கொள்ளாமலேயே சந்தையில் பலம் பெற வழிவகை செய்துள்ளது.
புரூகிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் கட்டுரை ஒன்றில் முன்னாள் மத்திய வங்கி ஊழியரான ஆச்சாரியா குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் தொழில் சமநிலையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றால், ''சர்வதேச பொருட்கள் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கவும், பாதுகாப்புவாதத்தை குறைக்கவும் வரிகளை குறைக்கவேண்டும்.''
ஏற்கனவே இந்தியாவின் வரிகள் பெரும்பாலான நாடுகளைவிட அதிகமாக இருக்கும் நிலையில் அதை மேலும் உயர்த்துவது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
"நாம் ஏற்றுமதிகளை உயர்த்தவேண்டும், பதிலுக்கு பதில் வரிவிதிக்கும் யுத்தம் நமக்கு உதவாது. சீனாவுக்கு பெரிய அளவிலான ஏற்றுமதி தளம் இருப்பதால் அதனால் இந்த நடைமுறையை பயன்படுத்தமுடியும். ஆனால் சர்வதேச சந்தையில் நமது பங்கு மிகவும் சிறியது என்பதால் நாம் இதை செய்யமுடியாது." என்கிறார் மும்பையை சேர்ந்த இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பொருளாதார இணை பேராசிரியராக இருக்கும் ராஜேஷ்வரி சென்குபதா. "ஒரு வர்த்தக போர் மற்றவர்களை பாதிப்பதை விட நம்மை அதிகம் பாதிக்கலாம்."

பட மூலாதாரம், Getty Images
இந்த சூழ்நிலையில், இந்தியா ஒரு முக்கிய திருப்புமுனை சந்தர்ப்பத்தில் உள்ளது.
உலகில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது , சர்வதேச வர்த்தகத்திற்கு ஒரு புதிய தொலைநோக்கை வடிவமைக்கும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதாக சொல்கிறார் கிளார்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் வர்த்தக நிபுணரான அசீமா சின்ஹா.
'குளோபலைஸிங் இண்டியா'என்ற புத்தகத்தை எழுதிய சின்ஹா, "தெற்கு ஆசியாவில் பாதுகாப்புவாத தடுப்புகளை குறைப்பதன் மூலமும், தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்குடன் உறவுகளை வலுப்படுத்திவதன் மூலமும் மறுஉலகமயமாக்கப்பட்ட உலகில் முக்கிய நாடாக தன்னை முன்னிறுத்தி ஒரு புதிய வர்த்தக தொலைநோக்கை வடிவமைப்பதில் முன்னணி நாடாக இருக்க இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது." என்கிறார்
"வரிகளை குறைப்பதன் மூலம், இந்தியா வர்த்தக மற்றும் பொருளாதார செயல்பாடுகளை ஈர்க்கும் பிராந்திய மற்றும் பிராந்தியங்களுகிடையிலான காந்தமாக செயல்பட்டு, பல்வேறு சக்திகளை தனது சுற்றுப்பாதைக்கு இழுக்கமுடியும்" என மேலும் கூறுகிறார்.
அது உள்ளூரில் அதிகம் தேவைப்படும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்தியாவுக்கு உதவக்கூடும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக இருக்கும் விவசாயம், மொத்த வேலைவாய்ப்பில் 40% ஆக இருக்கிறது. இது மிகவும் குறைவான உற்பத்தித்திறனை காட்டுகிறது. கட்டுமானப் பணிகள் இரண்டாவது மிகப்பெரிய வேலைவாய்ப்பாக தினசரி கூலி தொழிலாளிகளை ஈர்க்கிறது.
இந்தியாவின் சவால், ஏற்கனவே மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியாக செழித்திருக்கும் சேவைதுறையை விரிவுபடுதுவதில் இல்லை. மாறாக சேவைத்துறை பணிகளுக்கு தேவையான அடிப்படை திறன்கள் இல்லாத பெருவாரியான திறன்களற்ற தொழிலாளர்களை கையாள்வதில்தான் சவால் உள்ளது.
"உயர்நிலை சேவைகள் செழித்திருக்கின்ற நேரத்தில், பணியாளர்கள் பெரும்பான்மையானவர்கள் கல்வியின்றியும், போதிய வேலைவாய்ப்பின்றியும், பெரும்பாலும் கட்டுமானம் அல்லது முறைசாரா வேலைகளுக்கு தள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வேலைக்கு சேருவோருக்கு பயனுள்ள வேலைவாய்ப்புகளை வழங்க, இந்தியா உற்பத்தி ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும். சேவைகளை மட்டுமே சார்ந்திருப்பது திறனற்ற பணியாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்யாது," என்கிறார் சென்குப்தா.

பட மூலாதாரம், Getty Images
வரிகளை குறைப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் மலிவான பொருட்களை சந்தையில் குவித்து, உள்நாட்டு தொழில்களை பாதிக்கலாம் என்பது ஒரு அச்சம்.
சென்குப்தாவின் கூற்றுப்படி, இந்தியா தற்போது வர்த்தகம் செய்யும் நாடுகளுள் அதிக வரிவிதிக்கும் நாடாக இருப்பதால் இறக்குமதி வரிகளில் "அனைவருக்கும் பொதுவான குறைப்பு" என்பதுதான் இந்தியாவுக்கு சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.
ஆனால் அதில் ஒரு எச்சரிக்கை இருக்கிறது: சீனாவின் வர்த்தகப் போராட்டம், குறிப்பாக அமெரிக்காவுடன் தற்போது நடைபெற்று வரும் வர்த்தக யுத்தத்தால் சீனா குறுகிய காலத்தில் இந்தியாவில் பொருட்களை குவிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
"இதிலிருந்து தற்காத்து கொள்ள, சீனாவுக்கு எதிராக இந்தியா வரிகள் அல்லாத தடைகளை பயன்படுத்தலாம். ஆனால் அது இந்த ஒரு நாட்டுக்கு எதிராக மட்டும், அதுவும் பொருட்களை குவித்ததாக நிரூபிக்கபட்டால் மட்டும்தான் செய்யவேண்டும். இதைத் தவிர ஒட்டுமொத்தமாக வரியை குறைப்பதுதான் இந்தியாவிற்கு நல்லது," என்கிறார் அவர்.
அமெரிக்காவை திருப்திப்படுத்தும் முயற்சியில் இந்தியா அளவுக்கு அதிகமாக விட்டுக்கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் கவலை அதிகரித்து வருகிறது.
பொருளாதார அழுத்தம் காரணமாக அல்லாமல் வெறும் பேச்சு சாதுர்யத்தின் அடிப்படையில் வர்த்தக கொள்கைகளை மென்மைப்படுத்திக்கொள்ளும் இந்தியாவின் போக்கு, சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகளில் உறுதித்தன்மை இல்லாததை காட்டுவதாக குளோபல் டிரேட் ரிசர்ச் இனிசியேட்டிவ் என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் ஶ்ரீவஸ்தவா நம்புகிறார்.
இந்தப் போக்கு நீடித்தால், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா அதற்கு மேலும் சமரசங்களை செய்துகொண்டு, அதன் பேரம் பேசும் திறனை குறைக்கக்கூடும் என அவர் சொல்கிறார்.
"மற்ற பெரிய பொருளாதாரங்களை ஒப்பிடுகையில், அமெரிக்கா இந்தியாவுக்கென தனியாக எந்த வரியும் விதிக்காத நிலையிலேயே பல வரத்தக முனைகளில் இந்தியா முன்கூட்டியே சரணடைந்திருப்பது, அது அழுத்தத்திற்கு எளிதில் பணியக்கூடியது என தோன்றச் செய்கிறது."
டிரம்பின் வரி யுத்தத்தின் திட்டமிடப்படாத விளைவுகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது பரந்த ஒருமித்த கருத்தாக தெரிகிறது. அமெரிக்க விதிக்க சாத்தியமுள்ள வரிகள், சீர்திருத்தத்திற்கான ஊக்கியாக மாறியிருக்கலாம் என ஹெச்எஸ்பிசி-யில்(HSBC) முதன்மை இந்திய பொருளாதார நிபுணராக இருக்கும் பிரஞ்சுல் பண்டாரி கருதுகிறார்.
"டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் பெரிய ஏற்றுமதியாளர்கள் மீதான கூடுதல் வரியால் விநியோக சங்கிலிகள் மறுசீரமைக்கப்பட்டு, உலகம் புதிய தயாரிப்பாளர்களை தேடினால், இந்தியாவுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கக்கூடும்," என அவர் ஓர் ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகிற்கு பொருட்களை தயாரிக்கும் வேலைகளை உருவாக்குவது சுலபமாக இருக்கப் போவதில்லை. அடிமட்டத்திலான, திறன்கள் தேவையற்ற தொழிற்துறை வேலைகளை (சீனா பல பத்தாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் வேலைகள்) இந்தியா பெரும்பாலும் தவறவிட்டுவிட்டது. தானியங்கி தொழில்நுட்பம் பெருகி வருகிறது. மேலும் ஆழமான சீர்திருத்தங்கள் இல்லாமல் இந்தியா பின்தங்கிவிடும் அபாயம் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












