தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: தேசிய அரசியலில் திமுகவுக்கு பலனா?

பட மூலாதாரம், DMK
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய ஏழு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், DMK
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சனிக்கிழமையன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "மாநிலங்கள் சுயாட்சியுடன் செயல்பட்டால்தான் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும்; வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்" என்றார்.

பட மூலாதாரம், Udhayanidhi Stalin
மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் அது தென்மாநிலங்களை வெகுவாகப் பாதிக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சமூகநலத் திட்டங்கள் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், தொகுதி எண்ணிக்கையில் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்பதால் மறுசீரமைப்பை எதிர்க்கிறோம்" என்றார்.
இதே கருத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரும் குறிப்பிட்டனர்.
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். இதை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி அறிவிக்க வேண்டும், வெளிப்படையான முறையில் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்த வேண்டும், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அப்படியே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுகவுக்கு பலன் கிடைக்குமா?
"தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ள இந்தக் கூட்டத்தால் அவருக்கு தேசிய அளவில் பலன் இருக்கும்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இதுவரை மோதி அரசு பேசவில்லை. அவ்வாறு பேசத் தொடங்கும்போது அதற்கான பலன் ஸ்டாலினுக்கு கிடைக்கும். இதைப் பற்றி அனைவரும் பேசத் தொடங்குவார்கள்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டும், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இதுகுறித்துப் பேசிய ஆர்.மணி, "தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிரான அரசியல் தலைவராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கு ஸ்டாலின் முயற்சி செய்கிறார். இதை உணர்ந்துதான் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம்" என்றார்.
அது தவிர, இந்திய அளவில் பாஜக-வுக்கு எதிரான அச்சாணியாக காங்கிரஸ் இருப்பதால், அக்கட்சியை ஓரங்கட்டிவிட்டு ஸ்டாலின் உருவெடுத்து வருவதை பாஜக ரசிக்கவே செய்யும் என ஆர்.மணி குறிப்பிட்டார்.
மூத்த பத்திரிகையாளர் மாலன் பேசும்போது, "நாடு முழுவதும் தனக்கான முக்கியத்துவத்தைக் காட்டிக் கொள்வதற்காக ஸ்டாலின் இவ்வாறு செயல்படுகிறார். இந்தியா கூட்டணியைப் போல அனைவரையும் அழைத்து இமேஜை உயர்த்திக் கொள்ள நினைக்கிறார்" எனக் கூறுகிறார்.
இந்தியா கூட்டணியில் வெற்றிடம் உள்ளதாகக் கூறும் மாலன், "அந்தக் கூட்டணியின் தலைவராக மமதாவை முன்னிறுத்த வேண்டும் என்று அண்மையில் குரல்கள் எழுந்தன. தற்போது தேசிய அளவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் வேலைகளை ஸ்டாலின் செய்கிறார்" எனத் தெரிவித்தார்.
"ஸ்டாலின் தலைமையேற்று நடத்திய கூட்டத்தைக் கற்பனையான நாடகம் என பாஜக விமர்சிப்பது அபத்தமானது" எனக் கூறும் ஆர்.மணி, "தொகுதி மறுசீரமைப்பை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாமல் இந்திரா காந்தியும் வாஜ்பேயியும் கடந்து போனார்கள். இதை நீண்ட காலம் அமைதியாக வைத்திருக்க முடியாது" எனக் கூறுகிறார்.
தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்களுக்கு பாதிப்பு வராது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதைச் சுட்டிக் காட்டிய ஆர்.மணி, "அதை நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்காதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.
"தொகுதி மறுசீரமைப்பால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு தமிழ்நாட்டைவிட மக்கள் தொகை குறைவு. மத்திய அரசு இதை எப்படி செயல்படுத்தப் போகிறது எனத் தெரியவில்லை. தற்போது வரை அறிவிப்பு வரவில்லை" எனக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

பட மூலாதாரம், DMK
பாஜக சொல்வது என்ன?
"மமதா பானர்ஜி வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். அதனால் வரவில்லை. தென் மாநிலங்கள் அதிகம் பாதிப்பதால் அதை மட்டும் முன்னிலைப்படுத்துகிறோம்" என்று கூறினார் தி.மு.க செய்தித் தொடர்புத்துறை தலைவரும் முன்னாள் எம்.பி-யுமான டி.கே.எஸ்.இளங்கோவன்.
அதேநேரம், இந்த கூட்டத்தை நிழலுடன் நடத்தப்படும் யுத்தமாகப் பார்ப்பதாகக் கூறுகிறார், தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன்.
"தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு எதுவும் கூறாத நிலையில், அதைப் பற்றி எந்த முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
தி.மு.க நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களுடன் நதிநீர் உள்பட தமிழ்நாட்டுக்குப் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாகக் கூறும் இராம.சீனிவாசன், "இவர்கள் அனைவரும் பிரதமர் மோதியை எதிர்ப்பவர்கள். இதனால் அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை" எனக் கூறினார்.

பட மூலாதாரம், Annamalai
பாஜக-வின் விமர்சனம் குறித்து டிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டபோது, "தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்களின் எண்ணிக்கை குறையாது என அமித் ஷா கூறுவதில் இருந்தே மறுசீரமைப்பைக் கொண்டு வரப் போகிறார்கள் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்" எனக் குறிப்பிட்டார்.
''பா.ஜ.க-வுக்கு எதிராக தேசிய அளவில் ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதாக கூறப்படுவது அபத்தமான வாதம். இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தியே அவர் பேசியிருக்கிறார். இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது" என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணா.
"மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களின் எண்ணிக்கை கூடும். தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறையும். இந்த அநீதியை காங்கிரஸ் தலைமை உணர்ந்துள்ளது. இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் உள்ள பிரச்னை குறித்து ஒரே நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ஆனால், தொகுதி சீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேசியிருக்கிறார். அதுதான் கட்சியின் நிலைப்பாடு" எனக் கூறினார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












