"ஆசிரியர் இப்படி அடிப்பார் என நினைக்கவில்லை" - ஆறாம் வகுப்பு மாணவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை - என்ன நடந்தது?

ஆசிரியர் அடித்ததால் மூளையில் அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்த செய்தியில் உங்களுக்கு சங்கடம் தரும் சில விஷயங்கள், புகைப்படம் இருக்கலாம்.

"அந்த ஆசிரியர் என் மகனை இப்படி அடிப்பார் என நினைக்கவில்லை. மூளையில் அறுவை சிகிச்சை முடிந்தும் அவனுக்கு அடிக்கடி வலிப்பு வருகிறது. இடதுபக்கம் செயலிழந்து போக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்" - தன் மகனின் நிலையை கலங்கியபடியே கூறுகிறார் முருகன்.

விழுப்புரம் மாவட்டம், வி.அகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் தன் மகனை ஆசிரியர் தாக்கியதில் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பிபிசி தமிழிடம் அவர் விவரித்தார்.

ஆசிரியர் மீது இரண்டு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பி.ஏ.நரேஷ்.

மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? மாணவர் தற்போது எப்படி இருக்கிறார்? பெற்றோர் கூறுவது என்ன?

பள்ளியில் என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகில் வி. அகரம் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் முருகனின் இரண்டாவது மகன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளியில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள கள்ளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், விழுப்புரம் நகராட்சியில் ஓட்டுநராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார்.

'கடந்த மார்ச் 14 ஆம் தேதியன்று காலை சுமார் 11 மணியளவில் உடன் படிக்கும் மாணவி ஒருவர், என் மகனை உருவக்கேலி செய்துள்ளார். இதனால் கோபப்பட்டு அந்த மாணவியின் முதுகில் என் மகன் அடித்துள்ளார். அந்த மாணவி ஆசிரியரிடம் கூறியுள்ளார்' என வளவனூர் போலீஸாரிடம் முருகன் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அந்த மாணவியை எதற்காக அடித்தாய் என ஆசிரியர் கேட்ட போது, என் மகன் பயந்து ஓடிப் போய்விட்டான். உடனே எட்டாம் வகுப்பு மாணவர்களை அனுப்பி என் மகனை இழுத்து வருமாறு கூறியுள்ளார்" என பிபிசி தமிழிடம் முருகன் கூறினார்.

அப்போது தன் மகனை பிரம்பு குச்சியைக் கொண்டு கை, தோள்பட்டை, தலை ஆகிய இடங்களில் பலமாக ஆசிரியர் தாக்கியதாக அவர் தெரிவித்தார். "ஆசிரியர் தலையில் அடித்ததால் அங்கேயே என் மகன் மயங்கி விழுந்துவிட்டதாக அங்கிருந்த மாணவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" என்கிறார் முருகன்.

ஆசிரியர் அடித்ததால் மூளையில் அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மாணவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது

"கண் தெரியவில்லை"

"இதையடுத்து, என் மகன் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பி கணினி ஆய்வக அறைக்கு சக ஆசிரியர்கள் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு என் மகனிடம் ஆசிரியர்கள் பேசிய போது, 'எனக்கு கண் தெரியவில்லை, இருட்டாக இருக்கிறது' எனக் கூறி அழுததாக தகவல் கிடைத்தது" எனக் கூறுகிறார் முருகன்.

ஆசிரியர்களே அந்த மாணவரை அருகில் உள்ள குச்சிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியதால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.

"முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நான் சென்றபோது சீருடை முழுக்க வாந்தி எடுத்த அடையாளத்துடன் அழுக்காக இருந்தான். அவனது தலையை ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூளையில் ரத்தம் உறைந்துள்ளது. ஜிப்மருக்கு கூட்டிச் செல்லுங்கள்' எனக் கூறி அவர்களே ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தனர்" எனக் கூறுகிறார் முருகன்.

பொதுமக்கள் போராட்டம் - வழக்குப் பதிவு

ஆசிரியர் அடித்ததால் மூளையில் அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

அதற்குள் மாணவர் தாக்கப்பட்ட தகவலை அறிந்து கள்ளிகுளம் கிராம மக்கள் வி.அகரம் அரசு உயர்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து வளவனூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை அங்கிருந்த மக்கள் ஏற்காததால் பதற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக விழுப்புரம் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 118(1) (351(2) என 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதத்தால் திட்டமிட்டே கொடும் காயத்தை ஏற்படுத்துவதை இந்தச் சட்டப் பிரிவுகள் குறிக்கின்றன.

இதுதொடர்பாக, வி.அகரம் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் ஆய்வு நடத்தியுள்ளார். மாணவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அந்த தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

"சிகிச்சைக்குப் பிறகும் பாதிப்பு"

ஆசிரியர் அடித்ததால் மூளையில் அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மாணவருக்கு வழங்கப்பட்ட உயர் சிகிச்சையை அவரது தந்தை முருகன் விவரித்தார்.

"புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்படும் வரை மயக்க நிலையிலேயே என் மகன் இருந்தான். மார்ச் 16 ஆம் தேதி மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அவ்வாறு செய்யாவிட்டால் கோமா நிலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்" எனக் கூறினார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உடல்ரீதியாக பல்வேறு பாதிப்புகளை மாணவர் சந்தித்து வருகிறார்.

"என் மகன் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்" எனக் கூறும் முருகன், "வீட்டுக்கு அவனை அழைத்து வந்த பிறகு கடந்த 22 ஆம் தேதியன்று வலிப்பு வந்தது. உடனே ஜிப்மருக்கு கூட்டிச் சென்றோம். 'வலிப்பு வரவே செய்யும். இடதுபக்கம் செயலிழக்கவும் வாய்ப்புகள் அதிகம்' என மருத்துவர்கள் கூறினர்" எனக் கூறி கண்கலங்குகிறார் முருகன்.

'மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், எதிர்காலத்தில் உடல்ரீதியாக என்ன பாதிப்பு வேண்டுமானாலும் ஏற்படலாம்' என மருத்துவர்கள் எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த திங்கள்கிழமையன்று புகார் மனு ஒன்றை முருகன் அளித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தென்சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வேல்முருகன், "மாணவரின் மண்டை ஓட்டை பிரித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனக் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " மாணவருக்கு உயர் சிகிச்சையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். அவரது உயர்கல்விக்கான செலவை அரசு ஏற்க வேண்டும்" என்கிறார்.

மாணவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியரிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் அவரைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்ற போதும் முடியவில்லை.

ஆசிரியர் அடித்ததால் மூளையில் அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மாணவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் குச்சியால் அடிப்பது, கையால் அடிப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது என்கிறார் நரேஷ்

தொடக்கக் கல்வி இயக்குநர் கூறுவது என்ன?

அதேநேரம், மாணவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும் விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர் விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகிறார், தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பி.ஏ.நரேஷ்.

"விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நேரில் சென்று விசாரணை நடத்திய போது, மாணவரை பிரம்பால் அடித்ததை அந்த ஆசிரியர் ஒப்புக் கொண்டுள்ளார். மாணவரின் கையிலும், தோள்பட்டையிலும் மட்டுமே அடித்ததாகவும், தலையில் அடிக்கவில்லை என்றும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார். ஆனால், ஆசிரியர் அடித்த பிறகே மாணவர் மயங்கியிருப்பது உறுதியானதாலும், மாணவரை ஆசிரியர்கள் அடிப்பதே தவறு என்பதாலும் அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று நரேஷ் கூறினார்.

பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் குச்சியால் அடிப்பது, கையால் அடிப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. இது அநாகரிகமான செயல்" எனக் குறிப்பிட்டார்.

"மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. வார்த்தைகளால் கூட மாணவர்களை காயப்படுத்தக் கூடாது என ஆசிரியர்களிடம் அறிவுறுத்தி வருகிறோம்" எனக் கூறுகிறார் பி.ஏ.நரேஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு