அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சாதி குறுக்கிடுகிறதா? தொடரும் பிரச்னைக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவகுமார் ராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
"அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்துவதில் ஆண்டுதோறும் பிரச்னை எழுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு ஜல்லிக்கட்டை நடத்துவதில் சாதி குறுக்கிடுவது காரணமா?" போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழரின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றக்கூடிய ஒன்று. இன்றைய தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளே பிரதானமானவை. அவற்றில், தை ஒன்றாம் தேதி பொங்கல் தினத்தன்று முதன்முதலாக அரங்கேறும் பெருமைக்குரியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.
பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் அவனியாபுரமும் ஒன்று. பீட்டாவின் குறுக்கீட்டால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படவே, அதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் அஹிம்சை போராட்டம் வாயிலாக ஒன்றுபட்டு குரல் கொடுத்தனர்.
சென்னை மெரினாவில் பல லட்சம் பேர் திரண்ட அமைதிப் போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கு தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் அதிக கவனம் கிடைத்தது.
அதன் பிறகு அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஆனால், "அவனியாபுரத்தில் மட்டும் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பிரச்னை எழுவது வாடிக்கையாகிவிட்டது. தமிழரின் ஒன்றுபட்ட போராட்டத்தால் உலக அளவில் கவனம் ஈர்த்த ஜல்லிக்கட்டில் சாதியை முன்னிறுத்தி பிரச்னை எற்படுவது கவலை தரத்தக்க ஒன்றாக இருக்கிறது," பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளாகவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்துவது யார் என்ற கேள்வி கடைசி நாள் வரையிலுமே நீடித்து, முடிவில் அரசையே ஏற்று நடத்துமாறு நீதிமன்றம் பணித்தது.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும்கூட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றம் சென்றுள்ளது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு தரப்பும், அவனியாபுரம் கிராம கமிட்டி என்ற பெயரில் மற்றொரு தரப்பும் ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமையைக் கோருகின்றன.
"தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் எல்லாம் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு அமைதியாக நடந்தேற, அவனியாபுரத்தில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் பிரச்னை வர என்ன காரணம்? ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை ஏற்படுவது ஏன்?" என்பன போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த முனியசாமியிடம் இதுகுறித்துப் பேசியபோது, "பிரச்னை, ஜல்லிக்கட்டில் யார், யார் பங்கேற்பது, யார் காளைகளை அவிழ்ப்பது, சீறி வரும் காளைகளைப் பிடிப்பது யார் என்பதில் அல்ல. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை யார் நடத்துவது என்பதே இன்றைய பிரச்னை," என்றார்.
"அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1980ஆம் ஆண்டு சாதி மோதல் ஏற்பட்டதால் அடுத்த 7 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டே நடத்தப்படவில்லை. 1988ஆம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராம், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோரின் முன்முயற்சியால் அனைத்துக் கட்சியினர், அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்கள் இணைந்து அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது," என்கிறார் முனியசாமி.

"அது முதல் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் சார்பில் கமிட்டி அமைக்கப்படுவது வழக்கம். இந்த கமிட்டி ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாற்றியமைக்கப்படும். 1990களில் அந்த கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.கே.கண்ணன், 3 ஆண்டுகளுக்குப் பின்னரும் பதவி விலகாமல் விடாப்பிடியாக அதில் தொடர்ந்தார்," என்று அவர் குற்றம்சாட்டுகிறார்.
"பிற்காலத்தில் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் தனியாக ஓர் அமைப்பை உருவாக்கி, அதில் தனது குடும்ப உறுப்பினர்களையே பிரதான பொறுப்புகளில் அமர்த்தி, தன் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நடத்துகிறார். அவரது தன்னிச்சையான செயல்பாடுகளால், ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே இடம் பெறும் சூழல் உருவாகியுள்ளது" என்று முனியசாமி கூறுகிறார்.
"மாவட்ட நிர்வாகம் நடத்திய சமாதானக் கூட்டங்களில் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதம் பிடிக்கும் ஏ.கே.கண்ணன், கிராம மக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும், ஜல்லிக்கட்டை நானே நடத்துவேன், இல்லாவிட்டால் நம்மூருக்கு ஜல்லிக்கட்டே வேண்டாம் என்று விடாப்பிடியாகக் கூறிவிட்டார்," என்று முனியசாமி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, ஓரணியாக நிற்கும் அவனியாபுரம் கிராம மக்களை சாதி ரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சியிலும் கண்ணன் ஈடுபடுவதாக அவர் புகார் கூறினார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பல ஆண்டுகள் தலைமை தாங்கி நடத்தியவரும், தென்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவருமான ஏ.கே.கண்ணன், தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
"அவனியாபுரத்தில் தொன்றுதொட்டு ஜல்லிக்கட்டை நடத்தி வந்தது விவசாயிகள்தான்" என்பது அவரது கூற்று.

"தென்கால் பாசன விவசாயிகள்தான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தொடக்கம் முதல் நடத்தி வந்தனர். ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டிகளை அமைத்ததும் அவர்கள்தான். அந்த அடிப்படையில்தான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டி தலைவராக பொறுப்பேற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளேன்," என்றார் அவர்.
"ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா குறுக்கிட்டபோது மத்திய, மாநில அரசுகளை நாடியும், உச்சநீதிமன்றம் வரை சென்றும் போராடியது நாங்கள்தான். தென்கால் பாசன விவசாயிகளின் பணத்தைக் கொண்டுதான் உச்சநீதிமன்றத்தில் வழக்காடப்பட்டது.
பீட்டா குறுக்கீட்டிற்குப் பிறகு எழுந்த புதிய சூழலில், கிராம மக்கள் என்ற பெயரில் பொதுவாக ஜல்லிக்கட்டை நடத்தினால், அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகே, தென்கால் பாசன விவசாயிகள் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நலச் சங்கம் என்ற பெயரில் முறைப்படி பதியப்பட்டது" என்று ஏ.கே.கண்ணன் விளக்கம் அளித்தார்.

"2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு அனைவர் கவனமும் ஜல்லிக்கட்டுப் பக்கம் திரும்பிய பிறகுதான் தற்போதுள்ள பிரச்னை எழுந்தது. வெறும் 4 பேர் மட்டுமே பிரச்னையை கிளப்புகிறார்கள்.
அவர்கள் விவசாயிகள் அல்ல என்பதால்தான் எங்கள் சங்கத்தில் சேர்க்கவில்லை. அதனால், ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. உண்மையில், அவர்களுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
விழாக்கமிட்டி என்று கூறிக் கொள்ளும் அவர்கள் இதுவரை ஒருமுறை கூட ஜல்லிக்கட்டை நடத்தியதே இல்லை. ஆனால், எங்கள் சங்கமோ நான் தலைமையேற்ற பிறகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளது. வெறும் விளம்பரத்திற்காகவும் ஜல்லிக்கட்டை பணம் சம்பாதிப்பதற்காகவும் மட்டுமே அவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்," என்று கண்ணன் சாடுகிறார்.

ஆனால், முனியசாமியோ, "எதிர் தரப்பினர் இப்போதே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் கொடுப்பதாக பணம் வசூல் செய்கிறார்கள் என்று வீடியோக்கள் வந்துள்ளன. எதிர்காலத்தில் ஐ.பி.எல். போல் ஜல்லிக்கட்டையும் பணம் சம்பாதிக்கும் விளையாட்டாக மாற்றி விடுவார்கள். ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமையை தனிநபர் சொத்தாக்கி விடுவார்கள்," என்று அச்சம் தெரிவிக்கிறார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உரிமை கோரும் இரு தரப்புமே, இதில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று விடாப்பிடியாக இருக்கின்றன. இரு தரப்புமே பிடிவாதத்தை தளர்த்த மறுப்பதால், கடந்த 3 ஆண்டுகளைப் போல இம்முறையும் மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்தும் நிலை வரக்கூடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












