'ஜல்லிக்கட்டில் ஆறுதல் பரிசை ஏன் மறுத்தேன்?' - 16 வயது மதுரை மாணவி யோகதர்ஷினி பேட்டி

ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு, யோகதர்ஷினி
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"மற்றவர்களை எப்படி பார்க்கிறீர்களோ அவ்வாறே என்னைப் பாருங்கள். நான் ஒரு பெண் என்பதால் என்னை மட்டும் ஏன் தனியாக பார்க்கிறீர்கள்? அனைவருக்கும் பின்பற்றப்படும் விதிமுறைகளைத்தான் எனக்கும் பின்பற்றப்பட வேண்டும். பெண் பிள்ளை என்று என்னைத் தனித்துப் பார்க்க வேண்டாம்," என்று ஜல்லிக்கட்டில் தன் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷினி கூறுகிறார்.

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி. 16 வயதே ஆகும் இவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். யோகதர்ஷினியின் குடும்பத்தில் அவரது முன்னோர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்த்து வந்தனர். இவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோரைத் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக யோகதர்ஷிணி ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளைகளைக் களமிறக்கி வருகிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 'வடமுகத்து கருப்பு' என்று பெயரிடப்பட்ட அவரது காளை பங்கேற்றது. காளை வாடிவாசலிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டதும், மாணவி யோகதர்ஷினியின் காளையை இருவர் சேர்ந்து பிடித்தனர். இருவர் சேர்ந்து ஒரு காளையைப் பிடிப்பது விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காளையைப் பிடிமாடு என்று அறிவித்த ஒருங்கிணைப்புக் குழு, அந்த பரிசு விழா குழுவைச் சேரும் என்று அறிவித்தனர். மேலும் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷிணிக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக விழா குழு தெரிவித்தது.

இதனை யோகதர்ஷிணி வேண்டாம் என்று நிராகரித்துச் சென்றுவிட்டார். கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியிலும் இதே போன்று அறிவித்த பரிசை நிராகரித்தார்.

எங்கள் வீட்டில் பாரம்பரியமாக காளை வளர்க்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக நான் ஜல்லிக்கட்டுக்குக் காளையைக்‌ கொண்டு செல்கிறேன். அதேபோன்று இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளையை அழைத்துச் சென்றேன் என்று பிபிசி தமிழிடம் யோகதர்ஷினி தெரிவித்தார்.

"நான் அழைத்துச் சென்ற காளை புதியது. அது இதுவரை வாடிவாசலைப் பார்த்ததில்லை. இந்த ஆண்டுதான் முதல் முறையாகக் களமிறங்கியது. சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இருவர் காளையைக் கட்டியதால், பிடிமாடு என்று அறிவித்தனர். அப்போது அறிவித்த ஆறுதல் பரிசை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்," என்கிறார் அவர். முந்தைய ஆண்டுகளில் இவரது வேறு ஒரு காளை ஜல்லிக்கட்டில் நான்கு முறை வென்றுள்ளது.

கடந்த ஆண்டும் இதே போன்று ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டு, அதைத் தாம் மறுத்ததாகக் கூறுகிறார் மாணவி யோகதர்ஷினி.

"கடந்த ஆண்டு ஒருவர் காளையைப் பிடித்தார். அப்போது ஆறுதல் பரிசாகப் பட்டு சேலை வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தனர். அதனை வேண்டாம் என்று மறுத்தேன். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் இரண்டு பேர் காளையை பிடித்தும், அதைப் பிடிமாடு என்று அறிவித்தனர். இப்போதும் எனக்கு ஆறுதல் பரிசாக தங்கக் காசு வழங்குவதாக அறிவித்தனர். அதை வேண்டாம் கூறிவிட்டு வந்தேன்."

BBC

"ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் எந்த காளைகளும் அவை பிடிக்கப்பட்டால் ஆறுதல் பரிசு வழங்க மாட்டார்கள். காளை வென்றால் காளை உரிமையாளருக்கு பரிசு, காளை பிடிக்கப்பட்டால் வீரருக்கு பரிசு. இவைதான் வழக்கமாக நடைபெற்று வருகிறது. நானும் அவர்களுடன் சேர்ந்துதான் மாட்டை அவிழ்க்கிறேன். இதில் நான் பெண் பிள்ளையாக மாட்டைக் கட்டவிழ்க்கிறேன், நான் துவண்டு விடக்கூடாது என்பதற்காக ஆறுதல் பரிசு அறிவித்தனர். எனக்கு அது வேண்டாம்.

எப்பொழுதும் போல மற்றவர்களுக்கு என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அவை எனக்கும் பொருந்தும். அதே விதிமுறையை என்னிடமும் பின்பற்றுங்கள். என் மாடு வென்றால் பரிசை ஏற்கிறேன்," என்றார் அவர்.

தாம் ஒரு பெண்ணாக மாட்டை அவிழ்ப்பதால் மட்டுமே எனக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக கூறுகிறார் யோகதர்ஷினி.

"என்னை மட்டும் ஏன் தனித்துப் பார்க்கிறீர்கள்? நானும் அனைவரையும் போல்தான் காளையை விடுகிறேன். என் காளை வென்றால் நான் வாங்கும் பரிசில் ஒரு நியாயம் உள்ளது, என் காளை பிடிமாடாக ஆகிவிட்டதால் எனக்கு ஆறுதல் பரிசு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்," எனத் தெரிவித்தார் யோகதர்ஷினி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: