ஜல்லிக்கட்டுக்கு அனுமதி... ஆனால் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் தெரியுமா?

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டுதல் நெறிகளை பின்பற்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏற்கெனவே அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த அடிப்படையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 11 அம்ச கட்டுப்பாடுகளை அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு அறிவித்துள்ளார்.

  • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர், காளையுடன் நன்கு பழகும் அதன் உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இருந்து இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர பரிசோதனை அறிக்கையை வைத்திருந்தால் மட்டுமே ஆடுகளத்தில் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கான அடையாள அட்டையை மாவட்ட காவல்துறை வழங்கும். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
  • காளைகளை பதிவு செய்யும்போது அவற்றின் உரிமையாளர், உதவியாளர் ஆகியோரின் பதிவு கட்டாயமாக்கப்படும். காளைகளின் பதிவு நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்:

  • எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படும்.
  • ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் மூலம் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
  • ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images

  • தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா சமூக இடைவெளி பாதுகாப்பு இடைவெளி வழிகாட்டுதல்கள் அடிப்படையில் திறந்தவெளி அரங்கின் அளவிற்கேற்ப அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்களும் இரண்டு நாட்களுக்கு முன்புவரை தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வையிடும் அனைத்து துறை அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் இரண்டு நாட்களுக்குள் கொரோனா இல்லை என்பதற்கான ஆர்டிவழங்க வேண்டும்.
  • அனைத்து துறை அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பார்வையாளர்கள், ஊடகக்துறையினர் அரசு அறிவுறுத்திய வழிகாட்டுதல் நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்,
  • வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி, இணைய வழியாக காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்றி பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள்-2017, அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு வழிகாட்டுதல் நெறிகள் ஆகியவற்றுடன் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: