ஜல்லிக்கட்டு: "மிருக வதையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது" - தொடரும் வாதங்கள் - இதுவரை என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயத்தில் விலங்குகள் எந்த வகையிலும் கொடுமைப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை அனுமதிக்கும் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளின் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரணையைத் தொடர்ந்தது.
அப்போது, விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின்போது, "ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு, மிகுந்த பாசத்துடன் அவை நடத்தப்படுவதாக தமிழக அரசு வழக்காடுகிறதே," என்று நீதிபதிகள் மனுதாரர்களை நோக்கிக் கூறினர்.
இந்த விவகாரத்தில் மனுதாரர் பீட்டா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், "காளையை பராமரிப்பது நல்லதுதான், ஆனால் அதற்காக மிருகத்தை கொடுமைப்படுத்தலாம் என்று அர்த்தம் இல்லை," என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் நிறைவாக, "கொடுமைப்படுத்துவதாக பலரால் அழைக்கப்படும் காளைகளை அடக்கும் விளையாட்டை எந்த வடிவத்திலும் அனுமதிக்க முடியுமா என்பதுதான் எங்களின் கேள்வி," என்று குறிப்பிட்டனர்.
மிருக வதை ஆதாரங்கள்: நீதிபதிகள் கருத்து
இதற்கு வழக்கறிஞர் ஷியாம் திவான், "ஒப்பனை மாற்றம் போல" காளைகளுக்கு பராமரிப்பு இருந்தாலும் அனைத்து சிறந்த பாதுகாப்புகளுடன் கூடிய களத்தில் இறங்கி போராடுவதற்கு காளையை கட்டாயப்படுத்துவது அதை கொடுமைப்படுத்துவதற்கு சமமே," என்று வாதிட்டார்.
ஜல்லிக்கட்டில் மாடுகள் வதைக்கப்படுகின்றன என்பதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளன என்று ஷியாம் திவான் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், காணொளி காட்சியில் உங்களுக்கு தேவையானதை மட்டும் பதிவு செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. சிசிடிவி எனில் அப்படி செய்ய முடியாது. அத்தகைய ஆதாரங்கள் உள்ளதா என்று கேட்டனர்.
இந்த வழக்கில் இன்று வாதங்கள் முடிவடையாத நிலையில், விசாரணையை மீண்டும் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசுகளின் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. தமிழக அரசு தனது பிரமாண பத்திரத்தில், ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கைக்கான செயல் அல்ல. அது வரலாறு, கலாசாரம் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று கூறப்பட்டுள்ளது. நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதும், அதன்பிறகு கோவில்களில் அத்திருவிழாக்கள் நடத்தப்படுவதும் வழக்கம்.
இந்த நிகழ்வு கலாசாரம் நிரம்பியது மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் காட்டுகிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்ட வழக்குகள்

2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மக்கள் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களை தங்கள் கலாசார உரிமையாகப் பாதுகாக்க முடியுமா என்றும் அரசியலமைப்பின் 29(1)ஆம் பிரிவின் கீழ் அந்த உரிமையை பாதுகாக்கக் கோர முடியுமா என்றும் ஆராய அரசியலமைப்பு அமர்வுக்கு இந்த விவகாரத்தை பரிந்துரைத்தது.
இது தொடர்பான விசாரணை முடிவில், ஜல்லிக்கட்டு தொடர்பான விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2017ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் விளக்கம் தொடர்பான கணிசமான கேள்விகளை உள்ளடக்கியிருப்பதால், அதிக நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு இந்த விவகாரத்தை முடிவு செய்யும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் ஆகியவை அரசியலமைப்பின் 29(1)இன் கீழ் வகுக்கப்பட்டுள்ள கலாசார உரிமைகளின் கீழ் வருவதையும், அரசியலமைப்பின் அது பாதுகாக்கப்பட முடியும் என்பதையும் உள்ளடக்கிய சட்டங்களை உருவாக்க மாநிலங்களுக்கு "சட்டமியற்றும் தகுதி" உள்ளதா என்பதை பெரிய அமர்வு முடிவு செய்யும் என்றும் அப்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
சட்டத்துக்கு எதிராக வழக்குகள்

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகியவை விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960இல் திருத்தம் செய்து முறையே ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை அனுமதித்தன. இந்த விவகாரத்தில் மாநில சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பீப்பிள் ஃபார் எத்திக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (PETA) தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) மசோதா 2017-ஐ பீட்டா பல காரணங்களுக்காக எதிர்த்தது. மாநிலத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டை "சட்டவிரோதம்" என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறும் வகையில் இருப்பதாக அது கூறியது.
இதே விவகாரத்தில் 2014இல் ஜல்லிக்கட்டு மற்றும் நாடு முழுவதும் மாட்டு வண்டி பந்தயங்களுக்கு காளைகளை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.
ஆனால், அந்தத் தடையை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை அப்போது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












