மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களை கொன்று குவித்த ராணுவம் இன்று அவர்களிடமே உதவி கேட்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜானதன் ஹெட் மற்றும் பிபிசி பர்மா சேவை
- பதவி, பிபிசி செய்திகள்
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன் மியான்மர் இராணுவம் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தது. இதனை ஐ.நா ‘இனச் சுத்திகரிப்பு’ என்று குறிப்பிட்டது. இத்தனைக்கும் பின், மியான்மர் ராணுவம் இப்போது ரோஹிஞ்சாக்களின் உதவியை நாடுகிறது.
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிஞ்சாக்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்களில் இருந்து, ஜன்டா எனப்படும் அந்நாட்டின் ராணுவம், அவர்களை ராணுவத்தில் சேரக் கட்டாயப்படுத்தியதை பிபிசி கண்டறிந்தது.
சமீப வாரங்களில், குறைந்தது 100 ரோஹிஞ்சா இஸ்லாமியர்களாவது இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.
மூன்று இளம் குழந்தைகள் கொண்ட 31-வயதான ரோஹிஞ்சா இஸ்லாமியரான முகமது, ராக்கைன் தலைநகர் சிட்வேக்கு அருகில் பாவ் டு பா முகாமில் வசிக்கிறார். "எனக்கு பயமாக இருந்தது, ஆனால் அவர்கள் அழைத்தபோது போவதைத் தவிர வேறு வழியில்லை," என்கிறார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த குறைந்தது 1.5 லட்சம் ரோஹிஞ்சாக்கள் கடந்த 10 வருடங்களில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் இரவில், முகாம் தலைவர் முகமதுவிடம் வந்து, அவர் ராணுவப் பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறினார். ‘இது ராணுவ உத்தரவு’ என்று முகாம் தலைவர் அவரிடம் கூறினார். “மறுத்தால், குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பதாக மிரட்டினர்," என்கிறார் முகமது.
பிபிசி பல ரோஹிஞ்சாக்களுடன் பேசியது. அவர்கள், ராணுவ அதிகாரிகள் முகாம்களில் உள்ள இளைஞர்களை ராணுவப் பயிற்சிக்கு வருமாறு கட்டளையிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடந்த கொடூரங்கள்
இதில் ஒரு மிகப்பெரிய முரண்பாடு இருக்கிறது.
ஏனெனில் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சாக்களுக்கு இன்னும் குடியுரிமை மறுக்கப்படுகிறது. அவர்களின் சமூகங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு வெளியே பயணம் செய்வதற்குத் தடை இருக்கிறது. ரோஹிஞ்சாக்கள் இதுபோன்ற பலவிதமான பாரபட்சமான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். முகமது போன்றவர்களும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு ராக்கைன் மாநிலத்தில் அனைத்து இன மக்களும் இருந்த வசிப்பிடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மோசமான முகாம்களில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டு, மியான்மர் ராணுவம் ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக ஒரு கொடூரமான அழித்தொழிப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா மக்களைக் கொன்றது, பெண்களைக் கற்பழித்தது, அவர்களது கிராமங்களைத் தீயிட்டு எரித்தது.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், 7 லட்சம் ரோஹிஞ்சாக்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்குத் தப்பிச் சென்றனர். அவர்களில் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் அங்குதான் இருக்கிறார்கள்.
மியான்மர் ரோஹிஞ்சாக்களை நடத்திய விதம் தொடர்பாக, நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குறித்த விசாரணையை எதிர்கொண்டு வருகிறது.
ஆனால், அதே இராணுவம் இப்போது ரோஹிஞ்சாக்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்ப்பது அதன் விரக்தியின் அறிகுறியாகும். சமீபத்தில் ராக்கைன் நகரில் உள்ள அரக்கான் எனும் பகுதியில் ஒரு இனக்கிளர்ச்சிக் குழு பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றியது. அது மியான்மர் ராணுவத்திற்கு மிகப்பெரும் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
இதே ராக்கைன் நகரில் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் டஜன்கணக்கான ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரோஹிஞ்சாக்களுக்கு ராணுவப் பயிற்சி
மியான்மர் ராணுவம் நாட்டின் பிற பகுதிகளிலும் கிளர்ச்சிப் படைகளிடம் குறிப்பிடத்தக்க அளவு நிலப்பகுதிகளை இழந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 6) தாய்லாந்தின் கிழக்கு எல்லையில் உள்ள நகரமான மியாவாடியின் கட்டுப்பாட்டை ராணுவம் இழந்தது. நாட்டின் பெரும்பாலான தரைவழி வர்த்தகம் இந்த நகரத்தின் வழியாகவே செல்கிறது.
ராணுவமும் ஏராளமான வீரர்களை இழந்துள்ளது. அவர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும், எதிர் தரப்பிடம் சரணடைந்தும், அல்லது எதிர் தரப்பில் இணைந்தோ உள்ளனர். அவர்களுக்கு பதிலாகப் புதிய வீரர்களைக் கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில் யாரும் மக்கள் செல்வாக்கற்ற ராணுவ ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தங்கள் உயிரைப் பணயம் வைக்க விரும்பமாட்டார்கள்.
இதுதான் தாங்கள் மீண்டும் குறி வைக்கப்படுவதற்கான காரணம் என்று ரோஹிஞ்சாக்கள் எண்ணுகிறார்கள். தோற்றுக்கொண்டிருக்கும் ஒரு போரில் எதிர் தரப்பினரிடம் பலியாவதற்கு ராணுவம் தங்களைக் கட்டாயப்படுத்துவதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.
சித்வே எனும் சிற்றூரில் உள்ள 270-வது காலாட்படை அணியின் தளத்திற்கு தான் அழைத்துச் செல்லப்பட்டதாகச் சொல்கிறார் முகமது. கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த இன கலவரத்தின் போது இதே ஊரிலிருந்துதான் ரோஹிஞ்சாக்கள் வெளியேற்றப்பட்டனர், மேலும் அங்கு வசிப்பதிலிருந்து தடை செய்யப்பட்டனர்.
துப்பாக்கிகளில் தோட்டாக்களை இடுவதற்கும், துப்பாக்கி சுடுவதற்கும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். "ஒரு துப்பாக்கியின் பாகங்களைக் கழற்றி அவற்றை எப்படி மீண்டும் இணைப்பது என்பதையும் அவர்கள் எங்களுக்குக் காட்டினார்கள்," என்றார் அவர்.
பிபிசி பார்த்த ஒரு வீடியோவில், மியான்மர் ராணுவத்தால் பயன்படுத்தப்படும் பழைய ஆயுதமான BA-63 ரக துப்பாக்கிகளை பயன்படுத்த ரோஹிஞ்சாக்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுவதைக் காணலாம்.
போரிட்டு மடியும் ரோஹிஞ்சாக்கள்
முகமதுவுக்கு இரண்டு வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் அழைக்கப்பட்டார். மேலும் 250 வீரர்களுடன் ஒரு படகில் ஏற்றப்பட்டு ஐந்து மணிநேரம் ஆற்றில் பயணப்பட்டு, ரத்தேடாங்க் எனும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மலை உச்சியில் இருந்த மூன்று இராணுவத் தளங்களின் கட்டுப்பாட்டிற்காக மியான்மர் ராணுவம், அரக்கான் எனும் கிளர்ச்சிக் குழுவுடன் கடுமையான போரில் ஈடுபடிருந்தது.
"நான் ஏன் சண்டை போடுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ரக்கைன் கிராமத்தை நோக்கி சுடச் சொன்னபோது, நான் சுடுவேன், அவ்வளவுதான்," என்கிறார் முகமது.
அங்கு அவர் 11 நாட்கள் போரில் இருந்தார். ஒரு குண்டு அவர்கள் சமையல் பொருட்கள் சேமித்து வைத்திருந்த குடிசை மேல் விழுந்ததால், அவர்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.
பல ரோஹிஞ்சாக்கள் பீரங்கிகளால் கொல்லப்படுவதை அவர் கண்டார். அவரது இரண்டு கால்களிலும் காயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக சித்வேக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த மார்ச் 20-ஆம் தேதி அரக்கான் கிளர்ச்சி இராணுவம், போர்க்களத்தில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டது. மலை மீது இருந்த மூன்று ராணுவத் தளங்களின் கட்டுப்பாட்டை வென்ற பிறகு இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டவை. அதில் பல சடலங்கள் காணப்பட்டன. அவற்றில் குறைந்தது மூன்று பேராவது ரோஹிஞ்சாக்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
"போரின்போது, நான் முழு நேரமும் பயந்தபடியே இருந்தேன். நான் என் குடும்பத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தேன்," என்று முகமது கூறினார்.
"இப்படிப் நான் போருக்குப் போக வேண்டும் என்று நினைக்கவே இல்லை. வீட்டுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்ததும் என் அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதேன். அம்மா வயிற்றில் இருந்து மறுபடியும் பிறந்த மாதிரி இருந்தது," என்றார்.
ஹுசேன் எனும் மற்றொரு ரோஹிஞ்சா நபர், சித்வேக்கு அருகில் உள்ள ஓன் தாவ் கியி முகாமில் இருக்கிறார். அவர் முகமதுவின் சகோதரர். அவர் பிப்ரவரியில் அழைத்துச் செல்லப்பட்டு தனது இராணுவப் பயிற்சியை முடித்ததாக முகமது கூறுகிறார். ஆனால் அவர் போருக்கு அனுப்பப்படுவதன் முன் ஹுசேன் தலைமறைவாகிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ரோஹிஞ்சாக்கள் எப்படி ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர்?
அரக்கான் கிளர்ச்சி ராணுவத்துடன் போரிடுவதற்கு ரோஹிஞ்சாக்கள் பயன்படுத்தப்படுகின்றனர் எனும் குற்றாச்சாட்டை மியான்மர் இராணுவம் மறுக்கிறது.
அவர்களை போருக்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று இராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் சாவ் மின் துன் பிபிசியிடம் தெரிவித்தார். "நாங்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எனவே அவர்களின் பாதுகாப்பிற்கு உதவுமாறு அவர்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.
ஆனால் பிபிசி உடனான நேர்காணலில், சித்வேக்கு அருகிலுள்ள ஐந்து வெவ்வேறு உள்நாட்டு அகதி முகாம்களில் உள்ள ஏழு ரோஹிஞ்சாக்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கூறினர்: இந்த ஆண்டு அவர்களுக்குத் தெரிந்து குறைந்தது 100 ரோஹிஞ்சாக்களாவது கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டு போருக்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் ரோஹிஞ்சா அகதி முகாம்களுக்குச் சென்று, இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர வேண்டும் என்று அறிவித்தனர். அப்படி அவர்கள் இணைந்தால் அவர்களுக்கு உணவு, ஊதியம் மற்றும் குடியுரிமை கிடைக்கும் என்று சொன்னார்கள். இவை மிகவும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்.
அரக்கான் கிளர்ச்சி இராணுவத்துடன் அதிகரித்து வரும் மோதல்களின் மூலம் சர்வதேச உதவிப் பொருட்களின் வரவு தடைபட்டுள்ளது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உணவு கிடைப்பது கடினமாகியுள்ளது. விலையும் அதிகரித்துள்ளது. ரோஹிஞ்சாக்கள் நீண்டகாலமாக மியான்மரில் குடியுரிமைக்காகப் போராடி வருகின்றனர். குடியுரிமை இல்லாததால்தான் அவர்கள் பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள். சர்வதேச மனித உரிமைக் குழுக்கள், இதை தென் ஆப்பிரிக்காவின் நிறவெறியோடு ஒப்பிடுகின்றனர்.
புதிய ஆட்களைச் சேர்க்க முயலும் ராணுவம்
ஆனால், ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ரோஹிஞ்சா ஆண்களை அழைத்துச் செல்ல ராணுவத்தினர் திரும்பி வந்தபோது, அவர்கள் குடியுரிமை வழங்கும் வாக்குறுதியை வாபஸ் பெற்றனர். குடிமக்கள் அல்லாத தாம் ஏன் ராணுவத்தில் இணைந்து போரிட வேண்டும் என்று முகாம்வாசிகள் கேட்டபோது, ‘அவர்கள் வாழும் இடத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருப்பதாக’ ராணுவத்தினர் தெரிவித்தனர். மேலும், அவர்கள் ஆயுதம் தாங்கிய போராளிகளாக இருப்பார்கள், சிப்பாய்களாக அல்ல, என்று ராணுவத்தினர் கூறினர். குடியுரிமை வழங்கும் வாக்குறுதி பற்றி அவர்கள் கேட்டபோது, "நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்" என்று ராணுவத்தினர் பதிலளித்தனர்.
இப்போது ராணுவம் புதிய ஆட்களைச் சேர்க்க முயல்கிறது, என்று ஒரு முகாம் குழு உறுப்பினர் கூறினார். ஆனால், போர்க்களத்தில் இருந்து திரும்பி வந்தவர்கள் சொல்வதைக் கேட்டபிறகு, மற்றவர்கள் அந்த அபாயத்திற்குச் செல்லத் தயாராக இல்லை என்று அவர் கூறினார்.
அதனால், முகாம்களில் வசிக்கும் ஏழை மற்றும் வேலை இல்லாத ஆண்களிடம், அவர்கள் போரில் இருக்கும் போது, மற்ற முகாம்களில் வசிப்பவர்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகள் மூலம் அவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதாகக் கூறி அவர்களை ராணுவத்தில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
"இத்தகைய கட்டாய ராணுவச் சேர்ப்பு சட்டவிரோதமானது, கொத்தடிமை முறைக்கு ஒப்பானது," என்று Fortify Rights மனித உரிமைகள் குழுவைச் சேர்ந்த மேத்யூ ஸ்மித் கூறினார்.
மேலும், "ரோஹிஞ்சாக்கள் மிருகத்தனமான, விபரீதமான முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள். நாடு தழுவிய ஜனநாயகப் புரட்சியைத் தடுப்பதற்காக இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட ரோஹிஞ்சாக்களை மியான்மர் ராணுவம் கட்டாயப்படுத்துகிறது. இந்த ஆட்சிக்கு மனித உயிரின் மீது எந்த அக்கறையும் இல்லை. இப்போது அதன்மேல் இந்த முறைகேடுகளும் குவிந்து வருகின்றன. இது அட்டூழியங்கள் மற்றும் தண்டனையின்மையின் நீண்ட வரலாறாகும்," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
வகுப்புவாதக் கலவரம் மூளும் அபாயம்
முன்னேறி வரும் அரக்கான் கிளர்ச்சி ராணுவத்திற்கு எதிரான போர்களில் ரோஹிஞ்சாக்களைப் பயன்படுத்துவதன் மூலம், மியான்மர் ராணுவம், இஸ்லாமியர்களுக்கும், கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கும் ராக்கைன் பௌத்த இன மக்களுக்கும் இடையே வகுப்புவாத மோதலைத் தூண்டும் அபாயத்தையும் கட்டவிழ்த்திருக்கிறது.
பௌத்த-இஸ்லாமிய சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் 2012-இல் பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சாக்களை சித்வே போன்ற நகரங்களில் இருந்து வெளியேற்றியது. கடந்த 2017-ஆம் ஆண்டு ராணுவத்துடன் இணைந்து ராக்கைன் இன மக்களும் ரோஹிஞ்சாக்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு இந்த இரு சமூகத்தினருக்கும் இடையேயான பதற்றம் தணிந்து வந்தது.
மியான்மரின் ராணுவ ஆட்சியைக் கவிழ்த்து புதிய கூட்டாட்சி அமைப்பை உருவாக்குவதற்குப் பல இனக்குழுப் படைகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் ஒரு பரந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அரக்கான் கிளர்ச்சி ராணுவம் ஒரு தன்னாட்சி மாநிலத்திற்காகப் போராடி வருகிறது.
ரோஹிஞ்சாக்களை ஏற்பதாக கிளர்ச்சி ராணுவம் மறைமுக அறிவிப்பு
இப்போது அரக்கான் கிளர்ச்சி ராணுவம், ராக்கைன் மாநிலத்தில் நடந்து வந்த போரில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டது. அவ்வமைப்பு, சமீபத்தில் ராக்கைன் பகுதியில் சமீபகாலம் வரை வாழ்ந்துவந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதுபற்றிப் பேசியிருந்தது. அதன்மூலம் வங்கதேசத்தில் இருந்து திரும்பிவரும் ரோஹிஞ்சா மக்களை ஏற்கலாம் என்று மறைமுகமாக அறிவித்துள்ளது.
இப்போது மனநிலை மாறிவிட்டது. அரக்கான் கிளர்ச்சி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான கைங் துகா, ரோஹிஞ்சாக்கள் ராணுவ ஆட்சிக்காகப் போராடுவதற்கு கட்டாயப்படுத்தப்படுவதை, " இனப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சர்வாதிகாரத்திலிருந்து விடுதலைக்காகப் போராடுபவர்களுக்கும் செய்யப்படும் மிக மோசமான துரோகம்," என்று பிபிசியிடம் கூறினார்.
அரக்கான் இராணுவத்திற்கு எதிராக புத்திடாங்கில் ரோஹிஞ்சா மக்கள் போராட்டம் நடத்துவதாக இராணுவ-சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் உள்ளூர் மக்கள் இவை இரு குழுக்களையும் பிளவுபடுத்த ராணுவம் மேற்கொள்ளும் முயற்சி என்று பிபிசியிடம் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கு இடையில் சிக்கிய ரோஹிஞ்சாக்கள்
மியான்மரில் தாம் வாழும் உரிமையை அங்கீகரிக்காத ராணுவத்திற்காக ரோஹிஞ்சாக்கள் இப்போது போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால், ராக்கைனின் பெரும்பகுதியை விரைவில் கட்டுப்படுத்தக் கூடிய இனக் கிளர்ச்சியாளர்களை பகைத்துக்கொள்கிறார்கள்.
முன்னர், இரண்டு தரப்பினராலும் குறிவைக்கப்பட்ட அவர்கள் இப்போது இரு தரப்புக்கும் இடையில் சிக்கியுள்ளனர்.
முகமது தங்கள் தரப்பில் போரில் ஈடுபட்டதாக ராணுவம் அவருக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது. அதற்கு என்ன மதிப்பு இருக்கிறது, ராணுவச் சேவையில் மேலும் பணியாற்றுவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுமா என்பது அவருக்குத் தெரியாது. அரக்கான் ராணுவம் சித்வே மற்றும் அவர்கள் முகாமை நோக்கி முன்னேறினால் அது முகமதுவுக்கு மேலும் சிக்கல் உண்டாக்கும்.
அவர் இன்னும் தனது காயங்களிலிருந்து முழுதாக மீளவில்லை. போர்க்களத்தில் ஏற்பட்ட பயங்கர அனுபவத்திற்குப் பிறகு தன்னால் இரவில் தூங்க முடியவில்லை என்று கூறுகிறார்.
"அவர்கள் என்னை மீண்டும் போரிட அழைப்பார்கள் என்று பயமாக இருக்கிறது. எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் இம்முறை உயிரோடு திரும்பி வந்தேன். ஆனால் அடுத்த முறை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை," என்கிறார் முகமது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












