டாக்டர் சவீரா பிரகாஷ்: பாகிஸ்தானின் தேர்தலில் களமிறங்கும் முதல் இந்துப் பெண்

பட மூலாதாரம், SAVEERA PRAKASH
- எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரி
- பதவி, பிபிசி செய்திகள், இஸ்லாமாபாத்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள புனேர் பொதுத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், பாகிஸ்தானின் முதல் இந்துப் பெண் வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டாக்டர் சவீரா பிரகாஷ்.
புனேர் மாவட்டத்தில் பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். பிரிவினைக்கு முன் இது சுவாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. புனேர் மாவட்டம் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
2009ஆம் ஆண்டில், அருகிலுள்ள சுவாத் பள்ளத்தாக்கைக் கைப்பற்றிய தெஹ்ரிக்-இ-தலிபான், இஸ்லாமியச் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் புனேர் மாவட்டத்தை கைப்பற்ற முயன்றது. முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து மலைகளைக் கைப்பற்றினர். பின்னர் ராணுவ நடவடிக்கை மூலம் அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆபரேஷன் பிளாக் தண்டர்ஸ்டார்ம்
“முன்னர் புனேர் மாவட்டம் ஆபரேஷன் பிளாக் தண்டர்ஸ்டார்ம் (Operation Black Thunderstorm) மூலம் மட்டுமே அறியப்பட்டது. இப்போது அது மற்ற காரணங்களுக்காகவும், குறிப்பாக நேர்மறையான காரணங்களுக்காக செய்திகளில் பேசப்படுகிறது."
"பொதுத் தொகுதியில் வேட்பாளராக நான் களமிறங்குவது அத்தகைய செய்திகளில் ஒன்றாகும். என்னாலேயே எனது நகரம் செய்திகளில் இடம்பிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று கூறுகிறார் டாக்டர் சவீரா பிரகாஷ். இதைச் சொல்லும்போதே அவரது முகத்தில் உற்சாகம் தெரிகிறது.
தெஹ்ரீக்-இ-தலிபானிடமிருந்து சுவாத், புனேர், நிச்டா திர் மற்றும் ஷங்லா மாவட்டங்களை விடுவிக்க பாகிஸ்தானின் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. அதன் பெயர் தான் ஆபரேஷன் பிளாக் தண்டர்ஸ்டார்ம்.

பட மூலாதாரம், SAVEERA PRAKASH
தந்தையிடமிருந்து கிடைத்த உத்வேகம்
சவீரா பிரகாஷின் தந்தை ஒரு மருத்துவர் மற்றும் சமூக சேவகர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் மக்கள் கட்சியில் (Pakistan Peoples Party- பிபிபி) உறுப்பினராக உள்ளார். தனது தந்தையிடமிருந்து சமூகப் பணிக்கான உத்வேகத்தைப் பெற்றதாக சவீரா கூறுகிறார்.
சவீரா தனது அன்றாட மருத்துவப் பணிகளையும் கவனித்துக்கொண்டு, பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பாக கிடைத்த டிக்கெட்டில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார். மேலும் மாகாண சட்டமன்றத் தொகுதிக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
“நான் அரசியலுக்கு வர முடிவு எடுத்ததற்கு, மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணமே முக்கியமான காரணம். இதுவே மருத்துவம் படிக்கவும் காரணமாக இருந்தது. ஆனால் மருத்துவராக மட்டுமே இருந்து பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியாது என்று உணர்ந்தேன்."
"நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாது, இன்னும் அதிகமாக ஏதேனும் செய்யவும் சமூக அமைப்பை மாற்றவும் விரும்பினேன். அதனால் அரசியலுக்கு வர முடிவு செய்தேன்" என்கிறார் சவீரா.
சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல பிரச்சினைகளுக்காக உழைக்க விரும்புகிறார் சவீரா. மேலும் பெண்களுக்கு அதிகாரம் கண்டிப்பாக தேவை என்று நினைக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனது பகுதியில் கல்வி என்பது ஒரு பிரச்சினையாக உள்ளது, முக்கியமாக பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் மிகக் குறைவு. பலர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதில்லை. சிலர் தங்கள் ஆண் பிள்ளைகளை மதரஸாவுக்கு அனுப்புகிறார்கள், அங்கு கல்வி இலவசம், ஆனால் பெண்கள் வீட்டில் தான் இருப்பார்கள்."
"சில சமயங்களில் பெண் பிள்ளைகள் வீட்டு வேலைக்காக நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். நான் இந்த விஷயங்களைச் சரிசெய்ய விரும்புகிறேன், மருத்துவத் தொழிலில் மட்டுமே இருந்தால் இதை செய்ய முடியாது." என்கிறார்.
புனேர் குறித்து பேசுகையில், "இது ஒரு சின்ன மாவட்டம், இங்கு பெண்கள் தங்கள் உடலை முழுமையாக மறைக்காமல் அல்லது குடும்ப உறுப்பினர்கள் துணை இல்லாமல் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதியில்லை." என்கிறார் சவீரா.

பட மூலாதாரம், SAVEERA PRAKASH
பல கட்சிகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவு
இப்படிப்பட்ட சூழலில் எப்படி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வீர்கள் என்ற கேள்விக்கு, முதலில் தான் பயந்ததாகவும், ஆனால் வேட்புமனு தாக்கல் செய்த பின் வந்த ஆதரவு குரல்களால் தற்போது பயம் எல்லாம் நீங்கிவிட்டதாகவும் டாக்டர் சவீரா கூறுகிறார்.
“புனேரில் இருந்து எந்த பெண் அரசியல்வாதியும் இதுவரை தேர்தலில் களம் கண்டதில்லை. இவ்வளவு ஏன், சில பகுதிகளில் பெண்கள் முன்பு வாக்களிக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை. முதன்முறையாக தெருவில் பிரச்சாரம் செய்தபோது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. பிரச்சாரத்தின் போது சிலர் நன்றாக பேசினார்கள், ஆனால் எனக்கு அதிகமான கைதட்டல் கிடைத்தது. நான் என் பேச்சை முடித்ததும், மக்கள் ஒரு நிமிடம் வரை கைதட்டிக்கொண்டே இருந்தார்கள்." என்று உற்சாகமாக கூறுகிறார் சவீரா.
தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து மட்டுமல்லாது பல இடங்களில் இருந்தும் ஆதரவுகள் வருவதாக கூறுகிறார் சவீரா.
“சுற்றிலும் உள்ள மக்கள் தங்கள் சொந்த அரசியல் கொள்கைகளைப் பொருட்படுத்தாமல் முழு மனதுடன் என்னை ஆதரிக்கின்றனர். என்னை 'புனேரின் மகள்' என்றும், 'புனேரின் பெருமை' என்றும் அழைக்கிறார்கள்."
"நான் தேர்தலில் நிற்பது குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எனது தந்தையிடம் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்கள், வரும் தேர்தலில் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளார்கள்" என்று கூறுகிறார் சவீரா.

பட மூலாதாரம், SAVEERA PRAKASH
மாறிவரும் மக்களின் மனநிலை
“மக்களின் மனநிலை மாறிவருகிறது. இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களை பிரதான அரசியலில் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்” என்கிறார் சவீரா.
ஒரு இந்துவாக, தான் ஒருபோதும் பாகுபாடுகளை எதிர்கொண்டதில்லை என்றும், தனது மத நம்பிக்கைகள் காரணமாக ஒருபோதும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதில்லை என்றும் சவீரா கூறுகிறார்.
“நாங்கள் பஷ்தூன்கள். எங்களுக்கு என்று சொந்த மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன, அவை பலதரப்பட்ட மக்களை அரவணைத்துக்கொள்ளும்."
"இந்து என்ற பாகுபாடு எப்பொழுதும் இருந்ததில்லை, பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு குடிபெயர வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. இது எங்கள் வீடு, நாங்கள் இங்கே வாழ்கிறோம். இங்கே தான் வாழ்வோம்" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் டாக்டர் சவீரா பிரகாஷ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












