அடோல்போ மசியாஸ் என்கிற ஃபிட்டோ: ஈக்வடார் நாட்டின் அவசர நிலை பிரகடனத்திற்கு காரணமான 'கேங்ஸ்டர்'

ஈக்வடார் நாட்டின் அவசர நிலை பிரகடனத்திற்கு காரணமான ஃபிட்டோ

பட மூலாதாரம், ECUADORIAN ARMED FORCES

படக்குறிப்பு, "ஃபிட்டோ" என்ற அடோல்போ மசியாஸ்
    • எழுதியவர், கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு

ஃபிட்டோ... ஈக்வடாரின் மிகவும் ஆபத்தான கிரிமினல் குழுக்களில் ஒன்றாகக் கருதப்படும் லாஸ் சோனெரோஸ் கும்பலின் தலைவர். அவர் சிறையில் இருந்து தப்பித்த ஒரே காரணத்துக்காக அந்த நாட்டில் அவசர நிலை பிறப்பிக்க வேண்டியதாயிற்று.

அவர் சிறையிலிருந்து தப்பிப்பது இது முதல் முறை அல்ல.

"ஃபிட்டோ" என்ற அடோல்போ மசியாஸ், 2011ஆம் ஆண்டு முதல் லிட்டோரல் டி குவாயாகில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கூட்டுக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைக் குற்றத்திற்காக 34 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தார்.

உள்ளூர் ஊடக செய்திகளின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவரை அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட வேறொரு சிறைக்கு மாற்றுவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது. அப்போது 44 வயதான ஃபிட்டோவை காணவில்லை. 3,000க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகள் சிறைச்சாலையின் கூரைகளிலும், சாக்கடைகளிலும் கூட அவரைத் தேடினர் .

ஃபிட்டோ, லாஸ் சோனெரோஸ் கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த சிறையின் ஏதோ ஒரு பகுதியில் மறைந்திருப்பதாக முதலில் கருதப்பட்டது. அவர் தப்பித்துவிட்டார் என்பதைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அரசாங்க நிறுவனம் எஸ்என்ஏஐ (SNAI) தனது அறிக்கையில், ஃபிட்டோ சிறையிலிருந்து தப்பிவிட்டார் என பதிவு செய்துள்ளது. மேலும், இதற்கு காரணமான இரண்டு சிறைக் காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியது.

ஈக்வடார் நாட்டின் அவசர நிலை பிரகடனத்திற்கு காரணமான ஃபிட்டோ

பட மூலாதாரம், Getty Images

ஈக்வடார் நாட்டில் 60 நாட்கள் அவசர நிலை பிரகடனம்

இந்த திங்கட்கிழமை, ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா, "ஃபிட்டோ" தப்பிச் சென்றதாலும், அதைத் தொடர்ந்து பல சிறைகளில் நடந்த கலவரங்களாலும் நாட்டில் 60 நாட்கள் அவசர நிலையை அறிவித்தார். ஒரு நாள் கழித்து, ஈக்வடார் நாட்டில் ஒரு உள்நாட்டு ஆயுத மோதல் ஏற்பட்டுள்ளதை உறுதிசெய்த அதிபர், உடனடியாக நாட்டை மீட்டெடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

மேலும், லாஸ் சோனெரோஸ் உட்பட பல கூட்டுக் குற்றக் குழுக்களை பயங்கரவாதிகள் என அறிவித்தார். ஆயுதமேந்திய குற்றவாளிகள் குழுவொன்று குவாயாகிலில் உள்ள தொலைக்காட்சி நிலையமொன்றில் நேரடி ஒளிபரப்பின் போது அத்துமீறி நுழைந்ததை அடுத்து, சில நிமிடங்களில் இந்த அறிக்கை வெளியானது.

லாஸ் சோனெரோஸ், கடற்கரை மாகாணமான மனாபியிலிருந்து தொடங்கப்பட்ட குழு. அந்த பகுதியின் அருகே தான் சோன் நகரம் அமைந்துள்ளது. லாஸ் சோனெரோஸ் குழுவுக்கு, சினாலோவா கார்டெல்லுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

மற்ற போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நடக்கும் மோதல்கள் மட்டுமல்லாது, லாஸ் சோனெரோஸ் குழு மீது ஒப்பந்த கொலைகள், போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.

ஈக்வடார் நாட்டின் அவசர நிலை பிரகடனத்திற்கு காரணமான ஃபிட்டோ

பட மூலாதாரம், Getty Images

ஈக்வடார்- குற்றவாளிகளுக்கு உகந்த நாடு

"இப்போது சில காலமாக, அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் கோக்கைன் கொண்டு செல்வதில் ஈக்வடார் நாடு முக்கிய பங்காற்றுகிறது. கொலம்பியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது ஈக்வடார், அந்த எல்லை கோகோ இலை உற்பத்தி செய்யப்படும் பகுதியில் உள்ளது” என்று அர்ஜென்டினாவின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலின் மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான கரோலினா சாம்போ பிபிசி முண்டோவிடம் கூறினார்.

"அரசின் பலவீனம் மற்றும் அரசு நிறுவனங்களின் வளப் பற்றாக்குறை ஆகியவற்றை கணக்கில் கொள்ளும்போது, துரதிர்ஷ்டவசமாக கோக்கைன் கொண்டு செல்வதற்கு மட்டுமல்ல, கோக்கைன் கும்பல்கள் செயல்படும் இடமாகவும் மாறிவிட்டது ஈக்வடார். எனவே கிரிமினல் குழுக்கள் ஈக்வடார் நாட்டிற்கு படையெடுக்கின்றனர்" என்று அவர் கூறுகிறார்.

இதன் விளைவாக, கொலம்பியா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் போராட்டங்களையும் தீவிர வன்முறையையும் எதிர்கொண்டு வருகிறது ஈக்வடார்.

கடந்த ஆண்டு ஈக்வடார் அதிகாரிகள் கொலம்பியாவின் கிரிமினல் குழு தலைவரான ஜூனியர் ரோல்டனின் மரணத்தை உறுதிப்படுத்தினார்கள். இதன் பின்னர் "ஃபிட்டோ" அந்த கும்பலின் தலைவரானார்.

ஈக்வடார் நாட்டின் அவசர நிலை பிரகடனத்திற்கு காரணமான ஃபிட்டோ

பட மூலாதாரம், ECUADORIAN ARMED FORCES

ஃபிட்டோ தப்பிப்பது முதல் முறை அல்ல

அடால்போ மசியாஸ் என்ற ஃபிட்டோ சிறையில் இருந்து தப்பிப்பது இது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டு சிறை வாசத்திற்கு பிறகு, 2013ஆம் ஆண்டில், குவாயாகிலில் உள்ள லா ரோகா எனப்படும் அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து, மிகவும் ஆபத்தான சில கைதிகளுடன் சேர்ந்து தப்பித்தார் .

சிறைச்சாலைக்கு அருகே ஓடும் டவுல் நதியை ஒரு படகின் மூலம் கடந்து அவர் தப்பித்தார். அதிகாரிகள் அவரைப் பிடித்து மீண்டும் சிறைச்சாலையில் அடைக்க மூன்று மாதங்கள் ஆகின.

உள்ளூர் ஊடகமான பிரிமிசியஸ் செய்தியின்படி, ஃபிட்டோ, குவாயாகில் சிறையில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல், கடந்த பத்தாண்டு காலமாக தனது குழுவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை சிறையிலிருந்தே கவனித்து வந்தார். கைதிகளை மிரட்டி பணம் பறிக்கும் நடைமுறைகளை செயல்படுத்தினார் மற்றும் கொலைகள் செய்ய உத்தரவிட்டார்.

மே 2023இல், குழுவின் தலைவரான ஃபிட்டோ தனது கட்டுப்பாட்டில் 23 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை வைத்திருந்ததாக செய்தித்தாள் உறுதியளிக்கிறது. மேலும் வெளிப்படையாகவே, ஃபிட்டோ தலைமையின் கீழ், கும்பல் மற்ற கைதிகளிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

போதைப்பொருள் எதிர்ப்பு விசாரணை இயக்குநரகத்தின் கணக்கீடுகளின் படி, சிறைக்குள் நடக்கும் குற்றச் செயல்கள் மூலம் ஒரு வாரத்திற்கு 70,000 அமெரிக்க டாலர்கள் வரை வருமானம் ஈட்டப்படுகிறது என பிரிமிசியஸ் செய்தித்தாள் கூறுகிறது.

ஈக்வடார் நாட்டின் அவசர நிலை பிரகடனத்திற்கு காரணமான ஃபிட்டோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குவாயாகில் சிறைச்சாலை

சிறைக்குள் ஃபிட்டோவின் சொகுசு வாழ்க்கை

சிறையில் ஃபிட்டோவுடன் இருந்த கைதிகளில் ஒருவர், "சிறையின் வளாகத்தில் நீச்சல் குளங்களை ஃபிட்டோ உருவாக்கினார், மது விருந்துகளை நடத்தினார், வீடியோக்கள் எடுத்தார், பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார் மற்றும் ட்ரோன்களுடன் ஆயுதங்களை அறிமுகப்படுத்தினார்." என்று கூறுகிறார்.

"சிறை வழிகாட்டிகளுக்கு, அவருக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஃபிட்டோவின் குழு வழிகாட்டிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார்கள். லாஸ் சோனெரோஸ் கும்பல் சிறையில் தங்குவதற்கு வாரத்திற்கு 10 முதல் 20 அமெரிக்க டாலர்கள் வரை கைதிகளிடம் மிரட்டி வசூலிக்கிறார்கள்” என்று பெயர் கூற விரும்பாத அந்த நபர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பரில், அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ படுகொலை செய்யப்பட்ட பின்னர், குவாயாகிலில் உள்ள மற்றொரு அதிகபட்ச பாதுகாப்பு சிறைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டபோது தான் "ஃபிட்டோ" கடைசியாக பொதுவெளியில் காணப்பட்டார்.

அப்போது உடல் பருமனாக, நீண்ட முடி மற்றும் தாடியுடன் ஊடகப் புகைப்படங்களில் அவர் தோன்றினார். அவரை இடமாற்றம் செய்ய, ஆயிரக்கணக்கான சீருடை அணிந்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈக்வடார் நாட்டின் அவசர நிலை பிரகடனத்திற்கு காரணமான ஃபிட்டோ

பட மூலாதாரம், Getty Images

மேலும் 6 சிறைகளில் கலவரம்

ஃபிட்டோ தப்பித்த அதே நேரத்தில், ஈக்வடாரில் குறைந்தது ஆறு சிறைகளில் கடுமையான கலவரங்கள் நடந்தது பதிவாகியுள்ளது. பல சிறைக் காவலர்கள் கைதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் அதிபர் டேனியல் நோபோவாவின் அரசாங்கம் 60 நாட்களுக்கு அவசர நிலையை அறிவித்தது.

சிறைச்சாலைகள் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் இராணுவப் படைகளின் ஆதரவைப் போலீசார் நம்பலாம் என்பதே அவசர நிலையின் பொருள். மேலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அனைத்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் நோபோவா ஆட்சியைப் பிடிக்க நாட்டின் பாதுகாப்புப் பிரிவு உதவியது. அந்த பிரிவின் கட்டுப்பாட்டில் ஒரு புதிய உளவுப் பிரிவு, சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கான தந்திரோபாய ஆயுதங்கள் மற்றும் கப்பல் சிறைகளில் ஆபத்தான கைதிகளை தற்காலிகமாக அடைத்து வைத்திருக்கும் திட்டம் ஆகியவை அடங்கும்.

2021ஆம் ஆண்டு முதல், ஈக்வடார் சிறைகளில் கிரிமினல் கும்பல்களுக்கு இடையிலான மோதல்களால் 400க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேரலையில் மிரட்டிய கும்பல்

ஈக்வடார் நாட்டில் பல நாட்களாகத் தொடரும் வன்முறைகளின் உச்சக்கட்டமாக ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோ மீது தாக்குதல் நடந்தது.

பொதுத் தொலைக்காட்சியான டிசி (TC)யில் ஒரு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்த, துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஸ்டுடியோவுக்குள் நேரடியாக நுழைந்து ஊழியர்களை தரையில் தள்ளி தாக்கினார்கள்.

இந்த சம்பவத்தில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்த நிலையில், 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈக்வடாரில் திங்கள்கிழமை 60 நாள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதில் இருந்து குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)