மாலத்தீவில் கிளர்ச்சியை ஒடுக்கிய இந்திய ராணுவம் - 4 வரலாற்று தருணங்கள் என்ன?

மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அபினவ் கோயல்
    • பதவி, பிபிசி நிருபர்

சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் புகைப்படங்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள் கூறப்பட்டன. இக்கட்டான காலங்களில் இந்தியா பலமுறை ஆதரித்த, மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களால் இந்த கருத்துகள் கூறப்பட்டன.

மாலத்தீவுகளைப் புறக்கணித்து லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லுங்கள் என சில மணி நேரங்களிலேயே சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆனதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். சாமானியர்கள் மட்டுமின்றி, நாட்டின் பெரிய பிரமுகர்களும் பிரதமர் மோதியை ஆதரித்தும், மாலத்தீவை கண்டித்தும் கருத்து கூற ஆரம்பித்தனர்.

மாலத்தீவு அரசாங்கம் சர்ச்சைக்குரிய கருத்துக்களில் இருந்து உடனடியாக விலகி, அதன் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்தது.

தனது தேர்தல் பிரசாரத்தில் 'இந்தியா அவுட்' என்ற முழக்கத்தை முன்னெடுத்த முய்சு, நவம்பர் 2023இல் அதிபரான பிறகு, இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

வரலாற்று ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. ஆட்சேபனைக்குரிய கருத்துகளுக்குப் பிறகு மாலத்தீவு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது திதி அளித்த அறிக்கை இதை உறுதிப்படுத்துகிறது, அதில் "இந்தியா எங்களுக்கு 911 அழைப்பு போன்றது. எங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இந்தியாவிடம் உதவி கேட்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.

மாலத்தீவு நெருக்கடியில் சிக்கித் தவித்து உதவி கேட்ட போது, இந்தியா முன்வந்து உதவிய அந்த நான்கு சம்பவங்களைத் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

மாலத்தீவுக்கு இந்தியா செய்த உதவிகள்

பட மூலாதாரம், INDIANEXPRESS

1. ஆபரேஷன் கேக்டஸ்

1988இல் நடந்த ஒரு சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. அந்த சமயத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சி இந்திய ராணுவத்தின் உதவியுடன் முறியடிக்கப்பட்டது, அது தான் 'ஆபரேஷன் கேக்டஸ்'.

நவம்பர் 3, 1988 அன்று மாலத்தீவு அதிபர் மௌமூன் அப்துல் கயூம் இந்தியாவுக்கு வரவிருந்தார். அவரை அழைத்து வர இந்திய விமானம் டெல்லியில் இருந்து மாலே சென்றது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போது டெல்லியில் இல்லை, தேர்தல் தொடர்பான ஒரு அவசர பயணத்தை மேற்கொண்டிருந்தார். கயூமிடம் பேசி, மீண்டும் ஒரு முறை டெல்லி வரும்போது சந்திக்கலாம் என ராஜீவ் காந்தி முடிவு செய்தார்.

ஆனால் கயூமுக்கு எதிரான கிளர்ச்சியைத் திட்டமிட்ட மாலத்தீவு தொழிலதிபர் அப்துல்லா லுத்தூபி மற்றும் அவரது கூட்டாளி சிக்கா அகமது இஸ்மாயில் மாணிக் ஆகியோர் கிளர்ச்சியை இனியும் ஒத்திவைக்க முடியாது என்று முடிவு செய்தனர்.

இவர்கள் ஏற்கனவே, சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் விரைவுப் படகுகள் மூலம் இலங்கையின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (People's Liberation Organization of Tamil Eelam- PLOTE) ஆயுதக் குழுவினரை மாலேக்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில், தலைநகர் மாலேவின் தெருக்களில் கிளர்ச்சி வெடித்தது. இலங்கை ஆயுதக் குழுவினர் தெருக்களில் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இந்த இக்கட்டான நேரத்தில் மாலத்தீவு அதிபர் மௌமூன் அப்துல் கயூம் பாதுகாப்பாக வீட்டில் பதுங்கி இருந்தார்.

அவரையும் அவரது அரசாங்கத்தையும் காப்பாற்ற அதிபர் கயூம் இந்தியாவின் உதவியை நாடினார். அப்போது நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் தலைநகர் மாலேயில் உள்ள ஹுல்ஹுலே விமான நிலையத்தையும் தொலைபேசி நிலையத்தையும் கைப்பற்றினர்.

இத்தகைய சூழ்நிலையில், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தை மாலத்தீவுக்கு அனுப்ப முடிவு செய்தார். சிறிது நேரத்தில், ஆக்ராவில் உள்ள கெரியா விமான நிலையத்தில் இருந்து 6 பாராக்களின் 150 கமாண்டோக்கள் விமானம் மூலம் மாலத்தீவுக்கு புறப்பட்டனர்.

சிறிது நேரம் கழித்து, இந்திய ராணுவத்தின் இரண்டாவது விமானமும் மாலத்தீவில் தரையிறங்கியது. விமான நிலையத்தின் ஏடிசி, ஜெட்டி, ஓடுபாதையின் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களை உடனடியாக கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது இந்திய இராணுவம்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் இல்லத்தை இந்திய வீரர்கள் பாதுகாத்தனர். மாலத்தீவு அரசை கவிழ்க்கும் முயற்சியை சில மணி நேரங்களிலேயே இந்திய வீரர்கள் முறியடித்தனர்.

மாலத்தீவுக்கு இந்தியா செய்த உதவிகள்

பட மூலாதாரம், Getty Images

2. ஆபரேஷன் சீ வேவ்ஸ்

டிசம்பர் 26, 2004ஆம் ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமை

சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தொலைக்காட்சி சேனல்களில் ஒரு செய்தி வெளியானது, சிறிது நேரத்தில் அது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சோகமாக மாறியது.

அன்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆரம்பத்தில் 6.8 ஆக அளவிடப்பட்டது, ஆனால் அதன் தீவிரம் பின்னர் 9.3 ஆக மதிப்பிடப்பட்டது.

இந்த நிலநடுக்கம் சுமார் 55 அடி உயர அலைகளை உண்டாக்கியது. அந்த இராட்சத அலைகள் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, தான்சானியா மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளின் கடற்கரைகளை நாசமாக்கியது.

பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்றாகும். இந்த கடினமான நேரத்தில், இந்தியா உதவ முன் வந்தது. 'ஆபரேஷன் சீ வேவ்ஸ்' தொடங்கப்பட்டது.

இந்தியக் கடலோரக் காவல்படையின் டோர்னியர் விமானங்களும், இரண்டு விமானப்படை அவ்ரோஸ் விமானங்களும் 24 மணி நேரத்திற்குள் அதாவது டிசம்பர் 27ஆம் தேதி மாலத்தீவுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிவாரணப் பணிகள் தொடர்ந்த நடக்க, இந்த விமானங்கள் மாலத்தீவில் நிறுத்தப்பட்டன.

அடுத்த நாள், அதாவது டிசம்பர் 28 அன்று, ஐஎன்எஸ் மைசூர் கப்பல் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள், 20 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதிகளுடன் மாலத்தீவைச் சென்றடைந்தன.

அமைச்சகத்தின் அறிக்கைபடி, அடுத்த நாள் ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஆதித்யாவும் இந்த நிவாரண நடவடிக்கைக்கு உதவி செய்தன. மேலும் இந்த கப்பல்கள் மாலத்தீவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான தெற்கு அட்டோலை சென்றடைந்தன. இந்த கப்பல்கள் மூலம் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டு, ஹெலிகாப்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

இந்த நிவாரண நடவடிக்கைக்கு சுமார் 36.39 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு 2005ஆம் ஆண்டு, சுனாமிக்குப் பிறகு, அரசாங்கத்தை சீர் செய்வதில் தனக்கு நிதிப் பிரச்னை இருப்பதாக மாலத்தீவு அதிபர் கயூம் இந்தியாவிடம் தெரிவித்தபோது, ​​இந்தியா மாலத்தீவுக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது.

இது தவிர, 2007ஆம் ஆண்டு மீண்டும் மாலத்தீவுக்கு இந்தியா 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது.

3. ஆபரேஷன் நீர்

மாலத்தீவுக்கு இந்தியா செய்த உதவிகள்

பட மூலாதாரம், MEA

டிசம்பர் 4, 2014 அன்று, மாலத்தீவின் தலைநகரான மாலேயில் உள்ள மிகப்பெரிய நீர் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து மாலேவின் சுமார் ஒரு லட்சம் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி, குடிநீர் பெற மாலத்தீவுக்கென நிரந்தர நதிகள் இல்லை. நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உதவியுடன் குடிநீரைப் பெற்று, அதன் குடிமக்களுக்கு வழங்குகிறது மாலத்தீவு அரசு.

ஆலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, முழு நகரத்திற்கும் தினமும் 100 டன் தண்ணீர் தேவைப்பட்டது. இந்த இக்கட்டான நேரத்தில் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் துன்யா மௌமூன், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை அழைத்து உதவி கேட்டார்.

மாலத்தீவுக்கு உதவுவதற்காக இந்தியா 'ஆபரேஷன் நீர்' திட்டத்தைத் தொடங்கியது . தில்லியில் இருந்து முதலில் அரக்கோணத்துக்கும், பின் அங்கிருந்து மாலேவுக்கும் மூன்று சி-17 மற்றும் மூன்று ஐஎல்-76 விமானங்கள் மூலம் குடிநீரை இந்திய விமானப்படை அனுப்பியது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, முதல் பன்னிரண்டு மணி நேரத்திற்குள் இந்திய விமானங்கள் தண்ணீருடன் மாலத்தீவுகளை அடைந்தன. அந்த சமயத்தில் இந்திய விமானப்படை 374 டன் தண்ணீரை மாலத்தீவிற்கு வழங்கியது.

இதன் பிறகு இந்திய கப்பல்களான ஐஎன்எஸ் தீபக் மற்றும் ஐஎன்எஸ் சுகன்யா உதவியுடன் சுமார் 2 ஆயிரம் டன் தண்ணீர் மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுமட்டுமின்றி, நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்ய இந்தியா தனது கப்பலில் இருந்து உதிரி பாகங்களையும் அனுப்பியது.

மாலத்தீவுக்கு இந்தியா செய்த உதவிகள்

பட மூலாதாரம், ANI

4. கொரோனா காலத்தில் இந்தியா செய்த உதவி

2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கோவிட் -19 பிடியில் இருந்தபோது, ​​​​அண்டை நாடுகளுக்கான கொள்கையின் அடிப்படையில் இந்தியா மாலத்தீவுக்கு அதிகமாக உதவியது.

மாலத்தீவில் உள்ள இந்திய ஹைகமிஷனரின் கூற்றுப்படி, கோவிட்-19 நிலைமையைச் சமாளிக்க நுரையீரல் நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஒரு பெரிய மருத்துவக் குழுவை இந்திய அரசாங்கம் அனுப்பியுள்ளது.

ஜனவரி 16, 2021 அன்று, பிரதமர் மோடி இந்தியாவில் தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்ட 96 மணி நேரத்திற்குள், மாலத்தீவுக்கு தடுப்பூசியை இந்தியா முதலில் வழங்கியது.

இந்தியாவிடமிருந்து ஒரு லட்சம் கோவிட் தடுப்பூசிகளை பரிசாக பெற்ற முதல் நாடு மாலத்தீவு ஆகும். ஜனவரி 20, 2021 அன்று அவை வழங்கப்பட்டன. இந்த தடுப்பூசிகளின் உதவியுடன், மாலத்தீவு அரசாங்கம் சுமார் ஐம்பது சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டது.

இதற்குப் பிறகு, 2021 பிப்ரவரி 20 அன்று வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் மாலத்தீவுக்குச் சென்றபோது, ​​இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் கோவிட் தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதி பரிசாக வழங்கப்பட்டது.

கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்கான நேரம் வந்தபோதும், ​​இந்தியா மாலத்தீவை ஆதரித்தது. மார்ச் 6 அன்று 12 ஆயிரம் தடுப்பூசிகளையும், மார்ச் 29, 2021 அன்று 1 லட்சம் கோவிட் தடுப்பூசிகளையும் இந்தியா மாலத்தீவுக்கு அனுப்பியது.

மாலத்தீவுக்கு இந்தியா மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பியுள்ளதாகவும், அதில் 2 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், இந்தியா 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை மாலத்தீவுக்கு வழங்கியுள்ளது. இது மாலத்தீவுக்கு மற்ற எந்த நாட்டின் உதவியை விடவும் அதிகமாக இருந்தது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் மாலத்தீவின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இதைக் குறிப்பிட்டு, "இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா எங்களுக்கு அதிக நிதி உதவி செய்துள்ளது" என்று அவர் கூறியிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)