சி.இ.ஓ. சுச்சனா சேத்: 4 வயது மகனை கொன்று பையில் உடலை ஒளித்து வைத்ததாக கைது

பட மூலாதாரம், ANI
கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்ற குற்றச்சாட்டில் 39 வயது பெங்களூரு பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண் ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சுச்சனாசேத் என்பவரின் பையில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கோவாவில் சுச்சனாசேத் தனது மகனைக் கொலை செய்ததாகவும் பின்னர் உடலை பையில் வைத்துக்கொண்டு வாடகை வாகனத்தில் பெங்களூருவுக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் அவர் பயணித்த டாக்ஸியின் டிரைவரை தொடர்புகொண்ட போலீசார், வழியிலுள்ள காவல் நிலையத்திற்கு வாகனத்தைத் திருப்பிவிடும்படி உத்தரவிட்டுள்ளனர். அதையடுத்து சுச்சனா சேத்தை கைது செய்த போலீசார், அவரது பையில் இருந்த நான்கு வயது குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
சுச்சனா சேத்தின் இந்தச் செயலுக்கு சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
காவல்துறைக்கு தெரிய வந்தது எப்படி?
பல்வேறு செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட காவல்துறையின் அறிக்கைப்படி, சுச்சனாசேத் தனது நான்கு வயது மகனை அழைத்துக்கொண்டு ஜனவரி 6ஆம் தேதி கோவாவில் உள்ள குறுகிய காலம் தங்குவதற்காக வாடகைக்கு விடப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.
அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்த அவர், அபார்ட்மென்ட் ஊழியர்களை அழைத்து, பெங்களூரு செல்ல வாகனம் ஏற்பாடு செய்யுமாறு கூறினார். அதைத்தொடர்ந்து, ஜனவரி 8ஆம் தேதி பெங்களூரு கிளம்பியிருக்கிறார்.
பெங்களூருவுக்கு டாக்ஸியில் செல்வதைவிட விமானத்தில் செல்வது நல்லது என அடுக்குமாடி குடியிருப்பின் ஊழியர்கள் கூறியும், அவர் அதற்கு மறுத்துவிட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
அவர் பெங்களூரு செல்வதற்கு முன், அந்தக் குடியிருப்பின் ஊழியர்கள் அவரது அறையைச் சுத்தம் செய்யச் சென்றபோது சில இடங்களில் ரத்தக் கறைகளைக் கண்டதால், போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுச்சனாவை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், முடியவில்லை. அதனால், அவர் பயணித்த டாக்ஸியின் ஓட்டுநரை தொடர்புகொண்டனர்.

பட மூலாதாரம், ANI
ஓட்டுநர் மூலமாக சுச்சனாவிடம் பேசிய போலீசார், அவரது மகன் எங்கிருக்கிறார் எனக் கேட்டுள்ளனர். அதற்குத் தன் மகனை தோழியின் வீட்டில் விட்டுச் சென்றதாகக் கூறியதோடு, சுச்சனா தோழியின் முகவரியையும் கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த முகவரி போலியானது என்பது விசாரணையில் விரைவாகத் தெரிய வந்தது. உடனே சுச்சனா பயணித்த காரின் ஓட்டுநரை திரும்ப அழைத்து காரை அருகிலுள்ள காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லும்படி போலீசார் உத்தரவிட்டனர். அவரும் தனது காரை கர்நாடக மாநில சித்ரதுர்கம் மாவட்டத்தின் போலீசாரிடம் கொண்டு சென்று ஒப்படைத்தார்.
இந்த விஷயங்களை கோவா காவல் கண்காணிப்பாளர் நிதின் வால்சன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். காவல் நிலையத்திற்கு வந்த காரை சோதனையிட்டபோது, போலீசார் சுச்சனாவின் பையில் ஒரு குழந்தையின் உடல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
கோவா அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுச்சனாவின் பையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், X/SUCHANA SETH
குழந்தையை கொன்றது ஏன்?
குற்றம் சாட்டப்பட்ட சுச்சனாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
விவாகரத்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக சமீபத்தில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சுச்சனாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இன்னும் பார்க்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
அவர் ஏன் தனது மகனைக் கொலை செய்தார் என்பதற்குரிய தெளிவான காரணத்தை குற்றம் சாட்டப்பட்டுள்ள சுச்சனா தெரிவிக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கொலைக்கு எந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்ற தகவலையும் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
காவல்துறையினர் அளித்த தகவலின்படி, சுச்சனாவின் கணவர் கேரளாவை சேர்ந்தவர். அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இந்த விவகாரம் குறித்து அவரிடம் தெரிவித்து, அவரை நேரில் ஆஜராகுமாறு கூறியதாக போலீசார் குறிப்பிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
செயற்கை நுண்ணறிவில் நிபுணர்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுச்சனா சேத், பெங்களூருவில் சிறிது காலமாக வாழ்ந்து வருவதாக கோவா காவல் கண்காணிப்பாளர் நிதின் வல்சன் கூறினார்.
சுச்சனா சேத் ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு லிங்க்ட்இன், எக்ஸ் ஆகிய சமூக ஊடகங்களில் கணக்கு உள்ளது. அவரது லிங்க்ட்இன் கணக்கில் அவர் குறித்த தொழில்முறை உள்ளடக்கம் உள்ளது. அவர் ஏஐ நெறிமுறைகளுக்கான 100 புத்திசாலித்தனமான பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
அவர் பவானிபூரில் இளங்கலை இயற்பியல் மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பட்டங்களைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பெர்க்மேன் க்ளீன் மையத்தில் பயின்றுள்ளார். அதுமட்டுமின்றி, ராமன் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். மேலும், மொஸில்லா முதலீட்டு மையத்தில் தரவு மற்றும் அறிவியல் பயின்றுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












