உலகக்கோப்பை: பாகிஸ்தானை தோல்விப் பாதையில் கொண்டு சென்ற பாபர் ஆசமின் ஒற்றை முடிவு

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஒரு ஆட்டத்தில் வாய்ப்புகளைக் கோட்டைவிடலாம். ஆனால், ஆட்டத்தையே தாரை வார்க்கக்கூடாது என்பதற்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் சிறந்த உதாரணம்.

வெற்றி பெறுவதற்கு டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும் பெங்களூரு மைதானத்தில், டாஸ் வென்ற பின்பும் பேட்டிங்கை தேர்வு செய்யாமல், ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்த பாபர் ஆசத்தின் முடிவு அப்போதே வெற்றியை ஆஸ்திரேலியா வசம் ஒப்படைத்தமைக்குச் சமம்.

அதுபோலவே பெங்களூருவில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 62 ரன்களில் வீழ்த்தி 2 வது வெற்றியை ஆஸ்திரேலிய அணி பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் சேர்த்தது. 368 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 62 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் இன்னும் ஆஸ்திரேலியா மைனஸ் 0.193 என்ற நிலையில் இருந்து மேலே உயரவில்லை.

ஆஸ்திரேலியா ஃபார்முக்கு வர உதவிய பாகிஸ்தான்

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

இந்த உலகக் கோப்பைத் தொடங்கியதில் இருந்தே ஆஸ்திரேலிய அணி மோசமான பேட்டிங்கையும், பந்துவீச்சையும் வெளிப்படுத்தி வந்தது. அந்த அணியை மீண்டும் ஃபார்முக்கு இந்தப் போட்டியின் மூலம் பாகிஸ்தான் கொண்டு வந்துள்ளது.

அதேநேரம், பாகிஸ்தான் அணியும் 2 வெற்றிகள், 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டில் ஆஸ்திரேலியாவைவிட பின்தங்கி மைனஸ் 0.456 ஆக இருக்கிறது.

பாபர் ஆசம் இப்படி முடிவெடுக்கலாமா?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என வர்ணிக்கப்படுவது உண்டு.

வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் என்னதான் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும், பந்து ஸ்விங் ஆகாமல், நேராக பேட்டுக்கே வரும். பேட்டர்களுக்கு அடித்து ஆடுவதற்கு சிரமமில்லாத ஆடுகளம் பெங்களூரு சின்னசாமி மைதானம்.

இப்படிப்பட்ட ஆடுகளத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் டாஸ் வென்று ஏன் முதலில் பேட் செய்யாமல், பந்துவீச்சைத் தேர்வு செய்தார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. முதலில் பேட் செய்யாமல் சேஸிங் செய்யலாம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் எடுத்த முடிவு தற்கொலைக்குச் சமமானது.

சேஸிங் சாத்தியமா?

உலகக்கோப்பை - AUSvsPAK: பாகிஸ்தான் தோல்விக்கு பாபர் ஆசமின் முடிவுதான் காரணமா?

பட மூலாதாரம், Getty Images

இதுவரை உலகக்கோப்பைப் போட்டிகளில் சேஸிங்கில் பாகிஸ்தான் எப்படி செயல்பட்டுள்ளது என்பதைத் தெரியாமல், பேட்டர்கள் கடைசி நேரத்தில் நெருக்கடியைத் தாங்கிக்கொண்டு பேட் செய்வார்களா எனத் தெரியாமல் சேஸிங் செய்ய முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சைச் சமாளித்து, பாகிஸ்தான் அணியால் 368 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்துவிட முடியுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது.

முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்ததே, இதுபோன்ற ஆடுகளத்தில் வெற்றியைத் தட்டில் வைத்து பாகிஸ்தான் தாரை வார்த்ததைப் போன்றது.

பேட்டிங் பயிற்சி

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், மார்ஷ் இருவரும் ஃபார்மின்றி தவித்து வந்தனர். பெரிதாக எந்தப் போட்டியிலும் ஸ்கோர் செய்ய முடியாமல் தடுமாறினர். இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் பல்லைக் காட்டியது.

பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணியினர் ஃபார்மை தொலைத்துவிட்டனர் என்ற விமர்சனத்துக்கு வார்னர், மார்ஷ் இருவரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

அவர்கள் பதிலடி கொடுத்தனர் என்பதைவிட, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் பேட்டிங் பயிற்சி அளித்தனர் என்றுதான் கூற வேண்டும்.

வார்னரும், மார்ஷும் தொடக்கத்தில் இருந்தே ஓவருக்கு பவுண்டர், சிக்ஸரை விளாசித் தள்ளினர். ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் தொடக்கத்தில் இருந்தே ராக்கெட் வேகத்தில் புறப்பட்டது. பவர்ப்ளே ஓவரில் 83 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்தது.

வார்னருக்கு கேட்ச் வாய்ப்பு “மிஸ்ஸிங்”

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

டேவிட் வார்னர் 10 ரன்கள் சேர்த்திருந்தபோது, அஃப்ரிடி பந்துவீச்சில் அடித்த ஷாட்டை உசாமா மிர் கேட்ச் பிடிக்காமல் கோட்டைவிட்டார்.

வார்னர் போன்ற ஆபத்தான பேட்டர்களுக்கு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டால் என்ன ஆகும் என்பதை பாகிஸ்தான் அணி பின்னர் உணர்ந்தது.

ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்

கிரிக்கெட் உலகில் அதிவேக வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சை மார்ஷ் உருட்டி எடுத்துவிட்டார்.

ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் ஓவரிலேயே 24 ரன்களை குவித்து பிழிந்துவிட்டார். 4 ஓவர்களை வீசிய ராஃப் 59 ரன்களை வாரி வழங்கினார். ஓவருக்கு 15 ரன்ரேட் என்பது கொடுமை.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் யார் பந்து வீசினாலும் மார்ஷ், வார்னர் இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக துவம்சம் செய்தனர்.

ஆஸ்திரேலிய அணி 12.3 ஓவர்களில் 100 ரன்களையும், 20.2 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டியது. 29.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை எட்டியது.

பாகிஸ்தானுக்கு வார்னர் கொடுத்த தண்டனை

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

அதிரடியாக பேட் செய்த வார்னர் 85 பந்துகளில் தனது 18வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக வார்னர் தொடர்ச்சியாக அடிக்கும் 4வது சதம் இது. வார்னருக்கு 10 ரன்னில் கேட்ச் பிடிக்கத் தவறியதற்காக பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுத்ததைப் போன்று இது இருந்தது.

வரலாற்றுத் தொடக்கம்

மார்ஷ், வார்னர் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களை சேர்த்தனர்.

உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் அதிகபட்சம் 2011 உலகக்கோப்பையில் கனடா அணிக்கு எதிராகச் சேர்த்த 183 ரன்கள்தான். இதை இருவரும் முறியடித்து புதிய வரலாறு படைத்தனர்.

மார்ஷ் பிறந்தநாள் பரிசளித்த பாகிஸ்தான்

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

மார்ஷுக்கு இன்று 32வது பிறந்தநாள். தனது பிறந்தநாளில் மார்ஷ் மறக்க முடியாத போட்டியாக மாற்றி அமைத்து தனது 2வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார்.

மார்ஷ் 10 ரன்களில் இருந்தபோது, கிடைத்த கேட்ச் வாய்ப்பை உஸ்மா மிர் தவறவிட்டார். இரு முக்கிய கேட்ச்களை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டதற்கு இரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும் சதம் அடிக்க வைத்துப் பெரிய விலை கொடுத்தனர்.

அதிலும் பிறந்தநாளான இன்று மார்ஷுக்கு பரிசாக ஒரு கேட்ச் வாய்ப்பையும் பாகிஸ்தான் வீரர் தவறவிட்டு சதம் அடிக்க உதவினார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். அஃப்ரிடி வீசிய 34வது ஓவரில் உசாமா மிர்ரிடம் கேட்ச் கொடுத்து 121 ரன்னில் மார்ஷ் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9 சிக்ஸர், 10 பவுண்டரி அடங்கும்.

விக்கெட் சரிவு

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

அடுத்து வந்த மேக்ஸ்வெல் வந்த வேகத்திலேயே மிட்ஆன் திசையில் பாபர் ஆசமிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்-அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் நிலைக்கவில்லை. 7 ரன்கள் சேர்த்த ஸ்மித், உசாமி மிர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

விக்கெட் இழப்பின்றி 259 ரன்கள் வரை பயணித்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

டேவிட் வார்னர் 124 பந்துகளில் 163 ரன்கள் அடித்து பிறகு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரின் கணக்கில் 9 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.

மார்ஷ், வார்னர் இருவரும் சேர்ந்து இதுவரை 18 சிக்ஸர்கள் அதாவது 102 ரன்களையும், 24 பவுண்டரிகள் அதாவது 96 ரன்களையும் என மொத்தம் 198 ரன்களை பவுண்டரி, சிக்ஸர் வாயிலாகவே சேர்த்தனர்.

தற்போது 368 என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் ரசிகர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிடுவதைத் தடுத்த காவலர்கள்

உலகக்கோப்பை - AUSvsPAK: பாகிஸ்தான் தோல்விக்கு பாபர் ஆசமின் முடிவுதான் காரணமா?

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு நடுவில் மைதானத்தில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்ட பாகிஸ்தான் ரசிகர்களை அப்படி முழக்கமிடக் கூடாது என்று அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் “பாரத் மாதாகி ஜே’ என்று முழக்கமிடும்போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று ஏன் முழக்கமிடக்கூடாது? பாகிஸ்தான் ஆடும் ஆட்டத்தில் வேறு என்னவென்று முழக்கமிடுவது?” என்று பாதுகாப்புக் காவலரிடம் கேள்வி கேட்கிறார்.

இதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பைத் தொடரை புறக்கணிக்க வேண்டுமென்று கூறி வருகின்றனர். மேலும், பாகிஸ்தான் ரசிகர்கள் வேறு என்னவென்று முழக்கமிடுவது என்றும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

வெற்றி நாயகர்கள்

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு டேவிட் வார்னர், மிஷெல் மார்ஷ் ஆகியோரின் ஆட்டம் மட்டும்தான் காரணம் என்று கூற முடியும். ஏனென்றால், மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பேட்டர்கள் நினைத்தவுடனே அவர்களுக்கு நெருக்கடியும், அழுத்தமும் அதிகரிக்கும்.

இதே நோக்கோடு களத்துக்கு வரும்போது, பேட்டர்கள் தவறு செய்வதும், தவறான ஷாட்களை ஆடுவதும் இயல்பாகிவிடும். அதன்பின் விக்கெட்டுகளை வீழ்த்துவதும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு எளிதாகும். இதான் இன்றைய ஆட்டத்திலும் நடந்தது.

வார்னர்(163), மார்ஷ்(123) சதம் அடித்து அமைத்துக் கொடுத்த தளத்தில்தான் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் பயணித்து வெற்றியைத் தேடித் தந்தனர். 124 பந்துகளில் 163 ரன்கள் சேர்த்த வார்னர், ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2019 தோல்வி திரும்பியது...

உலகக்கோப்பை - AUSvsPAK: பாகிஸ்தான் தோல்விக்கு பாபர் ஆசமின் முடிவுதான் காரணமா?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் எவ்வாறு தோற்றதோ அதே பாணியில்தான் இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் தோற்றது.

மோசமான ஃபீல்டிங், கேட்சுகளை கோட்டைவிட்டது, நடுவரிசை பேட்டர்களின் தோல்வி, பலம் இல்லாத பந்துவீச்சு ஆகியவை தோல்விக்குக் காரணமாக அமைந்தன. அதேபோலத்தான் இன்றைய ஆட்டத்திலும் நடந்தது.

வாய்ப்பைத் தவறவிட்ட பேட்டர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுக்கும் வகையில்தான் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷஃபீக், இமாம் உல் ஹக் அருமையான தொடக்கத்தை அளித்து, 134 ரன்கள் சேர்த்துக் கொடுத்தனர். ஆனால் இருவரும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை, பின்வரிசையில் வந்த பேட்டர்கள் யாரும் பயன்படுத்தவில்லை.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஃபீக்(64), இமாம் உல் ஹக்(70) ஆகியோருக்குப் பிறகு ஓரளவுக்கு சுமாராக ஸ்கோர் செய்தது ரிஸ்வான்(46) மட்டும்தான். மற்ற பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

ஆரம்பத்தில் 269 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவாக இருந்த பாகிஸ்தான் அடுத்த 36 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஸ்டாய்னிஷ் 2 விக்கெட்டுகளையும், ஆடம் ஸம்பா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் சரிவுக்கு காரணானார்.

சுவாரஸ்யம் இல்லை

இதுவரை உலகக்கோப்பைத் தொடரில் 18 ஆட்டங்கள் நடந்துள்ளன. ஒரு ஆட்டம்கூட ரசிகர்களை இருக்கையின் நுனி மீது அமரவைக்கும் ஆட்டம் போல் அமையவில்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாகவே இருக்கிறது. பெரும்பாலான ஆட்டங்கள் ஒருதரப்பாகவும், முடிவுகளை ரசிகர்கள் ஊகிக்கும் விதத்திலும் அமைந்துவிடுகிறது.

இந்த ஆட்டமும் முடிவை ஏற்கெனவே ஊகிக்கும் விதத்தில்தான் இருந்தது. டாஸ் வென்று தவறான முடிவை பாபர் ஆசம் எடுத்தபோதே, அவரின் பெயரும், முடிவும் டிரண்டானது. ஆஸ்திரேலியாவின் வெற்றி பளிச்சென மின்னியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)