ஜஸ்பிரித் பும்ரா: சர்வதேச பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பந்துவீச்சாளர்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்தி ராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறினார்…
“ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சுக்கு எப்படி சரியான பதிலடி கொடுக்கலாம்” என்று நினைக்கிறீர்கள் என்று வர்ணனையாளர் கேள்வி கேட்டார். அதற்கு ஆரோன் பின்ச் பதில் அளிக்கையில் “பேசாமல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள். அதுதான் பும்ராவுக்கு நாம் கொடுக்கும் பதிலடி. அதைத்தான் நான் செய்திருக்கிறேன்,” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
இந்திய அணிக்கு கிடைத்த கபில் தேவ், ஜவஹல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், ஜாகீர்கான், நெஹ்ரா போன்றவர்கள் வரிசையில் கிடைத்த பெரிய சொத்தாகவே ஜஸ்பிரித் பும்ராவை கருத வேண்டும்.
இந்திய அணியின் சொத்தாக பும்ராவை மட்டும்தான் கொண்டாட வேண்டுமா மற்ற வீரர்கள் இல்லையா என்று ரசிகர்கள் கேட்கலாம். இதற்கு பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று பும்ரா எடுத்த விக்கெட் ஒன்றே சாட்சி.
அதிகமாகச் சிரித்த “மோனோலிசா ஓவியம்”
பாகிஸ்தான் பேட்டர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை பும்ரா எடுத்தவிதம் இனிமேல் பல ஆண்டுகள், பல ஆயிரக்கணக்கான முறை பேசப்படும், ஆலோசிக்கப்படும், விவாதிக்கப்படும். அந்த அளவுக்கு யாராலும் மறக்க முடியாத பந்து என்றுதான் அதைக் கூற வேண்டும்.
பும்ரா வீசிய அந்தப் பந்தை வர்ணிப்பதாக இருந்தால் “அந்தப் பந்து ஒரு மோனோலிசா ஓவியம். மோனோலிசா ஓவியம் சற்று அதிகமாகச் சிரித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அந்த பந்தும் இருந்தது,” எனக் கூறலாம்.
எப்படி ஆட்டமிழந்தார் ரிஸ்வான்?
பும்ரா வீசிய அந்தப் பந்தில் சுழற்பந்துவீச்சைக் காட்டிலும் சற்று அதிகமான வேகம், கை மணிக்கட்டை சற்று சுழற்றிய சிறிய ஆஃப் கட்டர் அவ்வளவுதான். ரிஸ்வான் கண்களில் மண்ணைத் தூவிய அந்தப் பந்து, நேராக ஸ்டெம்பில் பட்டு விக்கெட்டை கழற்றியது.
பும்ரா வீசிய 34வது ஓவரில் முதல் 5 பந்துகள் நல்ல வேகத்தில் வந்தது. இதை வழக்கமான பந்து என நினைத்து ரிஸ்வான் ஆடினார். ஆனால், பும்ரா வீசிய கடைசிப் பந்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியேதான் சென்றது. ஆனால் திடீரென பந்து எப்படி பேட்டுக்கும், கால்காப்புக்கும் இடையிலான இடைவெளிக்கு உள்ளே வந்து தன்னை இப்படி ஏமாற்றிச் சென்றது என ரிஸ்வான் நினைக்கவில்லை.
பும்ரா வீசியது முழுக்க முழுக்க ஆஃப் கட்டர்தான். பும்ராவின் கைவீசிய வேகத்தில் மாற்றமில்லை, அதனால்தான் பந்து வந்த வேகத்தை ரிஸ்வானால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பும்ரா தனது பந்துவீச்சில் மாற்றம் செய்தது என்பது, கை மணிக்கட்டில்தான். பந்து கையைவிட்டு ரிலீஸ் ஆகும்போது, மணிக்கட்டை லேசாக சுழற்றிவிட்டார், அவ்வளவுதான். பந்து காற்றிலேயே வேகமாகச் சுழன்று சென்றது. ஆனால் தரையில் பிட்ச் ஆனவுடன் பந்து காற்றில் இருந்த வேகத்தைக் குறைத்துக்கொண்டு, ஆஃப் கட்டராக மாறி, ஸ்டெம்பை பதம் பார்த்தது.

பட மூலாதாரம், Getty Images
இதுதான் ஹைலைட்ஸ்…
கடந்த இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் சோர்ந்தபோதெல்லாம் தூக்கி நிறுத்திய பேட்டர் முகமது ரிஸ்வான், இந்த ஆட்டத்திலும் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.
ஆனால், பும்ராவின் அந்தப் பந்து “எப்படி தன்னை ஏமாற்றி, ஸ்டெம்பில் பட்டு போல்டாகியது?” என்பதை சில வினாடிகள் புரிந்து கொள்ளமுடியாமல், ரிஸ்வான் ஸ்டெம்ப் அருகே நின்றுவிட்டார்.
இதில் ஹைலைட்ஸ் என்னவென்றால், “ரிஸ்வான் பெவிலியன் திரும்பும்போது, பும்ராவின் பந்துவீச்சு செய்கையை தனக்குத்தானே செய்துகொண்டே சென்றதுதான் பும்ராவின் பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறலாம்.”
பும்ரா வேகப்பந்துவீச்சாளரே இல்லை...

பட மூலாதாரம், Getty Images
பும்ராவின் பந்துவீச்சு குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறுகையில், “பும்ரா வேகப்பந்துவீச்சாளர் வீசும் ஸ்லோ பந்து வீசாமல் இருக்கலாம். அவர் ஏறக்குறைய 122 கி.மீ வேகத்தில் ‘ஆஃப் ஸ்பின்’ வீசுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது,” என்று நேற்றைய பந்துவீச்சைக் குறிப்பிட்டார்.
பேட்டர்களை குழப்பும் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா தனது பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து வித்தியாசமாகப் பந்துவீசி பேட்டர்களைக் குழப்புவது இது முதல்முறையல்ல. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷை இதேபோன்று “ஸ்லோவர் பால்” வீசி கால்காப்பில் வாங்கச் செய்து வெளியேற்றினார்.
அந்தப் போட்டியிலும்கூட பும்ராவின் கையை மட்டுமே பார்த்து பேட் செய்த மார்ஷ் பந்து பும்ராவின் கையில் இருந்து ‘ரிலீஸ்’ ஆகும் தருணத்தை கணிக்கத் தவறிவிட்டதால் விக்கெட்டை இழந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும், பும்ராவின் ‘கை ஆக்ஸனையும்’, வேகத்தையும் மட்டுமே கணித்த ரிஸ்வான், பந்து ‘ரிலீஸ்’ ஆகும் தருணத்தை கணிக்கத் தவறியதே விக்கெட்டை இழக்கக் காரணம். பந்தை ‘ரிலீஸ்’ செய்யும் தருணத்தில்தான் பும்ரா தனது மந்திரக்கோலை பயன்படுத்தினார்.
என்ன சொல்கிறார் பும்ரா?
தனது பந்துவீச்சு குறித்து நேற்றைய போட்டிக்குப் பின் பும்ரா அளித்த பேட்டியில் “ஆமதாபாத் மைதானத்தில் நடுப்பகுதி ஆடுகளத்தில் நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டோம். அப்போது, ஜடேஜா வீசிய பந்து சற்று “டர்ன்” ஆனதைக் கண்டுபிடித்தேன், ஆனால், தொடர்ந்து ‘டர்ன்’ ஆகவில்லை, ஒரு சில இடங்களில் மட்டும் அது நிகழந்தது.
ஆதலால், நான் ‘ஸ்லோ பந்தாக’ வீசி பயிற்சி எடுத்தபோது பந்து நன்றாக ‘டர்ன்’ ஆனதை மனதில் வைத்துதான் இன்று பந்து வீசினேன்.
இந்த உத்தியைப் பயன்படுத்தும்போது, பேட்டர்கள் ரன் சேர்ப்பது கடினம், வழக்கமான பந்துவீச்சுக்கு இடையே இதுபோன்று ‘வேரியேஷனை’ காண்பித்தால் நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என்று ஊகித்தேன். பந்தை நன்றாகப் பிடித்துதான் பந்து வீசினேன். ஆனால், பந்து கையைவிட்டு ‘ரிலீஸ்’ ஆகும்போது, மாறுபடும்,” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மாற்றங்களுடன் வந்த பும்ரா
முதுகு வலி காயத்தால் கடந்த ஆண்டு ஓய்வில் சென்ற பும்ரா ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பின்புதான் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அயர்லாந்து தொடருக்கு கேப்டனாக வந்தார்.
பும்ரா தனது ஓய்வுக் காலத்தில் தனது பந்துவீச்சில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதாவது பந்துவீச்சு ஆக்ஸன், பந்துவீசு வேகம் ஆகியவற்றில் மாற்றம் செய்து, பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோவர் பால் அதிகம் வீசுவது, ஸ்விங் செய்வது, யார்க்கரில் கவனம் செலுத்துவது, சீமிங் செய்வது, கட்டர்களை வீசுவது போன்ற நுணுக்கங்களில் கவனம் செலுத்தியுள்ளார்.
அதேபோல தேவைக்கு ஏற்றாற்போல் தனது வேகத்தை அதிகப்படுத்தும், குறைக்கும் நுட்பத்தையும் பும்ரா அறிந்துள்ளார். உதாரணமாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அயர்லாந்து பேட்டர் ஆன்ட்ரூ பால்பிரின் திடீரென பும்ரா பந்தில் பவுண்டரிகள் அடித்து அதிர்ச்சியளித்தார்.
அதற்கு முன்புவரை பும்ரா 129கி.மீ வேகத்தில் பந்து வீசியவர், திடீரென பந்துவீச்சின் வேகத்தை 140க்கு உயர்த்தி பந்துவீச்சில் வேரியேஷனை வெளிப்படுத்தினார்.
“சிம்மசொப்னமாக” பும்ரா

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பைத் தொடரில்கூட இதுவரை பும்ரா 27 ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 91 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஓவருக்கு சராசரியாக 3.37 ரன்கள் மட்டுமே பும்ரா விட்டுக்கொடுத்து எக்னாமி ரேட்டை மிகக் குறைவாக வைத்துள்ளார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் தனது எக்னாமி ரேட்டை குறைவாக வைத்திருக்கும் பந்துவீச்சாளர் பும்ரா மட்டும்தான்.
விக்கெட் எடுக்கும் திறமை கொண்ட, ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வல்லமை கொண்ட பும்ரா இந்திய அணிக்கு ஒரு மதிப்புமிகுந்த சொத்து என்பதில் ஐயமில்லை. அது ரன் சேர்க்கும் ஒரு பேட்டரைவிடக்கூட உயர்வாக இருக்கலாம். ஒரு பேட்டர் சொதப்பினால்கூட மற்றொரு பேட்டர் அந்த இடத்தை நிரப்பமுடியும், ஆனால், பும்ராவின் பந்துவீச்சு தனித்துவமானது.
பும்தா தனது முதுகுவலி சிகிச்சை, ஓய்வுக்குப்பின் பந்துவீச வந்ததில் இருந்து சர்வதேச அளவில் பேட்டர்களுக்கு பெரிய தொந்தரவுகளைக் கொடுத்து வருகிறார். தனது முதல் ஸ்பெலில் இருந்தே விக்கெட்டுகளை வீழ்த்தும் நோக்கில் பந்துவீசும் நுட்பத்தை பும்ரா கையில் எடுத்துள்ளார்.
பும்ரா என்றாலே ஸ்பெஷல்தான்
இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் மாம்பரே கூறுகையில், “பும்ராவுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்படுவது உண்மைதான். ஏனென்றால் அவர் வித்தியாசமான தனித்துவமான பந்துவீச்சாளர் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அவரது இடத்தை நிரப்புவதும் கடினம். அதநேரம் மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் சமமான வாய்ப்பைஉ வேறுபட்ட சூழலில் வழங்கி வருகிறோம். அவர்கள் விளையாட்டிற்குள் என்ன கொண்டு வருகிறார்கள், எந்த நிலைகளில் அவர்கள் பந்து வீசினார்கள், எப்படி செய்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும்.
அவர்களுடன் ஆழ்ந்த ஆலோசனை செய்கிறோம் இது வழக்கமான நடைமுறைதான். எனக்கு பும்ராவை 19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்து நன்கு தெரியும். அவரின் சீமிங், வேகம் அனைத்தையும் மாற்றி இருக்கிறேன். உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு மட்டும் பும்ரா முக்கியமானவர் அல்ல, அதையும் கடந்து முக்கியமானவர்,” எனத் தெரிவித்தார்.
யார் இந்த பும்ரா?

பட மூலாதாரம், Getty Images
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் கடந்த 1993, டிசம்பர் 6ஆம் தேதி ஜஸ்பிரித் ஜஸ்பிர் சிங் பும்ரா பிறந்தார். சீக்கிய குடும்பத்தில் பிறந்த பும்ராவுக்கு 7 வயதாகும்போதே அவரின் தந்தை ஜஸ்பிர் சிங் காலமாகிவிட்டார்.
அவரை சிறுவயதில் இருந்து கட்டுக்கோப்பாக வளர்த்தது அவரின் தாய் தில்ஜித் சிங்தான். பள்ளி தலைமை ஆசிரியரான தில்ஜித் சிங், பும்ராவுக்கு அனைத்து நிலைகளிலும் வழிகாட்டியாக இருந்தார். பும்ராவின் தந்தை ஒரு தொழிலதிபர்.
பும்ராவை கிரிக்கெட் விளையாட்டுக்குள் அனுப்ப அவரின் தாய் தில்ஜித் சிங்கிற்கு மனமில்லை. பும்ரா 14 வயதில் தனது விருப்பத்தையும், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவையும் தாயிடம் தெரிவித்தார். முதலில் ஏற்க மறுத்த தில்ஜித் சிங், பின்னர் தனது மகனின் விருப்பத்தை ஏற்று, கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்தார்.
இதையடுத்து, குஜராத் கிரிக்கெட் அமைப்பு, கோடைகாலப் பயிற்சிக்கு பும்ராவை சேர்த்துக்கொண்டது. பும்ராவின் பந்துவீசும் பாணி, கையைத் தூக்கி, மணிக்கட்டிலிருந்து பந்துவீசும் வேகம் ஆகியவற்றைப் பார்த்து எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷனுக்கு குஜராத் கிரிக்கெட் அமைப்பு அனுப்பியது.
இதையடுத்து 19 வயதுக்குட்பட்டோருக்கான குஜராத் அணியில் பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டு பல போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசினார். 2013-14 சீசனில் விதர்பா அணிக்கு எதிராக குஜராத் மாநில அணிக்காக பும்ரா முதன்முதலில் களமிறங்கி ஒரே போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தோனியை ஈர்த்த பும்ரா
கடந்த 2012-13ஆம் ஆண்டு நடந்த சயத் முஸ்டாக் அலி கோப்பையில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக குஜராத் அணியில் டி20 போட்டியில் பும்ரா அறிமுகமானார். அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல பும்ராவின் பந்துவீச்சு முக்கியக் காரணமாகியது.
ஐபிஎல் ஏலத்தில் பும்ரா மீது கவனம் திரும்பியது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. தனது முதல் ஆட்டத்திலேயே ஆர்சிபி அணிக்கு எதிராக பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது முகமது ஷமிக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்குப் பதிலாக பும்ரா வரவழைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்று இந்தியா வெல்ல பும்ரா காரணமாக அமைந்தார்.
அப்போது தோனியின் கவனத்தை ஈர்த்த பும்ரா, அதன்பின இந்திய அணிக்குள் உறுதியான இடத்தைப் பிடித்து டி20 உலகக் கோப்பைக்கான அணியிலும் தேர்வாகினார்.
இந்திய அணிக்குள் வந்த பும்ரா 57 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதுவரை 81 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பும்ரா 137 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 128 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றியுள்ளார். 62 டி20 போட்டிகளில் 74 விக்கெட்டுகளை பும்ரா சாய்த்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












