ஜஸ்பிரித் பும்ரா: பாகிஸ்தான் வீரர்களை மந்திர பந்துவீச்சால் கட்டிப் போட்டது எப்படி?

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவின் ஆகியோர் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அருமையாகப் பயன்படுத்திய கேப்டன் ரோஹித் சர் மாவின் ஆர்ப்பரிப்பான ஆட்டம் பாகிஸ்தானை 8-வதுமுறையாக உலகக் கோப்பைத் தொடரில் வீழ்த்தி வரலாற்றைத் தக்கவைத்தது.

5 0ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை இதுவரை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாறு இன்னும் 4 ஆண்டுகளுக்கு உயிருடன் இருக்கப் போகிறது.

அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் இன்று பகலிரவாக நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 192 ரன்கள் இலக்குடன் பயணித்த இந்திய அணி 117 பந்துகள் மீதிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

சிராஜ் ஏற்படுத்திய திருப்புமுனை

ஆட்டத்தில் இரு கட்டங்களிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது சிராஜ் பந்துவீச்சு என்றாலும் அதை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டத்தை கடிவாளமிட்டு இந்தியாவின் பக்கம் திருப்பியது குல்தீப், பும்ராவின் பந்துவீச்சுதான்.

குல்தீப், ஜடேஜாவின் துல்லியம்

குல்தீப் யாதவின் பந்துவீச்சு ஒவ்வொரு போட்டிக்கும் மெருகேறுகிறது. ஐபிஎல் அணியிலிருந்தும், இந்தியஅணியிலிருந்து நிராகரிக்கப்பட்ட குல்தீப் யாதவ், இன்று நிராகரிக்கப்படாத இடத்தில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருப்பின், ஒருநாள் தொடர்களில் நடுப்பகுதி ஓவர்களில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகபட்ச விக்கெட்டுகள் சாதனையை குல்தீப் வைத்துள்ளார்.

குல்தீப்புக்கு ஆதராவாக ஜடேஜாவும் லைன் லென்த்தில் துல்லியமாகப் பந்துவீசியதால் பாகிஸ்தான் பேட்டர்களால் ரன் சேர்க்க முடியாமல் திணறினர். இருவரின் பந்துவீச்சில் 60 சதவீதம் துல்லியமான லென்தில் வீசப்பட்டுள்ளது புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. உலகக் கோப்பைத் தொடரில் எந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்களும் எட்டாத துல்லியத்தை இந்திய பந்துவீச்சாளர்கள் வைத்துள்ளனர்.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

பும்ராவின் பந்துவீச்சு பேசப்படும்

அதிலும் பாகிஸ்தான் பேட்டர் ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்த பும்ராவின் லெக் கட்டர் பந்துவீச்சு இனி பல ஆண்டுகள் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படும். அந்த பந்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்பதால்தான், பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பும்ராவின் மந்திர பந்துவீச்சில் போல்டாகிச் சென்ற ரிஸ்வான், பெவிலியன் செல்லும்போது, பும்ராவின் பந்துவீச்சு செய்கையை செய்துகொண்டே சென்றதுதான் இதில் “ஹைலைட்ஸ்”. பும்ராவின் பந்துவீச்சு எந்த அளவுக்கு ரிஸ்வானிடம் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்.

7 ஓவர்கள் வீசிய பும்ரா 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்காத ஆடுகளத்தில், 30 ஓவர்களுக்குப் பிறகு பழைய பந்தில் அவர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் எந்தவொரு ஆடுகளத்திலும் விக்கெட் வீழ்த்தும் திறன் தனக்கு உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை பும்ரா அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளார்.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

அசுரத்தனமான “ஸ்ட்ரைக் ரேட்”

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது அடுத்துவரும் போட்டிகளை துணிச்சலாக இந்திய அணி எதிர்கொள்ள உதவும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் கண்ட ரோஹித் சர்மா, இந்த போட்டியில் சதத்தை நழுவவிட்டார்.

ரோஹித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட், முதல் 10 ஓவர்களில் ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் மாறி வருகிறது. 2015 உலகக் கோப்பைத் தொடரில் 77.2 ஆகவும், 2019ல் 83.7ஆகவும் இருந்தது, 2023 உலகக் கோப்பைத் தொடரில் 153.2 ஆக அதிரித்துள்ளது. அதிலும் “புல்லென்த்துக்கு” எதிராக ரோஹித் ஸ்ட்ரைக் ரேட் 211 ஆகவும், “லென்த்” பந்துவீச்சுக்கு எதிராக 136 ஆகவும், “ஷார்ட்” பந்துக்கு எதிராக 360ஆகவும் வைத்துள்ளார்.

ரோஹித் ஷார்ட்டாக வீசும் பந்துகளை எவ்வாறு எதிர்கொள்வார் எனத் தெரியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வீசி வாங்கிக்கட்டிக்கொண்டனர். அதிலும் லெக் திசையில் ஷார்ட்டாக ஹிட்மேனுக்கு வீசினால், பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் சந்தேகமில்லால் தேடலாம். ஹாரிஸ் ராஃப், அப்ரிடி இருவரும் ரோஹித்துக்கு லெக் திசையில் ஷார்டாகி வீசி பாடம் கற்றனர்

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

முதலிடத்தில் இந்திய அணி

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து 3 வெற்றிகளைப் பெற்று இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்திய அணியின் ரன்ரேட்டும் 1.821 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் என்று ரசிகர்கள் நினைத்தாலும் ரோஹித்தின் பணியை எளிதாக்கியது பும்ரா, குல்தீப், சிராஜ் ஆகியோர் என்பதுதான் நிதர்சனம்.

பந்துவீச்சாளர்கள் அருமையான பங்களிப்பு

வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா கூறுகையில் “ பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு 190 ரன்களில் சுருட்டியது சிறப்பானது. 190 ரன்களில் சுருட்டக்கூடிய ஆடுகளம் அல்ல. 290 ரன்கள் வரை பாகிஸ்தான் சேர்க்கும் என நினைத்தோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பானபணியைச் செய்துள்ளனர்.

கேப்டனுக்குரிய பணியை நான் சரியாகச் செய்கிறேன் என்று நம்புறேன். ஒவ்வொருக்கும் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். நாங்கள் வெற்றிக்காக அதிகமாக கொண்டாடவும் இல்லை, தோல்வி அடைந்தாலும் சோர்வடையப் போவதும் இல்லை.

எங்களுக்கு இன்னும் லீக் ஆட்டங்களும், அரையிறுதியும், இறுதி ஆட்டமும் இருக்கிறது. அதுவரை நாங்கள் சமநிலையுடன் செல்லவே விரும்புகிறோம். கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றி கவலையில்லை” எனத் தெரிவித்தார்.

பாபர் விக்கெட் திருப்புமுனை

பாபர் ஆட்டமிழந்ததுதான் ஆட்டத்தின் மட்டுமல்லாது இந்திய அணிக்கே திருப்புமுனையாக மாறியது. அதன்பின் ஆட்டத்தை இந்திய அணி கையில் எடுத்துக்கொண்டது. பாபர் ஆசம், ரிஸ்வான் பாட்னர்ஷிப்பை உடைத்து திருப்புமுனையை சிராஜ் அளித்தார். அந்தப் பாதையைப் இறுகப் பிடித்த பும்ரா, குல்தீப் யாதவ் சேர்ந்து பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையை ஆட்டிப்படைத்தனர்.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் என வலுவாக இருந்தது. ஆனால், 30 முதல் 43 ஓவர்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் நிகழ்த்திய மாயஜாலப் பந்துவீச்சுதான் பாகிஸ்தான் அணியை திக்குமுக்காடச் செய்தது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

36 ரன்களுக்கு 8 விக்கெட்

பாகிஸ்தான் அணியின் நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக்கட்டு போல் சரிந்தனர். 13 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சவுத் ஷகீல்(6), இப்திகார் அகமது(4) விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் தான்வீசிய 33வது ஓவரில் எடுத்தார்.

அதிலும் இப்திகார் அகமது ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு, குல்தீப் பந்தை அடிக்க அது அவரின் காலில் பட்டு போல்டாகியது. சவுத் ஷகீல் கால்காப்பில் வாங்கியபோது களநடுவர் அவுட் வழங்கவில்லை, ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா அப்பீல் செய்யவே, 3வது நடுவர் அவுட் வழங்கினார்.

விக்கெட்டுகள் சரிந்தாலும் ரிஸ்வான் அரைசதத்தை நோக்கி நகர்ந்தார். பும்ரா உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். பும்ரா வீசிய சிறிய லெக் கட்டர் பந்து கணித்து ஆட ரிஸ்வான் தவறியதால் க்ளீன் போல்டாகி 49 ரன்னில் வெளியேறினார். ரிஸ்வான் வெளியேறியபோது, பும்ரா பந்துவீச்சில் செய்த ஆக்சனை அவரே செய்துக்காட்டிக்கொண்டு வெளியேறினார்.

சதாப் கானையைும் 2 ரன்னில் பும்ரா தனது “லெக் கட்டர்” பந்துவீச்சில் க்ளீன் போல்டாகச் செய்து பெவிலியன் அனுப்பினார். பும்ராவின் துல்லியமான லெக் கட்டருக்கு இது மற்றொரு மாஸ்டர்பீஸாகும்.

முகமது நவாஸ் (4) ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், ஹாரிஸ் ராஃப்(2), ஹசன் அலி(12) ஆகியோர் ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். 42.5ஓவர்களில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி கடைசி 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மோசமாக ஆட்டமிழந்தது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

சாதித்த இந்தியப் பந்துவீச்சாளர்கள்

உலகக் கோப்பைத் தொடரில் ஒரு அணியில் 5 பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளை 3வது முறையாக வீழ்த்தியுள்ளனர். இதற்கு முன், 2011, மொஹாலியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் உள்ள 5 பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 2015ம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 5 பேர் தலா2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணியின் மைல்கல்

பாகிஸ்தானுக்கு எதிராக 1999ம் ஆண்டுக்குப்பின், ஒரு அணி மட்டுமே முதல் 10 ஓவர்களில் அதிகமான ரன்களை குவித்தது. அந்த அணியும் இந்தியாதான். 2003ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 ஓவர்களில் 88 ரன்களை இந்திய அணி குவித்தது.

300 சிக்ஸர்கள் அடித்த ரோஹித் சர்மா

ஒருநாள் போட்டிகளில் அதிகமான சிக்ஸர் அடித்த வரிசையில் 3வது இடத்தையும், 300 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற பெருமையுயம் ரோஹித் சர்மா பெற்றார்.

முதலிடத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி 351 சிக்ஸர்களுடனும், 2வது இடத்தில் மே.இ.தீவுகள் வீரர் கெயில் 331 சிக்ஸர்களுடனும் உள்ளனர். ரோஹித் சர்மா 301 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

“ஆமை” ஸ்ரேயாஸ்

ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது இந்திய அணி 156 ரன்களை எட்டியிருந்தது, வெற்றிக்கு, 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், கேஎல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், இருவரும் சேர்ந்து 36ரன்களை சேர்க்க 10 ஓவர்கள் எடுத்துக் கொண்டனர். ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது 38 பந்துகளில் 36 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ், 62 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

12 ரன்களை அடிப்பதற்கு ஸ்ரேயாஸ், 24 பந்துகளை எடுத்துக்கொண்டு ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தார். பவுண்டரி அடித்து அரைசதம் அடித்த, ஸ்ரேயாஸ் 53 ரன்களிலும், ராகுல் 19 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர். 30.3 ஓவர்களில் இந்திய அணி 3விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இன்னுமா இந்த பாணி தொடர்கிறது!

தனிப்பட்ட வீரர்களின் அரைசதம், சதம் சாதனையை வரலாற்றில் பதியவைப்பதற்காக அணியின் வெற்றியைத் தள்ளிப்போடும் பழக்கம் இன்னும் கிரிக்கெட்டில் ஒழியவில்லை. ஒருகாலத்தில் 90 ரன்களை விரைவாக எட்டிய பேட்டர், கடைசி 10 ரன்களை அடிக்க 30 பந்துகளை எடுத்துக் கொள்ளும் முறை இருந்தது. அது டி20 போட்டி வந்தபின் வழக்கிலிருந்து ஒழிந்துவிட்டது என்று நம்பப்பட்டாலும், ஸ்ரேயாஸ் போன்றோர் இதுபோன்று தனிப்பட்ட சாதனைக்காக அணியின் வெற்றியை தள்ளிப்போடுகிறார்கள்.

“பல்லைக் காட்டிய” பாகிஸ்தான் பீல்டிங்

கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் பீல்டிங் என்றாலே “கிண்டலாகச் சிரிப்பார்கள்”. அந்த அளவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் பந்தை தரையில்விழுந்து தடுக்க தயங்குவார்கள். இது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. கேட்சை கோட்டைவிட்டது. பவுண்டரிகளை தாரை வார்த்தது என தவறுகள் ஏராளம். அதிலும் தடுக்க வேண்டிய பந்தைக் கூட பவுண்டரிக்கு தட்டிவிட்ட கொடுமையும் அரங்கிறேயது. பாகிஸ்தான் அணி இம்ரான்கான் தலைமையில் உலகக் கோப்பை வாங்கிய காலத்தில் இருந்து பீ்ல்டிங் விஷயத்தி்ல் இன்னும் மந்தமாகவே இருக்கிறது ஏனோ தெரியவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)