கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: மேக்னெஸ் கார்ல்செனை வீழ்த்திய கார்த்திகேயன் - யார் இவர்?

கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: மேக்னெஸ் கார்ல்செனை வீழ்த்திய கார்த்திகேயன் - யார் இவர்?

பட மூலாதாரம், BBC/Getty Images

படக்குறிப்பு, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி, கத்தார் மாஸ்டர்ஸ் 2023 போட்டியில் தோற்கடித்துள்ளார்.
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

செஸ் உலகத்தின் கதாநாயகனாக கொண்டாடப்படும் நார்வே நாட்டு விளையாட்டு வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி(24), கத்தார் மாஸ்டர்ஸ் 2023 என்ற சர்வதேச ஃபிடே ரேட்டிங் போட்டியில் தோற்கடித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், அஜர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தாவை தோற்கடித்து, தங்கம் வென்ற கார்ல்சனை தற்போது கார்த்திகேயன் முரளி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது கார்ல்சன் தோல்வியைச் சந்தித்துள்ளதால், கத்தார் மாஸ்டர்ஸ் 2023 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு அவர் செல்வதற்கான வாய்ப்பு முற்றிலுமாகக் குறைந்துவிட்டது.

கார்த்திகேயன் முரளியின் வெற்றி என்பது அசாதாரணமானது என்றும் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, செஸ்ஸில் உலகின் நம்பர்-1 மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் கார்த்திகேயன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேக்னெஸ் கார்ல்செனை வீழ்த்திய கார்த்திகேயன்
படக்குறிப்பு, கத்தார் மாஸ்டர்ஸ் 2023 கார்ல்சனின் தவறான நகர்வுகளை கார்த்திகேயன் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவரான பரத் சிங், கார்த்திகேயன் முரளியின் ஆட்டம், இந்தியாவுக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளது என்றார்.

''செஸ் விளையாட்டில் இந்தியாவின் பொற்காலம் இது என்றுதான் சொல்ல வேண்டும். கத்தார் மாஸ்டர்ஸ் 2023 போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி.

இதில், தொடக்கத்தில் கார்ல்சனின் இரண்டு தவறான நகர்வுகளை கார்த்திகேயன் மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, வெற்றியைத் தனதாக்கியுள்ளார். இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பை கார்த்திகேயன் அதிகரித்துவிட்டார்,'' என்கிறார்.

தற்போது கார்த்திகேயன் அடைந்துள்ள வெற்றியின் மூலம், இவர் எஸ்.எல்.நாராயணன், ஜவோகிர் சிந்தரோவ், அர்ஜுன் எரிகைசி, டேவிட் பரவியன் மற்றும் நோடிர்பெக் யாகுபோவ் ஆகிய முன்னணி போட்டியாளர்களுடன் இறுதிப் போட்டியில் பங்கு பெறுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கார்த்திகேயன் முரளி யார்?

மேக்னெஸ் கார்ல்செனை வீழ்த்திய கார்த்திகேயன்
படக்குறிப்பு, கார்த்திகேயன் முரளி ஐந்து வயது முதலே செஸ் விளையாடி வருகிறார்.

சென்னை கண்டிகை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் தற்போது இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் விளையாட்டுப் பிரிவில் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

பெற்றோர் செஸ் விளையாடுவதைப் பார்த்து, தானும் அதில் ஈடுபாடு கொண்டு விளையாடிப் பழகிய கார்த்திகேயன் இன்று புதிய உச்சத்தை செஸ் விளையாட்டில் அடைந்துள்ளார்.

கார்த்திகேயனின் தந்தை முரளி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் துணை பொறியாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தயார் சுந்தரலக்ஷ்மி தனது மகனின் செஸ் விளையாட்டு ஆர்வத்தை அதிகரித்து, அவருடைய விளையாட்டு மேம்பட முழு நேரத்தையும் கொடுத்தவர்.

கார்த்திகேயனின் வெற்றியால் பூரித்துப் போயுள்ள தாயார் சுந்தரலக்ஷ்மி, அந்த வெற்றியைத் தன்னுடைய வெற்றியாய் பார்க்கிறார். அதற்கு ஒரு சிறப்புக் காரணமும் உள்ளது.

கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: மேக்னெஸ் கார்ல்செனை வீழ்த்திய கார்த்திகேயன் - யார் இவர்?

''நான் பள்ளிக்காலம் முதல் செஸ் விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடுவேன். எனக்கு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுவதற்கு அப்போது வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

என் மகன் ஐந்து வயதில் செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டியதுடன், என்னுடன் சமமாக விளையாடியதால், அவன் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என செஸ் பயிற்சிப் பள்ளியில் சேர்த்தேன். தற்போது அதற்காகப் பெருமைப்படுகிறேன்,'' என வெற்றிக் களிப்புடன் பேசினார் சுந்தரலக்ஷ்மி.

ஐந்து வயது முதலே செஸ் விளையாட்டை முறைப்படி விளையாட கார்த்திகேயன் கற்றுக்கொண்டார். மண்டல அளவிலான பல விளையாட்டுகளில் தொடர்ந்த வெற்றி 2012இல் அவரை உலக அளவில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள ஊக்குவித்தது. பிரேசிலில் நடைபெற்ற அந்த உலகக்கோப்பை போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

அடுத்தடுத்து போட்டிகளில் கலந்துகொள்ள அதிக பயிற்சிகள் தேவைப்பட்டது. அதேநேரம் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதனால் பெற்றோர்கள் முடிவு செய்து, செஸ் விளையாட்டுக்குத் தேவையான நேரத்தைக் கொடுக்கும் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர்.

வமேக்னெஸ் கார்ல்செனை வீழ்த்திய கார்த்திகேயன்
படக்குறிப்பு, மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் கார்த்திகேயன்.

அதன் பின்னர், 2013இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார். 2014இல் அபுதாபி மாஸ்டர்ஸ் போட்டியில் மூன்றாவது இடம், 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்திய சாம்பியன் பட்டம் என வெற்றிகளைக் குவித்திருக்கிறார்.

அதேநேரம் 2014 முதல் 2019 வரை சுவிட்சர்லாந்து, ரஷ்யா, துபாய், ஸ்பெயின் எனப் பல நாடுகளில் நடைபெற்ற ஃபிடே ரேட்டிங் போட்டிகளில் வெண்கலம் பெற்றுள்ளார். 2015இல் கிராண்ட் மாஸ்டர் பட்டமும் பெற்றார். இந்தியாவில் உள்ள கிராண்ட் மாஸ்டர் பட்டியலில் 38வது நபர் இவர்.

மேக்னெஸ் கார்ல்செனை வீழ்த்திய கார்த்திகேயன்
படக்குறிப்பு, கார்த்திகேயனுக்கு சிறு வயதிலிருந்தே பயிற்றுநராக இருப்பவர் ரமேஷ்.

மேக்னஸ் கார்ல்சனை வெற்றி பெற்ற தருணம்

கடந்த 2017ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஃபிடே ரேட்டிங் கிளாசிக் போட்டி ஒன்றில் மேக்னஸ் கார்ல்சனை பார்த்தபோது, அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் கார்த்திகேயன்.

தற்போது மேக்னஸ் கார்ல்சனை வெற்றி கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை எண்ணி கார்த்திகேயனின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

''கார்த்திகேயன் விளையாட்டில் காட்டிய ஆர்வத்திற்காக நானும் என் மனைவியும் எங்களிடம் இருந்த எல்லா சேமிப்புகளையும் அவனது பயண செலவுக்காகச் செலவிட்டோம்.

என் மனைவியின் எல்லா நகைகளையும் விற்றுக்கூட செலவிட்டோம். நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன்தான் அதைச் செய்தோம். இன்று அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்,'' என்கிறார் கார்த்திகேயனின் தந்தை முரளி.

மேக்னெஸ் கார்ல்செனை வீழ்த்திய கார்த்திகேயன்

கார்ல்செனுடன் விளையாடவேண்டும் என்பது கார்த்திகேயனின் பலநாள் கனவு என்று கூறும் முரளி, ''2017இல் லண்டனில் மேக்னஸ் கார்ல்செனை நேரில் பார்த்து என் மகன் மிகவும் உற்சாகம் அடைந்தான். அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டான். அந்த சமயத்தில் இருந்து மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாட ஒரு வாய்ப்பு வரவேண்டும் எனப் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தான்.

நானும் அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் எனப் பலமுறை நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டே இருந்தேன். இந்த முறை எங்கள் மகன், மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்தியாவுக்கு புகழ் சேர்த்துள்ளான் என்பதைப் பார்க்கும்போது மிகவும் பரவசமாக உள்ளது,'' என மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் அவரது தந்தை.

கத்தார் மாஸ்டர்ஸ் 2023 போட்டியின் எட்டாவது சுற்று இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. அதாவது இந்திய நேரப்படி, மாலை 5:30க்கு தொடங்கும் என்பதால், கார்த்திகேயன் குடும்பத்தினர் மிகவும் ஆர்வத்துடன் விளையாட்டை எதிர்பார்த்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)