உலகக்கோப்பை: சச்சின் சாதனையை முறியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த விராட் கோலி

உலகக்கோப்பை: இந்தியா vs பங்களாதேஷ் - விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

விராட் கோலியின் அற்புதமான சதம், ரோஹித் சர்மா, சுப்மான் கில்லின் ஆட்டம் ஆகியவற்றால் புனேவில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெளிப்படுத்திய அற்புதமான சேஸிங்கை இந்த ஆட்டத்திலும் கோலி வெளிப்படுத்தினார்.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்தது. 257 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 51 பந்துகள் மீதம் இருக்கையில், 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

உலகக்கோப்பை: இந்தியா vs பங்களாதேஷ் - விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

கனவிலும் நடக்காது

புனே ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி. இதே மைதானத்தில் இந்திய அணி பலமுறை 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் மழை பெய்திருந்தால் நிச்சயம் ஆடுகளத்தின் தன்மை மாறியிருக்கும்.

ஆனால், மழை இல்லாததால் ஆடுகளம் முற்றிலும் சேஸிங்கிற்கு சாதகமாக மாறியது. பேட்டிற்கு பந்து வேகமாக வந்ததால், பேட்டர் அடித்து ஆடுவது எளிதாக இருந்தது.

வங்கதேச அணி டாஸ் வென்று பேட் செய்தாலும், இந்த ஸ்கோரை வைத்து வலுவான பேட்டிங் வரிசை வைத்திருக்கும் இந்திய அணியைக் கட்டுப்படுத்த முடியாது.

இன்னும் 80 ரன்களாவது இந்த மைதானத்தில் வங்கதேசம் சேர்த்திருந்தால்தான் ஆட்டம் பரபரப்பாகச் சென்றிருக்கும். இதுபோன்ற குறைந்த ஸ்கோரை இந்த மைதானத்தில் அடித்துவிட்டு, அசுரத்தனமான பேட்டிங் வரிசை வைத்திருக்கும் இந்திய அணியை டிஃபென்ட் செய்வது கனவிலும் நடக்காது.

இந்திய அணி இதுவரை மோதிய 4 ஆட்டங்களும் சேஸிங் செய்து வெற்றி பெற்றதாகவே அமைந்துவிட்டது. ஒருமுறைகூட முதலில் பேட் செய்து தனது பந்துவீச்சு பராக்கிரமத்தை வெளிப்படுத்தவில்லை.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் நிச்சயமாக இந்தியப் பந்துவீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் கடும் சவாலான ஆட்டமாக அமையும். கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதத்தில் இந்த ஆட்டத்தை மாற்றுமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதிரடியாகத் தொடங்கி விக்கெட்டுகளை சரிய விடும் வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

அதிரடித் தொடக்கம்

புனே ஆடுகளம் பேட்டர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இங்கு பலமுறை இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது, சேஸிங்கும் செய்துள்ளது.

இதனால் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஷாண்டோ யோசிக்காமல் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதற்கு ஏற்றாற்போல் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், தான்சித் ஹசன் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். சிராஜ் பந்துவீச்சை தொடக்கத்திலிருந்தே இருவரும் வெளுத்து வாங்கினர். பும்ரா பந்துவீச்சில் தான்சித் ஹசன் சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்

இதையடுத்து, ஹர்திக் பாண்டியா பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ரன் ஏதும் வழங்காத பாண்டியா அடுத்த இரு பந்துகளில் இரு பவுண்டரிகளை வழங்கினார்.

இதில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை காலால் தடுக்க முயன்று ஹர்திக் பாண்டியா காலை மடக்கி கீழே விழுந்தார். இதில் அவரது கனுக்காலில் காயம் ஏற்பட்டது, அவரால் நடக்க முடியவில்லை.

அதன்பிறகு உடலியக்கவல்லுநர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பாண்டியாவால் பந்துவீச முடியவில்லை.

இதையடுத்து, அவர் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். பாண்டியா ஓவரின் கடைசி 3 பந்துகளை விராட் கோலி வீசினார்.

அதிரடியாகத் தொடங்கி விக்கெட்டுகளை சரிய விடும் வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

'வள்ளல்' ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர் பந்துவீச வந்ததில் இருந்து வங்கதேச பேட்டர்களுக்கு கொண்டாட்டம் தொடங்கியது. வங்கதேச பேட்டர்கள் லிட்டன் தாஸ், ஹசன் இருவரும் ஷாட்களை அடிக்கும் வகையில் ஓவர்பிட்சாகவும், ஷார்ட் பிட்சாகவும் தாக்கூர் பந்து வீசினார்.

இதனால் தாக்கூர் ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரி உள்ளிட்ட 16 ரன்களை வெளுத்தனர். அதன்பின் ஷர்துல் தாக்கூர் ஓவரை குறிவைத்து வங்கதேச பேட்டர்கள் ரன்களை குவித்தனர்.

வங்கதேச அணி 10 ஓவர்களில் 63 ரன்களை குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 53 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தான்சித் 41 பந்துகளில் உலகக்கோப்பையில் முதல் அரைசதம் எட்டினார்.

திருப்புமுனை பந்துவீச்சாளர்கள்

குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்ட பிறகு ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. குல்தீப் பந்துவீச்சுக்கு திணறிய வங்கதேச பேட்டர்கள், விக்கெட்டை இழந்தனர்.

குல்தீப் வீசிய 15வது ஓவரில் தான்சித் ஹசன்(51) ஸ்வீப்ஷாட் ஆட முற்பட்டு கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 93 ரன்களுக்கு வங்கதேசம் முதல் விக்கெட்டை இழந்தது.

அதன்பிறகு, வங்கதேசத்தின் விக்கெட் சரிவு தொடங்கியது. ஜடேஜா பந்துவீச்சில் கேப்டன் ஷாண்டோ(8) ரன்களில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். சிராஜ் வீசிய 25வது ஓவரில் மெஹதி ஹசன் இடதுபுறம் சென்ற பந்தைத் தட்டிவிட, அதை கே.எல்.ராகுல் சூப்பர் டைவ் செய்து கேட்ச் பிடித்தார். இதனால் மெஹதி ஹசன் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும் லிட்டன் தாஸ் அபாரமாக அரைசதம் அடித்தார். அடுத்த சிறிது நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் லாங் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முற்பட்ட லிட்டன் தாஸ்(66) ரன்னில் சுப்மான் கில்லிடம் விக்கெட்டை இழந்தார். ஹிர்தாய் 16 ரன்கள் சேர்த்த நிலையில் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாகத் தொடங்கி விக்கெட்டுகளை சரிய விடும் வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

விக்கெட் சரிவு

விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் வரை பயணித்த வங்கதேசம், அடுத்த 13 ஓவர்களில் 44 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்து தடுமாறியது.

வங்கதேசம் அணி தொடக்கத்தில் பயணித்த வேகத்தைக் கணித்தபோது, 270 ரன்களுக்கு மேல் எடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், விக்கெட் இழந்தவுடன் ரன் குவிக்கும் வேகம் திடீரெனச் சரிந்தது.

இரண்டாவது இடம்

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நான்கு போட்டிகளி்ல் வென்று 8 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 1.659 என்ற கணக்கில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு இணையாக 8 புள்ளிகளை இந்திய அணி பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் குறைவாக இருப்பதால், 2வது இடம் கிடைத்துள்ளது.

ரோஹித் சர்மா(48), சுப்மான் கில்(53) சேஸிங்கில் அருமையான தொடக்கத்தை அளித்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதில் விராட் கோலி சிறப்பாகப் பயணித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு ரன்னில் அரைசதத்தைத் தவறவிட்டார்.

விராட் கோலி களத்துக்கு வந்தவுடனே அவரை வரவேற்கும் விதமாக நோபால்-ப்ரீ ஹிட் கிடைத்தது. அதை சிக்ஸர் மற்றும் பவுண்டரியாக வெளுத்து தனது மாஸ்டர் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அதிரடியாகத் தொடங்கி விக்கெட்டுகளை சரிய விடும் வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

கோலியின் புதிய சாதனை

விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களுடன்(4 சிக்ஸர், 6 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல்.ராகுல் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 48 பந்துகளில் அரைசதத்தையும், 97 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.

வங்கதேச பந்துவீச்சாளர் ஹசன் ஓவரில் சிக்ஸர் அடித்தபோது விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 26 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 26 ஆயிரம் ரன்களை 600 இன்னிங்ஸில் எட்டினார். ஆனால், அதிவிரைவாக விராட் கோலி 567 இன்னிங்ஸில் எட்டி புதிய வரலாறு படைத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் 78வது சதத்தையும் விராட் கோலி எட்டினார். கோலி அரைசதத்தை எட்டியபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த சாதனை வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தார்.

இதுவரை 212 முறை கோலி 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். முதலிடத்தில் சச்சின்(264), ரிக்கி பாண்டிங்(217), சங்கக்கரா(216) உள்ளனர்.

இந்தப் போட்டியில் சதம் அடித்திருப்பதன் மூலம் ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 49 சதங்களின் எண்ணிக்கையை நெருங்கியிருக்கிறார் கோலி. இப்போது கோலி அடித்துள்ள சதங்களின் எண்ணிக்கை 48.

கோலி சதம் அடிக்க உதவிய நடுவர்?

விராட் கோலி சதம் அடிக்க 3 ரன்களே தேவைப்பட்டது. விராட் கோலி அடித்துவிட்டு ரன் அடிக்க அழைத்தபோது ராகுல்கூட வரவில்லை.

விராட் கோலியின் சதத்தை எதிர்பார்த்து பெவிலியனில் சக வீரர்களும், அரங்கில் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். 42வது ஓவரை நசும் வீசினார்.

முதல் பந்து கோலியின் இடதுபுறத்தை விட்டு நன்றாக வெளியே ஒதுங்கிச் சென்றது. ஆனால் கள நடுவர் வைடு தரவில்லை. இரண்டாவது பந்தில் ரன் அடிக்காத கோலி, மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)