‘தோட்டா என்னை நோக்கி வந்தபோது…’ - தாக்குதல் முயற்சி குறித்து டிரம்ப் சொன்னது என்ன?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், மைக் வென்ட்லிங்
- பதவி, மில்வாக்கியில் நடைபெற்ற குடியரசு கட்சி மாநாட்டிலிருந்து
அமெரிக்க அரசியலை புரட்டிப்போட்ட சில கொந்தளிப்பான வாரங்களையடுத்து, வியாழக்கிழமை (ஜூலை 18) இரவு மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், தேச ஒற்றுமை மற்றும் பலம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
அமெரிக்க இசைக்கலைஞர் கிட் ராக்கின் இசை நிகழ்ச்சி, உலகளாவிய கலப்பு தற்காப்புக் கலை அமைப்பான அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பின் தலைவர் டானா ஒயிட்-இன் வரவேற்புரை, தனது அடையாளமாக விளங்கும் மேல்சட்டையை கிழித்தெறிந்து, டிரம்ப்பை ஆதரித்துப் பேசிய முன்னாள் மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், டிரம்ப்பின் பிரசார பாடலான ‘காட் பிளெஸ் தி யு.எஸ்.ஏ’ பாடலின் இசை நிகழ்ச்சி ஆகியவை இந்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்டன.
டொனால்ட் டிரம்ப் மேடையில் தோன்றியபோது, பிரமாண்டமான மின்விளக்குகளால் எழுதப்பட்ட அவருடைய பெயர் தோன்றியது.
ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக அமைந்த டிரம்ப்பின் பேச்சு, தொடக்கத்தில் ஆக்ரோஷமாக அமைந்தாலும் பின்னர் அடிக்கடி தனது உரையிலிருந்து விலகி அமைதியாகப் பேசினார்.
சமீபத்தில் அவருடைய உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை விளக்கிய டொனால்ட் டிரம்ப், தான் தெய்வீக தலையீட்டால் தான் உயிர்பிழைத்ததாகத் தெரிவித்தார்.
அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை டிரம்ப் வலியுறுத்திய போதிலும், ஜனநாயகக் கட்சி தலைவர்களை அவரால் கேலி செய்யாமல் இருக்க முடியவில்லை
டிரம்பின் இந்த உரையில் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
‘கடவுளின் கருணையால் இங்கு இருக்கிறேன்’
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல் முயற்சியை டிரம்ப் தன் பேச்சில் நினைவுகூர்ந்தார்.
குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் மத்தியில் பேசிய அவர், “என் உயிரைப் பறிப்பதற்கு கால் அங்குலம் அளவில் என்னை நோக்கி தோட்டா வந்தது,” என்றார்.
டெலிபிராம்ப்ட்ரில் குடியேற்றம் தொடர்பான விளக்கப்படத்தைப் பார்ப்பதற்காக தான் லேசாக தலையை சாய்த்ததாக அவர் கூறினார்.
“அந்த விளக்கப்படத்தைப் பார்க்க என் வலதுபக்கம் திரும்ப தொடங்கினேன். நல்லவேளையாக, நானும் இன்னும் அதிகமாக திரும்பவில்லை. அப்போது, உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தத்துடன் வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றது,” என்றார் டிரம்ப்.
“அது என்ன? அது தோட்டாவாகத் தான் இருக்க முடியும் என எனக்குள் நான் கூறிக்கொண்டேன்,” என்றார்.
விரைவாக மேடைக்கு வந்த ரகசிய சேவை முகவர்கள் 'மிக தைரியமானவர்கள்' என டிரம்ப் தெரிவித்தார்.
“எல்லாம்வல்ல இறைவனின் கருணையால் தான் உங்கள் முன் நான் இப்போது நிற்கிறேன்,” என அவர் கூறினார்.
“இது அதிர்ஷ்டவசமானது என பலரும் கூறுகின்றனர். அப்படியும் இருக்கலாம்,” என்றார்.
தாக்குதல் முயற்சி நிகழ்ந்த பென்சில்வேனியாவின் பட்லரில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் குழுமியிருந்த பார்வையாளர்கள் பதற்றம் மற்றும் கூட்டநெரிசலை ஏற்படுத்தாமல் இருந்ததற்காக பாராட்டு தெரிவித்தார்.
“அவர்கள் என்னை விட விரும்பவில்லை, அவர்களின் முகங்களில் இருந்த அன்பை நீங்கள் பார்த்திருக்கலாம்,” என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பைடனை ஒருமுறை மட்டுமே குறிப்பிட்ட டிரம்ப்
பலவழிகளில் ஜோ பைடனின் கொள்கைகள் குறித்து டிரம்ப் கடுமையாக விமர்சித்தாலும், தன் அரசியல் எதிரியின் பெயரை ஒருமுறை மட்டுமே நேரடியாக குறிப்பிட்டார். தன்னுடைய மற்ற பொதுக் கூட்டங்களில் அடிக்கடி குறிப்பிட்டது போலவே, அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர்களுள் ஒருவர் பைடன் என டிரம்ப் குறிப்பிட்டார்.
“இந்த நாட்டுக்கு அவர் நிகழ்த்திய சேதங்கள் நினைக்க முடியாத அளவு பெரிது,” என டிரம்ப் கூறினார்.
அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது. கடந்த புதன்கிழமை கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட பைடன், டெலவாரே-யில் உள்ள தன் வீட்டில் ஓய்வில் உள்ளார்.
அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து பாரக் ஒபாமா போன்ற ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் கேள்வி எழுப்புவதாக வரும் தகவல்கள், புதிய வேட்பாளருக்கு வழிவிட்டு போட்டியிலிருந்து விலகுமாறு கூறும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிகரித்துவரும் நிலையிலும், தேர்தலில் போட்டியிடுவதாக பைடன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தவறான கூற்றுகள்
“தெற்கு எல்லையில் தான் (டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் பொருட்டு) எழுப்பிய சுவற்றில் மீதமுள்ள பணிகளும் முடிக்கப்படும்,” என அவர் உறுதியளித்தார். இந்தக் கூற்று துல்லியமானது அல்ல, அவருடைய ஆட்சிக்காலத்தில் 500 மைல் தொலைவுக்கும் குறைவாகவே கட்டி முடிக்கப்பட்டது.
“மளிகை பொருட்கள் 50% விலை உயர்ந்துவிட்டது, எரிவாயு 60-70% உயர்ந்துவிட்டது, அடமான விகிதம் நான்கு மடங்கு உயர்ந்துவிட்டது,” என பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதாக அவர் சித்தரித்தார்.
அமெரிக்க வாக்காளர்களிடையே பணவீக்கம் முக்கியமான பிரச்னையாக உள்ளது. ஆனால், பைடன் ஜனவரி 2021-இல் அதிபரானதிலிருந்து சுமார் 20% அளவுக்குதான் விலைகள் உயர்ந்துள்ளன.
2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நடைபெற்ற மோசடி காரணமாகவே தான் தோற்க நேர்ந்ததாக அடிப்படையற்ற வாதத்தையும் பலமுறை முன்வைத்தார்.

பட மூலாதாரம், Reuters
மேடையில் கூடிய டிரம்ப்பின் குடும்பம்
வழக்கமாக நடைபெறுவது போலவே, டிரம்ப்பின் குடும்பத்தினர் மேடையில் கூடியதுடன் மாநாடு நிறைவடைந்தது.
ஆனால், டிரம்ப்பின் குடும்பத்தினர் தற்போது இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், குடியரசு கட்சியின் உண்மையான அதிகார செல்வாக்கு படைத்தவர்களாகவும் கட்சியின் வாரிசுகளாக உருவெடுக்கும் சாத்தியக்கூறு உள்ளவர்களாகவும் திகழ்கின்றனர்.
டிரம்ப்பின் மகன்கள் எரிக் மற்றும் டான் ஜூனியர் இருவரும் மாநாட்டு பேச்சுகளில் முக்கிய இடம் வகித்தனர், தன் தந்தை துணை அதிபரை தேர்ந்தெடுப்பதில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கு செலுத்தும் நபராக டான் ஜூனியர் உள்ளதாக தகவல் உள்ளது.
இந்த வார ஆரம்பத்தில், எரிக்கின் மனைவி லாரா டிரம்ப், கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். குடியரசு தேசிய குழுவின் இணை தலைவராக, தேர்தல் பரப்புரையில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
கோல்ஃப் விளையாட்டில் ஆர்வம் மிக்கவரான டிரம்ப்பின் மூத்த பேத்தி கய் டிரம்ப் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தில் அதிகம் அறியப்படாத சிலர் குறித்தும் இம்மாநாட்டின் வாயிலாக அறிய முடிந்தது. 17 வயதான கய் டிரம்ப், நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க முடியாது.
டிரம்ப் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் அதிகம் அறியப்படாதவர்கள். பொதுவெளியில் அரிதாகவே தோன்றும் மெலானியா டிரம்ப் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார், ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகளில் அமெரிக்க வேட்பாளர்களின் மனைவிகள் வழக்கமாக செய்வதுபோன்று அவர் மேடையில் உரை நிகழ்த்தவில்லை.
அதேபோன்று, தன் கணவர் ஜாரெட் குஷ்னெருடன் கலந்துகொண்ட டிரம்ப்பின் மகள் இவாங்கா, மாநாட்டில் மட்டும் பங்கேற்றார். ஒருகாலத்தில் தன் தந்தைக்கும் நெருங்கிய ஆலோசகராக இருந்த இவாங்கா, கடந்த முறை டிரம்ப்பின் ஆட்சிக்காலம் முடிவுற்ற பின்னர் அரசியலில் இருந்து விலகிக்கொண்டார்.

பட மூலாதாரம், EPA
ஒற்றுமைக்கான செய்தி
தேசிய ஒற்றுமை எனும் கருத்தை டிரம்ப் தனது பேச்சில் மேலோட்டமாக நிறுவ முயற்சி செய்தார். ஆனால், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களின் கொள்கைகளை தீவிரமாக விமர்சிப்பதிலிருந்து சில சமயங்களில் அவர் விலகியிருந்தார்.
தனது பேச்சின் தொடக்கத்தில், “வெவ்வேறு இனம், மதம், நிறம், கோட்பாடுகள் கொண்ட அனைவருக்காகவும் பாதுகாப்பான, வளம்மிக்க, சுதந்திரம் கொண்ட புதிய சகாப்தத்தை நாம் அனைவரும் இணைந்து தொடங்குவோம்,” எனத் தெரிவித்தார்.
“ஒட்டுமொத்த அமெரிக்காவுக்குமான அதிபராவதற்காக நான் போட்டியிடுகிறேன், பாதி அமெரிக்காவுக்காக அல்ல. ஏனெனில், பாதி அமெரிக்காவுக்கு வெற்றி பெறுவது வெற்றி அல்ல,” என அவர் தெரிவித்தார்.
எனினும், முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மீதும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் மிகப்பெரிய சங்கங்களுள் ஒன்றான யுனைடட் ஆட்டோ வொர்க்கர்ஸ் தலைமை மீதும், முன்பு திட்டமிடப்படாத வகையில் உடனடி விமர்சனங்களை முன்வைப்பதிலிருந்து டிரம்ப் விலகவில்லை. பைடன் மீதான அவருடைய விமர்சனங்களுள் ஒன்றாக, அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முன்னாள் அவைத்தலைவர் நான்சி பெலோசியை 'பித்துப்பிடித்தவர்' என கூறினார்.
தனக்கு எதிராக உள்ள வழக்குகள் குறித்து குறிப்பிட்ட அவர், “நம் நாட்டை அழிப்பதால் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.
“ஜனநாயகக் கட்சி நீதித்துறையை பயன்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்,” என டிரம்ப் வலியுறுத்தினார்.
டிரம்ப்பின் அரசியல் வாழ்க்கை முழுவதும், குடியேற்றம் தொடர்பான பிரச்னை முக்கிய பேசுபொருளாக இருந்துவந்துள்ளது.
“இத்தகைய படையெடுப்பு காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் கொல்லப்படுகின்றனர்,” என அவர் சட்ட விரோத குடியேற்றத்தைக் குறிப்பிட்டனர். “பல ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் டுவைட் டி அய்சன்ஹவ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததைவிட, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை (சட்ட விரோத குடியேறிகள் மீது) மேற்கொள்ளப்படும்,” என அவர் உறுதியளித்தார்.
1954-ஆம் ஆண்டில் மெக்சிகோவை சேர்ந்த பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வரலாற்றில் மிக நீண்ட மாநாட்டு பேச்சுகளுள் ஒன்றான இந்த உரையில், அதிகமாக குடியேற்றம் குறித்து பேசினார். “இந்த உலகுக்கு நாம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளோம், நாம் முட்டாள் என நினைத்து உலகம் நம்மை பார்த்து சிரிக்கின்றது,” என அவர் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












