உஷா வான்ஸ்: டிரம்பின் துணை அதிபர் வேட்பாளருக்கு வழிகாட்டியாக விளங்கும் இந்திய வம்சாவளி மனைவி

பட மூலாதாரம், Getty Images
தன்னைக் கடுமையாக விமர்சித்து வந்த ஒஹையோ செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார். டொனால்ட் டிரம்ப்.
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் 39 வயதான வான்ஸ், துணை அதிபர் வேட்பாளராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இவரது மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெயர் உஷா சில்லுக்குரி.
இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற பெற்றோரின் மகளான உஷா, கலிஃபோர்னியாவின் சான்டியாகோவின் புறநகரப் பகுதியில் வளர்ந்தவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு அரங்கில் ஜே.டி. வான்ஸ் நடந்து வந்தபோது அவரின் அரசியல் வளர்ச்சி குறித்து அங்கிருந்த ஏராளமானோர் புகழ்ந்து பேசினார்கள்.
ஆனால், ஒஹையோவின் செனட்டரும், குடியரசு கட்சி தேர்வு செய்யப்பட்ட இவரோ தன்னுடைய வளர்ச்சிக்கு தன்னுடைய மனைவி உஷா வான்ஸ் தான் காரணம் என்று கூறுகிறார். உஷாவின் உயர்ந்த தகுதிகளைக் கண்டு வாழ்வில் பணிவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார் ஜே.டி.வான்ஸ்.
டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு பற்றிய கட்டுரைகள்
38 வயதான உஷா, அரசியல் வெளிச்சத்தை விரும்பவில்லை என்றாலும் கூட, தன்னுடைய அரசியல் வாழ்வில் முக்கிய தாக்கத்தை உஷா ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறார் ஜே.டி.வான்ஸ்.
"நான் ஜே.டியை நம்புகிறேன். அவரை உண்மையாக நேசிக்கிறேன். எங்களின் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்," என்று கடந்த மாதம் நடைபெற்ற ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் குறிப்பிட்டார் உஷா.

பட மூலாதாரம், Getty Images
2013-ஆம் ஆண்டு யேல் சட்டப்பள்ளியில் நடைபெற்ற வெள்ளை அமெரிக்காவில் சமூக வீழ்ச்சி (social decline in white America) என்ற விவாத நிகழ்வின் போது இவ்விருவரும் சந்தித்துக் கொண்டனர் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் ரஸ்ட் பெல்ட் என்ற பகுதியில் தனது இளமைப் பருவம் எப்படி இருந்தது என புத்தகம் ஒன்றை எழுதினார் வான்ஸ்.
2016-ஆம் ஆண்டு ஹில்பில் எலேகி (Hillbilly Elegy) என்ற தலைப்பில் வெளியான அந்த புத்தகத்தில் யேல் பள்ளியில் நடைபெற்ற விவாதத்தின் தாக்கம் இருப்பதை காண முடியும். 2020-ஆம் ஆண்டு இந்த புத்தகத்தை தழுவி ரான் ஹோவர்ட் திரைப்படம் ஒன்றை உருவாக்கினார்.
பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் உஷாவை தன்னுடைய ஆத்ம தேடலின் வழிகாட்டியாக கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார் வான்ஸ்.
உஷாவின் லிங்க்ட்-இன் கணக்குபடி அவர் யேல் பல்கலைக்கழகத்தில் வரலாறு பிரிவில் பி.ஏ பட்டம் பெற்றிருக்கிறார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேட்ஸ் உதவித்தொகை பெற்ற மாணவரான இவர் தொடக்ககால நவீன வரலாற்றில் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கலிஃபோரினியாவின் சான்டியாகோவில் இந்திய வம்சாவளி தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் உஷா சிலுகுரி. 2014ம் ஆண்டு வான்ஸை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஈவன், விவேக் என இரண்டு மகன்களும் மிராபெல் என்ற மகளும் இருக்கின்றனர்.
ஜே.டி.வான்ஸ் டெமாக்ரேட் கட்சியினரின் கொள்கைகளை எப்போதும் காட்டமாக விமர்சனம் செய்வார். ஆனால் உஷாவோ, டெமாக்ரேட் கட்சியில் முன்னர் தன்னை பதிவு செய்திருந்தார். தற்போது அவர், "தீவிர முற்போக்குடன்" செயல்படுவதாக அறியப்படும் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கொலாம்பியாவின் மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ப்ரெட் கவனாக்கிடம் எழுத்தராக (clerk) பணியாற்றி இருக்கிறார் உஷா. பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜான் ராபர்ட்ஸ் என்பவரிடமும் எழுத்தராக பணியாற்றியிருக்கிறார். இவ்விரு நீதிபதிகளும் அமெரிக்க நீதித்துறையில் பழமைவாத பெரும்பான்மையின் பகுதியாக உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
2020-ஆம் ஆண்டு மேகைன் கெல்லி ஷோ நிகழ்ச்சியில் பேசிய ஜே.டி.வான்ஸ், "உஷாதான் நிச்சயமாக என்னை இயல்புக்கு அழைத்து வருகிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
"என்னைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக் கொண்டு, தலைக்கனத்துடன் செயல்படும் போதெல்லாம், என்னைவிட என் மனைவி அதிகமாக சாதித்து உள்ளார் என்று நினைத்துக் கொள்வேன்," என்று ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
உஷா எவ்வளவு புத்திசாலி என்பதை மக்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. சில மணி நேரங்களிலேயே ஆயிரம் பக்கங்களை கொண்ட புத்தகங்களை படித்துவிடுவார் என்றும் தன் மனைவி பற்றி பெருமையுடன் தெரிவிக்கிறார் ஜே.டி.
"என் இடப்புற தோளில் இருக்கும் பலமிக்க பெண்ணின் குரல் உஷாவுடையது" என்று உஷா வழி நடத்தும் விதம் குறித்து ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
துணை அதிபர் பதவிக்கு மிக கடுமையாக பரப்புரை செய்ய இருக்கின்ற நிலையில் ஜே.டி. வான்ஸ்க்கு முன்பு எப்போதையும் விட அதிகமாக உஷாவின் அறிவுரைகள் தேவைப்படக்கூடும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








