மனைவி, 2 மகள்களை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த நபர் - டிரம்ப் கூட்டத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மைக் வெண்ட்லிங்
- பதவி, பிபிசி செய்திகள்
கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தின் போது, பார்வையாளர்களில் ஒருவர் தனது குடும்பத்தைப் பாதுகாக்க முயன்றபோது இறந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
50 வயதான கோரே கம்பெரடோர், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டபோது, தனது குடும்ப உறுப்பினர்களைக் காக்க அவர்கள் மீது பாய்ந்தார். அப்போது அவர் மீது குண்டு பாய்ந்ததில் இறந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
‘ஹீரோவாக இறந்தார்’
"கோரே ஒரு ஹீரோவாக இறந்தார்," என்று பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பார்வையாளர் கூட்டத்தில் மேலும் இருவர் சுடப்பட்டனர். அவர்கள் 57 வயதான டேவிட் டச்சு, மற்றும் 74 வயதான ஜேம்ஸ் கோபன்ஹேவர் என்று பென்சில்வேனியா மாகாண போலீசார் தெரிவித்தனர். இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது
பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ, உயிரிழந்த கோரே கம்பெரடோரின் மனைவி மற்றும் இரண்டு மகள்களிடம் தான் பேசியதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Reuters
"கோரே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்குச் செல்வார்," என்று அவர் கூறினார். "கோரே தனது சமூகத்தை நேசித்தார். குறிப்பாக, அவர் தனது குடும்பத்தை நேசித்தார்,” என்றார் அவர்.
கோரே கம்பெரடோர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்றும், அவர் சனிக்கிழமை நடந்த பேரணியில் கலந்துகொள்வதில் உற்சாகமாக இருந்ததார் என்றும் கவர்னர் ஷாபிரோ கூறினார்.
“கோரே நம்மில் மிகச் சிறந்த ஒருவர். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்,” என்று கவர்னர் ஷாபிரோ கூறினார்.
"நேற்று இரவு நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசியல் கருத்து வேறுபாடுகளை வன்முறை மூலம் ஒருபோதும் தீர்க்க முடியாது," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
‘உதவும் குணம் படைத்தவர்’
பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள பட்லர் நகரில் டிரம்பின் பேரணி நடைபெற்றது. அந்த இடத்திலிருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ள சார்வர் என்ற பகுதியில் கம்பெரடோர் வசித்து வந்ததாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
தன்னார்வலராக தீயணைப்புப் பணியில் ஈடுபடுவதுடன், பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தில் திட்டப்பணி மற்றும் கருவி பொறியாளராகவும் பணிபுரிந்தார் என்று அவரது சமூக ஊடக சுயவிவரங்கள் தெரிவிக்கின்றன.
"அவர் ஒரு நல்ல மனிதர்," என்று அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் மாட் அகிலிஸ் என்பவர் பிட்ஸ்பர்க் ட்ரிப்யூன்-ரிவியூ என்ற பத்திரிகையிடம் கூறினார்.
"நாங்கள் அரசியல் கருத்துகளில் ஒத்துப்போகாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதையும் மீறி அவர் ஒரு நல்ல நண்பராகவும், சிறந்த அண்டை வீட்டுக்காரரகவும் இருந்தார்," என்றார் அகிலிஸ்.
"நான் மருத்துவமனையில் இருந்தபோது அவர் மருத்துவச் செலவுகளுக்காகப் பணத்தை நன்கொடையாக வழங்கினார். எங்கள் வீட்டு முற்றத்தில் நாங்கள் ஏற்பாடு செய்யும் சந்தைக்கு அவர் எப்போதும் வருவார். நான் அவரது வீட்டைக் கடந்து செல்லும் போது அவர் எப்போதும் ஹலோ சொல்வார்,” என்று அகிலிஸ் கூறினார்.

பட மூலாதாரம், Reuters
சுடப்பட்ட எட்டு குண்டுகள்
காயமடைந்த மற்ற இருவரது குடும்பங்களில் ஒருவரது குடும்பத்தினரிடம் பேசியதாகவும் கவர்னர் ஷாபிரோ கூறினார். ஆனால் அந்த உரையாடல் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
பேரணியில் சுடப்பட்ட ஆறு முதல் எட்டு துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று, முன்னாள் அதிபர் டிரம்பின் காதில் பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர், சம்பவம் நடந்த இடத்திலேயே டிரம்பைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரகசிய சேவை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












