ஜோ பைடன்: கோவிட் தொற்றுக்கு ஆளானதால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு வலுக்கும் குரல்கள்

ஜோ பைடன்: கோவிட் தொற்றுக்கு ஆளானதால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு வலுக்கும் குரல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேர்தலில் இருந்து விலக வேண்டும் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் பைடனை வலியுறுத்தி வருகின்றனர்
    • எழுதியவர், ஆன்னா ஃபாகுவே மற்றும் அரசு துறை செய்தியாளர் டாம் பேட்மேன்
    • பதவி, வாஷிங்டன் மற்றும் லாஸ் வேகஸில் இருந்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பரப்புரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பரப்புரையில் தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அவர் வேட்பாளராகத் தொடர முடியுமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

அமெரிக்க காங்கிரஸில் உள்ள முதல்நிலை தலைவர்களான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, செனட் பெரும்பான்மை தலைவர் சக் ஸூச்சமர், பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் பைடனை தனித்தனியாகச் சந்தித்து அவர் வேட்பாளராக நீடிப்பது குறித்து தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசி இந்த அதிபர் தேர்தலில் பைடன் டொனால்ட் டிரம்பை வீழ்த்த முடியாது என்று அவரிடமே பேசியதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் டிரம்புக்கு எதிரான விவாத நிகழ்வில் பைடன் பேசத் திணறியது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி ஏற்படக் காரணமாக அமைந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோவிட் தொற்றுக்கு ஆளான பைடன்

ஜோ பைடனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை அன்று அது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்திப்பிரிவு செயலாளர் கரீன் ஜான் பியர் பேசும்போது, பைடனுக்கு மிதமான அறிகுறிகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பைடன், டெலவாரில் இருக்கும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அங்கு தன்னுடைய கடமைகளை பைடன் முழுமையாக மேற்கொள்வார் என்று அறிவித்தார் கரீன். கோவிட் தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசியையும் ஏற்கெனவே போட்டுக் கொண்ட பைடனுக்கு இதற்கு முன்பு இருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர் கடந்த புதன்கிழமை காலை லாஸ் வேகஸில் நடைபெற்ற பரப்புரையில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அன்று பிற்பகல் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவே, லத்தீன் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் யுனிடோஸ்யூஎஸ் (UnidosUS) அமைப்பினருடன் பேசும் நிகழ்வு கைவிடப்பட்டது.

டிரம்ப் மீதான கொலை முயற்சிக்குப் பிறகு ஜோ பைடன் முழுவீச்சுடன் பரப்புரையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த சூழலில் அவருக்கு ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து ஸ்பானிய பூர்வீகத்தைக் கொண்ட ஹிஸ்பானிக் மக்களின் வாக்கு வங்கிகளில் சரிவைச் சந்தித்த அவர், அவர்களின் நம்பிக்கையைப் பெற அதிக நேரத்தை லாஸ் வேகஸில் செலவிட்டார்.

தொற்று உறுதி செய்யப்பட்டதும், மிகவும் மெதுவாக ஆனால் எச்சரிக்கையுடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிச் சென்றார். மாஸ்க் அணியாமல் விமானத்தில் ஏறியதும், "நன்றாக இருக்கிறேன்," என்று கூறினார்.

டிரம்புக்கு எதிராகக் கடந்த மாதம் நடைபெற்ற விவாத நேரலையில் மிகப் பதற்றமாக உரையாடியதைக் காட்டிலும், கோவிட் தொற்றால் நிவாடாவில் இருந்து திரும்பிச் சென்ற பிறகு, மீண்டும் அதிபராகும் அவரின் முயற்சியில் பெருத்த அடி விழுந்துள்ளது.

பைடனின் பரப்புரையானது குழப்பமான, அதே நேரத்தில் அனுமானிக்க முடியாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

'மீண்டும் போட்டியிடுவதைக் கைவிட வேண்டும்' - வலுக்கும் வேண்டுகோள்கள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, உணவகம் ஒன்றில் ஆதரவாளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அதிபர் ஜோ பைடன்

கடந்த சில வாரங்களாக பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் தனித்தனியாக பைடனை சந்தித்த ஸூச்சமரும், ஜெஃப்ரீஸூம் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் பைடன் போட்டியிடுவது காங்கிரஸின் ஏதேனும் ஓர் அவையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைக்கூட கேள்விக்குறி ஆக்கிவிடும் என்று கவலை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்திகள் வெளியான நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், "பைடன் இரண்டு தலைவர்களிடமும், கட்சி தேர்வு செய்யப்பட்டிருக்கும் வேட்பாளர் அவர் என்றும், வெற்றி பெறத் திட்டமிட்டு வருவதாகவும், இரு தலைவர்களுடன் சேர்ந்து உழைக்கும் குடும்பங்களுக்கு உதவும் 100 நாள் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இருப்பதாகவும் கூறியுள்ளதாக," தெரிவித்தார்.

ஜெஃப்ரீஸின் செய்தித் தொடர்பாளர், "ஜெஃப்ரீஸும் பைடனும் பேசியது தனிப்பட்ட உரையாடல் என்பதால் அது அப்படியே இருக்கட்டும்," என்று கூறினார். ஸூச்சமரின் அலுவலகமோ இந்தச் செய்திகளை வெற்று ஊகம் என்று அழைத்தது. அதே நேரத்தில் தன்னுடைய கட்சியினர் என்ன நினைக்கின்றனர் என்பதை பைடனிடம் ஸூச்சமர் நேரடியாகத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டது.

சி.என்.என். செய்தியின்படி, பெலோசியும் சமீபத்தில் பைடனுடன் பேசுகையில், அதிபர் வேட்பாளராக பைடன் தொடரும்போது அது ஜனநாயகக் கட்சியின் தோல்விக்கு வித்திடும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

பைடன் இதை எதிர்க்க, பெலோசி, அதிபரின் நீண்ட நாள் ஆலோசகரிடம் இருந்து இதுதொடர்பான தரவுகளைக் கேட்டதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய செய்தியில் இது தொடர்பான தகவல்களை நான்கு நபர்களிடம் அலைபேசி மூலம் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால் பெலோசி பைடனுடன் எப்போது பேசினார் என்பது தெரியவில்லை. பெலோசியின் அலுவலகம் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு பெலோசி அதிபருடன் பேசவில்லை என்று பதில் கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலரும் பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று வெளிப்படையாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கலிஃபோர்னியாவை சேர்ந்த கட்சித் தலைவர் ஆடம் ஸ்கிஃப், “மற்றவர்களுக்கு வாய்ப்பை வழங்குங்கள் பைடன்” என்று கூறியிருக்கிறார்.

"பைடன் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான அதிபர். அவர் இந்த வாய்ப்பை மற்ற தலைவருக்கு வழங்கித் தன்னுடைய தலைமைப் பண்பின் மரபை நிலை நிறுத்த முடியும்," என்று கூறினார் ஆடம்.

பி.இ.டி. நேர்காணலில் பேசிய பைடனோ, பிளவுபட்டிருக்கும் இந்த நாட்டில் இந்த வாய்ப்பை மற்றவருக்கு வழங்க முடியும் என்று தாம் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஏதேனும் ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதாக அவரின் மருத்துவர்கள் கூறினால் போட்டியில் இருந்து விலகுவது பற்றி யோசிக்கலாம் என்றும் கூறினார்.

பரப்புரையைக் கைவிட்டு வீடு திரும்பிய பைடன்

ஜோ பைடன்: கோவிட் தொற்றுக்கு ஆளானதால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு வலுக்கும் குரல்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடும் ஜோ பைடன்

பைடனுக்கு கோவிட் தொற்று இருக்கும் தகவல் உறுதியாவதற்கு முன்பு, அவர் தனது பரப்புரை நடக்கவிருந்த பகுதியில் இருந்த ஒரு மெக்சிகன் உணவகத்தில் இருந்ததாக லாஸ் வேகஸ் செய்தியாளர்கள் கூறினர். கோவிட் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பரப்புரையைக் கைவிட்டு அவர் அங்கிருந்து விரைவாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த உணவகத்தின் சுவர்களில் மெக்சிகன் ஓவியங்களும் கித்தார் இசைக்கருவிகளும் மாட்டப்பட்டிருந்தன. பல வண்ண பேனர்களும் சுவர்களில் ஜொலித்துக் கொண்டிருந்தன. ஒரு சுவரில் மட்டும் ஜோ பைடன் - கமலா ஹாரீஸின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அங்கே மின்விசிறி மெதுவாகச் சுழல, லத்தினோ பாப் இசை ஸ்பீக்கர்களில் இசைக்கப்பட்ட வண்ணம் இருந்தது. பைடன் சமையலறை வழியாக உணவகத்தின் முக்கியப் பகுதிக்கு வந்தார்.

அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த நபர்கள், அவரின் வருகை குறித்து ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். அவர்களில் சிலரிடம் பைடன் கை குலுக்கினார். ஒருவருக்கு முத்தம் கொடுத்தார். மற்றவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

ஆனால், பார்ப்பதற்கு அவர் சிரமப்படுவதைப் போல் இருந்தார். அதற்கு ஒரு நாள் முன்பு தேசிய சிவில் உரிமைகள் குழுக்களுடன் உற்சாகமாகப் பேசிய பைடனோடு ஒப்பிடுகையில் புதன்கிழமையன்று அவர் மிகவும் மெதுவாகச் செயல்பட்டார்.

பைடனின் மருத்துவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பைடனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பாக்ஸ்லோவிடின் முதல் டோஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

பைடனின் மருத்துவர் கெவின் ஓ'கான்னர் பைடனுக்கு மேல் சுவாசத் தொற்று அறிகுறிகளும், சளி, இருமலும் இருப்பதாக புதன்கிழமை தெரிவித்தார். பைடனுக்கு பாக்ஸ்லோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

புதன் அன்று நடைபெற்ற பரப்புரையின் முதல் நிகழ்வில் பைடன் நன்றாக இருந்தார். அதன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர் ஓ'கான்னர் குறிப்பிட்டார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பைடன், அமெரிக்க மக்களுக்கான பணியை தொற்றிலும் இருந்து மீளும் வேளையிலும்கூடச் செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மற்றொரு பதிவில் "ஈலோன் மஸ்க் மற்றும் அவரது பணக்கார நண்பர்கள் இந்தத் தேர்தலை விலைக்கு வாங்க முயல்கிறார்கள். இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் இங்கே கூறவும்" என்று பதிவிட்டார். எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ள டொனேஷன் போர்ட்டலை குறிப்பிட்டிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)