சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கும் சிறைச்சாலைகள் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கும் சிறைச்சாலைகள் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்
    • பதவி, பிபிசி மராத்தி

"சிறை கையேட்டில், விதி 158 மனிதர்களால் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளைக் குறிப்பிடுகிறது. இதில் துப்புரவுப் பணிகளைச் செய்யும் சாதியைக் குறிப்பிடுவது ஏன்? இதில் ‘துப்புரவுப் பிரிவு (Scavenger class)’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன?"

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமீபத்தில் உத்தர பிரதேச அரசு வழக்கறிஞர்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

சிறையில் உள்ள கைதிகளிடையே சாதிப் பாகுபாடு பார்க்கப்படுவதில்லை என உத்தர பிரதேச அரசு வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்தனர்.

இந்தக் கூற்றைக் கேட்ட டி.ஒய்.சந்திரசூட் உத்தர பிரதேசத்தின் சிறை விதிகளைக் குறிப்பிடும் சிறைச்சாலை கையேட்டின் சில விதிகளைப் படித்துக் காட்டி அவர்களைக் கண்டித்தார். சிறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய மாதிரி சிறை கையேட்டில் ‘துப்புரவுப் பிரிவு’ போன்ற சாதியைக் குறிப்பிடும் வார்த்தைகள் இருந்ததை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சிறையில் சாதிப் பாகுபாடு மற்றும் சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வழங்கப்படும் பணி குறித்து உத்தர பிரதேசம் மட்டுமின்றி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

ஆனால் நீதிமன்றம் விளக்கம் கேட்டு ஆறு மாதங்கள் ஆகியும், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மட்டுமே நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பத்திரிகையாளர் சுகன்யா சாந்தாவின் முயற்சியால் இந்த முழு வழக்கும் உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

சுகன்யா சாந்தா மனித உரிமைகள் சட்டம் மற்றும் சமூக நீதி தொடர்பான பிரச்னைகளைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்.

சிறையில் நிலவும் சாதிப் பாகுபாடு குறித்துத் தனது பதிவு மூலம் அவர் கேள்வி எழுப்பினார். அவர் 2020இல் இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்து, இந்தியாவின் 17 மாநிலங்களில் உள்ள சிறைகளில் சாதி அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுவது குறித்து அறிக்கை ஒன்றைத் தயாரித்தார்.

மேலும் கைதிகளுக்கு அவர்களின் சாதியின் அடிப்படையில் வேலை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை அதில் விளக்க முயன்றார். அவரது விசாரணை அறிக்கை 'தி வயர்' என்ற செய்தி இணையதளத்தில் வெளியானது.

சிறைகளில் சாதி அடிப்படையில் பணி ஒதுக்கீடு

சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கும் சிறைச்சாலைகள் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தானின் அல்வார் சிறையில் இருக்கும் கைதி அஜய் குமாரின் சிரமங்களைப் பகிர்ந்துகொண்ட சுகன்யா சாந்தா தனது அறிக்கையில், சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு எப்படி நடக்கிறது என்று கூறியிருந்தார்.

சாதியின் அடிப்படையில் வேலை எவ்வாறு பிரிக்கப்படுகிறது? முடி திருத்தும் தொழிலாளி இருந்தால் சிறையில் முடி, தாடி வெட்டுவது, பிராமணக் கைதிகள் உணவு சமைப்பது மற்றும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த கைதிகள் சுத்தம் செய்யும் பணிகளைச் செய்வது எனப் பணிகள் ஒதுக்கப்படுவதாக அவர் அறிக்கையில் கூறியிருந்தார்.

ராஜஸ்தான் மட்டுமின்றி, வேறு சில மாநிலங்களின் சிறை விதிகளையும் ஆய்வு செய்து, அங்கு சாதி அடிப்படையிலான விதிகள் இருப்பதைப் பார்த்தார்.

சுகன்யாவின் அறிக்கை வெளியானவுடன், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, சிறை விதிகளை மாற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி ராஜஸ்தான் அரசு சிறை விதிகளை மாற்றியது.

ராஜஸ்தானில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, சட்டப்பூர்வ வழியை ஏற்றுக்கொண்டால் மற்ற மாநிலங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று சுகன்யா கருதினார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினார்.

சுகன்யா சாந்தா 2023 டிசம்பரில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனு தாக்கல் செய்வதற்கு முன், 'சிறைகளில் வேறு ஏதாவது பாகுபாடு நிலவுகிறதா' என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கைதிகள் பாரபட்சமாக நடத்தப்படுவதைக் கண்டறிந்தார்.

சில மாநிலங்களின் சிறை விதிகளில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கைதிகள், வாடிக்கைக் குற்றவாளிகள் (habitual offenders) என்று அழைக்கப்படுகின்றனர்.

சுகன்யாவின் வழக்கறிஞர் திஷா வடேகர் பிபிசி மராத்தியிடம் கூறுகையில், சிறையில் சாதி அடிப்படையில் கைதிகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதாவது "ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி அறை, சாதி வாரியாக வேலை பகிர்வு மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பாகுபாடு ஆகிய மூன்று முக்கியப் பிரச்னைகள்" உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

'சிறைகளில் சாதிப் பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும்'

இந்த வழக்கின் முதல் விசாரணை 2024 ஜனவரியில் நடைபெற்றது.

அப்போது உச்சநீதிமன்றம், சிறையில் சாதி பாகுபாடு காட்டப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, இதுவரை உத்தர பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகள் மட்டுமே தங்கள் பதில்களைத் தாக்கல் செய்துள்ளன.

மாநில சிறை விதிகளை மாற்றியமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநில சிறைகளில் சாதிப் பாகுபாடு இருக்கக்கூடாது என்று வலியுறுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு

சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கும் சிறைச்சாலைகள் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அதில், “சில மாநில சிறைகளில் கைதிகளை சாதி, மத அடிப்படையில் பிரித்து, அதே அடிப்படையில் பணி ஒதுக்குவது அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இது இந்திய அரசியலமைப்பின்படி சட்டவிரோதமானது."

உள்துறை அமைச்சகம் 2016இல் மாதிரி சிறை கையேட்டைத் தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நேரத்தில் விநியோகித்துள்ளது.

"அந்தச் சிறை கையேட்டில் கைதிகளை சாதி, மத அடிப்படையில் பிரிக்கக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, எந்த சாதி அல்லது மதத்தைச் சேர்ந்த கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநில சிறை விதிகளில் எந்தவிதமான பாரபட்சமான விதிமுறைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இது மிகவும் வருத்தமளிக்கிறது' - உச்சநீதிமன்றம்

சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கும் சிறைச்சாலைகள் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கின் கடைசி விசாரணை ஜூலை 8ஆம் தேதி நடைபெற்றது. சுகன்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முரளிதர், சில மாநிலங்கள் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றார்.

எனவே, பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும வாதிட்டார். உத்தர பிரதேச சிறை கையேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த சில விதிகளையும் அவர் நீதிமன்றத்தில் வாசித்தார்.

இதைத் தொடர்ந்து எங்கள் சிறைகளில் சாதிப் பாகுபாடு இல்லை என்று உத்தர பிரதேச அரசு வாதிட்டது. ஆனால், தலைமை நீதிபதி சந்திரசூட் சிறை விதிகளையும் படித்துக் காண்பித்து, சாதிரீதியான வார்த்தைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, உத்தர பிரதேச அரசைக் கண்டித்துள்ளார்.

அதன் பிறகு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களையும் சிறை விதிகளைப் படிக்குமாறு கேட்டுக்கொண்டது. அங்கும் துப்புரவுப் பணியாளராக யார் இருக்க வேண்டும் என்பதை சிறை விதிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் படித்துக் காட்டிய உச்சநீதிமன்ற அமர்வு, இந்தச் சிறை விதிகள் மிகவும் வேதனை தருவதாக கூறியுள்ளது.

இந்திய சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வர ஒரு `நோடல்’ அதிகாரியை நியமிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்குத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாற்றத்திற்கான பயணம்

சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கும் சிறைச்சாலைகள் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்த விஷயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்படும் என்று சுகன்யா சாந்தா கருதுகிறார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், "சிறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு எதிராகப் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு பற்றிப் பேச யாரும் தயாராக இல்லை" என்றார்.

"இந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அம்பலப்படுத்த நான் விரிவான அறிக்கையைத் தயார் செய்தேன். ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்தச் செய்தியை அறிந்த பிறகு, இந்த வழக்கின் சட்ட விதிகள் மாறக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது" என்றார்.

“வழக்கறிஞர்களிடம் பேசி, ஆராய்ச்சி செய்ததில், கைதிகளுக்கு உள்ளும் சாதிரீதியாகப் பாகுபாடு காட்டப்படுவதை அறிந்தேன். அங்கு மனித உரிமைகளும் மீறப்படுகின்றன. அதனால்தான் உச்சநீதிமன்றக் கதவைத் தட்டினேன். இப்போது உச்சநீதிமன்றம் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் களைய 'ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்படுவார்' என்று உத்தரவிட்டுள்ளது."

இந்த வழக்கு விசாரணையில் சாந்தா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

"எனது முயற்சி சிறை அமைப்பை மாற்றும், சிறை விதிகள் மாற்றப்படும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் நம்பிக்கையுடன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)