கேரளா: லிஃப்டிற்குள் சிக்கிய நபர் - இரவு, பகல் தெரியாத கும்மிருட்டில் 42 மணி நேரத்தை கழித்தது எப்படி?

பட மூலாதாரம், MUZAFAR AV
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
நீங்கள் லிஃப்டில் சிக்கிக் கொள்வதாக கற்பனை செய்து பாருங்கள். அதுவும் கொஞ்ச நேரமல்ல, சுமார் 42 மணி நேரம்...
இந்த கற்பனையே உங்களுக்கு அச்சத்தை தரும். ஆனால், கேரளாவைச் சேர்ந்த 59 வயதான ரவீந்திரன் நாயர் அதனை அனுபவித்துள்ளார்.
ரவீந்திரன் நாயர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் முதல் திங்கட்கிழமை காலை வரையிலும் லிஃப்டில் சிக்கிக் கொண்டிருந்திருக்கிறார். கேரளாவில் உள்ளூர் என்ற பகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளராக அவர் இருக்கிறார்.
லிஃப்டிற்குள் சிக்கிய பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷியிடம் ரவீந்திரன் பகிர்ந்து கொண்டார்.
இனி அவரது வார்த்தைகளில்...

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மருத்துவமனைக்குச் சென்றது ஏன்?
4 மாதங்களுக்கு முன்பு குளியலறையில் தவறி விழுந்ததால் எனக்கு முதுகில் பிரச்னை ஏற்பட்டது. அதன் பிறகு நானும் என் மனைவி ஸ்ரீலேகாவும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2-வது தளத்தில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அன்றாட நிகழ்வாகி விட்டது.
கடந்த சனிக்கிழமை நாங்கள் சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்தோம். என் மனைவி 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. முந்தைய வாரம் கொல்லம் சென்று வந்ததால் என் முதுகில் அதிக வலி இருந்ததால், நான் எக்ஸ்ரே எடுக்க வேண்டியிருந்தது.
எக்ஸ்ரேவை பார்த்த பிறகு, ரத்தப் பரிசோதனை அறிக்கையை காட்டுமாறு கேட்டார். அப்போதுதான், என் மனைவி அந்த அறிக்கையை வீட்டிலேயே வைத்து விட்டதை உணர்ந்தார். நான் வீட்டிற்குச் சென்று அதனை எடுத்து வந்தேன். அதனால், எனக்கு வேலைக்குச் செல்ல தாமதமாகிக் கொண்டேயிருந்தது. அலுவலகத்திற்கு ஒரு மணிக்கு செல்ல வேண்டியிருந்த நிலையில், ஏற்கனவே 12 மணியாகிவிட்டிருந்தது.

பட மூலாதாரம், MUZAFAR AV
லிஃப்டிற்குள் சிக்கியது எப்படி?
என் மனைவி அதே மருத்துவமனையில் பணிபுரிகிறார். ஆகவே, ஊழியர்கள் பயன்படுத்தும் லிஃப்டை நான் தேர்வு செய்தேன்.
11-ம் எண் கொண்ட லிஃப்டுக்குள் சரியாக 12.05 மணிக்கு நுழைந்த போதுதான், அதில் லிஃப்ட் பணியாளர் யாரும் இல்லை என்பதை கண்டேன். ஆனால், உள்ளே அனைத்தும் இயல்பாகவே இருந்தன. வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை. அதனால், நான் இரண்டாவது தளத்திற்கு செல்ல வேண்டி அதற்கான பொத்தானை அழுத்தினேன். அதன் பிறகு எதுவும் சரியாக இல்லை.
இரண்டாவது தளத்திற்கு அருகில் சென்ற லிஃப்ட் பிறகு சற்று கீழே இறங்கி சிறிய அதிர்வுடன் இரு தளங்களுக்கு நடுவே நின்றுவிட்டது.
உடனே, லிஃப்டுக்குள் எழுதப்பட்டிருந்த அவசர உதவி எண்ணுக்கு அழைத்தேன். அலாரம் ஒலித்தாலும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.
உதவி கேட்டு என் மனைவி உள்பட பலரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால், லிஃப்டுக்குள் செல்போன் நெட்வொர்க் கிடைப்பதில் சிக்கல் இருந்தது.
அதன் பிறகு எனக்குள் பதற்றம் அதிகரித்தது. லிஃப்டை உதைத்ததுடன் சத்தம் போடவும் தொடங்கினேன். அப்போது, என் செல்போன் கீழே விழுந்ததால் அதன் பிறகு இயங்கவில்லை.

பட மூலாதாரம், MUZAFAR AV
நான் தொடர்ந்து சத்தம் போட்டதுடன், லிஃப்ட் கதவை திறக்கவும் முயற்சித்தேன்.
லிஃப்டிற்குள் விளக்கு ஏதும் எரியவில்லை. ஆனால், சில துளைகள் இருந்ததால் என்னால் சுவாசிக்க முடிந்தது.
பீதியில், லிஃப்டுக்குள்ளேயே அங்கும் இங்கும் நான் நடக்க தொடங்கினேன். அலாரம் பொத்தானை மீண்டும் மீண்டும் அழுத்தினேன். யாராவது ஒருவர் அதனைக் கேட்டு உதவிக்கு வருவார்கள் என்று நம்பினேன்.
அது பகலா அல்லது இரவா என்பதை என்னால் உணர முடியவில்லை.
நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று எண்ணினேன். என் மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பம் குறித்து கவலைப்படத் தொடங்கினேன்.
என்னுடைய மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களை நினைத்துப் பார்த்தேன்.
பின்னர் என் மனதை தேற்றிக் கொண்டு, இந்த பிரச்னையில் இருந்து வெளியே வரும் வழி குறித்து சிந்திக்கத் தொடங்கினேன்.
அப்போது என் பாக்கெட்டில் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள் ஒன்றிரண்டு மட்டுமே இருந்தன. ஆனால், அங்கே தண்ணீர் இல்லை என்பதாலும், வாய் முற்றிலுமாக வறண்டு போனதாலும் என்னால் அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள முடியவில்லை.
அதன் பிறகு, யாராவது ஒருவர் வந்து லிஃப்டை சரி செய்வார் என்பதை உணர்ந்தேன்.
"ஆனால் சுமார் 42 மணி நேரத்திற்குப் பிறகு திங்கட்கிழமை காலை 6 மணியளவில்தான் அது நடந்தது. லிஃப்ட் ஆபரேட்டர் கதவைத் திறந்து என்னை குதிக்கச் சொன்னார். மிகுந்த களைப்பில் இருந்த நான் கீழே படுத்திருந்தேன் " என்று ரவீந்திரன் கூறினார்.

பட மூலாதாரம், RAVINDRA'S FAMILY
ரவீந்திரன் நாயர் குடும்பத்தினர் புகார்
பிபிசியிடம் பேசிய ரவீந்திரன் நாயரின் மனைவி ஸ்ரீலேகா, "எனக்குத் தெரியாத எண்ணில் இருந்து கால் வந்தது. மறுமுனையில் ரவீந்திரன் இருந்தார். லிஃப்டிற்குள் சிக்கியிருந்ததாகவும், உடனே வந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும் அவர் கூறினார்" என்றார்.
ஆனால், அந்த நேரத்தில், ஸ்ரீலேகாவும், அவரது இரு மகன்களும் ரவீந்திரன் நாயரை காணவில்லை என்று புகார் அளித்துவிட்டிருந்தனர். ரவீந்திரன் நாயரின் செல்போனை ஞாயிற்றுக் கிழமை காலை முதல் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதே அதற்குக் காரணம்.
அவரது மகன் ஹரிசங்கர் பேசுகையில்,"மருத்துவமனையில் இருந்தே நேரடியாக அவர் பல முறை வேலைக்குச் சென்றுள்ளார். ஆகவே ஞாயிற்றுக்கிழமை காலை வரை நாங்கள் காத்திருந்தோம். அவரது செல்போன் உடைந்துவிட்டதால் ஜிபிஎஸ் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் காவல்துறையின் முயற்சியும் பலன் தரவில்லை" என்று கூறினார்.
லிஃப்டில் இருந்து மீட்கப்பட்ட பிறகு ரவீந்திரன் கோபமாக இருந்தாரா? அவர் எப்படி இருந்தார்? என்ற கேள்விக்குப் பதிலளித்த ஸ்ரீலேகா, "அவர் அமைதியான சுபாவம் கொண்டவர். ஆனால், இந்த சம்பவம் குறித்து பேசும் போது சில நேரம் அவர் மிகவும் கோபப்படுகிறார். அவரது இடத்தில் இதய நோயாளியோ அல்லது கர்ப்பிணியோ இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதையே அவர் திரும்பத்திரும்ப சொல்கிறார்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
காரணமானவர்கள் மீது நடவடிக்கை - கேரள அரசு உறுதி
திங்களன்று, ரவீந்திரன் நாயர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கே சென்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நலம் விசாரித்தார்.
இந்த நிகழ்வு குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்குக் காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தினரும், கேரள சுகாதாரத்துறை அமைச்சரும் தன்னிடம் மன்னிப்பு கோரியதாக ஸ்ரீலேகா தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கேரள சுகாதாரத் துறை, லிஃப்ட் தொழில்நுட்பப் பணியாளர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












