புதுவை அரசியல்: காங்கிரஸ் கூட்டணியில் திமுக தலைமைக்கு வர முயல்கிறதா? எதிர்காலம் எப்படி இருக்கும்?

mk stalin narayanasamy

பட மூலாதாரம், MK stalin / V. Narayanasamy facebook

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரியில் பலமுறை ஆளும் கட்சியாகவும், காங்கிரசுக்கு பிரதான போட்டியாளராகவும் இருந்துவந்த திமுக சிறிது சிறிதாக புதுச்சேரியின் அதிகாரப் போட்டிக்கான உரையாடலில் இருந்து காணாமல் போயிருந்தது. புதுவை அரசியல் பரபரப்பான புதிய திசையில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் திமுக சோம்பல் முறித்துக்கொள்ளுமா? அதன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? 

தமிழ்நாட்டில் அதிகாரத்தில் பங்கு கோராத காங்கிரசுக்கு, புதுவையில் அதிகாரத்தை விட்டுக்கொடுத்து ஈடு செய்துவந்த திமுக, அதே அணுகுமுறையை நீண்ட காலம் கடைபிடித்த நிலையில் அந்தக் கட்சி யூனியன் பிரதேசத்தில் தொய்வை சந்திக்கத் தொடங்கியது.

ஆனால், காங்கிரசுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டு இரண்டு போட்டி முகாம்கள் உருவானது, புதுவையில் தங்கள் இருப்பைக் காட்டுவதற்கு பாஜக முனைப்பு காட்டியது என்று அரசியல் வேறுவிதமாக நகரத் தொடங்கிய நிலையில், யூனியன் பிரதேசத்தில் பல அரசியல் சக்திகள் அதிகாரத்தை நோக்கி செயல்படத் தொடங்கின.

இந்த சந்தடியில், திமுகவின் எதிர்காலம் குறித்த கவலை அந்தக் கட்சியின் தொண்டர்களிடம் தலைதூக்கியது.

இந்நிலையில்தான் ஒரு திருமண விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய ஒரு பேச்சு மந்தகதியில் போய்க் கொண்டிருந்த புதுவை அரசியலின் இரண்டு முகாம்களிலும் இரண்டு விதமான சலசலப்புகளை உண்டாக்கியது. 

ஒருபுறம், முதல்வர் ரங்கசாமி பொம்மையாக செயல்படுகிறார், ஆளுநரே அதிகாரம் செலுத்துகிறார் என்று கூறியதன் மூலம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் சிறுமைப்படுவது குறித்துப் பேசியாகவேண்டிய நெருக்கடி முதல்வர் ரங்கசாமிக்கு ஏற்பட்டது.

புதுவைக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவே இல்லை, அதிகாரிகள் மதிப்பதில்லை என்று ரங்கசாமி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இன்னொரு புறம் புதுவையில் திமுக ஆட்சி வரும் என்பதாக மு.க.ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டது, எதிர்க்கட்சி முகாமான திமுக – காங்கிரஸ் முகாமுக்குள்ளும் கூட்டணியின் தலைமை இனி யார் என்ற கேள்விக்கான விதையைத் தூவியது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 1969, 1980, 1990, மற்றும் 1996 என நான்கு முறை திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் – திமுக கூட்டணி 30 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் திமுக பெற்ற இடங்கள் 6, காங்கிரஸ் பெற்ற இடங்கள் வெறும் 2 மட்டுமே. அதிலும் குறிப்பாக, தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது கடும் போட்டிக்குப் பிறகு அதிக இடங்களைப் பெற்றுப் போட்டியிட்டது காங்கிரஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு 6 இடங்கள் பெற்ற திமுக பிரதான எதிர்க்கட்சியாக உருவானது. அடுத்த ஓராண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கூட்டணிக்குத் தலைமை காங்கிரசா, திமுகவா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

இந்த சூழலில்தான் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் திமுக தலைமையில் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும் என்ற முனைப்புனுடன் பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக வளர்ச்சியும் வீழ்ச்சியும்

புதுச்சேரியின் சட்டமன்ற வரலாறு 1963ல் தொடங்கியது. அப்போது இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இருந்தனர். அப்போது இந்த இரண்டு கட்சிகளுமே முதன்மையான அரசியல் கட்சிகளாக இருந்தன.

ஆனால் 1967ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திமுக புதுச்சேரியிலும் புதுவேகத்தில் வளர்ந்தது. 1969ல் ஆட்சியையும் கைப்பற்றியது. அதன் பிறகு திமுக மீண்டும் 1980 மற்றும் 1990ல் வெற்றிபெற்றது. 

1993ஆம் ஆண்டு திமுக பிளவுபட்டு மதிமுக உதயமானது. அந்த சமயத்தில் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மாநில பொறுப்பாளராகவும் சட்டமன்ற திமுக குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அப்போது கட்சியின் யூனியன் பிரதேச அமைப்பாளராக முன்னாள் முதல்வர் டி.ராமசந்திரன் இருந்தார். ஆனால், கட்சிக்குள் ராமச்சந்திரன் செல்வாக்கு சரிந்து 1994ல் அவர் அதிமுக சென்றார். முதலில் மதிமுக பிளவு, பிறகு ராமச்சந்திரன் மூலம் இன்னொரு பிளவு என்று அடுத்தடுத்து புதுவை பிரதேச திமுக இரண்டு பிளவுகளை சந்தித்தது.

அப்போது ஜானகிராமன் திமுகவின் யூனியன் பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் தொகுதி வாரியாக கட்சி வளர்ச்சிப் பணியை மேற்கொண்டார். 1996ல் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று, திமுக தலைமையில் ஆட்சி நடைபெற்றது. அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக சரிவுக்குக் காரணம் என்ன ?

ராமலிங்கம்
படக்குறிப்பு, ஜெவிஎஸ்.ஆர்.ராமலிங்கம்

புதுச்சேரியில் திமுக எதனால் சரியத் தொடங்கியது என்பது குறித்து திமுகவின் முன்னாள் இளைஞரணி செயலாளர் ஜெவிஎஸ்.ஆர்.ராமலிங்கம் பிபிசி தமிழிடம் கூறுகையில், "புதுச்சேரியில் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ் - திமுக ஆகிய இரண்டும் தங்கள் தலைமைகளின் கட்டளைப்படி, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தன. பிரதான போட்டியாளர்களான இரண்டு கட்சிகளுமே கூட்டாளிகளாக மாறின. தமிழ்நாட்டில் திமுக தலைமை வகித்தது. புதுவையில் காங்கிரஸ் தலைமை தாங்க, திமுக அடுத்த நிலைக்கு சென்றது. அப்போதுதான் திமுகவின் வீழ்ச்சி தொடங்கியது.

பின்னர், 2006 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி உறுதியானதால், திமுக தொண்டர்கள் சோர்வடையத் தொடங்கினர். தொடர்ச்சியாக 2006, 2011, 2016 என அடுத்தடுத்த தேர்தல்களிலும் கூட்டணியில் திமுக இரண்டாம் நிலைக் கூட்டாளியானது. இதனால், திமுகவுக்கு புதியவர்களை ஈர்க்க முடியாமல் போனது. இதனால் திமுக தொண்டர்கள் மேலும் சோர்வடைய ஆரம்பித்தனர். இதனால்தான் திமுக வளர்ச்சி குறையத் தொடங்கியது," என்றார் அவர். 

தொடர்ந்து பேசிய அவர், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி திமுக-வின் வடக்கு, தெற்கு, காரைக்கால் மாவட்ட அமைப்பாளர்கள் சரியாக கூட்டணி பேசியிருந்தால் 12 இடங்களைக் கைப்பற்றி இருக்கலாம். அது தவறியதால் 6 இடங்கள்தான் கிடைத்தது. ஏறக்குறைய 12 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் சூழல் இருந்தும் சரியான முறையில் இடம் மற்றும் வேட்பாளர் தேர்வு செய்யாததால், வெற்றி என்பது 6 தொகுதிகளாகச் சுருங்கி விட்டது. ஒற்றுமை இல்லாததால் தன்னுடைய வளர்ச்சியை திமுக தானே குறைந்துகொண்டது," என்கிறார் ராமலிங்கம்.

திமுக மீண்டு வர முடியுமா ?

"திமுக மீண்டும் வளர்ச்சி பெறவேண்டுமானால் பெரும்பான்மை சாதிகளுக்கு கட்சியினுடைய தலைமை பதவிகளை அளிக்க திமுக தலைமை முன்வரவேண்டும். புதுச்சேரியைப் பொறுத்தவரை வன்னியர்கள், மீனவர்கள், தலித்கள் என மூன்று பெரும் சாதிகள் உள்ளன. இந்த சமூகங்களை சேர்ந்த மக்களுக்கு எந்தவிதமான வாய்ப்புகளும் தொடர்ந்து அளிக்கப்படுவதில்லை.

தற்போது பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் வளர்ச்சி என்பது அவர்கள் பெரும்பான்மை சமூகங்களுக்கு மதிப்பு அளித்ததால் ஏற்பட்டது.

 திமுகவில் அதுபோன்ற சூழ்நிலை ஏற்படாதவரையில், கட்சியின் வளர்ச்சி கேள்விக் குறியாகத்தான் இருக்கும். திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது வரை சிறப்பான ஒரு கூட்டணியாகவே உள்ளது. ஆனால் புரிதல் இல்லாமல், கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டி நிலவுவதால், இரண்டு கட்சிகளின் தலைமையும் இந்தப் பிரச்னையைப் பேசி சீர் செய்யவேண்டும்," என்று கூறுகிறார் திமுக மூத்த உறுப்பினரான ராமலிங்கம். 

திமுக
படக்குறிப்பு, திமுக எம்எல்ஏக்கள்

கூட்டணிக்கு யார் தலைமை ?

"காங்கிரஸ் 2 எம்.எல்.ஏ.க்களும், திமுக 6 எம்.எல்.ஏ.க்களும் பெற்றிருப்பதாக பிரித்துச் சொல்ல முடியாது. இந்த 8 எம்.எல்.ஏ.க்களுமே கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள்தான். இவர்கள் தனித்தனியே போட்டியிட்டு வெல்லவில்லை. எனவே, சீட் யாருக்கு என்பதை தலைமை முடிவு செய்யும்," என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்த்த முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் கூறுகிறார்.

"புதுச்சேரியில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் வேலை செய்து வருகின்றனர். அதற்கேற்ப தொகுதிவாரியாக ஆட்களை நியமிக்கும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு வருத்தத்தை அளித்துள்ளது. நமது இடத்தை திமுக பிடித்து விடுமோ என்ற அச்சம் காங்கிரசுக்கு உள்ளது. இதனாலேயே காங்கிரஸ் கட்சியினர் எங்கள் தலைமையிலேயே கூட்டணியும் ஆட்சியும் இருக்கும் என்று கூறி வருகின்றனர். இரண்டு கட்சிகளிலுமே அந்த கட்சியின் மத்திய தலைமையே முடிவுகளை எடுக்கின்றன என்று தெரிகிறது. இருவரும் பிரிந்தால் அவர்கள் இருவருக்குமே நல்லதில்லை. வரும் தேர்தலில் இருவரும் சரிசமமாக தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி செய்யலாம் என்ற முடிவை எடுப்பார்கள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக பிரிந்து செயல்பட்டால், பாஜக ஆட்சிக்கு அவர்களே வழி வகுப்பதாக இருக்கும்," என்று கூறுகிறார் அரசியல் ஆர்வலர் அருள்தாசன்.

காணொளிக் குறிப்பு, விவசாய நிலங்களில் தொழிற்பேட்டை வருகிறதா? கோவையில் போராட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: