புதுச்சேரியில் யார் ஆட்சியை நடத்துகிறார்கள்? முதல்வர் ரங்கசாமி பொம்மையாக இருக்கிறாரா?

ரங்கசாமி

பட மூலாதாரம், Twitter @LGov_Puducherry

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பொம்மை முதல்வராக செயல்படுவதாகவும், துணை நிலை ஆளுநர் ஆட்டிப் படைக்கும் வகையில் ஆட்சி நடப்பதாகவும் சில நாள்கள் முன்பு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். அதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசையும் பதில் கூறியிருந்தார். அதன் பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிய ரங்கசாமியும், எல்லாவற்றையும் மத்திய அரசிடம் கேட்கும் நிலை இருப்பதாகப் பேசியிருந்தார்.

உண்மையில் புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆட்சியை நடத்துவது யார்? முதல்வர் என்.ரங்கசாமியால் ஆட்சியை அதிகாரத்தோடு நடத்த முடிகிறதா? என்ன நடக்கிறது புதுவையில்?

டெல்லி யூனியன் பிரதேச அரசிலும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே அதிகாரம் செலுத்தும் விவகாரத்தில் பூசல்கள் நடந்தது உண்டு. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில்கூட ஆளுநர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கும் இடையில் உரசல் நிலவுகிறது.

இந்நிலையில், புதுவை யூனியன் பிரதேச அரசிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் – ஆளுநர் இடையே அதிகாரப் போட்டி என்பது கடந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலேயே பெரிய அளவில் தொடங்கியது. அப்போது துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி தமக்கே அதிகாரம் இருப்பதாக கூறி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். இது யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

அதன் பிறகு, என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வைத்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தன. ரங்கசாமி முதல்வரானார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவரும், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மகளுமான தமிழிசை சௌந்தரராஜன் துணை நிலை ஆளுநர் ஆனார்.

முந்தைய நாராயணசாமி ஆட்சியில் துணை நிலை ஆளுநரோடு ஏற்பட்டதுபோன்ற வெளிப்படையான மோதல்களோ, முரண்பாடுகளோ இந்த ஆட்சியில் காணப்படவில்லை. ஆனால், வழக்கமான என்.ஆர். ஆட்சிக்கே உரிய அடையாளங்களும் இந்த ஆட்சியில் காணப்படவில்லை.

ரங்கசாமி இதற்கு முன்பு மூன்று முறை ஆட்சியில் இருந்துள்ளார். அந்த ஆட்சிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பால் வழங்குவது, இலவச சைக்கிள் வழங்குவது, பண்டிகை காலங்களில் மலிவு விலையில் மளிகை சாமான்கள் கிடைக்கச் செய்வது போன்ற பல ஜனரஞ்சக திட்டங்களை செயல்படுத்தினார்.

யார் வேண்டுமானாலும் எளிதில் அணுக முடிகிற, அடிக்கடி மக்களிடம் செல்லக்கூடிய முதல்வராக அவர் இருந்தார். அப்படி சந்திக்கும்போது மக்கள் வைக்கும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சில நேரங்களில் இத்தகைய வேலைவாய்ப்புகளைப் பெற்றவர்களுக்கு பிற்காலத்தில் வேலை பறிபோனது, என்றாலும்கூட இத்தகைய நடவடிக்கைகள் ரங்கசாமிக்கு புகழ் தேடித் தந்தன.

இத்தகைய ஜனரஞ்சக நடவடிக்கைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் காணப்படவில்லை. 2008ல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பிரச்சனை காரணமாக முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமியை காங்கிரஸ் தலைமை கீழே இறக்கியது. அப்போது பொதுமக்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அந்த அளவுக்கு ரங்கசாமி அப்போது மக்கள் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அதையடுத்து 2011 பிப்ரவரியில் கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் மாநிலக் கட்சி என்பதால் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், ஆட்சிக்குப் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தது.

தமிழிசை சௌந்தரராஜன்

பட மூலாதாரம், Twitter @LGov_Puducherry

அதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சி முதல்வராக ரங்கசாமி இருந்தபோது, மத்தியிலும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே இருந்தது. அதனால், அவரால் விரும்பியதை சுதந்திரமாக செய்ய முடிந்தது.

அப்போதும் ஆளுநருக்கு அதிகாரம் இருந்தபோதிலும், அவர்கள் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களது அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருந்தனர். தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியின் முதல்வராக ரங்கசாமி இருந்தாலும், நேரடி பாஜக ஆட்சி இல்லை என்பதால் மத்திய அரசும் சில நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்ற பிறகு, அமைச்சரவை பிரிக்கப்பட்டதில் பாஜகவும் சில முக்கிய துறைகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், துறை ஒதுக்கீடு, நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மூவரை நியமித்தது ஆகியவற்றில் பாஜகவின் செல்வாக்கு நேரடியாக செயல்பட்டது. மாநில முதல்வர்களைப் போல அல்லாமல் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கு அதிகாரம் குறைவு என்பது என்பது எப்போதும் உள்ளதுதான். ஆனால், அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே முதல்வரின் அதிகாரம் இருக்கிறது. கடந்த நாராயணசாமி ஆட்சியில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவியது போன்ற மோதல் தற்போது இல்லாவிட்டாலும், ஒவ்வொரு திட்டத்துக்கும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை தொடர்வதாக அரசாங்க செயல்பாடுகளை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில்தான் ஸ்டாலின் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.

ரங்கசாமியே இப்படிக் கூறினார்...

ஸ்டாலின் பேசிய கருத்துகள் அரசியல் விவாதத்தைக் கிளப்பிய நிலையில்,

அனைத்தையும் மத்திய அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய நிலை இருப்பதாகவும், இந்நிலை மாறவேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமியே பேசினார். அதுவும், மத்திய சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி, துணை நிலை ஆளுநர் தமிழிசை முன்னிலையில் நடந்த அரசு விழாவில்.

"நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்யவேண்டும். அதில் எதை விரைவாகச் செய்ய முடியுமோ அதைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும். ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் கேட்க வேண்டும், மத்திய உள்துறை அமைச்சரிடம் கேட்க வேண்டும்," என்றார் முதல்வர்.

மு.க.ஸ்டாலின்

"அனைத்திலும் காலதாமதம்"

"புதுச்சேரி ஒரு அழகான நகரம், சின்ன நகரம். புதுச்சேரியின் வீதிகள் எல்லாம் எப்போதும் அழகானவை என்று சொல்லுவோம். ஆனால் வீதிகளை மேம்படுத்தும் பணிகள் தாமதமாக இருப்பதைப் பல ஆண்டுகளாகப் பார்க்கிறோம். நிர்வாகத்தில் சின்ன சின்ன தடங்கல்கள், சிக்கல்கள் உள்ளன. அதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், நாம் எண்ணியவாறு சுற்றலாவை மேம்படுத்த முடியவில்லை.

புதுச்சேரியில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு உடனே பலன் கிடைக்கும் என்ற நிலை இருந்தால்தான் பெரிய வளர்ச்சியை மீண்டும் பார்க்க முடியும். அனுமதி அளிப்பது விரைவாக இருக்க வேண்டும். ஆனால் அது நிறைய பேருக்கு நடக்கவில்லை என்பதால், புதுச்சேரி வருவதற்கே அச்சப்படுகின்றனர்.

புதுச்சேரியை சிங்கப்பூர் போலக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன். அதை தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதுவரைக்கும் ஏதாவது செய்ய முடிந்ததா? செய்ய முடியவில்லை. நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள், விதிமுறைகளே இதற்கு காரணம்.. இவை எல்லாம் மாற வேண்டும். அதிகாரிகள் எல்லாம் அதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக சில நடைமுறைகளைத் தளர்த்தி விரைவாகச் செயல்படுத்த வேண்டும்," என்றும் தெரிவித்தார் முதல்வர்.

புதுவைக்கு இன்னும் விடுதலை...

இதையடுத்து டிசம்பர் 16ம் தேதி, மாநில அந்தஸ்து என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்துவதற்காக, தம்மை சந்திக்க வந்த பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி,

தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் தாங்களாகவே செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

இதையொட்டி சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத் திட்டங்களை வகுத்துவருவதாக கூறுகின்றனர்.அதே நேரம் பழைய கணக்குகளை முன்வைத்து இந்தப் பிரச்சனையை அணுகுகிறது காங்கிரஸ். ரங்கசாமி அரசில் இடம் பெற்றுள்ள பாஜக இந்த விஷயத்தில் கவனமாக கருத்துகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டுள்ளது.

ரங்கசாமி

உண்மையில் முதல்வர் பொம்மையா ?

முதல்வரே மனம் கசந்து நிர்வாகச் சிக்கல் பற்றிக் கூறும் நிலைதான் இருக்கிறது என்னும்போது அவர், ஸ்டாலின் கூறியபடி பொம்மையாகத்தான் இருக்கிறாரா என்று கேட்டால், இதை மறுக்கிறார் மூத்த பத்திரிகையாளரான நடராஜன்.

" முதல்வர் பொம்மையாக செயல்பட வில்லை. இங்கிருக்கும் நிர்வாக முறைதான் பொம்மையாக உள்ளது," என்கிறார் அவர். ஆளுநருக்கு அதிகாரம் கூடுதலாகவும், முதல்வருக்கு குறைவாகவும் அதிகாரம் இருக்கும்போது செயல்படவில்லை என்று முதல்வரை எப்படி குறைகூற முடியும் என்கிறார் அவர்.

"கடந்த இரண்டு ஆட்சிக் காலத்திற்கு முன்புவரை முதல்வருக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்ததில்லை. எந்த விஷயத்திலும் ஆளுநர் தலையீடு இருக்காது. ஆனால் 2011ஆம் ஆண்டு ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது அப்போது மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி ஆளுநரைப் பயன்படுத்தி ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்தார். அப்போது நாராயணசாமி ஆளுநரை ஆதரித்தார். 

அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல்வர் நாராயணசாமிக்கும் து.நி. ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் நிலவியது. இப்படி அனைத்திலும் ஆளுநர் அதிகாரம் செலுத்தும் சூழ்நிலை இப்போதுதான் ஏற்பட்டது. அதிகாரம் சட்டத்தில் இருந்தாலும், கடந்த காலத்தில் இப்படி நடந்ததில்லை," என்றார் அவர்.

"மாநிலத்திற்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. யூனியன் பிரதேசத்தில் ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அது மட்டுமின்றி இங்கே மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் முதல்வரால் தடுக்க முடியாது. எடுத்துக்காட்டாகத் தேசிய கல்விக்கொள்கை, நீட் போன்றவை இதில் அடக்கம்," என்று தெரிவித்தார் நடராஜன்.

"புதுச்சேரியைப் பொறுத்தவரை அனைத்து அதிகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது. புதுச்சேரி சட்டப் பேரவையில் ஒரு மசோதாவை அறிமுகம் செய்வது என்றாலும், மத்திய அரசு அனுமதி தேவை. மசோதாவை நிறைவேற்றிய பிறகும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பின்புதான் அதனை சட்டமாக்க முடியும்.," என்று கூறும் நடராஜன், யூனியன் பிரதேசம் மாநிலம் ஆகும் வரை இந்த அதிகார சிக்கல் தொடரவே செய்யும் என்கிறார்.

அதிகாரங்களை பறிக்க முயற்சி

சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன்
படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன்

மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகவே முதல்வர் ரங்கசாமி இணங்கி செயல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக செயல்பாட்டாளர் இளங்கோவன் கூறுகிறார்.

இது குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல்வராக வந்தபோது புதுச்சேரிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செய்துள்ளார் ரங்கசாமி. கல்வி மற்றும் கல்வி நிதியுதவி போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினார். மாணவர்கள் கல்லூரியில் செலுத்திய கல்வி கட்டணத்தை மாணவர்களுக்கே திருப்பி கொடுத்துக்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இதைக் காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் என்ற பெயரில் நடத்தினார். அது அவருக்கு பெரிய பெயரை எடுத்துக் கொடுத்தது. அரசு வேலைகளில் பணி நியமனங்களை அதிகப்படுத்தினார்.

பொதுவாக முதலமைச்சர்தான் எந்த அரசு விழாவாக இருந்தாலும் பங்கேற்பார். அவர் இல்லாதபோது துறை அமைச்சர் அல்லது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக அந்த விழாக்கள் நடக்கும். ஆனால் தற்போது முதலமைச்சருக்கு போட்டியாகவும், இணையாகவும் சட்டப்பேரவைத் தலைவரைக் கொண்டு வர முயல்கிறது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக. அரசு விழாக்கள் அனைத்திற்கும் சட்டப்பேரவை தலைவரை அழைக்கவேண்டும் என்ற அரசாணையைப் பிறப்பித்துள்ளனர். இதுவரை எந்த ஆட்சியிலும் இதுபோன்று நடந்ததில்லை. பேரவைத் தலைவரின் அதிகாரத்திற்கு மீறிய முக்கியத்துவத்தை அவருக்குத் தரவைக்கிறது மத்தியில் ஆளும் பாஜக," என்றார் அவர்.

இதை ரங்கசாமி எதிர்க்கவில்லை என்று அவருக்கு எதிராக விமர்சனங்கள் இருந்தாலும், உள்ளே அதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார் ரங்கசாமி. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஆளுநர் தமிழிசை முன்னிலையில் இது குறித்து ரங்கசாமி பேசியது அதன் வெளிப்பாடுதான் என்கிறார் இளங்கோவன்.

பாஜகவின் நெருக்கடி

"பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநிலக் கட்சிகளை முடக்கும் வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறது. தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று சுயமாக முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களது கடந்த கால செயல்பாடுகளை வைத்து அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டி, மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை மத்திய புலனாய்வுத் துறையை வைத்து மிரட்டும் போக்கும் உள்ளது. 

ஒருவர் மீதுள்ள வழக்குகளை சட்டப்படி அணுகாமல் அவற்றை அவர்களின் பலவீனமாகப் பயன்படுத்தி தேவையானதைச் செய்துகொள்கின்றனர். பலவீனங்கள், பிரச்னைகள் மனிதர்களுக்கு இயல்பாக இருக்கக் கூடியவை. அவற்றைப் பிடித்துக்கொண்டு அவர்களை மிரட்டி, பலவீனமாக்கி அவர்களின் அதிகாரத்தைப் பறிப்பதுதான் பாஜகவின் வழிமுறை. அப்படித்தான் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகள் வாங்கி வெற்றி பெற்றது பாஜக," என்று கூறுகிறார் இளங்கோவன்.

தொடர்ந்து பேசிய அவர், "இப்படி சட்டத்தைத் தன்வசம் கொண்டுவரும் போக்கை பாஜக செய்கிறது. அதன் எதிரொலியாகத்தான் ரங்கசாமியை மிரட்டி வைத்துள்ளனர். முதல் பதவியிலிருந்து எப்போது வேண்டுமென்றாலும் அவர் இறக்கப்படலாம். அவரது கட்சியை இரண்டாகப் பிளப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் ரங்கசாமி நிதானமாக ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறார்," எனத் தெரிவித்தார் இளங்கோவன்.

“நாராயணசாமிக்கு என்ன நடந்ததோ அதேதான் ரங்கசாமிக்கும் நடக்கிறது. கிரண்பேடி செய்ததைதான் தமிழிசையும் செய்கிறார். இவர்களுக்குள் உள்ள வித்தியாசம், கிரண்பேடி கோபமான முகத்தை வைத்துக்கொண்டு செய்தார், தமிழிசை சிரித்துக்கொண்டே அனைத்தையும் செய்துவிடுகிறார்” என்கிறார் இளங்கோவன்.

காணொளிக் குறிப்பு, வாரிசு அரசியலை நாங்க எதிர்க்கிறோமா? நாங்கள் சொல்றது இதுதான்: மக்கள் கருத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: