புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்: பின்னணி என்ன?

புதுச்சேரி சிபிஎஸ்இ
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக கல்வி முறையைப் பின்பற்றி வந்த பள்ளிகள் சிபிஎஸ்இ கல்விக்கு மாற்றப்படும் போது அதனால் மாணவர்கள் பயன் பெறுவார்களா? பாதிக்கப்படுவார்களா? இது குறித்து இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதுச்சேரிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அவரிடம் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இருவரும் தனித்தனியாகக் கோரிக்கை மனு கொடுத்தனர். இதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுமார் 730க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றில் 400க்கும் மேற்பட்டவை அரசு பள்ளிகள். குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ்நாடு கல்வி வாரியத்தின் பாடமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி உள்ள அனைத்து பள்ளிகளையும் சிபிஎஸ்இ கல்விமுறைக்கு மாற்றுவதால், மாற்றங்கள் மற்றும் விளைவுகள் ஏற்படலாம் என்று கருத்து பரவலாக உள்ளது. இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த கல்வியாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

Presentational grey line
Presentational grey line

சிபிஎஸ்இ பின்னணியில் புதிய 'தேசிய கல்விக் கொள்கை'

"புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வரும், புதுச்சேரி மாநில உயர் கல்வி கவுன்சிலின் உறுப்பினருமான முனைவர் எ.மு.ராஜன் பேசுகையில், "மத்திய அரசின் நோக்கம் புதிய தேசிய கல்விக் கொள்கையைப் புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும் என்றால் சிபிஎஸ்இ பாடமுறை புதுச்சேரியில் இருக்க வேண்டும்

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் சிபிஎஸ்இ, சிஎஸ்இ உள்ளிட்ட ஐந்து கல்வி வாரியங்களின் பாடமுறை, புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் அமலில் உள்ளன. இதனால் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது," என்கிறார் அவர்.

முனைவர் எ.மு.ராஜன்
படக்குறிப்பு, முனைவர் எ.மு.ராஜன்

மாஹேவில் உள்ள பள்ளிகள் கேரளா வாரியத்திலும், ஏனாமில் உள்ள பள்ளிகள் ஆந்திரா வாரியத்திலும் உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் தமிழ்நாடு பாடமுறை, சிபிஎஸ்இ, சிஎஸ்இ ஆகியவை கடைப்பிடிக்கப்படுகின்றன என்று மு.ராஜன் கூறுகிறார்.

"பல வாரிய கல்வி இணைப்புகள் இருக்கும் வரை இங்குள்ள பள்ளிகளைத் தேசிய கல்விக் கொள்கையுடன் இணைப்பது எப்போதும் சாத்தியமில்லை. ஆனால் சிபிஎஸ்இ பாடமுறையைக் கொண்டு வந்தால் மத்திய அரசால் சுலபமாகத் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தலாம்.

புதுச்சேரியில் சிபிஎஸ்இ முதல் முறையாக வருகிறதா?

இதனை ஏற்கெனவே 2011-2016ல் ரங்கசாமி ஆட்சியிலிருந்த போது புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தார். அதன் முயற்சியாக ஆரம்ப பள்ளிக்கு மட்டும் முதலில் சிபிஎஸ்இ-யை அமல்படுத்தினார். ஆனால் சிபிஎஸ்இ கல்வி குறித்து ஆசிரியர்கள் மத்தியில் சரியான ஈடுபாடு, பயிற்சி, ஆங்கில புலமை இல்லாமல் இருந்தது. மேலும் சிபிஎஸ்இ ஒரு கடினமான பாடத்திட்டம் என்றும் அதைக் காட்டிலும் தமிழக கல்வி வாரியத்தில் அதிகம் மதிப்பெண் எடுப்பதால் ஆசிரியர்களும் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை." என்கிறார் ராஜன்.

ஒரு கட்டத்தில் சிபிஎஸ்இ பாடமுறையை சரியான முறையில் அமல்படுத்த முடியாததால் அது அமல்படுத்தப்பட்டபள்ளிகளில் பழையபடி தமிழ்நாடு கல்வி வாரிய பாடமுறை பின்பற்றப்பட்டதாக கூறுகிறார் அவர்.

"இந்தியால் மட்டுமே எதிர்ப்பு"

"ஆனால் தற்போது மீண்டும் புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாட திட்டத்தை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு இருப்பது மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். மேலும் சிபிஎஸ்இ கல்விக்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டியது முக்கியமானது.

சிபிஎஸ்இ கல்வியில் இந்தி மொழிப் பாடம் மட்டுமே ஒரே பிரச்னையாக கருதப்படும். புதுச்சேரியில் போதிய அளவு இந்தி கற்பிக்கும் ஆசிரியர்களும் கிடையாது. ஆகவே அரசு அதற்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்," என்கிறார் ராஜன்.

"உயர் கல்வியில் சேரத் திணறும் அரசு பள்ளி மாணவர்கள்"

தமிழ்நாடு கல்வி வாரியம் பின்பற்றுவதால் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி தொடர்வதில் பாதிக்கப்படுவதாகப் புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலச் சங்கத் தலைவர் ராஜ்பவன் வை.பாலா என்கிற பாலசுப்பிரமணியம் பிபிசி தமிழுடன் பகிர்ந்துள்ளார்.

"புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தமிழ் பிள்ளைகள் வளர வேண்டும் என்று நான் கருதுகிறேன். தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று இங்கே பலர் கேட்கின்றனர். அவ்வாறு இட ஒதுக்கீடு கொடுத்தால், அரசு மருத்துவ கல்லூரியில் மாஹே மற்றும் ஏனாம் பிராந்திய மாணவர்கள் தான் முழுமையாக சேருவார்கள்.

இங்கு பொருளாதாரத்தில் செழுமையானவர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் தான் படிக்கின்றனர். ஆனால் இங்குள்ள ஏழை பிள்ளைகள் அனைவருமே அரசு பள்ளியில் படிக்கின்றனர்," என்கிறார் அவர்.

புதுச்சேரி சிபிஎஸ்இ
படக்குறிப்பு, தமிழிசை சௌந்தரராஜன் - தர்மேந்திர பிரதான்

அரசு மாணவர்களுக்கு போட்டியாக இருக்கும் சிபிஎஸ்இ மாணவர்கள்

"சின்ன மாநிலமான புதுச்சேரியில் இரண்டு அரசு மருத்துவ கல்லூரிகள், 7 தனியார் மருத்துவக்கல்லூரிகள் உட்பட 9 மருத்துவ கல்லூரிகள். 30 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள். மேலும் 14 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களில் வெளியூரிலிருந்து புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக, புதுச்சேரியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான் இங்குள்ள மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலான இடங்களைப் பெற்றுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய இருக்கக்கூடிய மாணவன், அரசுப்பள்ளியில் பிடிக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குத் தனியார் சிபிஎஸ்இ-யில் படித்த மாணவர்கள் போட்டியாக இருக்கின்றனர்.

ஆகையால் கல்வித்தரம் மேம்படுவதால் புதுச்சேரியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் அதிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பயனடைவார்கள்," என பாலா தெரிவிக்கிறார்.

"புதுச்சேரியில் இந்தியை திணிக்கவே சிபிஎஸ்இ"

புதுச்சேரியில் உள்ள மாணவர்கள் ஏற்கெனவே தமிழக அரசின் தரமான பாடத்திட்டத்தில் படித்து வரும்போது சிபிஎஸ்இ எதற்கு? புதுச்சேரி அரசு இந்தி திணிப்பை சிபிஎஸ்இ பாடத்திட்டம் மூலமாகக் கொண்டு வருவதாக புதுச்சேரி தந்தை பெரியார் திராவிட கழகத் துணைத் தலைவர் இளங்கோவன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சிபிஎஸ்இ
படக்குறிப்பு, இளங்கோவன்

"தற்போது மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசு தேசிய அளவில் உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross enrolment Ratio) 50 சதவீதம் அதிகரிக்கவே அதனைக் கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் ஐரோப்பிய, அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக 50 சதவீதம் உள்ளது. இது இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை(GER) விட அதிகமானது," என்கிறார் இளங்கோவன்.

"தமிழக கல்வி வாரியத்தால் புதுச்சேரி கல்வியில் சிறந்த இடமாக இருந்தது"

தமிழகத்தின் கல்விமுறை மேம்போக்கான நிலையில் உள்ளது. இதனால் தமிழகத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறும் இளங்கோவன், தமிழகத்தைப் பின்பற்றி வரும் புதுச்சேரியில் அவை பொருந்தும் என்கிறார்.

"அடிப்படையில் பூகோள ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், தொழில், பண்பாடு, திருமண உறவு என எல்லா நிலையிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் 90 சதவீதம் தமிழகத்தை ஒன்றி வாழ்கிறோம். தமிழகத்தின் கல்வி முறையைச் சார்ந்து வந்த காரணத்தினால் தான் புதுச்சேரி இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக இருந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் திட்டமான புதிய கல்விக் கொள்கை என்ற ஒரு தீமையைத் திணிப்பதற்கு ஆளுநர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் இருவரும் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றனர். இது புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுடைய எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமானது.

அரசின் இந்த முடிவை வன்மையாகக் கண்டிருக்கிறோம். இந்த முடிவை உடனடியாக அரசு கைவிட வேண்டும்," என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Presentational grey line
Presentational grey line

சிபிஎஸ்இ - எதிர்க்கட்சி நிலைபாடு?

"இந்த முடிவினை குறித்து புதுவை கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை? ஏன் பொதுமக்களை அழைத்து கருத்து கேட்கவில்லை?," என்று எதிர்க்கட்சித் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் இரா.சிவா கேள்வி எழுப்புகிறார்.

புதுச்சேரி சிபிஎஸ்இ
படக்குறிப்பு, இரா. சிவா

"கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின் போது தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். ஆளுநர்களுக்கு கொள்கையினை கொண்டு வர அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் புதுச்சேரியில் இவர்களது சிபிஎஸ்இ பாட திட்டம் தேவையற்றது. இதனால் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள். வடமாநிலத்தவரை வேலைக்கு வைப்பார்கள்.

சிபிஎஸ்இ பாட திட்டத்தால் பதினைந்து முதல் இருபது ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் தெரிந்த எவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும். உள்ளூர் பூர்வக்குடிகள் மாநிலத்தை விட்டு இடம் பெயரக் கூடிய அபாயம் ஏற்படும். அதனால் மாநிலப் பாட திட்டத்தை மாற்றும் முடிவை இந்த பாஜக கூட்டணி அரசு கைவிட வேண்டும்," என்று இரா.சிவா தெரிவித்துள்ளார்.

100 சதவீதம் சிபிஎஸ்இ பாடமுறை - அமைச்சர்

புதுச்சேரியில் சிபிஎஸ்இ கல்வி முறையைக் கொண்ட வருவதன் அவசியம் என்ன என்பது குறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சரும், கல்வித்துறை அமைச்சருமான நமச்சிவாயத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.

புதுச்சேரி சிபிஎஸ்இ
படக்குறிப்பு, அமைச்சர் நமச்சிவாயம்

அதற்கு அவர், "தற்போது புதுச்சேரியில் 1வது முதல் 5ஆம் வகுப்பு வரை ஒருசில அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாட திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சிபிஎஸ்இ பாடமாக மாற்றுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு சில பள்ளிகளில் மத்திய அரசின் சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி சிபிஎஸ்இ பாட முறையைக் கொண்டு வரமுடியாது.

குறிப்பாக சிபிஎஸ்இ பாடத்திற்கு மாற்றுவதற்கு விளையாட்டு மைதானம், கூடுதல் வகுப்பறைகள் என சில அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை சில பள்ளிகளில் இல்லை. ஆகவே அரசே இந்த முயற்சியை மேற்கொள்வதால் சில விஷயங்களில் தளர்வு ஏற்படுத்தவும், 100 சதவீதம் சிபிஎஸ்இ பாடமாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்," என்கிறார் அமைச்சர் நமச்சிவாயம்.

"பிற மொழியை கற்பது நல்லது தானே"

சிபிஎஸ்இ பாடத்தில் இந்தி மொழி கட்டாயம் என்பதால் அதற்கு ஏற்கனவே எதிர்ப்பு உள்ளது. மீண்டும் இதை சிபிஎஸ்இ பாடத்திட்டம் மூலம் இந்தி கட்டாய மொழியாக வரும்போது இதற்கு மாற்றாக அரசு என்ன போகிறது என்று கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, "இதற்கு மாற்று என்பது கிடையாது. மொழிப் பாடம் என்று வரும் பிற மொழிகளை மாணவர்கள் தெரிந்துகொள்வது அவர்களுக்கு பயன்படக்கூடியதாகத் தான் இருக்கும்.

"போட்டி தேர்வுகளில் சிறப்பாக இருக்கவே சிபிஎஸ்இ"

மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய நோக்கமே உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்கள் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளைச் சிறந்து முறையில் எழுத முடியும். தற்போது போட்டித் தேர்வு தேசிய அளவில் வந்துவிட்டது. தேசிய அளவில் அவர்கள் போட்டித் தேர்வுகளில் வெல்ல வேண்டுமென்றால் சிபிஎஸ்இ போன்ற கல்வியை பின்பற்றினால் மட்டுமே போட்டியிடச் சுலபமாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

"புதுச்சேரியில் புதிய தேசிய கல்விக் கொள்கை"

புதுச்சேரியில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவே சிபிஎஸ்இ பாடத்தைக் கொண்டு வர முயற்சிப்பதாக கூறுவது குறித்து அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேள்வி எழுப்பினோம்.

அதற்கு அவர், "நிச்சயமாகப் புதுச்சேரியில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம். அதனுடைய முதல் கட்டம் தான் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத்தில் கொண்டு வருவது," என்றார்.

"மேலும் புதுச்சேரியில் உள்ள ஐந்து வாரியங்களில் கீழ் பள்ளிகள் இயங்குவதால், சிபிஎஸ்இ ஆக மாற்றும்போது ஒரே வாரியத்தில் புதுச்சேரி வந்துவிடும். அவ்வாறு வரும் போது எதிர்காலத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை வரும்போது, அது புதுச்சேரியில் தானாக அமலாகிவிடும். இவை அனைத்தும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மட்டுமே அரசு செயல்பட்டு வருகிறது," என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, நூறு கி.மீ பயணித்து, 94 வயதில் பாடம் நடத்தும் இயற்பியல் பேராசிரியர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: