தமிழிசை சௌந்தரராஜன் பதில்: "தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள்" என்ற அவரது பதில் எதைக் காட்டுகிறது?

பட மூலாதாரம், Facebook/DrTamilisaiGuv
திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான 'முரசொலி'யில் செப். 12 அன்று கட்டுரை ஒன்று வெளியானது. அதில், அண்மையில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில அரசு தனக்கு உரிய மரியாதை தரவில்லை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில், ஆளுநர் தமிழிசை 'கொஞ்சம் அப்பிராணி' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசு தனக்கு உரிய மரியாதையை தரவில்லை என தமிழிசை தெரிவித்த உதாரணங்களை குறிப்பிட்டு, 'ஆளுநர் முற்பகல் செய்ததை பிற்பகலில் அனுபவிக்கிறார் அவ்வளவுதான்' என அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கவுசிக் ரெட்டி என்பவரை மேலவை உறுப்பினராக 'ஆளுநர் கோட்டாவில்' நியமிக்க பரிந்துரைத்து அனுப்பப்பட்ட கோப்புக்கு ஆளுநரிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், அம்மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் 'பனிப்போர்' தொடங்கியதாக அக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. மேலும் ஆளுநர் தமிழிசையை சுட்டிக்காட்டி இந்த நிலை தமிழகத்திலும் ஏற்படலாம் என்று கட்டுரையில் வந்துள்ளது.
"தனக்கு தெலங்கானா அரசு மரியாதை தரவில்லை எனக்கூறும் தமிழிசை, 'தனக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது என சிந்தித்திருந்தால் இந்த பேட்டியை தந்திருக்க மாட்டார்'' என்றும், ''மாநில அரசோடு இணைந்து செயல்பட்டால் இன்று ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதை , அரசியல் சட்டம் தங்களது அதிகாரத்துக்குத் தந்துள்ள வரம்பை மீறிச் செயல்பட நினைத்திடும் தமிழக ஆளுநர் உள்ளிட்ட அனைத்து ஆளுநர்களுக்கும் நினைவுபடுத்த விரும்புகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நலச் சட்டங்களுக்கும் ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால், தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டி வரும்' என அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், 'முரசொலி' கட்டுரைக்கு பதிலளித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், "தமிழிசை அப்பிராணியும் இல்லை. அப்பாவியும் இல்லை. என்னுடைய பேட்டி அழாதகுறையான பேட்டி அல்ல.
தெலங்கானாவில் ஆளும் வர்க்கத்தின் அமைச்சர்களையும், முதலமைச்சரின் அரசியல் வாரிசுகளையும் அலறவிட்ட பேட்டி.
புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியின் பரம்பரையில் வந்த நான் வாய்விட்டு அழுவதும் தலைகுனிவதும் என்னுடைய சரித்திரத்திலேயே இல்லை," என்றார் அவர்.
"தன் மாநிலத்து தமிழ் சகோதரிக்கு இன்னொரு மாநிலத்தில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை கண்டு மகிழும் கூட்டம் முரசொலி கூட்டமாகத்தான் இருக்க முடியும். தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பார்க்க மறுத்த அமெரிக்க அதிபர் நிக்சன், தன்னைப் பார்க்க விரும்பிய போது காமராஜர் அதனை மறுத்தார்.
அண்ணாவைப் பார்க்க மறுத்த அதிபரை நான் பார்க்க மாட்டேன் என்றார். பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக ஆகும் வாய்ப்பு வரும்போது, எனது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அவரை ஆதரிக்கிறேன் என்று எதிர் அணியில் இருந்த மமதா பானர்ஜி ஆதரவுக் கரம் நீட்டினார். அதேபோலத்தான், ஒடிஷா முதலமைச்சர் பட்நாயக்கும் தான் என்.டி.ஏ. அணியில் இல்லாத போதும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.
ஆனால், தன் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு அடுத்த மாநிலத்தில் மரியாதை கிடைக்கவில்லை என்பதை கண்டு மகிழும் கூட்டம் தான் முரசொலி கூட்டம்," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பட மூலாதாரம், FACEBOOK
மேலும், தெலங்கானா மாநிலத்தில் தான் சந்தித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து தமிழிசை தெரிவித்துள்ளதாவது:
எம்.எல்.சி விவகாரம்
தெலங்கானா அமைச்சரவையால் எம்.எல்.சி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட கௌசிக் ரெட்டி, கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோற்று, ஆளும் கட்சியில் ஆறு வாரத்திற்கு முன் இணைந்தவர். அவரை ஆளுநரின் சமூக சேவை அந்தஸ்து அல்லது பிரிவின்கீழ் நியமிப்பது உகந்தது அல்ல என்று சுட்டிக் காட்டப்பட்டது. அதற்காகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டது. அதை ஆளும் வர்க்கமும் புரிந்துகொண்டு, அவர்களது தவறை உணர்ந்து அவர்களாகவே தகுதியான வேறு ஒரு நபரை பரிந்துரைத்தவுடன் அந்த கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எந்த முட்டுக்கட்டையும் இடப்படவில்லை.
ஹெலிகாப்டர் விவகாரம்
பழங்குடியினர் திருவிழாவில் கலந்துகொள்ள துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளும் நேரடியாக வந்து அழைத்துவிட்டு அங்கே சென்று கலந்துகொள்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தரவில்லை.
அங்கே சென்று வருவதற்கு ஹெலிகாப்டர் வேண்டும் என்று கேட்டு அனுப்பிய கோப்புக்கு பதில் சொல்லவில்லை. அதனால் 800 கிலோமீட்டர் சாலை வழியாக பயணம் செய்தேன். ஆனால் முதலமைச்சர் 50 அல்லது 60 கிலோமீட்டர்களுக்கு கூட ஹெலிகாப்டரில் சென்று வருகிறார்.
குடியரசு தின விவகாரம்
குடியரசு தினத்தில் ஆளுநர் கொடியேற்ற வேண்டும், அணிவகுப்பு நடத்த வேண்டும் என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் மரபு. அதை விடுத்து, குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையிலேயே கொண்டாடிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அதற்கான ஆளுநர் உரையையும் அனுப்பவில்லை. அதற்கான அரசு ஏற்பாடுகள் எதையும் முறையாக செய்யவில்லை. முதலமைச்சரும், அமைச்சர்களும் அதிகாரிகளும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளவில்லை.
மாவட்ட ஆய்வு
மேலும், மாவட்டத்தை ஆய்வு செய்ய போகும்போது ஆட்சியரும் டி.எஸ்.பி யும் கலந்துகொள்ள வேண்டும் என்பது மரபு. ஆனால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. இதை முரசொலி நியாயப்படுத்துகிறதா?. தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர். வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்யும்போது ஏதோ ஒரு காரணத்துக்காக அங்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றால் அவர் பொறுத்துக் கொள்வாரா?


தொடர்ந்து பதிலளித்த அவர், "தமிழிசைக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமை மற்றவர்களுக்கு ஒரு பாடம் என்கிறார்கள். தமிழர், தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு தமிழச்சிக்கு அநியாயம் நடக்கும்போது அதனை ரசித்து பிரசாரம் செய்யும் கூட்டமாக தான் இந்த முரசொலி கூட்டம் இருக்கிறது," என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முரசொலி கட்டுரை - தமிழிசை சௌந்தரராஜன் பதில் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, "இந்த பிரச்னைக்காக 'ஏக இந்தியா', 'இந்து ராஷ்டிரா' என்பதை பேசக்கூடிய ஆளுநர் தமிழிசை தன்னை 'தமிழச்சி' என அடையாளப்படுத்திக்கொள்கிறார். தனக்கு சாதி, மதம் என எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை கடைசி ஆயுதமாகத்தான் அரசியல்வாதிகள் கையிலெடுப்பார்கள், அதைத்தான் தமிழிசை செய்துள்ளார்.
அவர் செய்யும் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களுக்கு 'தமிழச்சி' என்ற குடையின் கீழ் ஒளிந்து கொள்கிறார். தன்னை 'இந்தியப் பெண்', 'இந்து பெண்' என சொல்லிக்கொள்ள வேண்டியதுதானே? தன்னை பாதுகாத்துக்கொள்ள 'தமிழர்' என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளார். 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்' அவர். 'தமிழச்சி' அடையாளம் மூலம் அவர் அரசியலமைப்பைத் தாண்டி செயல்படுவதை மறைக்க பார்க்கிறார். பிரச்னையை நேரடியாக சந்திக்காமல் மொழி அரசியலுக்குள் ஒளிந்துகொள்வது நகைப்புக்குரியது.
தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் புதுவை சார்பாக முதலமைச்சர் உட்காராமல், இவர் அங்கு சென்று அமருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார். எம்.எல்.சிக்களை நியமிக்கும் அரசின் முடிவை புறக்கணிக்கிறார். அரசியலமைப்பின் விழுமியங்களை மதிக்காமல் உள்ள எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் வரிசையில் இருப்பவர்தான் தமிழிசை.

இவர் தன்னுடைய அதிகார எல்லையை மீறி, அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படும் நிலையில், 'முரசொலி' கட்டுரை சரியான நேரத்தில் வந்திருப்பதாக கருதுகிறேன். ஆளுநர் அதிகாரங்கள் குறித்த திமுகவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் கட்டுரையாக இது இருக்கிறது.
பிரச்னை என்னவென்பதே புரியாமல் தமிழிசை விளையாடுகிறார். அவர் ஒரு மாநிலத்தின் ஆளுநர், மற்றொரு மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர். அதை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் பாற்பட்ட மரியாதை இருவழிப்பாதையாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படும்போது தெலங்கானா அரசின் எதிர்வினையை தமிழிசை சந்தித்தாக வேண்டும்.
பாஜக ஆளாத மாநிலங்களில் அரசுகளுக்குக் குடைச்சல் கொடுப்பதை பாஜக ஒரு யுக்தியாக வைத்துள்ளது. தெலங்கானாவில் தமிழிசை அதனை செய்கிறார், தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி செய்கிறார். அரசியல் சாராத மசோதாக்களுக்குக் கூட அவர் ஒப்புதல் வழங்கவில்லை" என தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













