ஆர்.என்.ரவி: மாநிலத்தின் ஆளுநரை திரும்ப பெறுவது சட்ட ரீதியாக சாத்தியமா?

ரவி

மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கு இந்திய அரசு கட்டாயமாக்கியிருக்கும் நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை மீண்டும் சபாநாயகரின் மறுபரிசீலனைக்கே அனுப்பியிருந்தார் மாநில ஆளுநர் ஆர்.என் ரவி.

இது தொடர்பாக அவரது மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மற்றும் இது தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்த ஆளுநர், "அந்த மசோதா மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கருத்தை கொண்டிருக்கிறார். குறிப்பாக மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நலன்களுக்கு அது எதிரானது என ஆளுநர் கருதுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று காலை நீட் விலக்கு தொடர்பான அனைத்து கூட்டம் நடைபெற்றது.

"சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது", கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மசோதாவை மறுபரிசீலனை செய்யக் கோரிய ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தன.

மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் இரு தினங்களாக திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். 'Getoutgovernorravi' என டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது.

எனவே சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியா? அவரை திரும்பப் பெற கோருவதற்கான வழிகள் அரசியலமைப்பில் உள்ளதா என ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமனிடம் பேசினோம். அவர் பேட்டியிலிருந்து.

கேள்வி: இரண்டாம் முறையும் சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதை திருப்பி அனுப்ப முடியும் அல்லது குடியரசு தலைவரிடம் அதை அனுப்ப வேண்டுமா?

பதில்: அதை நிச்சயமாக அவர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது. இதனை அரசமைப்புச் சட்டம் மிக தெளிவாக சொல்கிறது.

முதன்முறை அவர் அதை நிராகரிக்கவில்லை அந்த மசோதாவை பரிசீலனை செய்ய கேட்கிறார்.

ஆனால் நீட் தேர்வால் மாணவர்களுக்கு நன்மை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என சட்டப்பேரவையில் மீண்டும் மசோதா நிறைவேற்றி அனுப்பினால் அதை அவர் குடியரசு தலைவருக்குதான் அனுப்ப வேண்டும்.

அதாவது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பிவார்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

கேள்வி: ஒரு மாநிலத்தின் ஆளுநரை திரும்ப பெறுவது சட்ட ரீதியாக சாத்தியமா?

பதில்: சட்ட ரீதியாக சாத்தியம் என்பதற்கு தமிழக ஆளுநர் ரவியே ஓர் உதாரணம். அவர் நாகலாந்திலிருந்து திரும்ப பெற்றப்பட்டுள்ளார்

கேள்வி: தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மாநிலத்தின் பேரவையால் ஆளுநரை சட்ட ரீதியாக திரும்பப் பெற வைக்க முடியுமா?

பதில்: தீர்மானம் ஏற்றுவது என்பது ஒரு நடவடிக்கை. நாகலாந்தில் மக்கள் அவரை கடுமையாக எதிர்த்ததால் மத்திய அரசே அவரை திரும்ப பெற்றது. எனவே தீர்மானம் இயற்றுவது என்பது பல நடவடிக்கைகளில் அது ஒரு செயல். அரசமைப்பின் பிரிவு 200 படி, சட்டமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றினால் விரைவில் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அது அவரின் அகராதியில் ஐந்து மாதங்களாக உள்ளது. இதுதான் இன்றைக்கு இருக்கும் எதிர்ப்பு.

ravi and stalin

கேள்வி: உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக மாநில அரசோ ஆளும் கட்சியோ ஆளுநரை திரும்பப் பெற மத்திய அரசை அறிவுறுத்த முடியுமா?

பதில்: என்னை பொறுத்தவரை இது ஒரு அரசியல் பிரச்னை நீதிமன்றத்திற்கு எக்காரணத்தை கொண்டும் அரசியல் பிரச்னை போக கூடாது. மகாத்மா காந்தியோ, அம்பேத்கரோ அல்லது பெரியாரோ யாருமே அரசியல் பிரச்னையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவில்லை. அங்கே கொண்டு சென்றால் எந்த பிரச்னையும் வெற்றி பெறாது.

கேள்வி: ஆளுநர் மாநில அரசுடன் அரசியல் நோக்கத்துடன் முரண்பாடான போக்குடன் செயல்படுகிறார் என்று நீதிமன்றத்தில் நிரூபித்து, அவரை திரும்பப் பெற வைக்க முடியுமா?

பதில்: அரசியல் பிரச்னை நீதிமன்றத்திற்கு செல்லக்கூடாது என்று மீண்டும் சொல்கிறேன். மகாத்மா காந்தியை எடுத்து கொள்ளுங்கள் அவரை ஏன் சொல்கிறேன் என்றால் அவர் ஒரு பாரிஸ்டர் ஆனாலும் அவர் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் வழக்கு தொடர்ந்து சுதந்திரம் வாங்கவில்லை. ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றைதான் சொன்னார். இதையேதான் அம்பேத்கரும் சொன்னார். பெரியாரும் வைக்கம் போராட்டத்தில் அவ்வாறுதான் செய்தார். எனவே அரசியல் பிரச்னைக்கு அரசியல் களத்தில்தான் தீர்வு காண முடியும்.

ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்தோம்? அரசியல் பிரச்னைக்கு தீர்வு நீதிமன்றம் அல்ல.

கேள்வி: குடியரசு தலைவர் ஆளுநரை திரும்பப் பெற உத்தரவு பிறப்பிக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். அவர்தானே நியமனம் செய்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: