ஆளுநர் ஆர். என். ரவி: தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த ஈரோடு சென்றது ஏன்?

ஆர். என். ரவி

பட மூலாதாரம், @rajbhavan_tn/twitter

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை சென்று தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார். தீரன் சின்னமலையின் வாரிசுகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது நோக்கம் என்ன?

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் தற்போதைய திருப்பூர் மாவட்டப் பகுதியில் பிறந்த தீரன் சின்னமலை, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான திப்பு சுல்தானின் போரில் துணை நின்றார். இதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களைத் திரட்டி, படையை வழிநடத்தினார்.

திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பிறகு ஓடாநிலையில் ஒரு கோட்டையைக் கட்டி பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டார். பிறகு பிரிட்டிஷ் கிழக்கிந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்டது ஜூலை 31ஆம் தேதி என்றாலும் அன்றைய தினம் ஆடிப் பெருக்கு என்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருக்கு தினத்தன்று அவரது நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தீரன் சின்னமலைக்கு 2012ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு 2013ல் திறந்துவைக்கப்பட்டது. இந்த நினைவிடத்திற்குத்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இதற்குப் பிறகு அங்கே பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தீரன் சின்னமலையின் சிறப்புகள் குறித்து விரிவாக பேசினார். மேலும், "துரதிஷ்டவசமாக வரலாற்றில் திரிபுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இறுதியில் உண்மை வெல்லும். சிலப்பதிகாரத்தில் பாரதம் குறித்தும், இந்து தர்மம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கையில் இருந்து மதுரை வரை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனாதான தர்மத்தைப் போலவே, இத்தகைய விலைமதிப்பற்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களை அழிக்க முடியாது. நாம் யார், எப்படி வளர்ந்தோம் என்பதை சத்தமாகவும், தெளிவாகவும் இந்த நூல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

திரன் சின்னமலை குலதெய்வ வழிபாட்டின் மூலம், பாரதத்தின் ஆன்மாவை பாதுகாத்தார். உலகளாவிய சகோதரத்துவத்தைத்தான், சனாதனம், கலாசாரம், தர்மம் என்று சொல்கிறோம். உலகின் உயர்ந்த கடவுள் நம் அனைவருள்ளும் வாழ்கிறார் என்றுதான் வேதம் சொல்கிறது.

தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த ஆளுநர் ஈரோடு சென்றது ஏன்?

பட மூலாதாரம், @rajbhavan_tn/twitter

உங்களைப்போலவே பிறரையும் நினைக்கும் இந்த தர்மம் இந்தியாவிடம் மட்டுமே உள்ளது. 75வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நாம், தீரன் சின்னமலையின் கனவுப்படி, பொருளாதார வளம், ராணுவ பலம், அறிவுசார் வளர்ச்சி பெற்ற, தர்மத்தை காக்கும் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார் ஆளுநர்.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்க்க திப்பு சுல்தானுடன் இணந்து செயல்பட்ட தீரன் சின்னமலையை ஒரு இந்து மன்னராக முன்னிறுத்தும் வகையிலேயே ஆளுநர் ரவியின் பேச்சு அமைந்திருந்தது.

இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த விரும்பியிருந்தால், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கே மாலை அணிவித்திருக்கலாமே?" என கேள்வி எழுப்பினார்.

"இந்த ஆளுநருக்கு ஒரு அரசியல் நோக்கம் இருக்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் புதிய கல்விக் கொள்கை, திராவிடர் - ஆரியர் பிரிவை வெள்ளையர்களே அறிமுகப்படுத்தினர் எனப் பேசுவது எனச் செயல்படுகிறார். மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் நிறுத்தி வைக்கிறார். இந்த அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதில் அவரும் தமிழக பா.ஜ.கவும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள். உண்மையில் அவர் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த விரும்பியிருந்தால், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கே மாலை அணிவித்திருக்கலாமே?" எனக் கேள்வி எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

ஆனால், ஆளுநர் இதுபோல மரியாதை செலுத்துவது பா.ஜ.கவுக்கு எந்த வகையில் உதவும்? "நிச்சயம் உதவும். கொங்கு சமுதாயத்தைச் சார்ந்த ஒரு தலைவருக்கு மரியாதை செய்ய தமிழ்நாடு அளுநரே வருகிறார் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கவனிப்பார்கள். இதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் எடப்பாடியும் பேசுவதை மட்டுமே கேட்டுவந்தவர்கள், இனி ஆளுநர் எங்கு பேசினாலும் கவனிப்பார்கள். அவர் சொல்லும் கருத்துகளை உள்வாங்குவார்கள். இதுதான் இம்மாதிரி செயல்பாடுகளின் நோக்கம். இது பா.ஜ.கவின் கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்க வெகுவாக உதவும்." என்கிறார் அரசியல் விமர்சகரான ஆர். முத்துக்குமார்.

தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர்கள், பல்வேறு தருணங்களில் மூத்த தலைவர்களின் சிலைகளுக்கும் நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலியோ, மரியாதையோ செலுத்தியிருக்கிறார்கள். ஆனால், வேறு ஊருக்குச் சென்று நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவது சற்று அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், ஆளுநரின் வருகைக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை என்கிறார் ஈரோடு பகுதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான பரணீதரன். "இது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு. அதனால், ஆளுநர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்துகிறார். இதில் அரசியல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதில்லை" என்கிறார் அவர்.

ஆனால், தற்போதைய தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளையும் பேச்சுகளையும் கூர்ந்து கவனிப்பவர்கள் இந்தக் கருத்தை ஏற்பது கடினம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: