நீட் சர்ச்சை, இந்தி திணிப்பு, ஆளுநர் அதிகாரம் - தமிழிசை செளந்தரராஜன் பிபிசி தமிழுக்கு பேட்டி

- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
என் மீது கற்களை வீசி காயப்படுத்தி ரத்தம் வரச் செய்தாலும் எனது பணியை ஆற்றிக் கொண்டேதான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார் தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
தெலங்கானா மாநிலத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள ஆளும் கட்சியும் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் சில செயல்பாடுகளுக்கு எதிர்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இது குறித்தும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் பிபிசி தமிழுக்கு பிரத்யேகமாக நேர்காணல் அளித்தார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். அவரது நேர்காணலின் எழுத்து வடிவம் இது.
முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்த வேளையில் திடீரென தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட உங்களுடைய பொதுவாழ்க்கைப் பாதையில், இப்போது ஆளும் அரசுடன் இணக்கமற்ற சூழல் இருப்பதாக வெளிவரும் சர்ச்சை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
நான் அரசியல்வாதியாக இருந்தது ஊரறிந்த விஷயம், கடந்த இரண்டரை வருடங்களாக ஆளுநராக பணியாற்றி வருகிறேன். கொரோனா நேரத்தில் தெலங்கானாவில் எனது பங்களிப்பு அதிகமாக இருந்தது. எனது நிர்வாகத் திறமையை புதுச்சேரியில் ஒரு மூன்று மாதங்களுக்கு வெளிப்படுத்த முடிந்தது. அதுவும் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்படி எல்லாம் செயல்படுமோ அவற்றை விட சிறப்பாக செயல்படுத்தி நிரூபிக்க முடிந்தது. எனது இரண்டரை வருட ஆளுநர் பணியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததில்லை. மக்களிடம் அன்பான ஆளுநராகவும் அணுகக் கூடியவராகவும் இருப்பது எனது பலம். தெலங்கானாவில் இப்போது நிலவும் பிரச்னை, கடமையை சரியாக செய்வதால் ஒரு சில எதிர்வினைகளை சந்தித்து வருகிறேன்.
என்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்?
உதாரணமாக சொல்வதென்றால், ஒரு மேலவை உறுப்பினரின் நியமனத்தை செய்ய என்னிடம் பரிந்துரை செய்தார்கள். அது சேவை பிரிவின்கீழ் செய்யக்கூடிய நியமனம். ஆனால், எனது பிரிவின்கீழ் அந்த நபரை நியமிக்க முடியாதபோது, அரசே வேறு நபரின் பெயரை முன்மொழிந்தது. அவரை நியமனம் செய்தேன். இதில் எனது தனிப்பட்ட விருப்பம் என எதுவும் இல்லை. அரசியலமைப்பு விதிக்கு உட்பட்டு அரசு செய்தால் அதை நான் ஏற்று நடவடிக்கை எடுப்பேன். ஆனால், நான் அரசின் நடவடிக்கை விதிகளின்படி இல்லாதபோது அதன் பரிந்துரையை ஏற்க மறுத்தால், உடனே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இப்படி எல்லாம் இருந்தால் எப்படி சுமூகமாக அரசு நிர்வாகம் நடக்கும் என்ற கேள்வியை பொதுப்படையாகவே நான் பொதுமக்களிடம் வைக்கிறேன். என் கடமையை சரியாகச் செய்ய தனிப்பட்ட முறையில் நான் பிறரது காழ்ப்புணர்ச்சியை எதிர்கொள்ள வேண்டுமா?
இரண்டாவது விஷயம், ஒரு ஆளுநராக நான் செல்லும்போது மாவட்ட ஆட்சியரோ கண்காணிப்பாளரோ வந்து வரவேற்க வேண்டியது தனிப்பட்ட தமிழிசைக்கு தர வேண்டிய மரியாதை கிடையாது. அது தமிழிசை வகிக்கும் ஆளுநர் என்ற அரசியலமைப்பு உயர் பதவிக்கு தரக்கூடிய மரியாதை. அந்த பதவிக்குரிய மரியாதை மறுக்கப்படும்போது அது சரியா என்ற கேள்வியையும் நான் பொதுமக்களிடமே விட்டு விடுகிறேன். இதைத் தவிர நான் மேலும் ஆழமாக இந்த விஷயத்தைப் பகிர விரும்பவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
தெலங்கானா முதல்வருடன் பேசி நீங்கள் பிரச்னையை சரி செய்ய முயலவில்லையா?
முதல்வரின் பிறந்த நாளுக்கு நான் பூங்கொத்து கொடுத்து அனுப்பினேன். தொலைபேசியில் சில நேரங்களில் பேச நான் முயற்சி செய்துள்ளேன். அந்த முயற்சியில் அவர் வெளிப்படையாக கலந்துரையாட வரவில்லை என்பதுதான் எனது கவலை.
கடந்த முறை டெல்லி வந்தபோது பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்தீர்கள். தெலங்கானா, புதுச்சேரி என இரு மாநில ஆளுநர் பொறுப்பை ஒருசேர கவனிப்பது உங்களுக்கு சோர்வைத் தரவில்லையா? உங்களுடைய பணிச்சுமையை குறைக்குமாறு அவர்களை கேட்டுக் கொண்டீர்களா?
எனது பொறுப்புகளை நான் சோர்வாகவே நினைக்கவில்லை. புதுச்சேரியிலும் சரி, தெலங்கானாவிலும் சரி எனது பணியை நான் விரும்பியே செய்கிறேன். ஒரு ஆளுநர் ஏழு நாட்களுக்கு ஒருமுறை விடுப்பு எடுக்கலாம், வேறு மாநிலம் செல்லலாம், சொந்த வேலையை பார்க்கலாம். ஆனால், இதுநாள்வரை நான் எந்த விடுப்பும் எடுக்காமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறேன். தெலங்கானாவில் தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் இணைந்து ஆரம்பம் முதல் பணியாற்றுகிறேன். ஆரம்பத்தில் பதுகமா, போனாலுவில் தொடங்கி எல்லா மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். புதுச்சேரியில் தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றும்போது எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அங்கு முதல்வரும் ஆளுநரும் இணைந்து பணியாற்றும்போது மக்களுக்கு நல்லது நடக்கிறதே என எதிர்கட்சிகள் அதை சகித்துக் கொள்ளாமல் அரசியல் செய்கிறார்கள்.

இரண்டு மாநிலம் வேண்டாம், ஒன்றே போதும் என ஒருபோதும் நீங்கள் மத்தியில் உள்ள தலைவர்களிடம் கேட்டுக் கொள்ளவில்லையா?
இரண்டு மாநிலங்களையும் நான் எனது இரண்டு கண்களாகவே கருதுகிறேன். இரட்டை குழந்தைகள் பிறந்தால் எப்படி பேதைமை பார்க்காமல் வளர்ப்பார்களோ அப்படித்தான் நான் பார்க்கிறேன். ஏற்கெனவே தெலங்கானாவில் பழங்குடி மக்களுக்கு சார்பான அணுகுமுறையை நான் கடைப்பிடிக்கிறேன். புதுச்சேரியில் என் தமிழ் மக்களுக்காக பணி செய்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது அதை வாய்ப்பாகத்தானே கருதி செயல்பட முடியும்.
ஆனால், சமீப நாட்களாக தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானாவில் இருந்து மாற்றப்படுவார் என்பது போல ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே... அதை எப்படி பார்க்கிறீர்கள்?
மாற்றப்படலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் நான் தென் மாநிலத்திலேயே தான் நியமிக்கப்படுவேன் என்கிறார்கள். சிலர் கேரளாவுக்கு மாற்றலாவேன் என்கிறார்கள். ஆனால், எல்லா தகவல்களுமே அடிப்படை ஆதாரமற்றவை.
புதுச்சேரியில் எதிர்கட்சிகள் உங்களுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிடுகிறார்கள். தெலங்கானாவில் ஆளும் கட்சியினரே விமர்சனங்களை வெளியிடுகிறார்கள். இந்த சூழல்களை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் தலையிடும் விஷயங்களில் எல்லாமே நன்றாக நடக்கிறது என்பதுதான் அவர்களுக்கு கவலையாக இருக்கலாம். புதுச்சேரியில் கூட தேநீர் விருந்தை புறக்கணித்தனர். இத்தனைக்கும் நான் தமிழால் இணைவோம் என்றுதான் அழைப்பு விடுத்தேன். அதில் கூட அரசியலை ஏன் புகுத்துகிறீர்கள் என்று நான் கேட்கிறேன். அந்த நிகழ்ச்சியில் கூட வந்தவர்களுக்கு வணக்கம், வராதவர்களுக்கும் வணக்கம் என்றுதான் நான் பேசினேன். இதுபோன்ற நிகழ்வில் கூட அரசியலைப் புகுத்தினோம் என்றால், எதிர்கால சமுதாயத்தினருக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம்? புதுச்சேரி முதல்வர் கூட இப்படிப்பட்ட ஆளுநர் கிடைத்ததற்கு நன்றி என மத்திய அரசிடம் கூறினார். இதுபோல தெலங்கானாவிலும் நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அரசியலை ஆளுநர் மீது புகுத்துகிறார்கள். எதிர்க்க வேண்டும் என ஒரு முடிவெடுத்துக் கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள். ஆளுநருக்கும், அரசுக்கும் என சில அதிகாரங்கள் உள்ளன. அவை அரசியலமைப்பு ரீதியான பொறுப்புகளாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர தனிப்பட்ட நடவடிக்கைகளாக கருதப்படக் கூடாது. எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டால் நாங்கள் ஆளுநருக்கு இணக்கமாக இருப்போம். இல்லாவிட்டால் இணக்கமற்று இருப்போம் என சொல்வது எப்படி நியாயமாகும்? இத்தகைய நிலைமை, இங்கு மட்டுமல்ல, எங்கெல்லாம் எதிர்கட்சிகள் ஆளுகின்றனவோ அங்கெல்லாம் இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கவே செய்கிறது.

பொதுவாகவே மத்தியில் ஆளும் கூட்டணிக்கு எதிராக உள்ள கட்சி ஒரு மாநிலத்தில் ஆளுகிறதென்றால், அங்குள்ள கட்சிகள் ஆட்டுக்கு தாடி போல மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்று சொல்வதை கேட்டிருப்போம். இது பற்றிய உங்களுடைய பார்வை என்ன?
நமது அரசியலமைப்பு, கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. பாபா சாஹேப் அம்பேத்கரை உலக அளவில் போற்றக் காரணம் அவர் நமக்கு வழங்கிச் சென்ற அரசியலமைப்புதான். அவர் குறிப்பிட்டுள்ள அந்த குடியரசு தினத்தைக் கூட உதாசீனப்படுத்தினால் நாம் எப்படி இந்த சூழலை அணுகுவது? ஆளுநர் பதவி, முதல்வர் பதவி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் பெரியவர்கள், நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் சிறியவர்கள் என்றெல்லாம் சிலர் கருதுவதுண்டு. எல்லா பொறுப்புக்கும் ஒரு கடமை வரையறுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தராசில் எது பெரியது என்றெல்லாம் கூற முடியாது. அவரவர் பணிக்கென அவரவர் நியமிக்கப்படுகிறார்கள். அந்த நியமனத்தை நாம் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த இயல்பு நம்மிடம் இருந்து ஏன் போகிறது என்பதுதான் எனது கேள்வி. சாதாரண அழைப்பிதழ் விடுப்பதைக் கூட அரசியலாகப் பார்க்கிறார்கள். தமிழால் கூட நாம் சேராவிட்டால் எப்படி நாம் சேருவோம் என புதுச்சேரியில் பேசினோம். புதுச்சேரியில் சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுக்கு புதுச்சேரியைப் பற்றி என்ன தெரியும்? அதனால்தான் முத்தரசன் பேசியதற்கு எதிர்வினையாற்றும்போது தினந்தோறும் புதுச்சேரி ஆற்றும் நிர்வாகப் பணி குறித்து உங்களுக்கு என்ன தெரியும் என கேட்டிருந்தேன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பல முக்கிய கட்சித் தலைமையில் உள்ளவர்களுடன் சிறந்த நட்புறவை கொண்டிருக்கிறீர்கள். அவர்களுடன் பேசினாலே நீங்கள் பணியாற்றும் புதுச்சேரியில் உள்ள அந்த கட்சிகளின் நிர்வாகிகள் எதிர்ப்புக்குரலை மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடுமே... அதை நீங்கள் முயற்சிக்கவில்லையா?
அது என்னுடைய வேலை இல்லைதானே... புதுச்சேரியில் நான் எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். சென்னையில் எப்படி செயல்பட்டார்களோ அதுபோலவே புதுச்சேரியிலும் நடக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். இதே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புதுச்சேரி விமான நிலையத்துக்கு நிலம் ஒதுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். நான்கு வழிச்சாலைக்கு நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தனர். கொரோனா காலத்தில் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது.. இதை அரசு தலைமை செயலாளர் சுட்டுக்காட்டியபோது, மாநிலவாரியாக மக்களை பிரித்துப் பார்க்கக் கூடாது என்று அவரிடம் நான் அறிவுறுத்தினேன். இப்படிப்பட்ட நிர்வாகம் நடக்கும் இடத்தில் அதற்கு உதவியாக இருக்கும் ஆளுநரை வேண்டுமென்றே இலக்கு வைக்கிறார்கள். பழுத்த மரத்தில்தானே கல்லடி படும் என்ற பழமொழி உண்டு. அப்படித்தான் எனக்கு எதிராக செயல்படுபவர்களின் செயல்பாடுகளை நான் பார்க்கிறேன்.

ஒரு பெண் ஆளுநராக இத்தகைய பிரச்னைகளை சந்திக்கும்போது அவை உங்களைக் காயப்படுத்தவில்லையா?
நான் காயப்படுத்தப்பட்டதாக உணரவில்லை. சிஸ்டம் பின்பற்றப்பட வேண்டும் என விரும்புகிறேன். ஆளுநர், முதல்வர் என ஒவ்வொரு பதவிக்கும் ஒரு நெறிமுறை உண்டு. அரசியலமைப்பு சட்டத்தில் அவற்றுக்கென ஒழுங்குமுறை நடவடிக்கைகள் உள்ளன. அவை மீறப்பட வேண்டுமென்றால் பிறகு அவை எதற்காக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு குடியரசு தலைவர் வருவதாக இருந்தாலோ ஆளுநர் வருவதாக இருந்தாலோ அந்த பதவிக்கென ஒரு நெறிமுறை விதிகள் உள்ளன. அது வெறும் வணக்கம் செலுத்துவது அல்ல. அந்த சிஸ்டத்தை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்பதுதான் எனது கோரிக்கை. தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்காக அதை மீறாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஏதோ அரசியல்வாதி பெண் என்பதால் அரசியலுக்குள் வரவில்லை. மருத்துவத்துறையில் பிரபல மருத்துவராக பணியாற்றிய பிறகே அரசியலுக்குள் வந்தேன். அதனால் எனது வேலை மக்கள் பணி, இந்த தேசத்துக்கான பணி என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்தப் பணி எந்த வகையிலும் களங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது நேர்மையிலோ பணியிலோ ஈடுபாட்டிலோ யாரும் எதுவும் என்னை சொல்ல முடியாது. எதிர்கட்சிகளோ என்னை பிடிக்காதவர்களோ எத்தனை வகையான தொந்தரவைக் கொடுத்தாலும் தமிழிசை என்பவள் கடைசிவரை இதே பலத்துடனும் உறுதியுடனும் இந்திய பொதுவாழ்க்கையில் இதே பலத்துடன் இருப்பேன்.

பட மூலாதாரம், PMO
இந்தி மொழி திணிப்பு பற்றி தமிழ்நாட்டில் பரவலாக பேசப்படுகிறதே.. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
இதில் திணிப்பு என்பது ஒன்றுமில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு புதிய மொழிகளை கற்றுக் கொள்கிறோமோ அது நமக்குத்தான் நல்லது. ஆனால், கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னாலே அதனால் ஒரு பிரச்னையை தூண்டி விடும் போக்கு தமிழ்நாட்டில் உள்ளது. நமது மூளை சிறிய வயதாக இருக்கும்போது எத்தனை மொழிகளையும் கிரகித்துக் கொள்ளும். இதை நான் ஒரு மருத்துவராகவும் கூறுவேன். உதாரணமாக, இப்போது தெலுங்கு மொழியை நான் இந்த வயதில் கூடுதலாக கற்க சிரமப்படுகிறேன். ஆனால், இந்த சிரமத்தை தடுக்க உதவுவதுதான் நமது புதிய கல்விக்கொள்கை. இன்னொரு மொழி கற்கும்போது வேலைவாய்ப்பு எளிதாகக் கிடைக்கும். கூடுதல் மொழி கற்பதால் தாய்மொழி சிறுமைப்படுத்தப்படுவதில்லை. இன்னொரு மொழியை கற்கும் அதேவேளை எனதுதாய்மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும். ஆனால், வேற்று மொழியை யாரும் திணிக்க முற்படவில்லை. உள்துறை அமைச்சர் கூட இந்தி மொழியை இணைப்பு மொழி என்றுதான் சொன்னார். என் நாட்டு மொழியா, வேற்று நாட்டு மொழியா என வரும்போது என் நாட்டில் அதிகம் பேசும் மொழியாக இந்தியை பார்க்கலாம். காரணம், அந்த மொழி பேசும் மக்களுக்கு அது தாய்மொழி. தெலுங்கு, தமிழ் பேசும் மக்களுக்கும் அவரவர் தாய்மொழியே பிரதானம். இதை ஊடகங்கள் முழுமையாக அறிந்து சரியான தகவலை போடாமல் விடுவதால்தான் பிரச்னைகள் பெரிதாகின்றன. பல நேரங்களில் தலைவர்கள் பேசும் கருத்துக்கள் தவறாக செய்திகளாகி விடுவது பல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது.
தொழில்முறை மருத்துவர் என்ற முறையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு அவசியமா? உங்களுடைய கருத்து என்ன?
இந்த விஷயத்தில் நான் ஒரு விஷயத்தை முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் நீட் வேண்டும் என்றால் உடனே நான் தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக பேசுவதாக கருதிக் கொள்ளக்கூடாது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளில் சேர தேர்வு இருப்பது போல, உயிர் சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை படிப்புகளில் சேரவும் நீட் போன்ற தேர்வு அவசியம் என்பது எனது கருத்து. இந்த நடைமுறை உலக அளவில் இருக்கிறது. எல்லா மாநிலங்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. பாமர மக்களுக்கும் அது வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கிறது. எல்லா மாநிலங்களும் அதன் பயனை உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதை நாம் சரியாக புரிந்துள்ளோமா, மறுபடியும் மறுபடியும் இதை எதிர்ப்பதற்கு பதிலாக, நீட் தேர்வை எதிர்கொள்ள நாம் நமது மாணவர்களை தயார்படுத்துகிறோமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு. அது எல்லாவற்றையும் ஆலோசித்து எல்லா அம்சங்களையும் கவனத்தில் கொண்டு வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் நீட் தேர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. நமது கல்வி நிறுவன அமைப்பு சர்வதேச தர பட்டியலில் இடம்பெறவில்லை. அதை கருத்தில் கொண்டே இந்திய கல்வி முறையை சர்வதேச அளவில் அமல்படுத்த புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது பிரதமரின் உலகளாவிய பார்வை. ஆனால், நான் நீட் வேண்டும் என கூறியவுடனேயே ஒரு சிலர் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி விடுவார்கள். ஆனால், அம்புகள் வந்து தைத்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் எங்களுடைய கருத்தை பிரதிபலித்து வருகிறோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












