மு.க.ஸ்டாலின் விளக்கம்: ஆளுநரோடு விரோதம் இல்லை, ஆனால் ஏன் தேனீர் விருந்துக்குப் போகவில்லை?

ஸ்டாலின்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது ஏன் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார். அத்துடன், ஆளுநரோடு தங்களுக்கு தனிப்பட்ட முறையில் விரோதம் ஏதுமில்லை என்றும் அவர் பழகுவதற்கு இனியவர் என்றும் சட்டமன்றத்தில் கூறினார் ஸ்டாலின்.

தமிழ்ப் புத்தாண்டு, பாரதியார் சிலை திறப்பு விழா ஆகியவற்றை ஒட்டி, ஆளுநர் தமது ராஜ்பவன் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த தேனீர் விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதப்படுத்தும் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேனீர் விருந்து நிகழ்ச்சியை தவிர்ப்பதாக தமிழ்நாடு அரசு சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அவர் அளித்த அறிக்கையில்,

"தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்மொழிவு கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கி கிடக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட முன்வடிவு கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பார் அற்று கிடக்கிறது. அப்படிப்பட்ட வேளையில் அதே ஆளுநர் மாளிகையில் நடைபெறுகின்ற தேனீர் விருந்தில் கலந்து கொள்வது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சட்டமன்ற மாண்பினை மேலும் சிதைப்பதாகவும் அமையும் என்பதால் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாத நிலை இந்த அரசுக்கு ஏற்பட்டது" என்று குறிப்பிட்டார்.

இது திமுக அரசு ஏற்கெனவே அறிவித்த நிலைப்பாடுதான். மேலும் இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின்,

"இதுகுறித்து நானே ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். அதில் விவரங்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளது. ஆளுநருடன் எங்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை.

சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு முதலைமைச்சரான எனக்கும் மிக மிக சுமுகமான உறவு இருக்கிறது," என்று கூறியுள்ளார்.

பழகுவதற்கு இனியவர்

மேலும் இது பற்றிப் பேசிய ஸ்டாலின், "நேரில் பேசும்போது இந்த ஆட்சியின் செய்லபாடுகளை ஆளுநர் பாராட்டி பேசியிருக்கிறார்.

ஆளுநர் அவர்கள் பழகுவதற்கு அதிகம் இனிமையானவர்.

ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்கான மரியாதையை நாங்கள் தொடர்ந்து அளிப்போம். இது அரசியல் எல்லைகளை கடந்த பண்பாடு.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பாதது இந்த சபையின் மாண்புக்கு விரோதமானதாகும்.

ஆளுநர் அவர்கள் மசோதாவை அனுப்பி வைக்காதது என்பது என்னை அல்ல, இந்த தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கக்கூடிய செயலாகும்.

தமிழ்நாட்டின் மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இருக்கக்கூடிய நீட் விலக்கு சட்ட முன் வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கியம். அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலைமைச்சராக இந்த சட்டமன்றத்தின் மாண்பை காக்க வேண்டிய பொறுப்பும் என்னுடையது என்பதை புரிந்து கொண்டதால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது," என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஆளுநர் ரவி

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை இந்த சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில், 8.2.2022 நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம் இன்றுடன் 70 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அதுதொடர்பான நடவடிக்கைகளை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக மருத்துவப் படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தகுதித் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு செய்துள்ளதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்தது.

இது தொடர்பாக மாநில ஆளுநர் செயலகம் மூலம் தமிழ்நாடு முதல்வருக்கு முறைப்படி ஓரிரு தினங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :