நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தமிழ்நாடு ஆளுநர் முடிவு

- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு செய்துள்ளதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மாநில ஆளுநர் செயலகம் மூலம் தமிழ்நாடு முதல்வருக்கு முறைப்படி ஓரிரு தினங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று தேர்தல் பரப்புரை செய்து வாக்குகளை ஈர்த்தது ஆளும் திமுக. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது பற்றி ஆராய நீதிபதி ராஜன் குழுவை நியமித்த அரசு, பிறகு அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மாநில சட்டப்பேரவையில் சட்டமியற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் திமுக அரசு அனுப்பி வைத்தது.
ஆனால், அந்த மசோதாவை பரிசீலனை செய்வதாகக் கூறி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 142 நாட்களுக்குப் பிறகு மசோதாவில் சில ஆட்சேபங்களைக் குறிப்பிட்டு சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய செயலுக்கும் சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அந்த மசோதா மீண்டும் கடந்த மார்ச் 13ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. பிறகு அதற்கு ஒப்புதல் வழங்கி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறும் கூறி மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவை அனுப்பி வைக்கும்போது, சட்டப்பேரவையில் மாநில பட்டியலின்கீழ் உள்ள விவகாரங்கள் தொடர்பான மசோதாக்கள் சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டால் அதை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஆளுநர் மீது ஆளும் கட்சி அதிருப்தி

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக ஆளுநரிடம் நேரில் கேட்டுக் கொண்டபோதும் மசோதா மீதான தனது நிலைப்பாட்டில் ஆளுநர் உறுதி காட்டி வந்ததாக திமுகவினர் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரத்தில் பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவி, "அரசியலமைப்பின் 200ஆவது பிரிவு ஆளுநரின் செயல்பாடுகள், அதிகாரம் தொடர்பாக வரையறுத்திருந்தாலும், அரசியலமைப்பின் 168ஆவது பிரிவின்படி ஆளுநரும் மாநில சட்டப்பேரவையின் அங்கம்தான்" என்று கூறியிருந்தார்.
மேலும், நீட் விலக்கு மசோதா மட்டுமின்றி மேலும் சில மசோதாக்கள் நிலுவையில் இருப்பது தொடர்பாக மாநில அரசுக்கு கடிதம் எழுதியபோதும் அதற்கு உரிய பதில் வரவில்லை என்பதால் அவை கிடப்பில் உள்ளதாக ஆளுநர் தரப்பு கூறியிருந்தது.
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு மற்றும் பாரதியார் உருவச்சிலை திறப்பு விழாவையொட்டி ஆளுநர் தமது ராஜ்பவன் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதப்படுத்தும் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தவிர்ப்பதாக தமிழக அரசு சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த நிகழ்ச்சி நடந்த தினத்தன்று காலையில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் மாநில ஆளுநரை சந்தித்துப் பேசினார்கள். அப்போது நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது பற்றி ஆளுநர் உறுதியான பதிலை வழங்காததால் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மசோதா தொடர்பான தமது பரிசீலனை மற்றும் குறிப்பெழுதும் பணிகள் முடிந்து விட்டதால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக மாநில ஆளுநர் ரவி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
போர்க்கொடி உயர்த்த திட்டம்
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு எதிர்ப்பு வலுத்து வரும் வேளையில், அவர் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் கருப்புக் கொடி காட்டுவோம் என சில திராவிட அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
வரும் 19ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்கக் கூடாது என்றும் அவர் திரும்பிச் செல்ல வலியுறுத்தும் முழக்கத்தை எழுப்புவோம் என்று கூறி விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் உள்பட 13 கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டாக கையெழுத்திட்ட மனு தருமாபுரம் ஆதினத்திலேயே ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
இத்தகைய சூழலில் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்துள்ள தகவல், நீடித்து வரும் மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையிலான பனிப்போர் போன்ற சூழலை தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் விலக்கு மசோதா மட்டுமின்றி மேலும் சில மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு செய்து விட்டாரா என்று அவரது தரப்பிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, அவை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












