தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுக நாளேடு முரசொலி மீண்டும் தாக்குதல்

ஆர்.என்.ரவி

பட மூலாதாரம், R.N. RAVI

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு அரசின் 'நீட்' எதிர்ப்பு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீது ஆளும் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான 'முரசொலி' மீண்டும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

இன்று வெளியாகியிருக்கும் முரசொலியின் தலையங்கத்தில் 'நீட்' விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதில் ஆளுநர் காட்டும் தாமதம் துளியும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அடுத்த 'நீட்' தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தனது அரசியல் விருப்பு வெறுப்புகளை இதில் செலுத்தியோ அல்லது தவறான சில மனிதர்களின் வழிகாட்டுதல்படியோ ஆளுநர் தாமதிப்பதென்பது அவர் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்ப்பதாகாது.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 'நீட்' விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. நவம்பர் 27ஆம் நாள் ஆளுநரைச் சந்தித்து முதல்வர் வலியுறுத்தினார். டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் ஆளுநர் முடிவெடுக்கவில்லை. பிப்ரவரி 1ஆம் தேதி பேரவைத் தலைவருக்குத் திருப்பி அனுப்பினார் ஆளுநர். அதனையே அறிக்கையாக ஆளுநர் மாளிகை வெளியிட்டது. இதனை ஆளுநர் மாளிகை அறிக்கையாக வெளியிட்டது சரிதானா என்று சபாநாயகர் எழுப்பிய கேள்வியும் வலிமையானதே.

ஆளுநரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட அதே சட்ட மசோதாவை மீண்டும் பிப்ரவரி எட்டாம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியது. அதே ஆளுநருக்கு அனுப்பியது. இது குறித்து ஆ. ராசா கேட்ட எழுத்துபூர்வமான கேள்விக்கு, பதில் அளித்த உள்துறை அமைச்சகம் இன்னும் சட்டமசோதா எங்களுக்கு வரவில்லையென பதிலளித்துள்ளது.

இந்த நிலையில் அட்டர்னி ஜெனரல் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆளுநர் யார் கருத்தையும் கேட்பதைப் பற்றி ஆட்சேபனை இல்லை. அவர் எப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பார் என்பதுதான் ஒரே கேள்வி.

அவருக்கு மாற்றுப் பாதை இல்லை. குடியரசுத் தலைவருக்குத்தான் அவர் அனுப்பிவைக்க வேண்டும். சட்டமசோதாவைத் திருப்பி அனுப்பும் அளவுக்கு கட்டற்ற அதிகாரம் ஆளுநர்களுக்குத் தரப்படவில்லை. அப்படி நடந்துகொள்வது அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு முரணானது. சட்டமன்றங்களின் மாண்புக்கு விரோதமானது.

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்ட முன்வடிவு சரியானதா இல்லையா என்பதை அட்டர்னி ஜெனரலை வைத்து குடியரசுத் தலைவர் ஆய்வு நடத்திக்கொள்வார். குடியரசுத் தலைவரின் பணியை ஆளுநர் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

கேபினட் சிஸ்டத்துக்கு எதிரானது

ஆளுநர் நடந்துகொள்ளும் முறை இன்றைய கேபினட் சிஸ்டத்திற்கு எதிரானது. 1920ஆம் ஆண்டுகளில் அமலில் இருந்த இரட்டை ஆட்சி முறை அமலில் இருப்பதைப் போல ஆளுநர்கள் செயல்பட முடியாது" என அந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீது முரசொலி தாக்குதல் தொடுப்பது இது முதல்முறையில்லை. ஏற்கனவே கடந்த ஜனவரி 29ஆம் தேதியன்று ஆளுநரைப் பற்றி கடுமையான கட்டுரை ஒன்றை முரசொலி வெளியிட்டது.

''கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி'' என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில் ஆளுநரின் குடியரசு தின வாழ்த்துச் செய்தியை மையமாக வைத்து கடுமையான கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

"அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து, ஓய்வுக்குப் பின்னர் கவர்னராக அமர்த்தப்பட்டவர். மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல் துறைக்குத் தேவை. பல நேரங்களில் அந்த பாணி கைகொடுக்கும். ஆனால், அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டின் ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டபோதே, அவரது நியமனம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில், ஜனவரி மாதத்தில் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க தமிழ்நாடு எம்.பிக்களுக்கு நேரம் வழங்கப்படாத நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, ஆளுநர் குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். "ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும்" என்று கூறினார்.

நீட்

பட மூலாதாரம், Getty Images

இதற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் வகையில் அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை கேள்விக்குட்படுத்தும் வகையில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டார் ஆர்.என். ரவி. இதையடுத்தே அவரைக் கண்டித்து முதல் முறையாக எழுதியது முரசொலி.

இப்போது கண்டிக்க என்ன காரணம்?

தற்போது முரசொலி மீண்டும் ஆளுநரைக் கண்டித்திருப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மார்ச் 30ஆம் தேதியன்று தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ரவி, "சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல" என்று குறிப்பிட்டார்.

அதனை 'டார்வினியன் மாடல்' என்று குறிப்பிட்ட ஆளுநர், "சில புத்திகூர்மையுள்ளவர்கள் எல்லாப் பலன்களையும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிடுகிறார்கள்" என்று குறிப்பிட்டார். "இதனால், சுதந்திரமடைந்து சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஏழ்மையான, எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

அனிதா இறந்த சில நாள்களில் 2017 செப்டம்பரில், என்.எஸ்.யு.ஐ. அமைப்பினர் பெங்களூருவில் நடத்திய நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அனிதா இறந்த சில நாள்களில் 2017 செப்டம்பரில், என்.எஸ்.யு.ஐ. அமைப்பினர் பெங்களூருவில் நடத்திய நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

"பிரதமர் மோதியின் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல் என்பது உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, மின்சாரம், சமையல் எரிவாயு, ஆரோக்கியமான குடிமக்களுக்கான எல்லா அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை எல்லோருக்கும் பாகுபாடின்றி அளிப்பதுதான்" என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு, தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான தி.மு.க. முன்வைத்துவரும் திராவிட மாடல் என்ற கோஷத்திற்கு பதிலடியாக சொல்லப்பட்டதா என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் பலரும் எழுப்பினர். இந்த நிலையில்தான், இன்று முரசொலி ஆளுநரைத் தாக்கி தலையங்கத்தை வெளியிட்டுள்ளது.

'ஒற்றை அரசு என்ற சித்தாந்தத்தின் பிரதிநிதி'

"தி.மு.க. பதவியேற்றதிலிருந்தே 'ஒன்றியம்', 'திராவிட மாடல்', 'சமூக நீதி' என அனைத்திந்திய அளவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்கள். அது பா.ஜ.கவுக்கு சித்தாந்த ரீதியாக எதிர் நிலையில் இருக்கிறது. பா.ஜ.கவால் இங்கே குஜராத் மாடல், உத்தரப் பிரதேச மாடல் போன்றவற்றை பேச முடியாது. மேலும் தமிழ்நாடு மாடலை குறைசொல்லவும் முடியாது. திராவிட மாடல் என ஒன்று உருவாவதென்பது பா.ஜ.கவுக்கு சிக்கலாக இருக்கிறது. அந்தப் பின்னணியில்தான் ஆளுநர் பேசுகிறார். அவர் 'நீட்' மசோதா மட்டுமல்ல, பல்வேறு விஷயங்களில் அப்படித்தான் செயல்படுகிறார். தமிழ்நாடு அரசு ஒட்டுமொத்தமாகவே செயல்படாமல் இருக்க வேண்டும். அதுதான் அவரது விருப்பம்.

தி.மு.க. ஒரு எதிர்க்கட்சி என்பதால் இதைச் செய்யவில்லை. மாறாக தி.மு.க. ஒரு எதிர் சித்தாந்தத்தை முன்வைக்கிறது. தமிழ்நாடு ஒரு எதிர் சித்தாந்தத்தை முன்வைக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்த வெற்றிகரமான மாடலை உடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தற்போதைய ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி மட்டுமல்ல, ஒற்றை அரசு என்ற சித்தாந்தத்தின் பிரதிநிதியும்கூட. இந்தப் பின்னணியில்தான் ஆளுநரின் செயல்பாட்டைப் பார்க்க வேண்டும். ஆளுநர் மீதான தாக்குதலையும் புரிந்துகொள்ள வேண்டும்." என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆழி செந்தில்நாதன்.

பாஜக சொல்வதென்ன?

ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநரை குறைசொல்வதை விட்டுவிட்டு, உச்ச நீதிமன்றத்தை தி.மு.க. நாட வேண்டும் என்கிறார் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி. "ஆளுநர் தன் கடமையைச் செய்கிறார். சட்டம் சொல்வதைத்தான் அவர் செய்கிறார். நீட்டைப் பொறுத்தவரை ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பதை விட்டுவிட்டு, தி.மு.க. உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். மாணவர்களிடம் குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்தில்தான் இதுபோலச் செய்கிறது. நீட் தேர்வில் சட்ட ரீதியான பிரச்சனை இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்" என்கிறார் அவர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :