வரலாற்றில் ஆர்பிஐ: அம்பேத்கரின் உறுதிப்பாட்டால் உருவான இந்தியாவின் 'மத்திய வங்கி'

1923 ஆம் ஆண்டு லண்டனில் வெளியானது டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 'த ப்ராப்ளம் ஆஃப் ருபீ' என்ற புத்தகம். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் தனது ஆராய்ச்சிப் படிப்புக்கான தலைப்பாக இதைத் தான் அவர் தேர்ந்தெடுத்தார். அப்போது அவருக்கு வயது 32 தான். இந்தியப் பொருளாதாரத்திலும் அதில் ஆதிக்கம் செலுத்திவந்த பிரிட்டன் பொருளாதாரத்திலும் இந்த ஆய்வு ஒரு உறுதியான பங்களிப்பைச் செய்தது. இந்தப் புத்தகத்தில் வெளியான விவாதங்களும் முடிவுகளும் இந்திய ரிசர்வ் வங்கி உருவாகக் காரணமாயின.
டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் என்பது அனைவரும் அறிந்தது. இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக சாதி அமைப்பின் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட தலித் சமூகத்தை அவர் அணிதிரட்டினார். இந்தப் புரட்சியைத் தனி ஒருவராக இருந்து மேற்கொண்டதையடுத்து, இவர், மஹாமானவ் (ஒரு பெரிய மனிதர்) என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆளுமை வியத்தற்குரியது. மதம், மானுடவியல், சமூக அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் பலவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டவர் அவர். ஆனால், அவருடைய எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களில் இருந்து அவரது இதயத்திற்கும் அறிவுக்கும் மிகவும் நெருக்கமான விஷயம் பொருளாதாரம் தான் என்பது தெளிவாகிறது.
பொதுவாக, ஒரு பொருளாதார நிபுணராக, டாக்டர் அம்பேத்கரின் பணி, அரசியல் சாசன உருவாக்கம் மற்றும் சாதி அமைப்புக்கு எதிரான அறப்போராட்டத்திற்குப் பிறகும்தான் பேசப்படுகிறது. ஆனால் டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள் அவரது வாழ்க்கையின் பல தசாப்தங்களில் பரவியுள்ளன. அவரது சிந்தனைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு வழிகாட்டியாக அமைந்தன.
அவரது பொருளாதார யோசனைகள் இந்தியாவின் மத்திய வங்கியை நிறுவுவதற்கு வழிகாட்டின. ஆனால் அவரது பணி மற்றும் எண்ணங்கள் உலகத்தாரால் பரவலாக அறியப்படவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் ஒரு பெரிய அறிவுசார் விவாதம் தொடங்கி, அதுவே, இந்திய ரிசர்வ் வங்கி உருவாவதற்குக் காரணமாயிருந்தது. இதில், டாக்டர் அம்பேத்கரின் பங்கு தீவிரமாக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியை நிறுவுவதில் டாக்டர் அம்பேத்கரின் இந்திய நாணயத்தின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை பகுப்பாய்வு ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தது என்று பல பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
1773-1935: இந்திய வங்கி அமைப்பு மத்திய வங்கியை உருவாக்கியது எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கி 1 ஏப்ரல் 1935 இல் நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவின் அந்நியச் செலாவணியைக் கண்காணித்து, செலாவணி தொடர்பான நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும், நாட்டின் உச்ச வங்கியாகும். இந்தியப் பொருளாதாரம் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகைக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முறையான ஆட்சியை நிறுவுவதற்கும் இடையே பல மாற்றங்களைச் சந்தித்தது. இந்த இடைநிலைக் காலத்தின் முக்கியமான பகுதியாக வங்கி இருந்தது. நாட்டில் வங்கி அமைப்பு படிப்படியாக வளர்ந்தது. இந்தப் பயணத்தின் திருப்பங்களை ராகுல் பஜோரியா தனது 'த ஸ்டோரி ஆஃப் த ரிசர்வ் பாங்க்' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
வாரன் ஹேஸ்டிங்ஸ் கிழக்கிந்திய கம்பெனி மூலம் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் அடித்தளத்தை அமைத்த மூத்த நிர்வாகிகளில் ஒருவர். நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை எளிதாக்க பெங்கால் மற்றும் பீகார் பொது வங்கியை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அவர் 1773 இல் முதலில் குறிப்பிட்டார். அவரது முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. ஆனால், பின்னர் நிறுவனத்தின் கிளைகள் விரிவடைந்ததும், 1806 ஆம் ஆண்டில் பெங்கால் வங்கி நிறுவப்பட்டது, மேலும் அதன் சொந்த நாணயத்தை வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் விநியோகிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தியதால், 1840 இல் பாங்க் ஆஃப் பாம்பேவும் 1843-ல் பாங்க் ஆஃப் மெட்ராஸ்-ம் நிறுவப்பட்டன. மூன்று வங்கிகளும் பிரசிடென்சி வங்கிகள் என்று அழைக்கப்பட்டன, மேலும் அவை அவற்றின் மாகாணங்களில் பரிவர்த்தனைகளைக் கவனித்தன. 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் தொடங்கியது. இந்தியாவின் நிர்வாகம் நிறுவனத்திடமிருந்து ராணியின் அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டது. இது முறையான வங்கி முறையை மேலும் விரிவாக்க வழிவகுத்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் 1861 இல் காகித நாணயச் சட்டத்தை நிறைவேற்றி, நாணயம் தொடர்பான அனைத்து உரிமைகளையும் எடுத்துக் கொண்டது.

நாட்டில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒருங்கிணைக்க ஒரு மத்திய வங்கி இருக்க வேண்டும் என்று சிலர் கருதினர். அந்த நாட்களில், இந்திய நாணயம் வெள்ளிக்கு எதிராக மதிப்பிடப்பட்டது. ஆனால், 1892-ல் தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலை குறைந்தபோது, இந்திய நாணயத்திற்கான மறுஆய்வுக் குழு, பாங்க் ஆஃப் இங்கிலாந்தைப் போன்று இந்தியாவில் ஒரு மத்திய வங்கி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் பல வணிக நலன்கள் சம்பந்தப்பட்டிருந்ததால் இது எளிதான முடிவாக இருக்கவில்லை. அதனால், பல ஆண்டுகள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை.
1914 ஆம் ஆண்டில், சேம்பர்லின் கமிஷன் மூன்று பிரசிடென்சி வங்கிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அவற்றின் மீது ஒரு மத்திய, அதாவது அரசாங்க ஒழுங்குமுறை இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. மத்திய வங்கி பொது நிதி மற்றும் கடன்களை நிர்வகிக்கும், நாணய உற்பத்தியையும் கட்டுப்படுத்தும் என்று அந்த பரிந்துரை தெரிவித்தது. முதல் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் 1921 இல் இந்த மூன்று வங்கிகளையும் ஒன்றிணைத்து இம்பீரியல் வங்கியை நிறுவியது, ஆனால் அதற்கு நாணயம் தொடர்பாக எந்த உரிமையும் இல்லை. இறுதியில், 1955 ஆம் ஆண்டில் இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இருப்பினும், இந்த காலகட்டத்தில், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. 1917ல், போர் காரணமாக தங்கம் விற்பனையை அரசாங்கம் நிறுத்தியபோது, வெள்ளியின் விலை உயர்ந்து, ரூபாயின் மதிப்பு சரிந்தது. இந்திய ரூபாயின் முன் பல சவால்கள் இருந்தன. ஸ்டெர்லிங்குடன் ஒப்பிடும் போது ரூபாயின் மதிப்பு நிலையானதாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்திய நாணயத்தில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க, ஹில்டன் யங் கமிஷன் 1925 இல் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியை நிறுவுவதற்கான திசையில் இது ஒரு முக்கியமான படியாகும். இந்த நேரத்தில், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பங்களிப்பு தொடங்குகிறது. ஹில்டன் யங் கமிஷன் உறுப்பினர்கள் தங்கள் கைகளில் டாக்டர் அம்பேத்கரின் த ப்ராப்ளம் ஆஃப் த ருபீ புத்தகத்தின் பிரதிகளை வைத்திருந்தனர்.

பொருளாதார நிபுணர் டாக்டர் அம்பேத்கரும் அவரது புத்தகமும்
அவரது வாழ்க்கையில், மாணவப் பருவத்திலிருந்தே பொருளாதாரச் சிந்தனையின் இழையோடியிருந்தது. அவரது பொருளாதாரச் சிந்தனை இந்தியாவையும் அதன் வரலாறு-நிகழ்காலம்-எதிர்காலத்தையும் மையமாகக் கொண்டது. அவர் 1913 இல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான எட்வின் செலிக்னாம் அவர்களால் ஈர்க்கப்பட்டு முதுகலைப் பட்டத்திற்குப் பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்தார். எம்.ஏ. படிப்புக்கான அவரது ஆய்வறிக்கை 'கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் மற்றும் நிதி' என்ற தலைப்பில் இருந்தது.
டாக்டர் அம்பேத்கர் 1792 மற்றும் 1858 க்கு இடைப்பட்ட காலகட்டத்தைத் தம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வேர்களைப் பரப்பிய காலகட்டம் இது. இது இந்தியாவில் நிர்வாக அமைப்பு மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை எவ்வாறு பாதித்தது என்பதையும், இந்தச் செயல்முறை இந்தியர்களை எவ்வாறு சுரண்டியது என்பதையும் டாக்டர் அம்பேத்கர் தனது ஆய்வறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டார். ஒரு புறம், இந்தியாவில் மக்களின் நிதி நிலையில் மாற்றம் ஏற்பட்டது என்றால், மறு புறம் ஆங்கிலேயரின் பொருளாதார அடிமைகளாக இந்தியர்கள் மாறினர் என்று துணிச்சலுடன் பதிவு செய்தார் டாக்டர் அம்பேத்கர்.
டாக்டர் அம்பேத்கர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் நுழைந்தபோது, பிரிட்டனிலும் இந்தியாவிலும் ரூபாயின் மதிப்பு பற்றிய விவாதம் வேகமெடுத்திருந்தது. ரூபாயின் உறுதியற்ற தன்மை மற்றும் அதற்குத் தேவையான ஸ்திரத்தன்மை, தங்கப் பரிவர்த்தனை தரநிலை மற்றும் தங்கத்துக்கான மாற்றத்தக்க தரநிலை ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வு, மத்திய வங்கியின் அத்தியாவசியம் மற்றும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போதுதான் டாக்டர் அம்பேத்கர் ரூபாய் பிரச்சனையை ஆய்வு செய்ய முடிவெடுத்தார், இதன் விளைவு தான் அவர் எழுதிய புத்தகம் - த ப்ராப்ளம் ஆஃப் த ருபீ.
அதற்கு முன், பேராசிரியர் கெய்ன்ஸ் இந்தப் பிரச்சனை குறித்து பகிரங்கமாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். டாக்டர் அம்பேத்கர் இந்தியாவிற்கான சிறந்த நாணய முறை எது என்பதில் பேராசிரியர் கெய்ன்ஸின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தார். மராட்டி நாளிதழான லோக்சத்தாவின் ஆசிரியரும் பொருளாதார நிபுணருமான கிரீஷ் குபேர், டாக்டர் அம்பேத்கருக்கும் பேராசிரியர் கெய்ன்ஸுக்கும் இடையேயான மோதல் குறித்து தனது 'அர்த்தசாஸ்திரி அம்பேத்கர்' (https:.www.loksatta.com/lokrang/lekha/dr-dr-babasaheb-ambedkar-as-an-economist-1225190/) கட்டுரையில் எழுதியுள்ளார்.

"பேராசிரியர் கெய்ன்ஸ் நாணயம் தொடர்பான விஷயங்களில் உலக அளவில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். பேராசிரியர் கெய்ன்ஸ் என்ன செய்தார் என்பதை அறியாமல் இந்த விஷயத்தில் முன்னேறுவது சாத்தியமில்லை. ஆனால் டாக்டர் அம்பேத்கர், கரன்சியை மதிப்பிடுவதற்கான தங்கப் பரிவர்த்தனை தரநிலையை உறுதியாக ஆதரித்த பேராசிரியர் கெய்ன்ஸின் கருத்துக்களைத் துணிந்து எதிர்த்தார்." என்று எழுதுகிறார் குபேர்.
"தங்கப் பரிவர்த்தனை தரநிலையில், தங்கத்தின் மதிப்பின்படி நாணயத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த முறையைப் பின்பற்றும் நாடுகள், பேப்பர் கரன்சியை ஒரு நிலையான விலையில் தங்கமாக மாற்றுகின்றன. ஆனால், தங்கத்தின் மாற்றத்தக்க தரநிலையில், நாணயத்தில் சிறிது தங்கத்தைப் பயன்படுத்துகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கமும், பேராசிரியர் கெய்ன்ஸ் போன்றவர்களும், இந்தியா ஒரு காலனியாக இருப்பதால், நாணயத்திற்கு தங்கப் பரிவர்த்தனை தரநிலை இருக்க வேண்டும் என்று கருதினர். "
"ஆனால் டாக்டர் அம்பேத்கர் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்தார். தங்கப் பரிவர்த்தனை தரநிலை நிலையான மதிப்பைலக் கொடுக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார். தங்கப் பரிவர்த்தனை தரநிலை, ரூபாயை நிலைப்படுத்தும் என்ற பேராசிரியர் கெய்ன்ஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கூற்றை அவர் ஏற்கவில்லை. டாக்டர் அம்பேத்கர் தனது கருத்தை நிரூபிக்க 1800 முதல் 1893 வரையிலான நாணய மதிப்புகளை மதிப்பாய்வு செய்தார். இந்தியா போன்ற வளர்ச்சியடையாத நாட்டிற்கு தங்கப் பரிவர்த்தனை தரநிலை சரியான முறையல்ல என்பதை தேவையான உதாரணங்களுடன் நிரூபித்தார். மேலும், இது பணவீக்கத்தை ஊக்குவிக்கும்." என்றும் குபேர் எழுதுகிறார்.
"டாக்டர். அம்பேத்கர் அதோடு நிற்கவில்லை. அவர், இந்த விஷயத்தைப் பற்றிய தனது ஆழ்ந்த ஆய்வின் மூலம், பிரிட்டிஷ் அரசாங்கம் வேண்டுமென்றே தங்க மாற்றுத் தரத்தைப் பயன்படுத்தி ரூபாயின் மதிப்பை அதிகப் படுத்தி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார், மேலும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பிரிட்டிஷ் ஏற்றுமதியாளர்கள் அதிக லாபத்தைப் பெற வேண்டும் என்பதே இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்றும் கூறினார். பின்னர் டாக்டர் அம்பேத்கர் ரூபாயின் மதிப்பை குறைக்கக் கோரினார்.
யங் கமிஷன் முன் டாக்டர் அம்பேத்கரின் வாதம்
டாக்டர் அம்பேத்கரின் புத்தகம் பொருளாதாரத் துறையில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரிட்டிஷ் அரசாங்கம் ஹில்டன் யங் தலைமையில் ராயல் கமிஷனை நியமித்தது. 1925 ஆம் ஆண்டு இந்த ஆணையம் இந்தியாவிற்கு வந்து பிரச்சனையை ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இந்த ஆணையத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் டாக்டர் அம்பேத்கரின் ஆய்வறிக்கையைப் படித்திருந்தார்கள். எனவே, டாக்டர் அம்பேத்கர் கமிஷன் முன் தன் வாதத்தை வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.. அவர் சில நடைமுறை நடவடிக்கைகளை பரிந்துரைத்தார் மற்றும் அவரது புத்தகத்தின் அடிப்படையில் சிக்கலை பகுப்பாய்வு செய்தார். தங்கத்தின் மாற்றத்தக்க தரநிலையைப் பாதுகாப்பதற்கான அவரது வாதத்துக்குப் பிறகு, கமிஷன் உறுப்பினர்கள் சில விஷயங்களில் அவரது கருத்துக்களுக்குச் செவி மடுத்தனர். இந்த விவாதத்தின் விவரங்கள் பின்னர் வெளியிடப்பட்டன.
நாணயத்தின் இந்த சிக்கலான பிரச்சினையுடன், நாணயத்திற்கான மத்திய கட்டுப்பாட்டு அதிகாரம் வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் வலியுறுத்தல் இந்திய ரிசர்வ் வங்கியை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தது.
"ரூபாய்க்கு நிலையான மற்றும் நியாயமான உள் மதிப்பைக் கண்டறிதல், அதற்குத் தேவையான கட்டுப்படுத்தப்பட்ட பண விநியோகம், அரசாங்கத்திடம் இருந்து கரன்சி வெளியிடும் அதிகாரத்தைப் பறிக்கும் பிரச்சினை ஆகியவை குறித்த விஷயங்கள் அவரது புத்தகத்தின் பெரும்பகுதியாக இருந்தன. இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது நாணய வெளியீடு சீரற்ற முறையில் நடைபெறுவதாக அம்பேத்கர் அஞ்சினார். இதேபோன்ற எண்ணங்கள் பல உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்டன, மேலும் மத்திய வங்கிகளை அமைப்பது நடைமுறையில் இருந்ததால், இக்குழு, ஜூலை 1926 இல் சமர்ப்பிக்கப்பட்ட அதன் இறுதி அறிக்கையில், 'இந்திய ரிசர்வ் வங்கி' என்ற புதிய நிறுவனத்தை அமைக்கப் பரிந்துரைத்தது. இது நாணயத்தை வெளியிடுவதற்கும், மாற்று விகிதத்தை நிர்வகிப்பதற்கும் மற்றும் அரசாங்கத்திற்கு வங்கியாளராக மாறுவதற்கும் அதிகாரம் பெற்றிருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது" என்று ராகுல் பஜோரியா எழுதுகிறார்.
எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லியில் ஒரு கட்டுரையில், மூத்த பொருளாதார நிபுணரும், ராஜ்யசபா எம்பியுமான டாக்டர் நரேந்திர ஜாதவ், பொருளாதார நிபுணராக டாக்டர் அம்பேத்கரின் முக்கியப் பங்களிப்பைக் குறிப்பிட்டுள்ளார். "இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் வேறுபட்ட அமைப்பாக இப்போது அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அம்பேத்கரின் இன்றியமையாத செய்தி காலத்தால் அழியாதது. அம்பேத்கரின் அடிப்படைக் கருத்து என்னவெனில், நாணயத்தை வழங்குபவரின் விருப்புரிமையை ஒழுங்குபடுத்தும் வகையில் ஏதேனும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பு இருக்க வேண்டும் என்பதுதான்.

இன்று இந்தியா போன்ற உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ரிசர்வ் வங்கி கையாளும் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு, டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனை இந்த அமைப்பை இந்த திசையில் வழிநடத்தியது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
ரிசர்வ் வங்கி நிறுவல்
அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் யங் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று 1927 இல் ரிசர்வ் வங்கி மசோதாவைத் தாக்கல் செய்தது. நாணயத்தை வெளியிட வங்கிக்கு அதிகாரம் இருந்தது, எனவே நிறுவனத்தின் சுயாட்சியை அப்படியே வைத்திருக்க, அரசியல் சார்புடையவர்கள் யாரும் வங்கியின் நிர்வாக அமைப்பில் இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக மசோதா உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. 1928 ஆம் ஆண்டில், மசோதாவின் திருத்தப்பட்ட வரைவு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தாலும், சர்ச்சைகளால் அதை நிறைவேற்றுவதில் தாமதம் தொடர்ந்தது.
முதல் வட்ட மேசை மாநாடு 1930 இல் நடந்தது, அதில் அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் உரிமைகளுடன், பொருளாதார உரிமைகளும் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. 1933 இல் மீண்டும் 'ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பில்' தாக்கல் செய்யப்பட்டு, 1934 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி அப்போதைய கவர்னர் ஜெனரல் கையெழுத்திட்ட பிறகு அது ஒரு சட்டமாக மாறியது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி 1 ஏப்ரல் 1935 இல் நிறுவப்பட்டது.
இந்த உச்ச வங்கி நிறுவப்படுவதற்கு முன்பு, இந்திய வங்கி அமைப்பு பல்வேறு கொந்தளிப்பான கட்டங்களைக் கடந்திருந்தது. டாக்டர். பி.ஆர். அம்பேத்கர், அவரது பொருளாதார சிந்தனை மற்றும் பல்வேறு காலகட்டங்களில் அவரது நிலைப்பாடுகள் இன்றும் இந்திய வங்கி அமைப்பின் முதுகெலும்பாக இருக்கும் ரிசர்வ் வங்கியை நிறுவுவதற்கு மகத்தான பங்களிப்பை அளித்துள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













