மு.க.ஸ்டாலினின் திராவிட மாடலுடன் டார்வினிய மாடல் ஒப்பீடா? தமிழக ஆளுநர் ரவி சிறப்புப் பேட்டி

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
"மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் தான் பேசியதாகக் கூறி சில ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உள்நோக்கத்துடன் திரித்து வெளியிடப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22ஆவது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் கடந்த வாரம் நடைபெற்றது. அந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார் ஆளுநர் ரவி.
அப்போது அவர், பிறரை பின்னுக்குத் தள்ளிவிட்டு பலன்களை ஓரங்கட்டச் செய்த சில அறிவுஜீவிகள் கடைப்பிடித்த முந்தைய வளர்ச்சி மாடலை `டார்வீனியன் மாடல்' என்று அழைத்து சில கருத்துகளை வெளியிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்த கருத்துக்களை வெளியிடும்போது, நாடு சுதந்திரம் அடைந்த ஆறரை தசாப்தங்களுக்குப் பிறகும் வறியவர்கள், உடல் சுகவீனம் அடைந்தவர்கள், படிப்பறிவில்லாதவர்கள் அதிகம் கொண்ட நாடாக 'இந்தியா' விளங்கி வருவதாக ஆளுநர் பேசினார்.
மோதியின் திட்டங்களை ஒப்பிட்ட ஆளுநர்
பிரதமர் நரேந்திர மோதியின் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்று அந்த நிகழச்சியில் பேசியபோது ஆளுநர் ரவி கூறினார்.
மாணவர்கள் பிராந்தியக் கண்ணோட்டத்தைத் தவிர்த்து, எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்தில் இந்தியாவை மையமாகக் கொண்ட பார்வையைக் கொண்டிருக்கவும் ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்த நிலையில், ஆளுநர் ரவி குறிப்பிட்டிருந்த டார்வீனிய மாடல் தொடர்பாக அவர் பகிர்ந்த கருத்துக்கள், 'மாநில வளர்ச்சி, தேச நலனுக்கு உகந்தது அல்ல என்று ஆளுநர் பேசியுள்ளார்," என்று சில ஊடகங்களில் செய்திகளாக வெளியாயின.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியிலும் ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்து நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதில் ஆளுநர் ஏற்படுத்தும் தாமதம் துளியும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையை, வளர்ச்சி குறித்து ஆளுநர் பேசியதற்கான எதிர்வினை என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
"என்ன நோக்கத்துக்காக பேசினேன் தெரியுமா?"
இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ரவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த சர்ச்சை குறித்து அவர் விரிவாக பதிலளித்தார்.
"சில ஊடகங்களில் நான் பேசியதாக சில கருத்துக்கள் வெளியானது பற்றி நானும் அறிகிறேன். ஆனால், எந்த நேரத்தில், எந்த சூழலில், எதற்காக பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், PMO
"டார்வினியன் மாடல் என்பது பிராந்திய ரீதியாகவும் அந்த பிராந்தியத்துக்குள்ளேயே உள்பிரிவுகளையும் கொண்டது. தமிழ்நாடு போன்ற வளர்ச்சி மிகுதியான மாநிலத்தில் கூட வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பகுதிவாரியாக மக்களைப் பிரித்து வைத்து திட்டங்களை செயல்படுத்துகிறோம். அங்கெல்லாம் வாழும் மக்கள் சமமாக கருதப்பட வேண்டும். இந்த நோக்கத்தைத்தான் எனது உரையின் மூலம் நான் பிரதிபலித்தேன்," என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.
அப்படியென்றால் பிரதமரின் திட்டங்களுடன் மாநில வளர்ச்சியை ஒப்பிடும்போது அது 'தேசத்துக்கு உகந்ததாக இல்லை', என்று பேசினீர்களா என்று அவரிடம் கேட்டோம்.
"பிரதமர் மோதியின் 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல்' என்பது அனைத்து மக்களுக்கும் உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, மின்சாரம், சமையல் எரிவாயு போன்ற ஆரோக்கியமான குடியுரிமை அடிப்படையைக் கொண்டவை. அவை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பாகுபாடின்றி ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டது என்றே நான் குறிப்பிட்டுப் பேசினேன். பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா, ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல திட்டங்களும் இத்தகைய பாகுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. இத்தகைய திட்டங்களை வலுப்படுத்தி மக்களிடம் அவை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றே நான் பேசினேன்."
"இந்த அடிப்படைகளை மறுப்பதுதான் டார்வினியன் மாடல், அது மாநில வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. எல்லா குடிமக்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படக் கூடிய அடிப்படை வசதிகள் பாகுபாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து." என்றும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.

பட மூலாதாரம், TNDIPR
"அரசியல்வாதி அல்ல"
தமிழ்நாட்டில் ஆளும் மு.க. ஸ்டாலின் சமீப மாதங்களாக ஒலித்து வரும் 'திராவிட மாடல்' கோட்பாடுக்கு பதிலடியாக இந்த டார்வினியன் மாடல் கோட்பாட்டை மேற்கோள்காட்டிப் பேசினீர்களா என்று கேட்டதற்கு, "நான் ஒரு மாநிலத்தின் ஆளுநர். அரசியலமைப்பின் பாதுகாவலன். எனது பணியில் அரசியலுக்கோ விருப்பு வெறுப்புகளுக்கோ இடமில்லை," என்று பதிலளித்தார் ஆளுநர் ரவி.
உளவுப் பணியில் இருந்து ஆளுநர் ஆனவர்
இந்திய காவல் பணியில் கேரள பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் ரவி. மத்திய அரசுப் பணிகளிலேயே பெரும்பாலான காவல் பணியைக் கழித்த அவர், இந்திய உளவுத்துறையில் சிறப்பு இயக்குநர் அந்தஸ்தில் பணியாற்றி 2012இல் ஓய்வு பெற்றார்.
2014இல் அவர் இந்திய உளவு அமைப்புகளின் கூட்டுக்குழு தலைவராக பணியாற்றினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் குமார் தோவாலுக்கு அடுத்த நிலை பதவியான துணை ஆலோசகராக இவர் 2018இல் நியமிக்கப்பட்டார். இதற்கு இடையே 2014ஆம் ஆண்டிலேயே நாகா பேச்சுவார்த்தை குழுவின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டு 2021ஆம் ஆண்டுவரை அந்தப் பொறுப்பில் நீடித்தார்.
நாகாலாந்தில், நாகா கிளர்ச்சி அமைப்புகளில் மிகப் பெரியதும் பழமையானதுமானது NSCN-IM என்ற அமைப்பு. அந்த அமைப்பு, 1997ஆம் ஆண்டு முதல் இந்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான் முன்னெடுப்பில் பங்கெடுத்து வருகிறது. அந்தக் குழு 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் சண்டை நிறுத்தத்துக்கு வகை செய்யும் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (FA) கையெழுத்திட்டது.
அதன் அடிப்படையில் என்எஸ்சிஎன் - எம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு சார்பான கிளர்ச்சி அமைப்புகளுடன் (Naga National Political Groups-NNPGs) சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது, அந்த நிலையை எட்டுவதற்கு ஆர்.என். ரவியின் பொறுப்பும் அவரது உளவுத்துறை பின்னணியும் பக்க பலமாக இருந்தன.

பட மூலாதாரம், TNDIPR
ஆனாலும், ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மத்திய அரசுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட பல விஷயங்கள் செயல்வடிவம் பெறாததால் ஆர்.என். ரவிக்கு எதிராக ஒரு பிரிவு நாகா குழுக்கள் குரல் கொடுத்தன. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அவரை தமிழ்நாடு ஆளுநராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமித்தார்.
சந்தேகம் என்ன?
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்த ஒரு சில மாதங்களில் ஆர்.என். ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். உளவுத்துறை பின்னணியை கொண்டவர் என்பதால், அவரது நியமனத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலையீடு இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டது.
மருத்துவ படிப்புகளில் சேர இந்திய அளவில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவுக்கு அனுமதி வழங்காத ஆர்.என். ரவியின் செயல்பாடு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக் காலம் முடிந்தபோதும் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய உத்தரவிட மாநில அரசு பரிந்துரை செய்தபோதும் அந்தக் கோப்புக்கு அனுமதி வழங்காத அவரது நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் ஆளும் திமுகவால் அவ்வப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
"ஆளுநர் செய்வதுதான் டார்வினியன் மாடல் அரசியல்"
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
டார்வினியன் மாடல் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கும் நிலையில், தான் அரசியல் செய்யவிரும்பவில்லை என்கிறார் ஆளுநர். ஆனால், "ஆளுநர் செய்வதுதான் டார்வினியன் மாடல் அரசியல்" என்கிறது திமுக.
ஆளுநர் ரவியின் கருத்து குறித்து தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீனிடம் கேட்டபோது, அவர் டார்வினியன் மாடல் என்று சொன்னதே அரசியல்தான் என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
"ஆளுநர் டார்வினியன் மாடல் என சொன்னதில் அரசியல் இல்லையா? டார்வினியன் மாடல் என்பது வலுவானவன் பிழைத்திருப்பான், அவன் சொன்னதே சட்டம் என்று இருப்பதுதான். அம்மாதிரியான மாடல் எங்கே இருக்கிறது? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் அப்படி இருக்கிறது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற சூழல் எங்கே இருக்கிறது? தமிழ்நாட்டிலோ கேரளாவிலோ ஆந்திராவிலோ தெலங்கானாவிலோ அப்படி சூழல் இருக்கிறதா?
ஆனால், கர்நாடகத்தைப் பாருங்கள். காவி துண்டைப் போட்டுக்கொண்டு கல்வி நிலையங்களுக்குள் செல்கிறார்கள். இங்கே மாணவர்கள் அப்படிச் செய்ய முடியுமா? ஆகவே, டார்வினியன் மாடல் என அவர் சார்ந்திருக்கும் கட்சிகள் ஆளும் மாநிலத்தைத்தான் அவர் சொல்கிறார்.
ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு வந்தால் கல்வியைப் பற்றி மட்டும் பேச வேண்டும். இதுவரை எந்த ஆளுநர் மீதாவது இவ்வளவு விமர்சனங்கள் வந்திருக்கிறதா?
இதுவரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து பதினெட்டு சட்டங்களை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். அவர் ஏன் அவற்றில் இதுவரை கையெழுத்திடவில்லை? அதற்கு என்ன அர்த்தம்? ஆளுநர் செய்து கொண்டிருப்பது அருவருக்கத்தக்க அரசியல், அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது. இன்னும் சரியாகச் சொன்னால் அவர் செய்வதுதான் டார்வினியன் மாடல் அரசியல்," என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












