தமிழ்நாட்டில் மாணவர்களை முன்னிறுத்தி நடக்கும் சாதி, தீண்டாமை சர்ச்சைகள்: காரணம் என்ன?

தென்காசி சம்பவம்

"ஊர்க் கட்டுப்பாடா? அப்படின்னா?"

- தென்காசியில் ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில், தீண்டாமை பின்பற்றுப்படுவதாக வெளியான வீடியோவில் ஒரு பள்ளிச் சிறுவன் கேட்ட கேள்வி இது. இந்த வீடியோ வெளியானது, மாணவர்களை உள்ளடக்கி மீண்டும் தீண்டாமையை பேசு பொருளாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் இப்படி மாணவர்களை முன்னிறுத்தி தீண்டாமை பேசுபொருளாகும் மூன்றாவது சம்பவம் இது.

முதல் சம்பவம் - 'எல்லாரும் சமம்தானே டீச்சர்'

தூத்துக்குடி மாவட்டம் குளந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியரான கலைச்செல்வி என்பவர், அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தேர்தல் தொடர்பாக ஒரு மாணவரிடம், நடத்திய உரையாடல் வைரலானது. அந்த வீடியோவில் ஒரு சமூகத்தினர் கையில் மட்டும் இந்த பள்ளி சென்று விடக்கூடாது என்று பட்டியல் சாதியினரை குறிப்பிட்டு ஓர் ஆதிக்க சாதி மாணவரிடம் அவர் பேசியிருப்பார். அதற்கு அந்த மாணவர் 'எல்லாரும் சமம்தானே டீச்சர்' என்ற பதிலளித்திருப்பார்.

இரண்டாவது சம்பவம் - ''என்ன கம்யூனிட்டி டா நீ''

சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் அனுராதா, சாதி பாகுபாட்டுடன் மாணவர்கள் சிலரிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில் மாணவர்களின் முகத்தைப் பார்த்தாலே அவர்கள் என்ன சாதி என தெரிந்துவிடும் என்று பேசியிருப்பார்.

தன்னுடன் உரையாடும் மாணவனின் சாதி என்னவென்று தெரியாது என்று கூறிய அனுராதா, ''என்ன கம்யூனிட்டி டா நீ'' என்று கேட்பார். அதற்கு 'பி.சி-ங்க மேம்' என்று அந்த மாணவர் பதிலளிப்பார். ''எந்த கம்யூனிட்டியால பிரச்னைனு உனக்கு தெரியும்னு நெனக்கிறேன்'' என்று அனுராதா கூறினார்.

இந்த ஆடியோ வெளியானபின் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாவது சம்பவம் - "ஊர்க்கட்டுப்பாடா? அப்படின்னா?"

இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தென்காசி சம்பவம். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அடுத்துள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு சாதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பட்டியல் சாதி பள்ளி மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மறுத்து கடைக்காரர் பேசிய காணொளி வெளியானது.

மாணவர்களுக்கு எதிரான தீண்டாமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்த மூன்று சம்பவங்களிலும் நாசூக்கான தீண்டாமை வடிவங்கள் விவாதப்பொருளாகின. இந்த சிக்கல்களில் ஏதோ வகையில் மாணவர்கள் உள்ளிழுக்கப்பட்டனர்.

"இதனை அனிச்சை செயல் போல் செய்கின்றனர்"

இவை ஏன்? எப்படி நிகழ்கின்றன என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜிடம் கேட்டது பிபிசி தமிழ். "கிராமப்புற பள்ளிக்கூடங்களில் இது போன்ற பாகுபாடுகள் தொடர்ந்து இருக்கவே செய்கின்றன. ஏனென்றால், கிராமங்களில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு தனி வீதிகளும், தனிப் பகுதிகளும் உள்ளன. கிராமத்தின் நீட்சியாகவே கல்வி நிலையங்கள் உள்ளன. ஆனால், இதில் கவனிக்கவேண்டிய விஷயம், இதை அனிச்சை செயல் போல் மக்கள் செய்கின்றனர். தலித் மாணவர்கள் என்றால் அவர்களை இப்படித்தான் நடத்த வேண்டும் என்று ரீதியில் இந்த ஒடுக்குமுறை நடக்கிறது," என்று கூறுகிறார்.

ஆனால், இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் மீது முழு குற்றம் சுமத்தமுடியாது என்றார் அவர். "ஆசிரியர் பணி புனிதமான பணி. மாணவர்களை வழிநடத்தும் பணி என்ற கருத்து உள்ளது. ஆனால், ஒரு நல்ல சிந்தனை கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு சேர்கிறார்களா? இல்லை. அவர்களும் ஒரு சமூகத்தின் ஓர் அங்கமே. ஒரு ஜனநாயக சிந்தனை என்பது ஒரு சமூகம் மூலமாகவே உருவாகும்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்

பட மூலாதாரம், SAMUEL RAAJ/FACEBOOK

படக்குறிப்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்

ரேஷன் கடை தீண்டாமை

உதாரணமாக, ஒரு ரேஷன் கடையில், இன்றும் தலித் சமூகத்தினரை தனி வரிசையில் நிறுத்தி வைக்கும் வழக்கம் உள்ளது. அவர்களுக்கு தரம் குறைந்த பொருட்களை வழங்குவது, சாதி இந்துக்களுக்கு தரம் உயர்ந்த பொருட்களை வழங்குவது போன்ற நடைமுறை எல்லாம் உள்ளது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, இத்தகைய விவகாரங்களில், ஒரு ரேஷன் கடைக்கும் பள்ளிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, " என்றார்.

இத்தகைய சம்பவங்கள் சமூக மாற்றம் ஏற்படவில்லை என்பதை காட்டுகிறது என்கிறார் கல்வியாளர் பெ. இராமஜெயம். இதுகுறித்து அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இன்றைய நவீனமயமாகும் சமூக சூழலில் இத்தகைய சம்பவங்கள் குறித்து பலரும் யோசிக்கவே செய்கிறோம். இன்னும் இத்தகைய சம்பவங்கள் நடப்பது சமூக மாற்றத்துக்கும், சமூக சமநிலைக்கும் ஏற்படுத்தும் சவால்கள் என்பதே இதன் பொருள். மற்றொரு விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார-பண்பாட்டு தளங்கள் அனைத்திலும் ஏற்படும் அதிகார போட்டிகள், பழமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும் அதிகாரம் தொடர்பான உறவுகளில் சிக்கல்கள் எழுவதில் பெரும்பாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது," என்றார்.மேலும், சாதிய ரீதியான ஒடுக்குமுறை இன்றைய காலகட்டத்தில் எத்தகைய வடிவம் பெற்றுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இத்தகைய விஷயங்களில் சமூக தளங்களில் நேரடியாக ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பொருளாதார தளத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் மீது ஏற்படுத்தும் மறைமுக புறக்கணிப்புகளின் மூலம் கிராமப் புறங்களில் சாதி வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் அதன் நவீன வடிவங்களில், பல பரிமாணங்களில் மறைமுகமாக இருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிறைய சமூக மாற்றங்களும் நடந்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது," என்றார்.

இதற்கான தீர்வு குறித்து சாமுவேல் ராஜ் பேசுகையில், "ஆசிரியர் சங்கங்கள் ஊதிய உயர்வுக்கான குரல் கொடுக்கின்றனர். அவர்கள் சமூக சமத்துவத்திற்காக குரல் கொடுக்க வேண்டும். தீண்டாமை ஒழிப்புக்காக குரல் கொடுக்க வேண்டும். இன்று ஒரு கிராமத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதனால் நமக்கு இதைப் பற்றி தெரிகிறது. இது போன்று பல சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு ஒரு வலுவான இயக்கம்தான் தேவை," என்றார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: