தமிழ்நாட்டில் தலித் ஊராட்சித் தலைவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது ஏன்? - பிபிசி தமிழ் நடத்திய களஆய்வு

தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது ஏன்?
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாற்று சமூகத்தினரால் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

`தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 21 சம்பவங்கள் நடந்துள்ளன. ஊராட்சி மன்றங்களில் அதிக பாதிப்புள்ள பட்டியலின தலைவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்' என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

ராணிப்பேட்டையில் என்ன நடக்கிறது?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் அமைந்துள்ளது, வேடல் ஊராட்சி. இயற்கை எழில் கொஞ்சம் விவசாய பூமியான இங்கு 1,200க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தினர் வசிக்கின்றனர்.

பட்டியலின மக்களின் எண்ணிக்கை என்பது இருநூறுக்கும் குறைவாகவே உள்ளது. காலம்காலமாக மாற்று சமூகத்தினர் மட்டுமே ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருந்து வந்த நிலையில், இந்தமுறை பட்டியலின சமூகத்துக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவராக பதவிக்கு வந்த கீதாவுக்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்களால் பல்வேறு இடையூறுகள் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. வேடல் ஊராட்சியைப் பொறுத்தவரையில் மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது 10 ஆக உள்ளது. இதில் ஏழு பேர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் கீதாவின் கணவர் மூர்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார்.

மூன்று சம்பவங்கள்

ஊராட்சி மன்றத் தலைவர் கீதாவை நேரில் சந்தித்து பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"கடந்த ஐந்து மாதங்களாகவே ஊராட்சித் துணைத் தலைவர் வெங்கடாசலபதி நிறைய பிரச்னைகளை செய்து வந்தார். ஊராட்சி மன்றக் கூட்டத்துக்கு வந்தாலும் தீர்மானத்தில் கையொப்பம் போடமாட்டார். இந்தநேரத்தில், மக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கும் வேலைகள் நடந்தன. அதனை கொடுக்கும்போது என் கணவரும் இருந்தார். `இங்க எதுக்கு வந்த?' எனக் கேட்டு என் கணவரை சாதி பெயரைச் சொல்லித் திட்டியபடியே வெங்கடாசலபதி அடித்தார். நாங்க போலீஸில் புகார் கொடுத்தோம். இந்தச் சம்பவத்துல எஃப்.ஐ.ஆர் போட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை'' என்கிறார்.

தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது ஏன்?
படக்குறிப்பு, வேடல் ஊராட்சி மன்றத் தலைவர் கீதா

"கடந்த மாதம் ரோடு போடற வேலை நடக்கும்போது, வேலை சரியாக நடக்கிறதா என என் கணவர் மேற்பார்வை செய்தார். அப்ப வார்டு உறுப்பினர் ரேவதியோட கணவர் ஹரிதாஸ் வந்து சத்தம் போட்டார். அப்ப திடீர்னு என் கணவரை கத்தியால தாக்கி அடித்தார். அவர் மேல புகார் கொடுத்தும் இரண்டு வாரத்துக்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் போட்டாங்க."

"மூன்றாவது ராஜகோபால் என்பவர் கோழிப்பண்ணை வைப்பதற்காக தடையில்லா சான்று கேட்டார். `சதுர அடிக்கு 25 ரூபாய் அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டும்' எனச் சொன்னோம். `அவ்வளவு பணம் கட்ட முடியாது' எனச் சொல்லிவிட்டு, `உங்களுக்கு ஐந்தாயிரம் பணம் தர்றேன், கையெழுத்து போடுங்க'ன்னு சொன்னார். `அப்படியெல்லாம் பணம் தர வேண்டாம். நிர்வாகத்துக்குக் கட்ட வேண்டிய பணம் மட்டும் கட்டுங்க'ன்னு சொல்லிவிட்டோம். இதனால வெங்கடாசலபதி, ஹரிதாஸ், ராஜகோபால் என மூன்று பேரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. ஏப்ரல் 1 ஆம் தேதி என் வீட்டுக்கு ராஜகோபாலும் அவரோட சில பேரும் வந்து சண்டை போட்டாங்க."

அடிச்சா புகார் கொடுப்பியா?

"என் கணவர்கிட்ட, `அடிச்சா புகார் கொடுப்பியா.. நான் இப்ப அடிக்கறேன், போய் புகார் கொடு'ன்னு சொல்லிட்டு அடிச்சாங்க. கரும்பு, செங்கல், சுத்தியல்னு கைல கிடைச்சதையெல்லாம் வச்சு உயிர் போற அளவுக்கு என் கணவரை அடிச்சாங்க. இதனால தலையில கிராக் விழுந்துருச்சு. நெஞ்செலும்பு உடைச்சிருச்சு. யாரும் உதவிக்கு வரல. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா உயிர் போயிருக்கும்'' என்கிறார்.

தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது ஏன்?

மேலும், "வேடல் ஊராட்சியில இதுவரையில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவங்க தலைவர் பதவிக்கு வந்ததில்லை. முதல்முறையாக நாங்க வந்திருக்கோம். அந்தக் கோபத்துல கொலைவெறித் தாக்குதல் நடத்திட்டாங்க. அரசு மருத்துவர்கள் சிகிச்சையால என் கணவர் ஓரளவுக்கு குணமாகி வர்றார்'' என்கிறார்.

மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மூர்த்தியிடம் பேசியபோது, "நாங்க அந்தக் கிராமத்துல வாழக் கூடாதுன்னு நினைக்கறாங்க. மக்களுக்கு நல்லது செய்யணும்னுதான் பதவிக்கு வந்தோம். ஆனா சில பேரு நிம்மதியா வேலை செய்ய விடமாட்டேங்கறாங்க. முதலமைச்சர்தான் நடவடிக்கை எடுக்கணும்'' என்கிறார்.

இதையடுத்து, வேடல் கிராமத்துக்குச் சென்றோம். ஊர் முழுக்கவே பெருத்த அமைதியில் இருந்தது. ஒரு எஸ்.ஐ தலைமையில் மூன்று போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. "அன்று ஒருநாள் மட்டும்தான் பிரச்னை ஏற்பட்டது. இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை'' என்கிறார், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ ஜெய்சங்கர்.

தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது ஏன்?
படக்குறிப்பு, சித்ரா

அடுத்து, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றோம். சுமார் 15 குடும்பங்கள் மட்டுமே அங்கு வசிக்கின்றன. அங்கிருந்த சிலரும் பேசுவதற்கு தயக்கம் காட்டிவிட்டு விலகிச் சென்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "அன்னைக்கு ஏழு பேர் சேர்ந்து தலைவரோட வீட்டுக்காரரை அடிச்சாங்க. அவர் வலி தாங்க முடியாம வேற வீட்டுக்குள்ள போனார். அங்கயும் போய் அடிச்சாங்க'' என்றவர், `` நாங்க அந்தப் பகுதி மக்களைத் தாண்டித்தான் வெளிய போகணும். இந்த சம்பவத்தால் சில பேரு வேற ஊருக்குப் போயிட்டாங்க. பேசவே பயமா இருக்கு'' என்றார்.

மாற்று சமூகத்தினர் சொல்வது என்ன?

அங்கிருந்து மாற்று சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றோம். வேடல் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வெங்கடாசலபதியிடம் பேசுவதற்குப் பலமுறை முயன்றும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் வி.கே.ராகவனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"கீதாவின் கணவர் மூர்த்தி சொல்வது அனைத்தும் பொய். எதை எடுத்தாலும் அவர் சாதி மையமாக வைத்துப் பேசுகிறார். காலனி மக்களோடு காலம்காலமாக ஒற்றுமையாகப் பழகி வருகிறோம். அவர்கள் தெருவில் திருவிழா நடந்தால் நாங்கள் கூழ் ஊத்துவோம். எங்க திருவிழாவுக்கு அவங்க வருவாங்க. வெளியூரில் இருந்து இங்கு வந்து போட்டியிட்டு கீதா பதவிக்கு வந்தார். அவங்களாலதான் பிரச்னையே'' என்கிறார்.

தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது ஏன்?

"எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவர் பதவிக்கு வந்துவிட்டதால் அந்தக் காழ்ப்புணர்ச்சியில் தாக்குதல் நடந்ததாகச் சொல்கிறார்களே?'' என்றோம்.

"அப்படியெல்லாம் இல்லை. ஊராட்சியின் துணைத் தலைவரான வெங்கடாசலபதி சில பணிகளுக்காக 2 லட்ச ரூபாய்க்கு கையொப்பம் போட்டுக் கொடுத்தார். அதுதொடர்பான கணக்கு வழக்குகளைக் கேட்டதற்காக சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகப் புகார் கொடுத்துவிட்டனர். ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் பணத்தைச் சுருட்டும் முயற்சியில் மூர்த்தி ஈடுபட்டு வந்தார். இதைத் தட்டிக் கேட்டதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றில் உள்ள பிரமுகர்களின் தூண்டுதலில் அவர் செயல்படுகிறார்'' என்கிறார்.

தொடரும் தாக்குதல் சம்பவங்கள்

அதேநேரம், வேடல் ஊராட்சி மட்டுமல்லாமல் ராணிப்பேட்டையில் உள்ள பாராஞ்சி, மூதூர் ஆகிய ஊராட்சிகளில் தலைவர்களாகப் பதவி வகிக்கும் பழங்குடியின சமூகத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்துகிறார், அரக்கோணம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரவீன்குமார்.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவதை மாற்று சமூகத்தினர் விரும்புவதில்லை. இதனால் தொடர்ச்சியாக தொல்லைகளைக் கொடுக்கின்றனர். வேடல் கிராமத்தில் உயிருக்கு ஆபத்தாகும் அளவுக்கு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரைத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, அரசுத் துறைகளில் முறையிட்டாலும் உரிய தீர்வு கிடைப்பதில்லை. மூன்று முறை தாக்கும் வரையிலும் காவல்துறை அமைதியாகத்தான் இருந்தது. புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் மூர்த்திக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்காது'' என்கிறார்.

தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது ஏன்?
படக்குறிப்பு, பிரவீன் குமார்

அரக்கோணம் டி.எஸ்.பி சொல்வது என்ன?

ஆனால், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அரக்கோணம் தாலுகா டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் அளித்த விளக்கம் என்பது முற்றிலும் வேறாக இருந்தது. அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "வேடல் கிராமத்தைப் பொறுத்தவரையில் எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எம்.பி.சி பிரிவைச் சேர்ந்த ராஜகோபால், கோழிப் பண்ணை அமைப்பதற்காக ஊராட்சித் தலைவரிடம் ஒப்புதல் கேட்டார். இதற்காக தலைவரின் கணவர் பெரிய தொகையை கேட்டு வாங்கியுள்ளார். ஆனால், எதையும் செய்து தரவில்லை. தொடர்ந்து கொடுத்த பணத்தைக் கேட்பதற்காக ராஜகோபால் தரப்பினர் கேட்கச் சென்றபோது தாக்குதல் நடந்தது. அதேநேரம், அப்படியொரு தாக்குதல் சம்பவத்தை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் ராஜகோபால் உள்ளிட்ட சிலரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்கிறார்.

"மேலும் சில ஊராட்சிகளிலும் பட்டியலின, பழங்குடியின ஊராட்சித் தலைவர்களுக்கு இடையூறுகள் நேர்வதாகச் சொல்லப்படுகிறதே?'' என்றோம்.

"உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வந்தனர். இதனால் ஒரு சில ஊராட்சிகளில் பிரச்னை ஏற்படுகிறது. சில இடங்களில் துணைத் தலைவர்கள் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பாராஞ்சி ஊராட்சியில் தலைவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். துணைத் தலைவர் எம்.பி.சி பிரிவைச் சேர்ந்தவர். இதில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டன. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்'' என்கிறார்.

தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது ஏன்?
படக்குறிப்பு, டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ்

தொடர்ந்து பேசுகையில், "ஊராட்சி மன்றத் தலைவர்களாக பெண்கள் இருந்தால் அவர்களது கணவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் பிரச்னை ஏற்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக கிரிமினல் குற்றங்கள் நடக்கின்றன. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் வழக்குகள் வந்தால் உடனே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அந்தவகையில், நான் பதவியேற்ற எட்டு மாதங்களில் 16க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமங்களில் ரோந்து செல்வது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது'' என்கிறார்.

2 ஆண்டுகளில் 21 சம்பவங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சித் தலைவர்களின் மீது நடத்தப்பட்ட 21 சம்பவங்களின் மீது தாங்கள் கள ஆய்வினை மேற்கொண்டதாகக் கூறுகிறார், மதுரையைச் சேர்ந்த `எவிடென்ஸ்' கதிர்.

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அண்மைக்காலமாக பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்களும் தீண்டாமையும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், வேடல் ஊராட்சித் தலைவரின் கணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஊத்துமலை ஊராட்சித் தலைவர் வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்தது. இதற்குக் காரணம், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வருவதை மாற்று சமூகத்தினர் சிலர் ஏற்பதில்லை'' என்கிறார்.

தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது ஏன்?
படக்குறிப்பு, `எவிடென்ஸ்' கதிர்

"தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுப்பது, நாற்காலியில் அமரவிடாமல் செய்வது, காசோலையில் கையொப்பம் போடாமல் மறுப்பு தெரிவிப்பது, கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது எனப் பல கொடுமைகள் நடக்கின்றன. பட்டியலின ஊராட்சித் தலைவர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தாலே அவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 பிரிவு (3)(1) M பிரிவின்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தப் பிரிவில் இதுவரையில் ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை'' என்கிறார்.

"அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சரும், `வன்கொடுமையை ஒருநாளும் ஏற்க முடியாது; கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார். பட்டியலின உள்ளாட்சித் தலைவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆபத்தான ஊராட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆவண செய்யும் என நம்புகிறோம்'' என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :