உயர் சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞனுக்கு நேர்ந்த கொடூர முடிவு - கள ஆய்வு

பட மூலாதாரம், ASIF ALI/BBC
- எழுதியவர், ஆசிஃப் அலி
- பதவி, அல்மோராவிலிருந்து பிபிசி இந்திக்காக
உத்தரகாண்டின் அழகிய சமவெளிப்பகுதியில் அமைந்துள்ள அல்மோரா மாவட்டத்தின் பிகியாசைன் மாவட்டத்தின் பில்டி கிராமத்தைச் சேர்ந்த கீதா, கடின உழைப்பாளியான தலித் இளைஞர் ஜெகதீஷைப் பார்த்தபோது, தனது கனவு இளவரசனைக் கண்டுபிடித்துவிட்டதாக உணர்ந்தார்.
ஜெகதீஷின் வார்த்தைகள், அவரது ஆளுமை மற்றும் வாக்குறுதிகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட கீதா, முதல் பார்வையிலேயே சொத்து, சாதி-மத வேற்பாடு, பிற்படுத்தப்பட்டவர் போன்ற அனைத்தையும் புறக்கணித்து, ஜெகதீஷுடன் வாழ்நாள் முழுவதும் உறவை ஏற்படுத்த முடிவு செய்தார்.
சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உயர் சாதியைச் சேர்ந்த கீதா, தலித் இளைஞரான ஜெகதீஷை மணந்தார். ஆனால், கீதாவின் குடும்ப உறுப்பினர்கள் தலித் மருமகனை வெறுத்தனர்.
ஜெகதீஷ் செப்டம்பர் 1ம் தேதி உயிரிழந்தார்.
தலித் பிரிவைச்சேர்ந்த ஜெகதீஷ் உயர்சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்யத் துணிந்ததால்தான் கீதாவின் குடும்பத்தினர் அவரை கொடூரமாகக் கொன்றனர் என்று ஜெகதீஷின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
ஜெகதீஷ் கொலை தொடர்பாக கீதாவின் குடும்ப உறுப்பினர்கள் இப்போது போலீஸ் காவலில் உள்ளனர். கீதா தற்போது ஆதரவற்ற மகளிருக்கான இல்லத்தில் வசித்து வருகிறார்.



அல்மோராவின் பிகியாசைன் விவகாரம்?

- பன்வாத்யோகன் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரான ஜெகதீஷ் சந்திராவின் கொலை.
- பில்டி கிராமத்தின் உயர் சாதிக் குடும்பத்தைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் ஜெகதீஷ் காதல் கொண்டிருந்தார்.
- கீதா பாதுகாப்புக்காக காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்தார். தனது குடும்பத்தினர் ஜெகதீஷைக் கொல்லக்கூடும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
- இருவரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- செப்டம்பர் 1 ஆம் தேதி ஜெகதீஷ் சந்திரா ஒரு வேனில் காயமுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது வேனில் கீதாவின் மாற்றாந்தந்தை வழி சகோதரர் மற்றும் கீதாவின் பெற்றோரும் இருந்தனர்.பின்னர் மருத்துவமனையில், ஜெகதீஷ் சந்திரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
- கீதா நாரி நிகேதனில் இருக்கிறார்.அவரது குடும்பத்தினர் இப்போது சிறையில் உள்ளனர்.


பட மூலாதாரம், ASIF ALI/BBC
அல்மோரா மாவட்டத்தின் சல்ட் தாலுகாவில் உள்ள பன்வாத்யோகன் கிராமத்தில் வசிப்பவர் ஜெகதீஷ் சந்திரா. இந்த கிராமத்தில் சுமார் 50 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன.
ஜெகதீஷ், 'கர்-கர் நல், கர்-கர் ஜல்' (வீடுதோறும் குழாய், வீடுதோறும் தண்ணீர்)அரசின் திட்டத்தின் கீழ், பன்வாத்யோகனில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள பிகியாசைன் பகுதியில், ஊரக வளர்ச்சி அதிகாரி கவிதா மன்றாலின் மேற்பார்வையில் பணியாற்றி வந்தார்.
ஜகதீஷ் திருமணம் செய்து கொண்ட கீதா என்ற பெண், பிக்கியாசைன் பகுதியில் உள்ள பில்டி கிராமத்தில் வசிப்பவர். இருவரும் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த கீதா,தனது தாய், மாற்றாந்தந்தை ஜோகா சிங் மற்றும் மாற்றாந்தந்தையின் மகனுடன் பில்டி கிராமத்தில் வசித்து வந்தார். ஜெகதீஷ் தலித் என்பதால் கீதாவின் குடும்பத்தினர் இந்த உறவை ஏற்கவில்லை என்று ஜெகதீஷின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கோவிலில் திருமணம் செய்து கொண்டு கீதாவை ஜெகதீஷ் எங்கு வைத்திருந்தார் என்பது குறித்து பன்வாத்யோகன் மற்றும் பில்டி கிராம மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. இருவரும் எப்படி சந்தித்தார்கள், எப்போது காதல் மலர்ந்தது என்பது குறித்து கிராம மக்கள் எதுவும் கூறவில்லை. இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் தெரிவித்தனர்.
இந்த விஷயத்தில் கிராம மக்கள் வெளிப்படையாகப் பேசாமல் இருந்தாலும்கூட, தலித் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டார் என்றே ஜெகதீஷ் சந்திராவின் கிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேச்சு நிலவுகிறது.
"கீதா ஒரு பட்டியல் சாதி இளைஞரை விரும்பி திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது,"என்று உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தலித்துகளின் நலனுக்காக உழைத்து வரும் சமூக சேவகர் தர்ஷன் லால் குறிப்பிட்டார்.
உத்தராகண்டில் தலித்துகளுக்கு எதிராக இப்போதும் நிறைய பாகுபாடுகள் இருப்பதாகவும், அவர்கள் கொடுமைபடுத்தப்படுவது முழுமையாக வெளிவருவதில்லை, ஏனெனில் பெரும்பாலான வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று தர்ஷன் லால் கூறுகிறார். இந்தக் கூற்றை ஆதரிக்கும் நம்பகமான புள்ளிவிவரங்களை அவரால் அளிக்கமுடியவில்லை. ஆயினும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு பற்றிய கதைகள் உத்தராகண்டில் இருந்து அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன.

பட மூலாதாரம், ASIF ALI/BBC
கீதா அல்மோரா எஸ்எஸ்பிக்கு கடிதம் எழுதினார்
கீதாவிடம் அவளுடைய மாற்றாந் தந்தை மற்றும் சகோதரனின் அணுகுமுறை ஒருபோதும் சரியாக இருந்ததில்லை.தனது குடும்பத்தினரிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்பார்த்த கீதா ஆகஸ்ட் 27 அன்று, அல்மோராவின் எஸ்எஸ்பி க்கு ஒரு கடிதம் எழுதி, தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு கோரினார்.
"மே 26 ஆம் தேதி கீதா, ஜெகதீஷ் சந்திராவுடன் அல்மோராவுக்கு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் கீதாவிடம் சான்றிதழ்கள் இல்லை. அவர் சான்றிதழுக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் திடீரென்று அவளுடைய மாற்றாந்தந்தை அல்மோராவில் அவரைக் கண்டுபிடித்தார். ஜூன் 17ம் தேதி, அவரை வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துச் சென்று அடித்தார். தந்தையின் மிரட்டல்களால் மனம் உடைந்த கீதா, வீட்டை விட்டு ஓடி, ஆகஸ்ட் 7ம் தேதி பிக்கியாசைனில் உள்ள ஜகதீஷ் சந்திராவிடம் வந்தார். அதன்பிறகு ஆகஸ்ட் 21ம் தேதி இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்,"என்று கீதாவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை ராணிகேத்தி சிஓ(சர்கிள் ஆஃபீசர்) விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அல்மோரா எஸ்எஸ்பி பிரதீப் குமார் ராய் கூறினார். .
ஆனால் கீதாவின் கடிதத்திற்கு பிறகும் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது ஏன் என்று வினவப்பட்டபோது அதற்கு பதிலளித்த அவர், "ஆகஸ்ட் 27ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு கோரி கடிதம் கொடுத்தபோது, அந்தக் கடிதத்தில் இருந்த முகவரியை போலீஸார் தேடினர். ஆனால் அங்கு யாரும் இருக்கவில்லை. கடிதத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை."என்று கூறினார்.
இப்போது ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றமிழைத்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் தப்ப முடியாது என்று அல்மோராவின் எஸ்.எஸ்.பி கூறுகிறார்.
" இளைஞன் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர். எனவே 302 எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இளைஞன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், பெண் ராஜபுத் வகுப்பைச் சேர்ந்தவர். இதனால் பெண்ணின் குடும்பத்தினர் அதிக கோபத்தில் இருந்தனர்,"என்று இந்த விஷயத்தை விசாரித்துவரும் ராணிகேத்தின் சிஓ டிஆர் வர்மா குறிப்பிட்டார்.
"ஜெகதீஷ் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதல்நோக்கு விசாரணை சுட்டிக்காட்டுகிறது,: என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ASIF ALI/BBC
ஜெகதீஷின் நிதி நிலையும் வலுவாக இல்லை
ஜெகதீஷின் குடும்பத்தில் அவரது தாய் பாகுலி தேவி, மூத்த சகோதரர் பிருத்விபால், இளைய சகோதரர் திலீப் குமார் மற்றும் தங்கை கங்கா உள்ளனர்.
மூத்த சகோதரர் பிருத்விபால் கிராமத்தில் சிறுசிறு கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இளைய சகோதரர் திலீப் குமார் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரரிடம் கூலி வேலை செய்கிறார். இளைய சகோதரி கங்கா கிராமத்தில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த பிறகு தன் தாய்க்கு வீட்டு வேலைகளில் உதவுகிறார்.
தற்போது ஜெகதீஷ் இறந்ததையடுத்து ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது.
இந்த கிராமம், ராம்நகரில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஜெகதீஷ் தனது ஆரம்பக் கல்வியை கிராமத்தில் உள்ள பள்ளியில் பெற்றார். சிறுவயதிலேயே தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாழ்க்கையே போராட்டமாக இருந்தது.


ஜகதீஷ் கடந்த 12 ஆண்டுகளாக நீர்வள அமைப்பில், ஒப்பந்த அடிப்படையில் பைப் லைன் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளை செய்து தனக்கும், தனது குடும்பத்திற்கும் வருமானம் ஈட்டி வந்தார்.
ஜெகதீஷ் உத்தராகண்ட் பரிவர்தன் கட்சியிலும் நீண்ட காலமாக தொடர்பு கொண்டிருந்தார். கடந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் பரிவர்தன் கட்சி சார்பில் ஜெகதீஷ் போட்டியிட்டார். இரண்டு முறையும் தேர்தலில் ஜெகதீஷ் தோற்றாலும், கட்சியின் தீவிர உறுப்பினராக, தனி அடையாளத்தை கொண்டிருந்தார்.
ஜெகதீஷ் இறந்த பிறகு, அவரது வயதான தாய் பாகுலி தேவி மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவரது வீட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காதலித்ததற்காக தன் மகன் இப்படி தண்டிக்கப்படுவான் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று ஜெகதீஷின் தாய் கூறுகிறார். அவர் நீதிக்காக மன்றாடுகிறார்.
ஜெகதீஷ் வீட்டிற்கு வந்தார் பட்டியல் சாதிகள் ஆணையத்தின் தலைவர்
உத்தராகண்ட் பட்டியல் சாதிகள் ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமாரும் ஜெகதீஷின் வீட்டிற்கு வந்தார்.
கல்வியறிவின்மையால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன என்றார் அவர். இதற்காக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களையும் தொடங்க இருப்பதாக அவர் சொன்னார். கமிஷனின் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது, இது ஒரு ஊழியர் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றும் புகார் வரும்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையத்தின் தலைவர் கூறினார்.
ஜெகதீஷ் சந்திராவின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்று முகேஷ் குமார் ஆறுதல் கூறியதோடு, தற்போது நாரி நிகேதனில் வசிக்கும் கீதாவின் எதிர்காலம் குறித்தும் கவலை தெரிவித்தார்.


கீதாவின் கிராமத்தில் அனைவரும் மெளனமாக இருக்கிறார்கள்
அதே சமயம் கீதாவின் கிராமமான பில்டியில் வசிப்பவர்கள் இதைப் பற்றி பேச விரும்பவில்லை.
பல முயற்சிகளுக்குப் பிறகு பேச சம்மதித்த சிலர், ஜெகதீஷ், கீதா காதல் விவகாரம் தங்களுக்கு முன் கூட்டியே தெரியாது என்கிறார்கள். இந்த சம்பவம் அவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத் தலைவி பாவனா தேவி எங்களுடன் பேச ஒப்புக்கொண்டார். "வருங்காலத்தில் கீதா மீண்டும் கிராமத்திற்கு வர நினைத்தால், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்ர ஆலோசனை கலப்பிற்குப்பிறகே அவர் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்,"என்றார்.

பட மூலாதாரம், ASIF ALI/BBC
காவல்துறை என்ன சொல்கிறது?
இறந்த ஜெகதீஷ் மற்றும் அவரது சகா ஒருவரும், பெண் கான்ட்ராக்டர் கவிதாவுடன் பணிபுரிந்து வந்தனர் என்று இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையின் சிஓ டிஆர் வர்மா கூறினார்.
செப்டம்பர் 1ஆம் தேதி காலை எட்டு மணி அளவில் வேலைக்குச் செல்லும் போது, சேலாபானி- பிக்கியாசைன் சாலையில் இரண்டு பேர் அவரை சந்தித்தனர். அவர்கள் ஜெகதீஷை வலுக்கட்டாயமாக தடுத்துநிறுத்தி, உடனிருந்த கூட்டாளியை பயமுறுத்தி, துரத்திவிட்டனர்.
தப்பிச்சென்றதும் கவிதாவுக்கு போன் செய்த ஜெகதீஷின் கூட்டாளி இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். ஆனால் கவிதா அப்போது அங்கு இருக்கவில்லை. அவர் திரும்பியதும், மாலை ஆறு மணியளவில் தெஹ்சில் பிக்கியாசைனை அடைந்து, முழு சம்பவம் பற்றிய தகவலையும் அளித்து, தெஹ்சில் வருவாய் துணை ஆய்வாளரிடம் எஃப்ஐஆர் பதிவு செய்தார்.
உத்தரகாண்ட் மலைப் பகுதிகளில், காவல்துறையின் பணி இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளை வழக்கமான போலீசாரும், சில பகுதிகளை வருவாய் போலீசாரும் கவனித்து வருகின்றனர்.


இந்த சம்பவம் நடந்த இடம் வருவாய் காவல்துறையின் கீழ் வருகிறது. எஃப்.ஐ.ஆர்.க்குப் பிறகு, இரு போலீசாரும் இது குறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
செப்டம்பர் 1ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் வேன் ஒன்று காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.அந்த வேனை கீதாவின் சகோதரர் ஓட்டி வந்தார். பின்னால் கீதாவின் பெற்றோர் அமர்ந்திருந்தனர்.
போலீசார் வேனை சோதனையிட்டபோது, இருக்கைக்கு அடியில் ஜெகதீஷ் இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் அனைவரையும் லோகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மருத்துவர்கள் ஜெகதீஷ் சந்திரா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் கீதாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மீது ஐபிசி 364 மற்றும் 302 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜெகதீஷ் தலித் சமூகத்தில் இருந்து வந்தவர் மற்றும் அவரது கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் மீது எஸ்சி-எஸ்டி சட்டத்தையும் போலீசார் சுமத்தியுள்ளனர்.
விஷயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, விசாரணை ராணிகேத்தின் சிஓவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தடயவியல் குழுவும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறது.
ஜெகதீஷ் இந்த உலகில் இல்லை. கீதா நாரி நிகேதனில் வசிக்கிறார், கீதாவின் குடும்பம் சிறையில் உள்ளது.
ஜெகதீஷின் வயதான தாய் மற்றும் உடன்பிறப்புகளுக்கு என்ன நடக்கும் என்று சொல்வது கடினம். ஆனால், தங்களுக்கு நீதி கிடைக்கும் என ஜெகதீஷின் தாயார் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













