கோயம்புத்தூர் புராஜக்ட் பள்ளிக்கூடம்: பள்ளிகளில் குற்றங்களை தடுக்க காவல்துறையின் புதிய ஐடியா

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக பள்ளிகளில் குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகின்றன. அதுமட்டுமன்றி, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளும் அதிக அளவில் பதிவாகியுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் பள்ளிகளில் நிகழும் குற்றங்களைத் தடுக்க கோவை மாவட்ட காவல்துறை நிகழ்த்தி வரும் `ப்ராஜக்ட் பள்ளிக்கூடம்` என்கிற திட்டம் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தத் திட்டம் எவ்வாறு உருவானது, இதன் நோக்கம் என்ன, திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?
பொள்ளாச்சியில் ஒரு சம்பவம்
"பொள்ளாச்சியில் ஒரு பள்ளியில் நிகழ்ச்சிக்காக சென்றபோது அங்கிருந்த மாணவர் ஒருவர் தன் மீது நிகழ்த்தப்பட்ட குற்றம் பற்றி எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் குற்றத்திற்கும் புகார் பதிவு செய்யப்படுவதற்கும் இடையே உள்ள இடைவெளி புரிந்தது.
இந்த நிகழ்வின் பின்னணியில் தான் காவல்துறையினர் நேரடியாக மாணவர்களிடம் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உருவானது. அதன் அடிப்படையில் ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் என்கிற திட்டத்தை வடிவமைத்துள்ளோம்" ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தை உருவாக்க அடிப்படையாக அமைந்த நிகழ்வைப் பற்றி விவரிக்கிறார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்.
'ப்ராஜக்ட் பள்ளிக்கூடம்' என்றால் என்ன?

கோவை மாவட்ட காவல்துறையின் கீழ் 39 காவல் நிலையங்கள் உள்ளன. இதன் எல்லைக்குள் 997 பள்ளிகளும் 5 லட்சம் மாணவர்களும் உள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரிடமும் நேரடியாக சென்று சைபர், பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு காவல்நிலையத்திலும் மூன்று காவலர்கள் அடங்கிய குழு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் தலைமை காவலாளி, ஒரு பெண் உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு குழந்தை நல காவல் அதிகாரி ஆகியோர் இருப்பர்.
முதலாவதாக காவலர்களுக்கு மாணவர்களிடம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பிரத்யேகமாக பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு முகாம்களுக்கான பிரத்யேகமாக பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் மூன்று கட்டங்களாக விழிப்புணர்வு முகாம் நடத்துவார்கள். முதல் கட்டமாக ஐந்தாவது வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒன்றாகவும், அதன் பிறகு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முதல் வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாகவும் இவை நடத்தப்படும்
மழலையர்களிடம் நல்ல தொடுதல், தீய தொடுதல் பற்றியும், இடைநிலை, மேல்நிலை மாணவர்களிடம் குற்றங்கள் எவ்வாறு நிகழும், குற்றங்கள் நிகழ்கின்ற நேரத்தில் என்ன செய்ய வேண்டும், போக்ஸோ சட்டம் என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். குற்றங்களைப் பதிவு செய்ய காவல்துறையின் உதவி எண்களை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இது போக பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோருடன் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆலோசனை கூட்டம் நடத்துவார். இந்த கூட்டம் மண்டல வாரியாக நடைபெறும்.
ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் எந்த அளவில் உள்ளது?

தற்போது வரை 503 பள்ளிகளில் கிட்டத்தட்ட 60,000 மாணவர்களிடம் இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், உதவி ஆய்வாளர் அப்சல் அகமது பிபிசி தமிழிடம் பேசுகையில், "காவல்துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வந்த சிறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து சீராக நடத்த வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம். அதனால் பெரிய நிகழ்ச்சிகளாக இல்லாமல் ஒவ்வொரு முறையும் 50 முதல் 100 மாணவர்களை வைத்து மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன" என்றார்.
"குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பது தான் குற்றத்தடுப்பு பணிகளில் முக்கிய இடராக உள்ளது. அதைக் களைய வேண்டும் என்கிற நோக்கில் தான் மாணவர்களிடம் காவல்துறையினரே நேரடியாக செல்கிறோம். பாலியல் குற்றங்கள், சைபர் குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருப்பதால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறது.
காவல்துறை அதிகாரிகள் புகார் உதவி எண்களை மட்டுமில்லாமல் தங்களின் தனிப்பட்ட கைபேசி எண்களையும் வழங்குகிறார்கள். இதன் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த முடிகிறது.
வெளிச்சத்திற்கு வரும் புகார்கள்
மாணவர்களிடமிருந்து நிறைய அழைப்புகள் வருகின்றன. அவ்வாறு ஒரு பள்ளி மாணவியை அவரின் வளர்ப்புத் தந்தையே நீண்ட நாட்கள் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது வெளிச்சத்திற்கு வந்தது. மற்றொரு பள்ளியில் இடைநின்ற மாணவர் ஒருவர் அப்போது பள்ளியில் படித்து வந்த மாணவியை தகாத முறையில் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இந்த குற்றங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மூன்றாவதாக ஒரு வழக்கும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பள்ளிகளில் பதிவாகாத குற்றங்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்கிற இந்தத் திட்டத்தின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது. இந்தத் திட்டம் முடிவதற்குள் மேலும் பல புகார்களை எதிர்பார்க்கிறோம். இதையொரு தொடர் நடைமுறையாக மாற்ற வேண்டும் என்பது தான் நீண்ட கால இலக்காக உள்ளது` என்றார்.
'புகார் செய்வோர் மீதானகளங்கத்தைப் போக்க வேண்டும்'
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இளம் வயதில் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் மாணவர்களிடம் அதன் பாதிப்பு நீண்ட நாட்கள் இருக்கும். கேரள காவல்துறையிடமிருந்து எங்களுக்கு ஒரு வழக்கு வந்தது. கேரள சிறுமி ஒருவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த நிகழ்வு இத்தனை ஆண்டுகள் உளவியல் ரீதியாக அவரை துன்புறுத்தியுள்ளது. ஆறு ஆண்டுகள் கழித்து தான் அவரால் துணிந்து புகாரளிக்க முன்வர முடிந்துள்ளது. இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் குழந்தைகளிடம் தங்களையே குற்றம் சுமத்திக் கொள்ளும் தன்மையும் உள்ளது. அதைக் களைய வேண்டும்.
குற்றங்களைப் புகார் செய்வதில் உள்ள களங்கத்தைப் போக்க வேண்டும். குற்றத்தை செய்தவர் மீது தான் தவறு, பாதிக்கப்பட்டவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்கிற எண்ணத்தை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். அதனால் தான் மழலை வகுப்புகளிலிருந்து மேல்நிலை வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறோம். 95% போக்ஸோ குற்றங்களில் மிக நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் தான் குற்றவாளிகளாக உள்ளனர்.
குழந்தைகளை எளிதாக அணுகக்கூடியவர்கள் தான் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். நெருங்கிய உறவினர்கள், சக மாணவர்கள், மூத்த மாணவர்கள், ஆசிரியர்கள் என யார் சம்மந்தப்பட்டாலும் புகார் அளிக்க தயக்கமில்லாமல் முன்வர முடியும் என்கிற நம்பிக்கையை மாணவர்களிடத்தில் உருவாக்க முயல்கிறோம். அதற்கு நல்ல பலன்களும் கிடைத்து வருகின்றன.
குழந்தைகள் பயத்தாலும், குற்றம் புரிந்தவர் பயமுறுத்துவதாலும் தான் புகாரளிக்க முன்வருவதில்லை. பல சமயங்களில் பெற்றோர்கள், ஆசிரியர்களே குற்றங்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதுண்டு. போக்ஸோ குற்றங்களைப் பற்றி ஒருவர் அறிந்திருந்தும் அதை புகார் செய்யாமல் இருப்பதும் குற்றம் தான். அதனால் தான் ஆசிரியர்களிடமும் குற்றங்களை மறைக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். வழக்குகளை விரைந்து, சரியாக விசாரித்து தண்டனை பெற்று தருவதிலும் முனைப்பாக உள்ளோம். வழக்குகளைப் பதிவு செய்வதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து கண்கானிக்கப்படுகிறது. .
கடந்த நான்கு மாதங்களில் கோவை மாவட்டத்தில் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 60 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 9 வழக்குகளில் தண்டனை வாங்கித் தந்துள்ளோம்." என்றார்.
'போக்சோ குற்றங்கள் பாலின வேறுபாடு இல்லாதவை'
இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வரும் ஆய்வாளர் சுமதி பிபிசி தமிழிடம் பேசுகையில், `நிகழும் குற்றங்களில் பாதிக்கும் குறைவானவை தான் புகார் அல்லது பதிவு செய்யப்படுகின்றன. குற்றங்கள் பதிவாகும் விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பது முதல் நோக்கம். போக்ஸோ குற்றங்கள் ஆண், பெண் என பாலின வேறுபாடு இல்லாமல் நிகழ்பவை.
பாதிக்கப்படும் மாணவர்களே சில நேரங்களில் குற்றத்தில் ஈடுபடுவதுமுண்டு. அதனால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்றவாறு தனித்தனியாக விழிப்புணர்வு வழங்குகிறோம். பாலியல் குற்றங்களுடன் குழந்தை திருமணம், மாணவர்கள் போதைக்கு அடிமையாவதும் பிரதானமான பிரச்சனைகளாக உள்ளன.

குழந்தைகளிடம் வேறு எந்த பிரச்சனை என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி தான் எங்களுடைய செல்போன் எண்களை கொடுக்கிறோம். குழந்தைகள் பலரும் தங்களுடைய குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் அழைக்கிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்களுக்குமே புகார் செய்வது தொடர்பாக போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.
ஒரு குழந்தையின் தாய், குழந்தையிடம் என் செல்போன் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டார். குழந்தைகளைத் தாண்டி பெற்றோர்களையும் இந்தத் திட்டம் சென்று சேர்ந்துள்ளது. பெற்றோர்களிடமிருந்து நிறைய அழைப்புகள் வருகின்றன. அனைத்து புகார்களையும் முறையாக பதிவு செய்து வருகிறோம்` என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












