மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன?

பட மூலாதாரம், சுரையா நியாசி
- எழுதியவர், சுரையா நியாசி
- பதவி, போபாலில் இருந்து பிபிசி இந்திக்காக
மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், எட்டு வயது சிறுவன் தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் வைரலாகி மக்கள் உள்ளத்தை உருக்கியது. அவனது தந்தை குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல குறைவான கட்டணத்தில் வண்டி கிடைக்குமா என்று தேடி அலைந்துகொண்டிருந்தார்.
இந்த காட்சியின் வீடியோ வைரலாகப் பரவியதும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது.
இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் செளஹானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அவர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். ஆனால் மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பின்னணி என்ன?
தம்பியின் உடலுடன் அண்ணன்
எட்டு வயது சிறுவன் ஒருவன் , தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
உயிரிழந்த குழந்தையின் வயது 2. அவனது உடல் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. தந்தை தனது குழந்தையின் உடலை தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வண்டி தேடிச் சென்றிருந்தார்.
பூஜாராம் ஜாதவ், மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வண்டி கேட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் வண்டி இல்லை என்றும், வெளியே ஏற்பாடு செய்துகொள்ளுமாறும் கூறிவிட்டனர் என்றார் பூஜாராம்.
வெளியில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் பூஜாராம் பேசியபோது அவர்கள் 1500 ரூபாய் வரை பணம் கேட்டுள்ளனர்.

பட மூலாதாரம், சுரையா நியாசி
அதன் பிறகு மகனின் சடலத்துடன் வெளியே வந்த அவர் மருத்துவமனைக்கு வெளியே வண்டி கிடைக்காததால், நேரு பூங்கா அருகே இளைய மகனின் உடலை மூத்த மகனிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி, அங்கிருந்து சென்றார்.
நரோத்தம் மிஸ்ரா அறிக்கை
குல்ஷன் தனது தம்பி உடலை மடியில் வைத்தவாறு அமர்ந்திருக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தார்.
"ஊரிலிருந்து வந்தபோது பூஜாராமின் குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்ததும், குழந்தையின் உடலை மூத்த மகனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் உறவினர் வீட்டிற்கு சென்றார். இதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி இது குறித்து விசாரணை நடத்துவார். மாலைக்குள் விசாரணையை முடிக்கும்படி அவரிடம் கூறப்பட்டுள்ளது," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், சிவில் சர்ஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அந்த குடும்பத்திற்கு அரசு சில உதவிகளை செய்துள்ளது.
"சந்தையில் வண்டிகளுக்கு பஞ்சர் ஒட்டி பிழைப்பு நடத்துகிறேன். குழந்தையின் உடல்நிலை எப்படி மோசமடைந்தது என்று தெரியவில்லை. முதலில் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டினேன். ஆனால் பலனில்லை. பின்னர் இங்கே அழைத்து வந்தேன்,"என்று தந்தை பூஜாராம் ஜாதவ் கூறினார்.
பூஜாராம் ஜாதவ் குடும்பம்
ஜாதவ் குடும்பத்தை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ், அவர்களை விட்டுவிட்டுத் திரும்பிச்சென்றுவிட்டது.
பூஜாராம் ஜாதவுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு மகளும் உள்ளனர். அவர் மனைவி அவரைப் பிரிந்து சில காலமாக தாய் வீட்டில் வசிக்கிறார். பூஜாராம்தான் இந்த குழந்தைகளை கவனித்து வந்தார். சரியான உணவு கிடைக்காத காரணத்தினால் குழந்தையின் உடல் நிலை மோசமடைந்து அதுவே இறப்பிற்கு காரணமாக அமைந்தது என அக்கம்பக்கத்தினர் கருதுகின்றனர்.
குல்ஷன் தனது தம்பியின் உடலை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் செய்தி நகரின் கோத்வாலி காவல் நிலைய டவுன் இன்ஸ்பெக்டர் யோகேந்திர சிங் ஜாதோனுக்கு தெரியவந்தது. அவர் அந்த இடத்திற்குச் சென்று, இருவரையும் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அதன் பிறகு, ஆம்புலன்ஸ் ஏற்பாடுசெய்து குடும்பத்தை கிராமத்துக்கு அனுப்பி வைத்தார்.
அதே நேரத்தில், "இந்த விஷயம் எங்களுக்குத் தெரிந்ததும், நாங்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அவரை அவரது கிராமத்திற்கு அனுப்பினோம்."என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO) டாக்டர் ராகேஷ் ஷர்மா கூறுகிறார்.
பாஜக-காங்கிரஸ் மோதல்
இந்த சம்பவம் காரணமாக காங்கிரசும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.
இந்த விஷயத்தில் அரசை கடுமையாக சாடிய முன்னாள் முதல்வர் கமல்நாத், கிராமப்புறங்களில் சுகாதாரம் மற்றும் ஆம்புலன்ஸ் பிரச்னைகள் குறித்து பல ட்வீட்களை பதிவுசெய்தார்.
இந்த விவகாரத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதிலளிக்கவில்லை.
"மொரேனா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். ஆனால் பதில் சொல்லாமல் அவர் ஒடிவிட்டார். சிவராஜ் அவர்களே, நீங்கள் எவ்வளவு ஓடுவீர்கள், எங்கு ஓடுவீர்கள், மக்கள் எல்லா இடங்களிலும் நிற்கிறார்கள்."என்று சிவராஜ் சிங் சௌஹானைப் பற்றி கமல்நாத் கூறினார்.
"சவால்களை எதிர்கொள்ளாமல் தப்பித்து உண்மையை மறுக்கும் நீங்களும் உங்கள் அரசும் மேற்கொள்ளும் இந்தப்போக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த மருத்துவ முறையையும் வெறுமையாகவும் உணர்வற்றதாகவும் ஆக்குகிறது," என்று அவர் ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பிறகுதான் அரசு நடவடிக்கையில் இறங்கியது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியும் வழங்கப்பட்டது.
3,400 பேருக்கு ஒரு மருத்துவர்
இந்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.
மாநிலத்தில் 77 ஆயிரம் மருத்துவர்கள் தேவை. ஆனால் 22 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். அதாவது 3,400 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார் என்று எம்.பி மருத்துவக் கல்லூரி கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது.
மாநிலத்தில் உள்ள மருத்துவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய கவுன்சில் இந்த ஆண்டு மறுபதிவு செய்வதற்கான உத்தரவை அரசு வழங்கியது. கடைசி தேதி வரை, 22,000 டாக்டர்கள் மட்டுமே தங்களை பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதற்கு முன்பு இருந்த ஆவணங்களின்படி 59,000 மருத்துவர்கள், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
3,278 சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் 1,029 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 1,677 மருத்துவ அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் மாநில சுகாதாரத் துறையின் நிலையை படம்பிடித்துக்காட்டுகின்றன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








