இலங்கை நெருக்கடி: பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு - விமான நிலையத்தில் நள்ளிரவுப் போராட்டம்

பசில் ராஜபக்ஷ
படக்குறிப்பு, விமான நிலைய பட்டுப்பாதை சிறப்பு ஓய்வு அறை வளாகத்தில் பசில் ராஜபக்ஷ, நாள்: 11-07-2022
    • எழுதியவர், பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் வழியாக நாட்டை விட்டுச் செல்ல மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்தது. இவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தம்பி ஆவார்.

மேலும் இவர் முன்னர் நிதி அமைச்சராக இருந்தவர். இவர் வகித்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இவர் ராஜிநாமா செய்திருந்தார். 2007 முதல் 2015 வரையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ஷ வந்த தகவலை பிபிசியிடம் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆனால், விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பார்த்த பயணிகள், அவருக்கு சிறப்புச் சலுகை அளிப்பதை ஆட்சேபித்தனர். அவர் அந்த வளாகத்துக்கு வந்த காட்சிகள் இடம் பெற்ற காணொளி மற்றும் படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டன.

இதேவேளை பசில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்கு துபாய்க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

பயணிகள் போராட்டம்

பசில் ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், பயணிகளின் எதிர்ப்பு மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று பலரும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, பசில் விமானத்தில் செல்வதற்கும் அவரது பயண நடைமுறையை நிறைவேற்றுதவற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக பசில் மீண்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கம் (SLIEOA) நேற்று இரவு முதல் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தில் சேவை வழங்குவதில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளது.

இதனால் இன்று காலை இந்த முனையத்தில் பயணிகள் சிறப்புச் சலுகையுடன் பயண நடைமுறைகளை நிறைவேற்ற வாய்ப்பின்றி பிசினஸ் வகுப்பு பயணிகள், சாதாரண வகுப்பு பயணிகள் போல வரிசையில் காத்திருந்து விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசினஸ் வகுப்பு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக பிரத்யேகமாக இந்த 'சில்க் ரூட் பேசஞ்சர் கிளியரன்ஸ் டெர்மினல்' என்ற பெயரிலான தனி பாதை மற்றும் விரைவு விமான பயண நடைமுறையை நிறைவேற்றும் வசதி செயல்பாட்டில் உள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இது குறித்து இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கத் தலைவர் கே.ஏ.ஏ.எஸ். கனுகலா கூறும்போது, "நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை, நெருக்கடி மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தலைவர்கள் மிகப்பெரிய அளவில் இந்த பட்டுப்பாதை அனுமதி முனையத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பலமான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு எங்களுடைய சேவையை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளோம்," என்றார்.

பட்டுப்பாதை வசதி எப்படி இருக்கும்?

இலங்கை விமான நிலையம்

பட மூலாதாரம், BIA SRILANKA

  • இந்த வசதியை பயன்படுத்த நாட்டின் அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதல்வர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் தகுதி பெறுவார்கள். இவர்களுக்கு இந்த சேவை இலவசமாக கிடைக்கும்.
  • அதே சமயம், பிசினஸ் வகுப்பு பயணிகள் கட்டண முறையிலும் விமான நிறுவனங்களின் தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டு திட்டத்தின் கீழும் அவற்றின் கவனிப்பில் பட்டுப்பாதை முனைய சேவையை வழங்கலாம்.
  • இது தவிர, இந்த சேவையை பெற விரும்பும் பயணி ஆன்லைனில் கிரெடிட் கார்டு அல்லது டிபார்ச்சர் சில்க் ரூட் லவுஞ்ச் அல்லது வருகை முனையத்தில் உள்ள வெளிப்புற கவுன்ட்டரில் இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்தி வசதிகளை அனுபவிக்கலாம்.
X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

  • சோதனை நடவடிக்கையின்போது ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • தற்போது புறப்பாடுக்கான பட்டு பாதை ஓய்வறையில் குடியேற்ற வசதிகள் வழங்கப்படுவதில்லை.
  • அதேசமயம், வருகை பட்டுப்பாதை வழியாக வெளியே வர அனுமதிக்கப்பட்ட பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நிலையத்துக்குள் நுழைந்ததுமே அவரை இந்த முனையத்தின் சேவைப்பிரிவு பிரதிநிதிகள் வரவேற்று அழைத்துச் செல்வர். இன்னொரு குழு பயணியின் உடைமைகளை துரிமாக எடுத்து வந்து பயணிகளிடம் ஒப்படைக்கும். இடைப்பட்ட நேரத்தில் சிறப்பு ஓய்வறையில் பயணிகள் தங்கி இளைப்பாறவும் அவர்களை உபசரிக்கவும் பிரதிநிதிகள் இருப்பார்கள். விமான நிலையத்தில் இருந்து அந்த பயணிகள் வாகனத்தில் புறப்படும்வரை அவர்களுடன் ஒரு பிரதிநிதி பிரத்யேகமாக இருந்து வழியனுப்பி வைப்பார்.

மக்களே உருவாக்கிய தணிக்கைச்சாவடிகள்

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தமது விலகல் கடிதத்தை இன்றே வழங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் அந்த மாளிகைகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது தவிர, நாட்டின் அரசியல் தலைவர்களில் குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் யாரும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக போராட்டக்காரர்கள் தற்போது தாங்களாகவே பல முக்கிய பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ளூர் போலீஸாரும் உள்ளனர்.

இந்த நிலையில், பசிலின் அண்ணன்களான முன்னாள் பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கோட்டாபய ஆகியோரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கொழும்பில் ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தப் பின்னணியில் ஜூலை 13ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கெனவே கூறியது போல முறைப்படி பதவியில் இருந்து விலகினால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சித்த தலைவர்களுடன் பேசிய பிறகு நாடாளுமன்றத்தில் ஜூலை 20ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: