"அநாகரிகமாக விமர்சித்தால் கடும் நடவடிக்கை" - எச்சரிக்கும் தமிழிசை செளந்தரராஜன்

"இணையதளத்தில் மோசமாக விமர்சனம் செய்தால், அதன் பின்பு எதற்காக அப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை உணரும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும்" என்று எச்சரித்துள்ளார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
நரேந்திர மோதி முதலமைச்சராகவும், பிரதமராகவும் 20 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த 'மோடி@20 - நனவாகும் கனவுகள்' மற்றும் 'அம்பேத்கர் & மோதி' என்ற இரண்டு தமிழ் பிரதி புத்தகங்கள் வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த புத்தகங்களைத் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் மத்திய, மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிய எல்.முருகன், ஜி20 மாநாடு டெல்லி மட்டுமின்றி தமிழ்நாட்டில் இரண்டு இடங்களிலும் புதுச்சேரி, ஜெய்பூர் உட்பட இந்தியா முழுவதிலும் அனைத்து பகுதிகளிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன், இணையத்தில் பிரதமர் மற்றும் தன்னை பற்றி வெளிவரும் விமர்சனங்கள் குறித்து பேசினார்.
"எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் பாரத பிரதமர் ஒரு முடிவு எடுத்தால் அது மக்களுக்கான முடிவாகத் தான் இருக்கும். வேறு எதற்கான முடிவாகவும் இருக்காது. அதேபோல பல ஆண்டுகள் அவரிடம் பாடம் கற்ற நாங்களும் ஏதாவது முடிவெடுத்தால் அது மக்களுக்கான முடிவாகத் தான் இருக்குமே தவிர வேறு எதற்காகவும் இருக்காது. அத்தகைய பாடத்தைத் தான் நாங்கள் கற்றிருக்கிறோமே தவிர வேறு பாடத்தைக் கற்கவில்லை," என்கிறார் தமிழிசை.
எது கருத்து சுதந்திரம்?

"ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அம்பேத்கர் மற்றும் பாரத பிரதமர் என்ற புத்தகத்திற்கு இளையராஜா முகவுரை எழுதியிருக்கிறார். ஆனால் அதற்காக அவர் மீது செய்யப்பட்ட விமர்சனங்களைப் பாருங்கள். இதற்குத் தான் நம் நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று சொல்கிறேன்.
எனக்கு வேண்டியதை சொன்னால் கருத்து சுதந்திரம். ஒப்புக்கொள்ளாததை சொன்னால் கருத்து சுதந்திரம் இல்லை என்ற கோணத்தில் பார்க்கிறார்கள். ஆக இளையராஜா இதற்கு முகவுரை எழுதிவிட்டார் என்பதற்காகவே அவர் மீது அத்தனை விமர்சனங்கள் செய்யப்பட்டன," என்கிறார் தமிழிசை. "எங்களை முதலில் விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் இந்த புத்தகத்தைப் படியுங்கள். படித்து விட்டு விமர்சனம் செய்யுங்கள். அப்படி விமர்சிக்கும் போது நாகரிகமாக விமர்சனம் செய்யுங்கள். ஒரு ஆளுநரை பற்றி எழுதும்போது 'முட்டாள்', 'நீ என்ன படிச்ச', 'உனக்கு அறிவு இல்லையா, புத்தி இல்லையா' இப்படிதான் எழுதுகிறார்கள்."

"நம் தமிழ் மொழி எல்லோருக்கும் பெருமை சேர்க்கும். ஆனால் அந்த மொழியில் வித்தகர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இணையதளத்தில் எழுதும் வார்த்தைகள் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளன. இணையத்தளத்தில் விமர்சிக்கும் எதிராளி சகோதரர்களிடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். முதலில் புத்தகத்தைப் படியுங்கள். இது மாதிரியான சாதனை செய்த ஒரு பிரதமர் இருந்திருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். ஒருவேளை ஒப்புக் கொள்ளவில்லை என்று கருதி அதன் மீதான விமர்சனங்கள் செய்ய விரும்பினால், கொஞ்சம் நாகரிகமாக விமர்சனம் செய்யுங்கள்," என்கிறார் தமிழிசை. இனிமேல் இந்த இணையதளத்தில் மோசமாக விமர்சனம் செய்தீர்கள் என்றால், அதற்குப் பின்பு எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு நடவடிக்கைகள் இருக்கும்," என்று தமிழிசை கூறினார். "இன்று காலை கூட என் படிப்பு குறித்தும், தகுதி குறித்தும் மோசமான விமர்சனங்களைப் பார்த்தேன். எல்லோரும் அவரவர் தகுதி அடிப்படையில் தான் பொறுப்புக்களை வகித்துக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் மக்கள் நலனுக்காகத் தான் இருக்கிறார்கள்," என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












