தமிழிசை செளந்தரராஜன்: "தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் நிகழ்ச்சியா?" - என்ன நடந்தது?

புதுச்சேரி ஜிப்மர் விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின்றி தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதே நிகழ்வின் நிறைவில் தமிழ்த்தாய் பாடலை ஒலிக்கச் செய்த அவர், இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், புதுச்சேரியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக ஜிப்மர் மருத்துவத் துறைக்கான தன்வந்திரி வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலிடம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை ஏன் தவிர்த்தீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்குள் நிகழ்ச்சியின் அடுத்த நிரல் தொடங்கி விட்டது.
'அறியாமல் செய்த தவறு'
இந்த நிலையில், நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜனிடம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாத விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர், "ஜிப்மர் நிர்வாகத்தில் சில நேரங்களில் மொழி அறியாத காரணத்தால் அவர்களை அறியாமல் செய்யும் சில தவறுகளை, வேண்டுமென்றே செய்வது போல பொருள் கொள்ளக்கூடாது," என்று கூறினார்.
மேலும், "தன்வந்திரி வாழ்த்து என்பது அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் பாடுவது வழக்கமானது. ஆனால், அதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் பாடப்படவில்லை. பிறகு மருத்துவமனை இயக்குநரிடம் கேள்வி எழுப்பியபோது அது நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படவில்லை என்று பதிலளித்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே நிகழ்ச்சியின் அடுத்த நிரல் ஆரம்பமானது. ஆனாலும், தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் நிகழ்ச்சி நிறைவு பெறக்கூடாது என்பதற்காக நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டுள்ளேன்," என்றார் தமிழிசை.
"இந்த கூட்டத்தில் இதைப் பேச வேண்டுமா என்று தோன்றியது. ஆனால் பேசியாக வேண்டியது அவசியம் என்பதால் சொல்லிவிட்டேன். ஆகவே புதுச்சேரியிலும், தமிழகத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் எந்த நிறுவனமும் இருக்காது. அதில் எங்கள் ஆளுமைக்கு உட்பட்டு நாங்கள் உறுதியளிக்கிறோம்," என்று தமிழிசை தெரிவித்தார்.
சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதற்கிடையே, மத்திய அரசு நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல்கள் பாடுவது வழக்கமான நடைமுறை இல்லை என்றாலும், அந்தந்தமாநில மரபுகளுக்கு மதிப்புப்பளிக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய புதுச்சேரி சமூக செயல்பாட்டாளர் கோ.சுகுமாரன், "தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள் அரசு நிகழ்வுகளில் பாடப்படும் வேண்டும் என்ற அரசாணை உள்ளது. ஆனால், மத்திய அரசு நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என்று நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் இன்று நடைபெற்ற புதுச்சேரி மத்திய அரசின் ஜிப்மர் நிறுவனத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் இருந்தபோது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாட வலியுறுத்தி, பாட வைத்தது வரவேற்கத்தக்கது. அவரும் வரும் காலங்களில் அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று கூறியுள்ளார். இவை வெறும் வாய்மொழியோடு இல்லாமல். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட ஏதுவாக மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும்," என்று கோரினார்.
இரு மாநிலங்களுக்கு தனித்தனி தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்நாட்டில் மனோன்மணீயம் பெ. சுந்தரனாரால் எழுதப்பட்ட "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது. அதே சமயம், புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












