புதுவை அரசியல் பரபரப்பு: ஆச்சரியப்படுத்திய ரங்கசாமி, ஆவேசப்பட்ட காங்கிரஸ், போர்க்கோலத்தில் சமூக அமைப்புகள்

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் தாங்களாகவே செயல்படுவதாகவும் புதுவை முதல்வர் ரங்கசாமி தம்மை சந்திக்க வந்த சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையொட்டி சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத் திட்டங்களை வகுத்துவருவதாக கூறுகின்றனர்.
அதே நேரம் பழைய கணக்குகளை முன்வைத்து இந்தப் பிரச்சனையை அணுகுகிறது காங்கிரஸ். ரங்கசாமி அரசில் இடம் பெற்றுள்ள பாஜக இந்த விஷயத்தில் கவனமாக கருத்துகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டுள்ளது.
புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொம்மையாக செயல்படுவதாக கடந்த வாரம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை அடுத்து, உள்ளே கொந்தளித்துக் கொண்டிருந்த புதுவை அரசியல் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது.
முதல்வர் ரங்கசாமி என்ன சொன்னார்? காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி எப்படி எதிர்வினையாற்றினார்? சமூக அமைப்புகள் என்ன செய்யப் போகின்றன?
விரிவாக இதோ:
சமூக அமைப்புகள் சந்திப்பு
சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறப் பாடுபடவேண்டும் என்று வலியுறுத்தினர். மனு ஒன்றையும் அவர்கள் முதல்வரிடம் அளித்தனர்.
புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக விவாதிக்க முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர் "என்னால் மக்களுக்காக செயல்பட முடியாத நிலை உள்ளது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இதுவரை எதற்கும் பயந்து இருக்கவில்லை," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் என்று சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் அது குறித்துப் பேசிய முதல்வர், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவேண்டும் என்பது குறித்து மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர்களும் பார்ப்பதாகக் கூறுகின்றார்கள். ஒரு கட்டத்தில் முடியுமா என்று கேட்டால், முடியாது என்று சொல்கிறார்கள். வாக்களித்த மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் செய்ய முடியாத சூழலில் இருக்கிறோம். வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. ஆனால் தினசரி மன உளைச்சல்தான் ஏற்படுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கருத்து வரும். அப்படி ஆகும்போது எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்.
ரங்கசாமியின் ஆதங்கம்
மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லை என்பது வெளிப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாநில அந்தஸ்தை வலியுறுத்திய போது ரங்கசாமிக்கு அதிகாரம் போதவில்லை அதனால்தான் கேட்கிறார் என்று கேலி செய்தார்கள். ரங்கசாமி அதிகாரம் வேண்டும் என்பதற்காக இவ்வாறு துடிக்கிறார் என்று பேசினர்.
நான் எனக்காகத் துடிக்கவில்லை. மக்களுக்காகத் துடிக்கிறேன். ஆனால் புதுச்சேரி வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவும், பிற்காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள் இதனால் சிரமப்படக் கூடாது என்பதற்காகத் தான் இதைக் கேட்கிறேன். இதன் விளைவுகளை தற்போது நான் அனுபவித்து வருகிறேன். இதற்கு முன்பு இருந்த சூழ்நிலை வேறு மாதிரி இருந்தது. அதற்கேற்ப அப்போது செயல்பட முடிந்தது. ஆனால் கடந்த ஆட்சிக்குப் பிறகு நிலை மாறிவிட்டது. கடந்த ஆட்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக சொல்லிய பிறகு இங்கு நமக்கு ஒன்றுமே இல்லை, மரியாதை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

தற்போது வெளிப்படையாகப் பேசுவதால் முன்பு பேசாமல் பயந்து இருந்தேன் என்பது கிடையாது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். அரசு ஊழியர்கள் சம்பந்தமாக ஒன்றைச் செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவு வருகிறது. ஆனால் அதைச் செய்துவிடாமல் தடுக்க என்னென்ன வழிகள் உள்ளன என்று அதிகாரிகள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் சில விஷயங்களில் நீதிமன்ற உத்தரவு வரும்போது எங்களைச் சந்தித்து ஆலோசிக்காமல், அதுகுறித்து எதுவுமே தெரிவிக்காமல் ஒவ்வொரு துறைக்கும் உடனே உத்தரவு அறிக்கையை அதிகாரிகளே வெளியிடுகின்றனர்.
நாம் நினைப்பது போல புதுச்சேரி வளர்ச்சியடைய வேண்டும், மக்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் கேட்கிற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரியில் விடுதலை நாள் சம்பிரதாயத்துக்குத் தான் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையான விடுதலை நமக்குக் கிடைக்கவில்லை. மாநில அந்தஸ்து புதுச்சேரி அரசியலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்," என்று ரங்கசாமி கூறியதாக அந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் கூறுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை இல்லை என்ற சிக்கலையும், புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி சமூக அமைப்புகள் ஒன்றாக இணைந்து மக்கள் மத்தியில் பிரசாரம், மாநாடு, போராட்டம் என்று படிப்படியாக நடத்தும் திட்டம் இருப்பதாக பிபிசி தமிழிடம் கூறினார் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கோ.சுகுமாறன்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுவையில் பொம்மை அரசு நடப்பதாகவும் ஆளுநரே அதிகாரம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார் இதையடுத்து முதல்வரே வெளிப்படையாக தாம் செயல்பட முடியாத நிலை இருப்பதை ஆளுநர், மத்திய அமைச்சர் முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பேசினார். இதையடுத்து இப்போது சமூக அமைப்புகளிடம் முதல்வர் ரங்கசாமி இப்படிப் பேசியுள்ளார்.
"மக்களுக்காக போராடுவாரா ரங்கசாமி?"

பட மூலாதாரம், Getty Images
மக்களுக்காக பேசும் ரங்கசாமி மக்களுக்கு இறங்கி போராட தயாராக இருக்கிறாரா அவர் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "முதலமைச்சர் ரங்கசாமி கடந்த காலத்தைத் திரும்பி பார்க்க வேண்டும். 2011ஆம் ஆண்டு கட்சி தொடங்கியபோது மாநில அந்தஸ்து கொண்டு வருவதாக கூறி வாக்குறுதி கொடுத்தார். அதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் நரேந்திர மோதி அரசுக்கு நிபந்தனைகள் இன்றி ஆதரவு கொடுத்தார்.
அப்படி இருந்தும் மத்திய அரசிடம் இருந்து மாநில அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லை. அதற்கான முயற்சியும் அவர் எடுக்கவில்லை.
கடந்த ஆட்சியில் மாநில அந்தஸ்து பெற வலியுறுத்துவதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் கட்சி கூட்டத்தை நடத்தினோம். அந்த கூட்டத்தை ரங்கசாமி கட்சி புறக்கணித்தது. அதையடுத்து டெல்லி சென்று போராட்டம் நடத்தினோம். அதையும் ரங்கசாமி புறக்கணித்தார்" என்றார் அவர்.
அது மட்டுமின்றி எங்கள் ஆட்சிக்குத் தொல்லை கொடுத்து கிரண்பேடி கோப்புகளை எல்லாம் திருப்பி அனுப்பிய போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ரங்கசாமி. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அவர் பலமுறை மக்கள் நலத் திட்டங்களை கிரண்பேடியுடன் தொடர்பு கொண்டு தடுத்து நிறுத்தினார் ரங்கசாமி என்றும் குற்றம் சாட்டியுள்ளார் நாராயணசாமி.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவாரா?
"மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியில் சேர்ந்தோம் என்று கூறிய முதல்வர், இப்பொழுது அதிகாரிகள் தொல்லை கொடுக்கிறார்கள், நிர்வாகத்தை சரியாக நடத்த முடியவில்லை, நினைத்ததை செய்ய முடியவில்லை என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.
தானும் முதலமைச்சரும் இணைந்து செயல்படுவதாகவும், நிர்வாகத்தில் இடையூறுகள் இல்லை என்றும் ஆளுநர் தமிழிசை சொல்கிறார். முதலமைச்சர் அதிகாரிகளை குறை கூறுகிறார். இதில் எது உண்மை? முதலமைச்சர் நிர்வாக ரீதியாக சந்திக்கும் சிக்கல்கள் குறித்து பேசும்போது, அவர் சுதந்திரமாகப் பேசுகிறார் என்று தமிழிசை கிண்டலடிக்கிறார்.
தாங்கள் நினைத்ததை செய்ய முடியாத அரசு புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு அடிபணிந்து ஒரு பொம்மை ஆட்சியை ரங்கசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். உண்மையில் சூப்பர் முதல்வராக துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார்.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசை எதிர்த்து மாநில அந்தஸ்து பெறுவதற்கு ரங்கசாமி தெருவில் இறங்கி மக்களுக்காக போராடத் தயாராக இருக்கிறாரா? இல்லையென்றால் பாஜக கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் காங்கிரஸ் வெளியேறுமா? என்று கேட்ட நாராயணசாமி, “ஆதங்கத்தை பேசுவதால் மட்டும் மாநில அந்தஸ்து பெற்றுவிட முடியாது. அதற்கென ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை ரங்கசாமி எடுக்க வேண்டும். ஆனால் அதை அவர் எடுக்க தவறி விட்டார். ஆகவே அவர் முதலமைச்சராக இருக்க தகுதி இல்லாதவர்," என்று என்றார் நாராயணசாமி.
பாஜக என்ன சொல்கிறது?

புதுவை நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து ரங்கசாமி வெளிப்படையாக பேசிய விவகாரம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்து பாஜகவை சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் பிபிசி தமிழ் கருத்து கேட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "மத்திய அரசாங்கத்தைப் பொருத்தவரை புதுவைக்கு செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறது. ஒருசிலவற்றை அரசாங்கம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் செயல்படுத்த முடியும். சட்டத்தை மீறி எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. நமது ஒரு யூனியன் பிரதேசத்தை மட்டும் வைத்து அனைத்தையும் செய்துவிட முடியாது. இந்தியாவில் உள்ள பிற யூனியன் பிரதேசங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
கடனை தள்ளுபடி செய்வதற்கு, மாநில அந்தஸ்து பெறும் விஷயத்தில் தற்போது முடிவெடுத்து விட்டு, நாளை அதுவே எதிர்மறையாக மாறிவிடாமல் பார்த்து செயல்பட வேண்டியதுள்ளது. அதை நன்கு ஆராய்ந்து அதற்கு ஏற்பதான் முடிவெடுக்க முடியும்," என்றார் அவர்.
இவற்றைத் தவிர நிர்வாகத்தில் ஒரு சில அதிகாரிகள் ஒத்துழைக்காமல் இருக்கும் நிலை உள்ளது. அதை நாம்தான் சரி செய்ய வேண்டும். இதில் எந்த அதிகாரிகள் செயல்படவில்லையோ அவர்கள் குறித்து எங்கள் தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சொல்லிருக்கிறோம். ஒத்துழைக்காத அதிகாரிகள் பற்றி எடுத்து கூறியிருக்கிறோம் அவர்களை மாற்ற வேண்டியது குறித்தும் மேலிடத்தில் கூறியிருப்பதாக நமச்சிவாயம் தெரிவித்தார்.
"மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள அனைத்து அலுவலகத்திற்கு வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. அதில், புதுச்சேரியிலிருந்து எந்தெந்த கோப்புகள் வந்துள்ளதோ, எந்தெந்த கோப்புகள் நிலுவையில் உள்ளதோ அவை அனைத்தையும் உடனடியாக சரி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு பொறுத்தவரைப் புதுச்சேரி விஷயத்தில் நேர்மையாகவே செய்யப்படுகிறது. பிரதமர், உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் அனைவருமே புதுச்சேரிக்கு நேர்மையாக மட்டுமே செயல்படுகின்றனர்.
குறிப்பாக நிறைய விஷயங்களில் மத்திய அரசு கொடுத்த திட்டத்தையே செயல்படுத்தவில்லை. நிறைய விஷயங்களில் மத்திய அரசு கொடுத்த பணத்தையே செலவு பண்ணாமல் இருக்கின்றனர். ஆனால் ஒருசில அதிகாரிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் எதிர்மறையாக நிறைய விஷயங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்," என்கிறார் நமசிவாயம்.
"மத்திய அரசு ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள் நிறையச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதே மாதிரி திட்டங்களாக ஸ்மார்ட் சிட்டி போன்று சிலவற்றைச் செய்ய முயற்சிக்கிறார். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தும் அப்படியே இருக்கிறது.
அதாவது ஒருபக்கம் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்கிறார்கள். மற்றொருபுறம் கொடுத்த பணத்தையே செலவு செய்யாமல் இருக்கிறார்கள். கொடுத்த பணத்தை செலவழித்துவிட்டு வாருங்கள் கொடுக்கிறோம் என்கிறது மத்திய அரசு, ஆனால் ஏன் அவ்வாறு செய்யாமல் இருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.
அது மட்டுமின்றி நேரத்தோடு பட்ஜெட் தாக்கல் செய்து கொடுக்கும்படி மத்திய அரசு கேட்கிறது. பிப்ரவரி மாதம் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. அதற்கு முன்னர் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யும்படி கேட்கிறேன். ஆனால் முடிந்த பிறகுதான் இங்கே பட்ஜெட் தாக்கல் செய்திருந்தனர். அதுபோன்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன," என்று கூறினார்.
இப்போது ரங்கசாமி இப்படி வெளிப்படையாகப் பேசுவதற்கு என்ன காரணம் என என்று நமசிவாயத்திடம் கேட்டபோது, "தற்போது நாம் அனுப்பி வைக்கக்கூடிய கோப்புகள் சில திருப்பி அனுப்பப்படுகின்றன. நாம் அனுப்பி வைப்பது இவ்வாறு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டு கேள்வி எழுகிற காரணத்தால் இப்படி பேசியிருக்கலாம். ஆனால் ஏன் என்ற சரியான காரணம் நம்மால் கூற இயலாது," என்றார் நமச்சிவாயம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













