எலிக்கறி சமையலை விரும்பும் சாப்பாட்டு பிரியர்கள் - ஆராய்ச்சி வெளிப்படுத்தும் உண்மைகள்

எலிக்கறி சமையல்

பட மூலாதாரம், GRANT SINGLETON, INTERNATIONAL RICE RESEARCH INSTITUTE

உறங்குவதற்கு முன், தரையில் அல்லது மேஜையில் எங்கும் உணவுப் பொருளோ அல்லது துண்டுகளோ எஞ்சியிருப்பது வழக்கமாகக் காணப்படும் காட்சி தான். அல்லது அது எலிகள் போன்ற சில தேவையற்ற விருந்தினர்களுக்கு விருந்தாகலாம்.

சிலருக்கு எலியைப்பார்த்தாலே வெறுப்பு உண்டாகும்.

உதாரணமாக, நியூயார்க் நகரம், சமீபத்தில் 'எலித் தொல்லை’யைத் தீர்க்க புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, ஆனால் உலகளவில், இந்த எலிகள் விரும்பத்தகாத விருந்தினர்களாகக் கருதப்படுவதில்லை.

உண்மையில், உலகெங்கிலும் சில இடங்களில், எலிகள் ஒரு சுவையான மற்றும் பிரியமான விருந்தாகக் கூடக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 அன்று, வடகிழக்கு இந்தியாவின் மலைகளில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில், பழங்குடி சமூகம் 'யூனங் ஆரான்' என்ற திருவிழாவைக் கொண்டாடுகிறது.

இது ஒரு அசாதாரணமான திருவிழா, இதில் எலிகள் உணவின் சிறந்த அங்கமாகச் சேர்க்கப்படுகின்றன. எலியின் வயிறு, குடல், கல்லீரல், விதைப்பை, வால் மற்றும் கால்களை உப்பு, மிளகாய், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் 'போலே பலாக் உயிங்' இந்த பழங்குடியின மக்களின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும்.

இந்தச் சமூகத்தில், வீட்டைச் சுற்றி காணப்படும் வீட்டு எலிகள் முதல் காட்டில் வாழும் இனங்கள் வரை அனைத்து வகையான எலிகளும் வரவேற்கப்படுகின்றன.

குறிப்பாக எலியின் வால் மற்றும் பாதங்கள் மிகுந்த சுவை மிக்கவை என்று பாராட்டுகிறார், ஃபின்லாந்தின் ஓலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்டர் பென்னோ மேயர் ரோச்சோ. அவர் தனது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பலரிடம் பேசியுள்ளார். எலிகளை உணவாகப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது இவரது ஆராய்ச்சி.

எலி மாமிசம் சிறப்பானதா?

எலி சமையல்

பட மூலாதாரம், Getty Images

ஆராய்ச்சியின் போது, ​​தொந்தரவாகத் தோன்றும் இந்த உயிரினத்தைப் பற்றிய வித்தியாசமான சிந்தனை அவருக்குத் தோன்றியது. எலி இறைச்சி அவர்கள் கற்பனை செய்யக்கூடிய 'சுவையான மற்றும் சிறந்த இறைச்சி' என்று ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

"எலிகள் இல்லாவிட்டால் அது விருந்தே இல்லை, விருந்து, களியாட்டம், கொண்டாட்டம், சிறப்பு விருந்தினர், பார்வையாளர் அல்லது உறவினரைக் கௌரவிக்கும் எந்த விசேஷ நிகழ்வானாலும் மெனுவில் எலி இறைச்சி இருக்க வேண்டும்” என்று தன்னிடம் கூறப்பட்டதாக அவர் கூறுகிறார்.

எலிகள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும், அது அவர்களின் மெனுவின் ஒரு பகுதி மட்டுமல்ல. இறந்த எலிகள் பரிசாக வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

எலிகள், வரதட்சணையிலும் முக்கியமான பொருளாக இருக்கின்றன. மணப்பெண்ணின் உறவினர்கள் தங்கள் மகளை கணவனுடன் மகிழ்ச்சியுடன் அனுப்பும்போது, ​​பரிசுகளில் எலிகளும் அடங்கும்.

'யூனங் ஆரான்' விழாவின் முதல் நாள் காலையில், கிறிஸ்மஸ் காலையில் குழந்தைகளுக்கு பொம்மைகளைப் போலவே, இறந்த இரண்டு எலிகள் குழந்தைகளுக்குப் பரிசாக வழங்கப்படுகின்றன.

எலி இறைச்சி சமைக்கப்படும் இடங்கள்

எலி சமையல்

பட மூலாதாரம், MEYER-ROCHOW & MEGU

பழங்குடியின மக்கள் எலிகளை எப்போது, ​​எப்படி விரும்புகிறார்கள் என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் மேயர் ரோச்சோ இது ஒரு நீண்டகாலப் பாரம்பரியம் என்று கூறுகிறார்.

"மான், ஆடு, எருமை போன்ற பல விலங்குகள் இன்னும் கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளில் சுற்றித் திரிகின்றன, ஆனால் பழங்குடி சமூகம் எலியின் சுவையை மட்டுமே விரும்புகிறது. எலிக்குப் போட்டியே இல்லை" என்று அவர் கூறுகிறார்.

மேயர் ரோச்சோ, சைவ உணவு உண்பவராக இருந்தபோதிலும், இந்தப் பிரபலமான இறைச்சியை ருசித்து, வாசனையைத் தவிர இதுவும் மற்ற இறைச்சிகளைப் போலவே இருப்பதைக் கண்டறிந்தார்.

"இது விலங்கியல் மாணவர்களின் ஆரம்பகால ஆய்வகப் படிப்புகளின் நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது, அதில் அவர்கள் எலிகளைப் பிரித்து அவற்றின் உடற்கூறியல் ஆய்வு செய்கிறார்கள்." என்று அவர் கூறுகிறார்.

எலி ஒரு உணவுப் பொருளாக இருப்பது, இந்தியாவின் இந்தச் சிறிய மூலையில் மட்டும் அல்ல.

பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்டீபன் கேட்ஸ் உலகம் முழுவதும் பயணம் செய்து மிகவும் அசாதாரணமான உணவு ஆதாரங்களைக் கொண்டவர்களைச் சந்தித்துள்ளார்.

கேமரூனில் உள்ள யாவுண்டே நகருக்கு வெளியே, அவர் எலிகளின் சிறிய பண்ணையைக் கண்டார், அவற்றை அவர் 'சிறிய நாய்கள், குறும்பான சிறிய கூட்டாளிகள்' என்று விவரிக்கிறார்.

இந்த எலிகள் கோழி அல்லது காய்கறிகளை விட விலை அதிகம் என்று கேட்ஸ் கூறுகிறார்.

சுவைக்கான காரணம்

எலி சமையல்

பட மூலாதாரம், GRANT SINGLETON

படக்குறிப்பு, உப்பு, மசாலாக்கள் போட்டு எலிகள் வறுக்கப்படுகின்றன.

மேலும் அதன் சுவை குறித்து அவரிடம் கேட்டபோது, ​​"என் வாழ்நாளில் நான் சாப்பிட்டதில் மிகவும் சுவையான இறைச்சி இது" என்றார்.

எலி இறைச்சி தக்காளியுடன் சமைக்கப்பட்டதை கேட்ஸ் நினைவு கூர்ந்தார், மேலும் அதை "பன்றி இறைச்சி போல ஆனால் மிகவும் மென்மையானது, குறைந்த தீயில் சமைக்கப்பட்ட பன்றியின் தோள்பட்டை இறைச்சி போன்றது” என்று விவரித்தார்.

"வழக்கத்திற்கு மாறாக மென்மையான மற்றும் சுவையான அழகான கொழுப்பு அடுக்குடன் கூடிய சதைப்பற்றுள்ளது” என்று வர்ணிக்கிறார்.

பிஹாரில் தலித்துகளுடன் தங்கிய கேட்ஸ்

அவர் சந்தித்தவர்கள், பணக்கார நில உரிமையாளர்களின் பயிர்களை கவனித்துக்கொள்ளும் மற்றொரு சாதியினர், இவர்கள் வயல்களில் அழிவை ஏற்படுத்தும் எலிகளைச் சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

கேட்ஸின் கூற்றுப்படி, இந்த சிறிய எலிகள் சாப்பிடுவதற்கு மிகவும் மென்மையாகவும், அவற்றின் சுவை ஒரு சிறிய கோழி அல்லது காடை போலவும் இருந்தது. எரியும் முடியின் வாசனை தான் இதில் மோசமானது.

சிறிய விலங்குகளின் தோல் அல்லது இறைச்சி கெட்டுவிடாமல் இருக்க, அவற்றின் தலைமுடி முற்றிலும் வறுக்கப்படுகிறது, இது ஒரு தாங்கமுடியாத துர்நாற்றம் மற்றும் "தோலில் ஒரு காரத்தை" உருவாக்குகிறது, ஆனால் உள்ளே சுவை நன்றாக இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

எலியின் உள்ளே உள்ள இறைச்சி மற்றும் தோல் முற்றிலும் சுவையாக இருப்பதாக அவர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள சுவையான எலிகள்

எலி சமையல்

பட மூலாதாரம், PROF SR BELMAIN, UNIVERSITY OF GREENWICH

படக்குறிப்பு, பேராசிரியர் பெல்மெய்ன், கிரீன்விச் பல்கலைக்கழகம்

எலிகளுக்கான நமது சுவை பழமையானது. நெப்ராஸ்கா லிங்கன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, தாங் வம்சத்தின் போது (618-907) சீனாவில் எலிகள் உண்ணப்பட்டன, மேலும் அவை 'வீட்டு மான்' என்று அழைக்கப்பட்டன.

தாங் வம்சத்தின் போது உண்ணப்பட்ட ஒரு சிறப்பு விஷயம், தேன் நிரப்பப்பட்ட, புதிதாகப் பிறந்த எலிகள் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இதே போன்ற பொதுவான வீட்டு எலியான 'க்யோரே', நியூசிலாந்தில் பலரால் உண்ணப்பட்டது.

க்யோரே என்பது யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும் விருப்பமான உணவாகக் கருதப்பட்டது என்று நியூசிலாந்தின் என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறது. மேலும் இது நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது, இது திருமணம் போன்ற விழாக்களில் பரிமாறப்பட்டது.

கம்போடியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸின் சில பகுதிகள் மற்றும் இந்தோனேசியா, தாய்லாந்து, கானா, சீனா மற்றும் வியட்நாமில் எலிகள் வழக்கமாக உணவாக உண்ணப்படுகின்றன என பிலிப்பைன்ஸின் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் கிராண்ட் சிங்கிள்டன் கூறுகிறார்.

எலிகளின் வகைகளும் அவற்றின் சுவைகளும்

எலி சமையல்

பட மூலாதாரம், BERUFSTIERRETTUNG RHEIN-NECKAR

வியட்நாமின் மீகாங் டெல்டாவில் குறைந்தது ஆறு முறை எலி இறைச்சியை சாப்பிட்டதாக சிங்கிள்டன் கூறுகிறார். "நெல் வயல் எலிகளின் சுவையை முயலின் சுவைக்கு ஈடாக நான் கருதுகிறேன்” என்கிறார்.

லாவோஸின் மேல் பகுதிகளிலும் மியான்மரின் கீழ் டெல்டாவிலும் எலிகளை சாப்பிட்ட அனுபவத்தையும் சிங்கிள்டன் நினைவு கூர்ந்தார். லாவோஸின் வடக்கு மேல் மாகாணங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் சுவையின் அடிப்படையில் குறைந்தது ஐந்து வகையான எலிகளை அடையாளம் காண முடியும் என்று அவர் கூறுகிறார்.

ஆப்பிரிக்காவில் உள்ள சில சமூகங்கள் எலிகளை உண்ணும் பழங்காலப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. உதாரணமாக, நைஜீரியாவில், ஆப்பிரிக்க ராட்சத எலி அனைத்து இனக் குழுக்களிடையேயும் பிடித்ததாகக் கருதப்படுகிறது.

நைஜீரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மொஜிசோலா ஓயாரிக்வா, இது ஒரு சிறப்பு சுவையாக கருதப்படுகிறது என்றும் மாட்டிறைச்சி மற்றும் மீனை விட விலை அதிகம் என்றும் கூறுகிறார். இதை வறுத்தோ, உலர்த்தியோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம் என்றும் விவரிக்கிறார்.

மக்கள் ஏன் இதை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்? இது அவர்களின் கடுமையான தேவையா? வெவ்வேறு நாடுகளில் எலிகளை ருசித்துப் பார்த்த பிறகு, உணவுப் பற்றாக்குறையால் கட்டாயப்படுத்தப்பட்டு உண்பதைக் காட்டிலும் மக்கள் விருப்பத்தின் பேரில் தான் இதை உண்கிறார்கள் என்று கேட்ஸ் கூறுகிறார்.

உங்களுக்குப் பிடித்தமான உணவகத்தின் மெனுவில் இப்போது எலிகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நமது உணவுப் பழக்கம் உலக அளவில் அதிவேகமாக மாறி வரும் சூழலில், மேற்கத்திய மெனுக்களில் எலிகள் ஒரு நாள் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதை நீங்கள் முயற்சித்துப் பார்க்கவும். உங்களுக்கு இது பிடித்தும் இருக்கலாம். இதையெல்லாம் மீறி, கிவிகள் இதுவரை சாப்பிட்டதில் இன்று வரை மிகவும் சுவையான இறைச்சி இதுவாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: