ரத்தசாட்சி திரைப் படம்: எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் உண்மையில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Rafiq Ismail/Twitter
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தற்போது ஆஹா(Aha) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகும் ரத்தசாட்சி, 1980களின் துவக்கத்தில் தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் நிலவிய நக்சல் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. அந்தத் தருணத்தில் உண்மையில் என்ன நடந்தது?
ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' சிறுகதையை அடிப்படையாக வைத்து ரஃபீக் இஸ்மாயில் இயக்கியிருக்கும் 'ரத்தசாட்சி' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியிருக்கிறது. ரஃபீக் இஸ்மாயிலுக்கு இது முதல் படம்.
ஜெயமோகன் கதையில் வரும் முக்கிய சம்பவங்களை எடுத்துக்கொண்ட ரஃபீக், 1980களின் துவக்கத்தில் தர்மபுரி மாவட்டத்தில் நிலவிய நக்சல் பிரச்னையையும் நக்ஸல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த அப்பு கொல்லப்பட்டதையும் படமாக்கியிருக்கிறார்.
படத்தை இயக்கியிருப்பது புதுமுக இயக்குநர் என்றாலும், இந்தப் படம் பெரும் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, சமூக ஊடகங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இடதுசாரிகளை நையாண்டி செய்யும் நோக்கோடு இந்தக் கதை எழுதப்பட்டு படமாக்கப்பட்டிருப்பதாகப் பலர் குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக, படத்தின் துவக்கத்தில் நக்சல்பாரிகள் யானையோடு திரிவது, தீவிர இடதுசாரி குழுக்களின் தலைவராக, மிகப் பெரிய நிலக்கிழார் ஒருவரைச் சொல்வது, அரசை எதிர்த்துப் போராட முடியாது என்பதையே படத்தின் அடிநாதத்தைப் போலக் காட்டுவது போன்றவை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.
அதே நேரம், இந்தப் படத்தின் மூலம் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் செயல்பட்ட தீவிர இடதுசாரி இயக்கங்கள் குறித்த விவாதமும் வெகுநாட்களுக்குப் பிறகு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் காட்டப்படும் அப்பு என்பது யார்? அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் தீவிர இடதுசாரி குழுக்களின் எழுச்சி

பட மூலாதாரம், Rafiq Ismail/Twitter
தமிழ்நாட்டில் 1970களின் பிற்பகுதியில் ஆயுதம் தாங்கிய இடதுசாரி குழுக்கள் தீவிரமாக இயங்கி வந்தன. வேலூர் மாவட்டம், தென்னாற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் இவர்களின் செயல்பாடுகள் இருந்து வந்தன. கூடுதல் வட்டி வாங்குபவர்கள், நிலத்தில் வேலைவாங்கி மக்களைச் சுரண்டுபவர்கள் இவர்களது தாக்குதலுக்கு ஆளாயினர்.
தர்மபுரி மாவட்டத்தின் பின்தங்கிய நிலையும், அந்த மாவட்டத்திற்கும் ஆந்திர மாநிலத்திற்கும் இடையிலிருந்த அடர்ந்த புதர்க்காடுகளும் நக்சல் குழுக்கள் இயங்க வசதியாக அமைந்தன.
1978 வாக்கில், அப்பாசாமி ரெட்டியார், மடவாளம் இரட்டைக் கொலை, ஏலகிரிமலை ரெட்டியார் கொலை எனப் பல கொலைகளை இந்த இடதுசாரிக் குழுவினர் செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், அப்போதைய வேலூர் மாவட்டத்தில் அமைந்திருந்த திருப்பத்தூர் வட்டத்தின் காவல் நிலைய ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் சென்ற காவலர்கள் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று அதிகாலையில் ஏலகிரி மலை அடிவாரத்தில் பதுங்கியிருந்த சிவலிங்கம், பெருமாள், ராஜப்பா, செல்வம், சின்னதம்பி ஆகியோரைப் பிடித்தனர்.
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர்களை ஒரு காரில் அழைத்துச் சென்றபோது, வக்கணம்பட்டி என்ற இடத்தின் அருகே அந்தக் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பட மூலாதாரம், TAMIL NADU STATE POLICE MUSEUM
இதில் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமைக் காவலர் ஆதி கேசவலு, ஏசுதாஸ், முருகேசன் ஆகியோரும் நக்சலைட்டுகளாகக் கருதப்பட்ட பெருமாள், ராஜப்பா, செல்வம் ஆகியோரும் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் சின்னதம்பி மீட்கப்பட்டார். சிவலிங்கம் அங்கிருந்து தப்பினார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காட்பாடியில் நடந்த பழனிச்சாமியின் இறுதிச் சடங்கில் முதலமைச்சர் எம். ஜி. ஆர். கலந்துகொண்டார்.
இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஆயுதம் தாங்கிய இடதுசாரிக் குழுக்களை ஒழிப்பதற்காக நடவடிக்கையைத் துவங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். கொல்லப்பட்டிருந்த ஆய்வாளர் பழனிச்சாமியின் 6 வயது மகள் அஜந்தா பெயரே அந்த நடவடிக்கைக்குச் சூட்டப்பட்டது. இதற்குப் பிறகு, ‘ஆப்ரேஷன் அஜந்தா’ என்ற பெயரில் தேடுதல் வேட்டை துவங்கியது.

பட மூலாதாரம், tamil nadu state police museum
சுமார் நூறு காவலர்கள் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில், காவலர்கள் நான்கைந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முகாம்களை அமைத்தனர். இந்த நடவடிக்கைக்கு அப்போது டிஐஜியாக இருந்த வால்டர் தேவாரம் தலைமை ஏற்றார்.
அடுத்த ஓராண்டில் 19 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். கடைசியாக 1981இல் மூன்று நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், உயிரோடு பிடிக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
ரத்தசாட்சி படத்தில் வரும் அப்பு என்ற அற்புதசாமி, அஜந்தா நடவடிக்கைக்கு முன்பாகவே 1979 செப்டம்பரில் நாயக்கன் கொட்டாயில் கைது செய்யப்பட்டார். தன்னைத் தேடும் வேட்டையில், அந்தப் பகுதி மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க அப்பு தானே முன்வந்து காவல்துறையிடம் சரணடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பிறகு செப்டம்பர் 17ஆம் தேதி ஒகேனக்கல் காடுகளில் வைத்து அப்பு சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவரது மரணம், அறிவிக்கப்படாமல் அவர் தொடர்ந்து தேடப்படும் குற்றவாளியாகவே இருந்து வருகிறார்.
அதேபோல, பாலன் என்ற நக்சல் தலைவரும் காவல்துறையால் கொல்லப்பட்டார். இவர்கள் இருவருக்கும் நாயக்கன்கொட்டாயில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது.
1981ஆம் ஆண்டு தாக்குதல் சம்பவத்தில் தப்பியோடிய சிவலிங்கம், ஆந்திர மாநிலம் நலகொண்டாவில் 29 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஆனால், அவரை தமிழகக் காவல்துறை தொடர்ந்து தேடி வந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அவரைக் கைது செய்தது.
வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில் 2016ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிவலிங்கத்துக்கு ஐந்து ஆயுள் தண்டனையும் வெடிகுண்டு வைத்திருந்ததற்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கும்படி நீதிமன்றம் கூறியது.
1980களுக்குப் பிறகும் அவ்வப்போது, இந்தப் பகுதியில் நக்சல் குழுக்கள் செயல்படுவது தொடர்பான செய்திகளும் அவர்களில் சிலர் காவல்துறை மோதலில் கொல்லப்படுவது குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













