2001 நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன?

நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம்.ஏ. பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

2001, டிசம்பர் 13, காலை 11.30 மணியளவில் அனுமதியின்றி யாரும் எளிதில் நுழைய முடியாத இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றார்கள். நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சில எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக வைப்பது அவர்களின் திட்டம். அதை பாதுகாப்புப் படையினர் முறியடித்தார்கள்.

நடந்த சம்பவத்தில் எட்டு பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் ஒன்பது பேரும் 5 ஆயுததாரிகளும் கொல்லப்பட்டார்கள். அந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, நீதிமன்றம் தண்டனை விதிக்கிறது. துயரமும், துணிச்சலும், விவேகமும் நிறைந்த இந்த சம்பவத்தின் 21-ஆவது நினைவு தினம் இன்று (13.12.2022) அனுசரிக்கப்படுகிறது.

என்ன நடந்தது?

சம்பவ நாளில், நாடாளுமன்ற வளாகத்துக்குள் DL3CJ1527 என்ற பதிவு எண் கொண்ட ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் காரில் ஆயுததாரிகள் 5 பேர் நுழைந்தனர். தானியங்கி துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், மின்னணு தொடர் குண்டுகள், உதிரி வெடிமருந்துகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை அந்த வாகனங்களில் அவர்கள் வைத்திருந்தனர்.

டிஃபன் பாக்ஸ் குண்டுகள் மற்றும் காரின் முன்பக்கத்தில் ஏராளமான அளவு அம்மோனியம் நைட்ரேட்டுடன் தயாரிக்கப்பட்ட அதிநவீன குண்டுகளையும் அவர்கள் வைத்திருந்தனர். ஒரு காவல் படையணியை எதிர்கொள்ளும் அளவுக்கு அந்த வெடிமருந்துகள் போதுமானதாக இருந்ததாக பின்னாளில் நடந்த விசாரணையின்போது உயர் நீதிமன்றம் தனது கருத்தை பதிவு செய்திருந்தது.

பாதுகாப்பு கெடுபிடியை மீறியது எப்படி?

அன்றைய தினம், நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் 11-இல் இருந்து குடியரசு துணைத் தலைவரை அழைத்துச் செல்வதற்காக அவரது வாகனத்தொகுப்பு (கான்வாய்) காத்திருந்தது.

வழக்கமாக, மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவர், மக்களவை சபாநாயகர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் முன்னனுமதியுடன் வரும் மிக முக்கிய பிரதமுர்கள் ஆகியோரின் வாகனங்கள் மட்டுமே விஜய் செளக் ரவுன்டானா சந்திப்பு வளைவில் உள்ள பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்படும்.

விதிவிலக்காக, குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரின் பாதுகாப்பு வாகனங்கள் உள்ளே வந்து அவர்களை அழைத்துச் செல்ல உள்ளே அனுமதிக்கப்படும். ஏனைய அனைத்து பாதுகாப்பு வாகனங்கள் வெளிப்புற வளாகத்திலேயே நிறுத்தப்பட்டு, அவர்களால் பாதுகாப்பு வழங்கப்படும் அடிப்படையில் எம்.பி.க்களாக உள்ள தலைவர்கள் மட்டுமே அவருக்குரிய வாகனங்களில் நாடாளுமன்றத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படும்.

நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், சம்பவ நாளில் காலை 11.30 மணியளவில் நாடாளுமன்றத்தின் வெளிப்புற வாயிலில் இந்திய ராணுவத்தினரின் சீருடையில் இருந்தவர்களுடன் சிவப்பு சுழல் விளக்குடன் நுழைந்த வெள்ளை நிற அம்பாசிடர் கார் வந்தது. அதன் முன்பக்க கண்ணாடியில் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வாகன அனுமதிக்கான நுழைவு ஸ்டிக்கர் பொருத்தப்பட்டிருந்தது.

இந்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானிக்கு தேசிய பாதுகாப்புப் படை எனப்படும் கறுப்புப்பூனைப்படை வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனால், அசாதாரண அழைப்பின் பேரில் ஒருவேளை அவரது வீரர்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதிய வெளிப்புற பாதுகாவலர்கள், கதவுகளை திறக்கச் செய்து அந்த வாகனம் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

ஆனால், அடுத்த 200 மீட்டர் தூரத்தில் பிரதான கட்டடத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள அரை வட்ட வடிவ சந்திப்பை மறித்தவாறு அந்த நேரத்தில் குடியரசு துணைத்தலைவரின் பாதுகாப்பு வாகனத் தொகுப்பு நின்றிருந்தது.

இதனால் நேராக செல்ல திட்டமிட்டிருந்த அம்பாசிடர் கார், கட்டுப்படுத்தப்பட்ட வாகன நிறுத்த பகுதியில் இடதுபுறமாக திரும்பியது. இதை பார்த்த குடியரசு துணைத் தலைவரின் பாதுகாவலர்கள், வேகமாக வந்து அந்த காரை எடுக்குமாறு நிர்பந்தித்தார்கள்.

இதை எதிர்பார்க்காத அந்த கார் ஓட்டுநர், வேகமாக பின்னோக்கி செலுத்த முயன்றபோது அந்த கார், குடியரசு துணைத் தலைவரின் பாதுகாப்பு தொடரில் இருந்து ஒரு கார் மீது உரசியது.

இதனால், அதன் ஓட்டுநரும், அருகே இருந்த பாதுகாவரும், அந்த வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஓட்டுநரின் சட்டை காலரை பிடித்து, திட்டினார்கள். அப்போது காருக்குள் இருந்த ராணுவ சீருடையில் இருந்த அனைவரும் தானியங்கி துப்பாக்கிகளுடன் வெளியே வந்து சுடத் தொடங்கினர்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்து, அவசரமாக அங்கு கூடியிருந்தவர்கள் ஓட்டும் பிடித்து உயிரை தற்காத்துக் கொள்ள பதுங்கினார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் காவல் படையின் வீரர்கள், தங்கள் நிலைகளில் இருந்து கொண்டு எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.

இதே நேரம், ஆயுததாரிகள் குழுவினரில் சிலர், நாடாளுமன்ற கட்டட வளாகத்துக்கு வெளியே தானியங்கி வெடிகுண்டுகளை வயர்களால் இணைத்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த ஒரு வீரர், அவர்களை நோக்கி தனது கைத் துப்பாக்கியால் சுட்டதும், ஆயுததாரிகள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். ஆயுததாரிகள் மேலும் முன்னேறிச்செல்லாதவாறு மத்திய ரிசர்வ் காவல் படையினர் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்தப்படும் செய்தி வயர்லெஸ் மூலம் கிடைத்ததும், நாடாளுமன்ற வீதி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீ ஜி.எல். மேத்தா தமது அணியினருடனும், தேசிய பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்தனர். ஆனால், இதற்குள்ளாக அரை மணி நேரமாக நடந்த துப்பாக்கி சண்டை முடிந்தது. முடிவில், நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில் 1 எதிரே ஒரு ஆயுததாரி, நுழைவு வாயில் 5 அருகே ஒரு ஆயுததாரி, நுழைவு வாயில் 9-இன் தாழ்வாரத்தில் மூன்று ஆயுததாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆயுததாரிகள் வைத்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள், தோட்டாக்கள் மற்றும் கார் மற்றும் அதில் இருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 தீவிரவாதிகளின் உருவம், புகைப்படம் எடுக்கப்பட்ட பிறகு, அவர்களுடைய சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. டெல்லி காவல்துறையின் தீவிரவாதிகள் தடுப்புப்பிரிவுவசம் அந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

காவல்துறையினர், அனில் குமார், ராஜுலால், சுனில் வர்மா, சஞ்சய் கெளல், ரோஹைல் சர்மா, ரோஹைல் அலி ஷா என 6 பேரின் பெயரில் இருந்த போலி அடையாள அட்டைகள், டெல்லியின் வெவ்வேறு பகுதி முகவரிகளுடன் அச்சிடப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

ஆயுததாரிகளில் ஒருவரிடம், சைபர்டெக் ஹார்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவன பெயரில் ஆஷிக் ஹுசேன் என்ற பெயர் கொண்ட அடையாள அட்டை இருந்தது. மேலும், 5 இந்திய செல்லிடப்பேசி எண்கள், 2 ஐக்கிர அரபு எமிரேட்ஸ் செல்லிடப்பேசி எண்களுடன் கூடிய சிம் கார்டுகள் இருந்தன.

நாடாளுமன்ற கட்டடத்தின் வரைவு படம், விவரங்கள் கையால் எழுதப்பட்ட ஒரு தாளும் அவர்கள் வந்த காருக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பு துலக்கியது எப்படி?

அவர்கள் வந்த காரின் படம், அதன் பதிவெண்ணுடன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது. அதைப்பார்த்து, அந்த காரை தான்தான் ஆஷிக் ஹுசேன் என்பவரிடம் விற்றதாக ஒருவர் காவல் நிலையத்தில் தோன்றி தகவல் கொடுத்தார். ஆஷிக் ஹுசேனின் அடையாள அட்டையை வைத்திருந்தவரின் செல்லிடப்பேசியில் இருந்து அஃப்சல் குரு என்பவர், சம்பவ நாள் காலை 10.40 முதல் 11.22 மணிவரை பேசியது புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த வழக்கை துப்பு துலக்கிய தலைமை விசாரணை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும், தாக்குதல் நடத்த அரை மணி நேரத்தில் ஷெளகத் என்பவரிடம் இருந்து எஸ்ஏஆர் கிலானி என்பவருக்கு தொலைபேசி அழைப்பு சென்றதும், கிலானியிடம் இருந்து மீண்டும் ஷெளகத்துக்கு தொலைபேசி அழைப்பு சென்றதும் தெரிய வந்தது. அந்த வகையில், தாக்குதலுக்கு முன்பும் பிறகும் ஷெளகத்தும் அஃப்சலும் கிலானியுடன் தொடர்பில் இருந்ததை புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.

அந்த நேரத்தில் எஸ்ஏஆர். கிலானி ஒருவர் வைத்திருந்த செல்லிடப்பேசி மட்டுமே நிரந்த வசிப்பிட முகவரியை கொண்டதாக இருந்தது. அவரது வீடு டெல்லி முகர்ஜி நகரில் இருந்ததும் புலனாய்வாளர்களுக்கு தெரிய வந்தது.

எஸ்ஏஆர். கிலானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எஸ்ஏஆர். கிலானி

இதையடுத்து இந்திய உளவுத்துறையான "இன்டலிஜெனஸ் பியூரோ" இணை இயக்குநர் அனுமதியுடன் கிலானியின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதில், தாக்குதலுக்கு அடுத்த நாளான 2001, டிசம்பர் 14-ஆம் தேதி, கிலானிக்கு ஸ்ரீநகரில் இருந்து வந்த அழைப்பில் ஒருவர் கஷ்மீரி மொழியில் பேசினார். அதில் பேசியவர் கிலானியின் சகோதரர் என்றும் அதில் ஷெளகத் எதிர்முனையில் பேசிய பெண் ஷெளகத்தின் மனைவி என்றும் தெரிய வந்தது. மேலும், ஸ்நகரில் ஷெளகத், சோட்டூ ஆகிய இருவருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் முன்கூட்டியே தெரிந்திருப்பதை அவர்களின் உரையாடல் உணர்த்தியதால், அடுத்த கட்டமாக கிலானியை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீநகரை சேர்ந்த ஷெளகத்தின் மனைவியான அஃப்சன் குரு எனும் நவ்ஜோத் சாண்டுக்கு சொந்தமான டிரக்கில் அப்சல் குருவும், ஷெளகத்தும் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்றனர். இருவரும் டிசம்பர் 15-ஆம் தேதி ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டனர். நவ்ஜோத்தும் அதன் தொடர்ச்சியாக கைதானார்.

பிறகு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டதும் பலியான ஆயுததாரிகளின் பெயரையும் அவர்களின் அடையாளத்தையும் அஃப்சல் குருவே உறுதிப்படுத்தினார். அவர் கொடுத்த தகவலின்பேரில், டெட்லி இந்திரா விஹார், காந்தி விஹார் ஆகிய பகுதிகளில் ஆயுததாரிகள் பதுக்கி வைத்ததாக நம்பப்படும் வெடிமருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதன் பிறகே, நுழைவு வாயில் எண் அருகே பலியானவர் மெஹாம்மத் (ஆஷிக் ஹுசேன் என போலி அடையாள அட்டை வைத்திருந்தவர்) என்றும் நுழைவு வாயில் 9 அருகே பலியானவர்கள், ராஜா ராணா மற்றும் ஹம்சா என்றும், நுழைவு வாயில் 5 அருகே பலியானது ஹைதர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நேரத்தில்தான் டிசம்பர் 19-ஆம் தேதி தீவிரவாத தடுப்பு அவசர சட்டப்பிரிவுகளின்கீழ் (பொடா சட்டம்) கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதே நாள், காவல்துறையிடம் பிடிபட்ட அஃப்சல் குரு, ஷெளகத், கிலானி ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் தர ஒப்புக் கொண்டதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கான ஒப்புதல் வாக்குமூலத்தை தனது கைப்பட எழுதித் தர மட்டுமே அஃப்சல் குரு ஒப்புக் கொண்டதாக அந்த வழக்கை புலனாய்வு செய்த அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், 2002, மே 4-ஆம் தேதி கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டை பதிவு செய்ய டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட வழக்கு விசாரணை முடிவில், அஃப்சல் குரு, ஷெளகத், கிலானி ஆகியோருக்கு அதே ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஷெளகத்தின் மனைவி அஃப்சன் குருவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் செய்ய்பப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், 2003, அக்டோபர் மாதம், அப்சல் குரு, ஷெளகத் ஹுசேன் குருவுக்கு தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. கிலானி, அஃப்சன் குரு ஆகியோர், வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, ஆகஸ்ட் 30-ஆம் தேதி வழக்கில் முக்கிய நபராக குற்றம்சாட்டப்பட்ட ஜெய்ஷ் இ மொஹம்மத் தலைவர் காஸி பாபா, ஸ்ரீநகரில் இந்திய எல்லை காவல் படையினரின் என்கவுன்ட்டர் சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

அஃப்சல் குரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஃப்சல் குரு

இதைத்தொடர்ந்து, அஃப்சல் குரு, ஷெளகத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், அஃப்சல் குருவின் தண்டனையை உறுதிப்படுத்தியது. அதே சமயம், ஷெளகத்தின் மரண தண்டனையை பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறையாக நீதிமன்றம் குறைத்தது.

2006-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், அப்சல் குருவின் மனைவி தபாசம் குரு, அப்போதைய குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கருணை மனு அனுப்பினார். அது பரிசீலனையில் இருந்த வேளையில், 2007-ஆம் ஆண்டு, அஃப்சல் குருவின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஷெளகத் ஹுசேன் குரு நன்னடத்தை அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டார்.

2001, டிசம்பர் 13-ஆம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான நீண்ட வழக்காடலுக்குப் பிறகு, 2013, பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டு அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அப்போது ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவத்தை கடுமையாக விமர்சித்தார். சாகும் முன்பு குடும்பத்தாரை கூட பார்க்க அவருக்கு இந்திய அரசு அனுமதி மறுத்ததாக அவர் கூறினார்.

ஆனால், அஃப்சல் தூக்கிலிடப்படும் தகவலை முன்கூட்டியே ஸ்பீட் போஸ்ட் மூலம் அவரது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியதாக அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சுஷீல் குமார் ஷிண்டே தெரிவித்தார். உண்மையில், அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்ட இரு தினங்களுக்கு பிறகே அந்த கடிதம், அவரது குடும்பத்தாருக்கு கிடைத்தது.

அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி, அஃப்சல் குரு விவகாரத்தில் அவரது தண்டனையை தாமதப்படுத்தும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வந்தார். மேலும் தாமதிக்காமல் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சம்பவத்தை நினைவுகூர்ந்த தலைவர்கள்

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவ நாளில் எம்.பி.க்களாக இருந்த பல தலைவர்கள், தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவாவிடம், நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்திக் பார்க்க இயலுமா? என்று பிபிசி செய்தியாளர் கேட்டார்.

"மறக்கக் கூடிய சம்பவமா அது? பதற்றமும் நிமிடத்துக்கு நிமிடம் நடந்த துயரமும் அதிர்ச்சியும் என்றும் மறக்க முடியாதது" என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சம்பவ காலத்தில், இந்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி தற்போது உறுப்பினர் அல்லாதபோதும், அரிதாக நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வருகிறார். அவரிடம் நடந்த சம்பவத்தை நினைவுபுடுத்திக் கூறுமாறு கேட்டபோது, "அன்றைய தினம் மட்டும் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த கண்காணிப்பு ஊழியர், சாதுர்யமாக செயல்பட்டு எங்களை எச்சரித்து விட்டு, கட்டடத்தின் நுழைவுக் கதவுகளை தாழிடச் செய்திருக்காவிட்டால், தீவிரவாதிகள், உள்ளே நுழைந்து கற்பனை செய்து கூட பார்த்திராத செயலில் ஈடுபட்டிருப்பார்கள்" என்றார்.

துப்பாக்கி சூடு நடந்த வேளையில், அன்றைய தினம் தமது அலுவலக அறையில் இருந்ததை நினைவுகூர்ந்த அத்வானி, அங்கிருந்தபடி, படையினரின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும், உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.

சம்பவம் நடந்தபோது, நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் இருந்து பிரதான வாயில் நோக்கி வந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாசுதேவ் ஆச்சார்யா. துப்பாக்கி சூடு நடந்த காட்சிகளை நேரடியாக பார்த்த ஒரு சில எம்.பி.க்களில் இவரும் ஒருவர். பிரதான வாயில் முன்பு நடந்த காட்சிகளை அவரும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

இதேபோல, அப்போது மக்களவை உறுப்பினராக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சம்பவத்தின்போது அவர் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் இருந்தார். "உள்ளே ஆயுதம் தாங்கிய வீரர்கள் இல்லாத நிலையில், ஒரு ஆயுததாரி உள்ளே நுழைந்திருந்தால் கூட, விருப்பத்துக்கு ஏற்ப அவர்கள் எவரையும் கொன்றிருப்பார்கள். அப்படி நடந்திருந்தால், அது பேரழிவாகியிருக்கும்" என்றார்.

மேலும் அவர், "அன்றைய தினம் வியாழக்கிழமை. வழக்கமாக வியாழக்கிழமைகளில் பிரதமர் அவையில் இருப்பார். ஆகவே, ஆயுததாரிகள் நாடாளுமன்ற வாயில் வழியாக வந்து மாநிலங்களவைத் தலைவர் இருக்கும் பகுதியில் நுழைந்து விட்டால் அவர்கள் நேரடியாக மாநிலங்களவைத் தலைவர் அறை பகுதியை அடைந்து, நேரடியாக அவைக்குள் புகுந்து, பிரதமர் உட்பட அவைக்குள் இருக்கும் அனைவரையும் சுட்டுக் கொன்றிருப்பார்கள். அதுவே அவர்களின் திட்டமாக இருந்தது" என்று கூறினார்.

"ஆயுததாரிகள் உள்ளே நுழைந்த தருணத்தில் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் அறையில் நான் இருந்தேன். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டபோது வெளியே செல்ல முயன்ற என்னை பாதுகாவலர்கள், வெளியே துப்பாக்கி சூடு நடக்கிறது,வெளியே போகக் கூடாது என்றார்கள். அதனால் நாங்கள் இருவரும் சபாநாயகர் பாலயோகி அறைக்கு சென்று அங்கிருந்தவாறு நிலைமையை கேட்டறிந்தோம்" என்று வைகோ குறிப்பிட்டார்.

"நல்லவேளையாக, வாட்ச் அன்ட் கார்ட் எனப்படும் நாடாளுமன்ற செயலக பாதுகாப்பு அலுவலர்கள், ஆயுததாரிகள் நுழைந்த உடனேயே அனைத்து கதவுகளையும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தாழிட்டார்கள். அதுவே எல்லா உறுப்பினர்களும் தப்பிக்க முக்கிய காரணமாக அமைந்தது. அந்த சம்பவத்தை ஒருபோதும் என்னால் மறக்க இயலாது" என்று வைகோ நினைவுகூர்ந்தார்.

நடந்த சம்பவம் குறித்து 2001, டிசம்பர் 14-ஆம் தேதி மாநிலங்களவை கூடியபோது, கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து உறுப்பினர்களும் இந்திய ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என்று தாக்குதலை விவரித்தார்கள். அதைத்தொடர்ந்து நடந்த விவாதத்தில் அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி பங்கேற்றுப் பேச, விவாதத்துக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, தீவிரவாதத்துக்கு எதிரான வலுவான நடவடிக்கைக்கு அணி திரள அழைப்பு விடுத்தார்.

பலியான வீரர்கள் யார்?

நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி சம்பவத்தில் ஆயுததாரிகளுடன் சண்டையிட்டும் குண்டடி பட்டும் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் உயிர்தியாகத்தை போற்றும் விதமாக, ஆண்டுதோறும், அவர்கள் உயிரிழந்த பகுதியில் டிசம்பர் 13-ஆம் தேதி மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.

மாநிலங்களவை செயலகத்தில் உதவி பாதுகாப்பு அலுவலர்களாக பணியாற்றிய ஜெக்தீஷ் பிரசாத் யாதவ், மத்பர் சிங் நேகி, மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த பெண் காவலர் கம்லேஷ் குமாரி, டெல்லி காவல்துறையை சேர்ந்த உதவி துணை ஆய்வாளர்கள் நானக் சந்த், ராம்பால், தலைமைக் காவலர்கள் பிஜேந்தர் சிங், கன்ஷியாம், மத்திய பொதுப்பணித் துறையைச் சேர்ந்த தோட்டக்காரர் தேஷ்ராஜ் அதில் அடங்குவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: