பூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், BEDMACHINE/UCI/BAS
பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான பகுதி எது என கண்டறியப்பட்டுள்ளது.
கிழக்கு அண்டார்டிகாவில் டென்மென் பனிப்பாறைக்கு கீழே கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் (கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி ஆழம்) உள்ள பள்ளத்தாக்குதான் பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கடல்கள் மற்றும் சமுத்திரங்களில் மட்டும் தான் இதை விட ஆழமான பகுதிகள் உள்ளன.
இந்த பகுதி 20 கிலோமீட்டர் அகலமும், 100 கிலோமீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது.
இந்த இடம் பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்டு மிக அடர்த்தியாகவும், இருட்டு பிரதேசமாகவும் காட்சியளிப்பதாக இது குறித்த ஆராய்ச்சியில் நீண்டநாள் ஈடுபட்டிருந்த அறிவியலாளர் மார்லிகம் தெரிவித்தார்.
அதேவேளையில், நீர்பரப்பையும் உள்ளடக்கிய பூமியின் ஆழமான இடம் டெட் ஸியின் (Dead Sea) மையப்பகுதிக்கு அருகே உள்ள இடம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 1355 அடி ஆழத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

குடியுரிமை திருத்த மசோதா: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images
அரசியல் சட்டத்தின் 14 மற்றும் 15வது பிரிவுகளை மீறுவதாக குடியுரிமை (திருத்த) சட்ட மசோதா 2019 உள்ளது என்றும் அந்த அடிப்படையில், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் என்னவாகும்?
இந்திய அரசியல்சாசனத்தில், சமத்துவத்துக்கான உரிமை அதன் 14வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும்.
இப்போது இந்திய குடியுரிமை அளிப்பதற்கு பரிசீலனைக்கு உரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களும் அடங்குவர். இந்த நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ள முஸ்லிம்களுக்கும் 14வது பிரிவின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அதற்கு தனியாக ஒரு சட்டம் அமல் செய்யப்பட வேண்டும் என பிரிவு 14ல் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால், இப்போது நாட்டை ஆண்டு வரும் கட்சி, ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே மொழி என்று பேசி வருகிறது.
விரிவாகப் படிக்க: குடியுரிமை திருத்த மசோதா: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் என்னவாகும்?

"எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்"

பட மூலாதாரம், Getty Images
"இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறர்கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள், எங்கே தான் செல்வது நாங்கள். குடியுரிமை இல்லையென்றால் எங்களை கடலில் தள்ளிவிடுங்கள்," என கடலூர் அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கியர், பௌத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசு குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த முஸ்லீம்கள் மற்றும் இலங்கை அகதிகள் ஆகியோர் குடியுரிமை சட்ட திருத்த பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வாழ் இலங்கை அகதிகளை குடியுரிமை பட்டியலில் சேர்க்காதது குறித்து முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க கிராமத்தில் தேர்தல்: தடை செய்த போலீசார்

ஊராட்சித் தலைவர் தேர்தலில், தங்கள் கிராமத்தின் சார்பில் யார் போட்டியிடவேண்டும் என்பதை முடிவு செய்ய வாக்குச்சீட்டு அச்சடித்து தேர்தலே நடத்துவதற்கு நடந்த முயற்சியை போலீசார் தடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள சுமைதாங்கி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இதுபோல நடத்தக்கூடாது என்று கூறி, வாக்கு சீட்டுகளையும் பறிமுதல் செய்து அறிவுரை கூறிச் சென்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் சுமைதாங்கி ஊராட்சியில் களரி, ஆனைகுடி, சுமைதாங்கி, கீழச் சீத்தை ஆகிய நான்கு கிராமங்கள் அடங்கியுள்ளன. இதற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் ஒருமுறைகூட சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த யாரும் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இந்த நான்கு கிராமத்தை சேர்ந்தவர்களும் வாக்களிக்க வேண்டும்.
விரிவாகப் படிக்க:வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க கிராமத்தில் தேர்தல்: தடை செய்த போலீசார்

ரஜினிகாந்த்: காலத்தை கடந்த நாயகன் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?

பட மூலாதாரம், DINODIA PHOTOS
ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா?
70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர்.
தற்போது 168வது படத்திற்கான பணிகளில் தீவிரமாக இருக்கும் ரஜினிகாந்த், கடந்த சில ஆண்டுகளில் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு வந்த முதல் இருபது ஆண்டுகளில் சுமார் 150 படங்களில் நடித்த அவர், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் வெறும் 17 படங்களிலேயே நடித்திருக்கிறார் என்பது ஒரு ஆச்சரியமளிக்கும் தகவல்.
விரிவாகப் படிக்க:ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












