வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க கிராமத்தில் தேர்தல்: தடை செய்த போலீசார்

சுமைதாங்கி

ஊராட்சித் தலைவர் தேர்தலில், தங்கள் கிராமத்தின் சார்பில் யார் போட்டியிடவேண்டும் என்பதை முடிவு செய்ய வாக்குச்சீட்டு அச்சடித்து தேர்தலே நடத்துவதற்கு நடந்த முயற்சியை போலீசார் தடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள சுமைதாங்கி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இதுபோல நடத்தக்கூடாது என்று கூறி, வாக்கு சீட்டுகளையும் பறிமுதல் செய்து அறிவுரை கூறிச் சென்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் சுமைதாங்கி ஊராட்சியில் களரி, ஆனைகுடி, சுமைதாங்கி, கீழச் சீத்தை ஆகிய நான்கு கிராமங்கள் அடங்கியுள்ளன. இதற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் ஒருமுறைகூட சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த யாரும் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இந்த நான்கு கிராமத்தை சேர்ந்தவர்களும் வாக்களிக்க வேண்டும்.

வாக்குச்சீட்டு

இந்த நிலையில், தங்களது கிராமத்திற்கு ஒரு முறை கூட வாய்ப்பு தராததால், சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவரை இந்த முறை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று இந்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.

தங்களது கிராமத்தைச் சேர்ந்தவர்களே ஒருவருக்கு ஒருவர் போட்டியாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்கு முன்பே தங்களது கிராமத்திற்குள் ஒரு தேர்தலை நடத்தி அதில் தேர்வு செய்யப்படுபவரை தங்களது கிராமத்தின் சார்பாக ஊராட்சி தலைவர் தேர்தலில் நிறுத்துவது என்று இந்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான இந்த தேர்தலில் நான்கு பேர் போட்டியிட்டனர். இவர்களுக்கு தனித்தனி சின்னங்கள் கொடுத்து, வாக்குச்சீட்டு அச்சடித்து தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இன்று (வியாழக்கிழமை) காலை தேர்தல் தொடங்கி வரிசையில் நின்று, மக்கள் வாக்களித்துக் கொண்டிருந்தபோது தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இதுபோல வாக்குச் சீட்டுகளை வைத்து தேர்தல் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி வாக்குச்சீட்டுகளை பறிமுதல் செய்து தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரித்ததுடன், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரையும் கூறிச் சென்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: