`எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது; ருசியும் அதிகம்` - செல்லூர் ராஜு

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - `எகிப்து வெங்காயங்கள் இறக்குமதி`
எகிப்து வெங்காயத்தில் ’சல்ஃபர்’ அதிகமாக உள்ளது என்றும், அது இதயத்திற்கு நல்லது என்றும் தமிழகத்தின் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
மேலும் முதலமைச்சர் இந்த வெங்காயத்தை ருசி பார்த்து அதை பாராட்டியுள்ளார் என்றும் அவர் தெரிவித்ததாக கூறுகிறது அச்செய்தி.
மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் வெங்காயத் தட்டுப்பாட்டை தடுக்க விவசாயத்துறை, தேனி, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், சிங்கங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், விவசாயிகளுக்கு 60,000 ஏக்கரில் பயிரிட 25,000 கிலோ விதை வெங்காயங்களை கொடுத்துள்ளதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஆனால் கிலோவிற்கு 60-70 வரை விற்பனையாகும் இந்த எகிப்திய வெங்காயங்களை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை என்கிறது அச்செய்தி


பட மூலாதாரம், Getty Images
தினமணி -அயோத்தி வழக்கு: தள்ளுபடி செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள்
அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்கிறது தினமணியின் செய்தி.
இந்த மறு ஆய்வு மனுக்களை ஏற்க எவ்வித முகாந்திரமும் இல்லை என கூறி தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு 19 மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், திருப்தியில்லை என்று கூறி ஜாமியத் உலே- மா- ஏ- ஹிந்த் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் `சர்ச்சைக்குரிய இடத்தில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட உத்தரவிடுவதே உரிய நீதியாகும்.’ என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் மொத்தம் 19 மறு ஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதை பரிசீலித்த 5 நீதிபதிபதிகள் கொண்ட அமர்வு, "வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மறுஆய்வு மனுக்களையும், ஏன் மறு ஆய்வு செய்ய வேண்டுமென அவர்கள் கூறிய காரணங்களையும், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் கவனமாக பரிசீலித்தோம். அதில் மறு ஆய்வு மனுக்களை ஏற்பதற்கான எந்த அடிப்படை முகாந்திரத்தையும் காணமுடியவில்லை எனவே அனைத்து மனுக்களையும் நிராகரிக்கிறோம்," என தெரிவித்தது.


பட மூலாதாரம், Getty Images
டைம்ஸ் ஆஃப் இந்தியா' - பாஜகவில் ஒரு கலகக்குரல்
முன்னாள் மத்திய அமைச்சரான காலஞ்சென்ற கோபிநாத் முண்டேவின் மகளும், மஹாராஷ்டிரா பாஜக தலைவர்களில் ஒருவருமான பங்கஜா முண்டே பேசிய கருத்துக்கள் கட்சிக்கு எதிரான தொனியில் இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பங்கஜா முண்டே எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தார். இது அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது சொந்த ஊரான பீட்டில், தனது தந்தை கோபிநாத் முண்டேவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பங்கஜா முண்டே, பாஜகவை விட்டு வெளியேற போவதாக கூறப்படுவது வதந்தி எனவும், அதேநேரத்தில் முடிந்தால் கட்சி என்னை நீக்கி பார்க்கட்டும் என்றும் கூறியதாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா பாஜக முக்கிய செயற்குழுவில் தான் இனி இருக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் சூழல் மாறிக்கொண்டே வருவதாகவும், அதனால் இனி மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் தான் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அண்மையில் பேஸ்புக்கில் பங்கஜா முண்டே குறிப்பிட்டது மஹாராஷ்டிரா பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












